"""
வாசகர்களுக்கு,
இந்த ஊடகத்தை நான் ஆரம்பித்த போது "நம் எழுத்தை படிப்பதற்கு இங்கு ஆள் இருக்கிறதா, இல்லையா ?" எனும் சந்தேகத் தோடே எழுத ஆரம்பித்தேன். ஆனால் இப்போது இந்த ஊடகத்தின் 'COUNTER' காட்டும் எண்ணிக்கையை பார்க்கும்போது, என் எழுத்திற்கும் இணையத்தில் சிறிது வரவேற்ப்பு இருக்கிறார் போல தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் பின்னூட்டம் இல்லாதது சிறிது குழப்பமாகவும் இருக்கிறது.
இந்த 'உன்னையே நீ அறிவாய் !' தொடரை இன்னும் இரண்டு, அல்லது மூன்று பாகங்களோடு முடித்து விடுவேன். ஆனால் அதற்கு பிறகும் இணையத்தில் எழுதுவதா, வேண்டாமா என்பது தான் என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி.
இது குறித்து, வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான் விண்ணப்பம். இந்த 'உன்னையே நீ அறிவாய் !' தொடரை படிக்க விரும்பி தாங்கள் இந்த ஊடகத்திற்கு இனி வந்து போகும் போதெல்லாம், பின்னூட்ட (மறுமொழி) பெட்டியில் 'வந்து சென்றேன்' என்றோ, 'படித்தேன்' என்றோ ஒரு வார்த்தை, இரு வார்த்தைகளில் பின்னூட்டம் விட்டுச் செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இங்கு எத்தனை பேர் ஒவ்வொரு பதிவையும் படிக்கிறீர்கள் என்பது தெரிந்தால் என் எழுத்தை தொடர்வதா, வேண்டாமா என்பதை நான் சிறிது இலகுவாக முடிவு செய்து கொள்வேன்.
நன்றி,
சாமான்யன்
"""
அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள், ஜெர்மானியர்கள், வெளிநாட்டு சீனர்கள் போன்று உலகில் அதிக வளர்ச்சியுற்றிருக்கும் இனங்கள் அனைவரிடமும் ஒரு பொதுவான அம்சத்தை நாம் பார்க்க முடியும் - அவர்கள் அனைவரும் தம்மை உயர்வாகவே நினைத்து கொள்பவர்கள்.
மற்ற இனத்தாரோடு பலகும்போது இவர்களிடம் இருந்து எப்பவும் ஒரு 'சுப்பிரியாரிட்டி கொம்ப்லெக்ஸ்' எனும் தங்களைப் பற்றிய 'உயர்வு மனப்பான்மை' வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். (இதற்கு நேர்மாறாக நம்மவரிடம் எப்பவும் ஒரு 'தாழ்வு மனப்பான்மை' இருந்து கொண்டே இருக்கும். இதை இப்படி அப்பட்டமாக நான் கூறக் கேட்கும் போது கசப்பாக இருந்தாலும், அதுதான் உண்மை என்பது நம் அனைவருக்குமே தெரியும்).
இப்படி தங்களை பற்றி உயர்வாகவே நினைத்து கொள்ளும் இனங்களிடம் மற்றுமொரு பொதுவான அம்சம் என்னவென்றால் - இவர்கள் அனைவரிடமும் 'தன்மானம்' என்பது சற்று அதிகமாகத் தான் இருக்கும்.
அந்த வகையில் நம்மோடு அண்டை வீட்டுகாரர்களாக 150 வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கும் சீனர்களின் தன்மான உணர்வு எத்தனையோ வழிகளில் அன்றாட வாழ்க்கையில் வெளிப்படுவதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். அதில் என் கண்ணுக்கு பட்ட சில உதாரணங்களை இங்கு எடுத்து கூறுகிறேன். என் கூற்று உண்மையா, இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நண்பர்களோடு குழுமும்போது சாப்பாட்டிதற்கு பணம் கட்டுவது
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பல இன நண்பர்கள் ஒன்றாக உணவு உண்பதற்காகவோ, மது அருந்துவதற்காகவோ குழுமும் போதெல்லாம், சாப்பிட்டதற்கான மொத்த 'பில்லையும்' நான் கட்டுகிறேன், நான் கட்டுகிறேன் என்று அடிக்கடி போட்டா போட்டி வருவது சீனர்களுக்கு இடையேதான்.
சீனர்களும் உள்ளிட்ட பலதர பட்ட இனங்கள் குழுமும் சூழ்நிலையில், சீனர்கள் அல்லாதார் இப்படி முண்டி அடித்து கொண்டு பணம் கட்ட கிழம்புவதை நான் மிகவும் அறிதாகத்தான் பார்ததிருக்கிறேன். இது நான் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இன்று நேற்று பார்த்த விஷயமல்ல, எனக்கு விவரம் தெரிந்த நாளாய் இது நான் நன்கு பார்த்து பழக்கபட்ட ஒரு அன்றாட சமூக நிகழ்வு.
"நண்பர்களிடையே சாப்பிட்டதற்கான பணத்தை ஒருவர் கட்டுவதற்கும், தன்மான உணர்வுக்கும் என்ன தொடர்பு?", என்று சிலர் நினைக்கலாம். இந்த சிறிய விஷயத்திலும் ஒருவருக்கு தன்மான குணம் சிறிது மிகுதியாக இருந்தால் தான் அவர் முண்டி அடித்து கொண்டு தான் பணம் கட்டுவதாக கிழம்புவார் என்று நான் நினைக்கிறேன்.
கல்விக் கடனுதவி
மலேசியாவில் அரசாங்கம் மேற்கொள்ளும் சமூக சீரமைப்புகளும், திட்டங்களும் போக பெருவாரியான சமூக சேவைகள் இங்கு அரசாங்க சார்பற்ற இனவாரியான சமூக ஸ்தாபனங்களாலேயே மேற்கொள்ள பட்டு வருகின்றன.
அந்த வகையில் மாணாக்கர்களின் படிப்பு மேம்பாட்டிற்கென இங்கு பல ஸ்தாபனங்கள் இயங்குகின்றன. அவறறில் நம் இன மாணாக்கர்களுக்கு என்று சில ஸ்தாபனங்கள் நிதி திரட்டி கல்வி கடனுதவி செய்து வருகின்றன.
எனக்கு தெரிய \'ராம சுப்பையா எஜுக்கேஷன் ஃபண்ட்'\ , \'EWRF எஜுக்கேஷன் ஃபண்ட்'\, \'MIED எஜுக்கேஷன் ஃபண்ட்\' என்று சில கடனுதவி நிதிகள் இருந்தன. அவற்றில் 'ராம சுப்பையா ஃபண்ட்' இப்போது இல்லை. 'EWRF' இன்னமும் தொடர்ந்து கடனுதவி கொடுத்து வருகிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. 'MIED' ஆலும் அரசியல் கூட்டனியில் ஒரு உறுப்பினக் கட்சியின் கல்வி நிதி சாதனம் - அதனால் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தகைய ஃபண்டுகளின் குறிக்கோள் என்னவென்றால், வசதி குறைந்த இந்திய குழந்தைகள் பள்ளிகளில் படிப்பதற்கு உபகாரச் சம்பளமும், பிறகு பல்கலைகழகங்களில் படித்து பட்டம் பெற ஏதுவாக அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவியும் செய்து கொடுப்பது தான். இந்த ஃபண்டுகள் வழியாக எத்தனையோ ஆயிரக்கணக்கான இந்திய மாணாக்கர்கள் பல்கலைகழக பட்டம் பெற்று இன்று வாழ்க்கையில் நல்ல நிலைகளில் உள்ளனர்.
ஆனால் இவர்களில் பெரும்பாலோர் படிப்பிற்கென்று பெற்ற கடனை திருப்பி கொடுப்பது கிடையாது. வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, கோர்ட்டுக்கு கொண்டு செல்வேன் என்று பயமுறுத்தி, அடித்து பிடித்து வாங்கினால் ஒழிய இவர்களில் பெரும்பாலோர் பெற்ற கடனை திரும்ப கொடுப்பதை பற்றி நினைத்து பார்க்ககூட பார்ப்பது கிடையாது.
அதே போல தான் மலாய்காரர்களும் - படிப்பிற்கென்று வாங்கிய கடனை திருப்பி கொடுப்பது என்பது அவர்கள் அகராதியிலேயே கிடையாது. (கடனை திரும்ப பெற வேண்டி யாரும் அவர்களை முனைப்போடு விரட்டுவதும் இல்லை. அவர்களின் கதையே வேறு. அந்த கதையெல்லாம் இங்கு பேச இது தருணம் அல்ல. நேரம் வரும்போது, தேவை ஏற்பட்டால் பேசுவோம்).
ஆனால் சீனர்களின் நிலைமையே வேறு. இந்திய ஸ்தாபனங்கள் கொடுப்பதை காட்டிலும், சீன ஸ்தாபனங்கள் படிப்பிற்காக ஆணடுதோரும் வழங்கும் கடன் உதவிகள் பெரிதாகத் தான் இருக்கும். நம்மை காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில்தான் அவர்கள் தம் இன பிள்ளைகளுக்கு கடன் உதவி வழங்குவார்கள். ஆனால் அப்படி கடன் வாங்கி பட்டம் படித்து முடித்த அத்தனை சீன குழந்தைகளும், வேலை செய்ய ஆரம்பித்த உடனேயே கடனை திருப்பி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
சீன ஸதாபனங்கள் வெளியிடும் கணக்குபடி இப்படி குறித்த நேரத்தில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கும் சீன மாணாக்கர்களின் விகிதாச்சாரம் 95 விழுக்காடு.
நம் இந்திய ஸ்தாபனங்களில் வக்கில் நோட்டீஸ் அனுப்பி, அடித்து, பிடித்து திரும்ப பெரும் கடன்களின் விகிதாச்சாரம் 15 லிருந்து 20 விழுக்காடே. மீதிப் பேர் என்ன செய்தாலும் கல்வி கடனை திருப்பி கொடுப்பது கிடையாது.
இதனால் நடைமுறையில் என்ன ஆகிவிடுகின்றது என்றால், நம் இனத்தில் குருவி சேர்ப்பதுபோல் சேர்க்கப் பட்டு ஏற்படுத்தபடும் கல்விக் கடனுதவி பண்டுகள், கால ஓட்டத்தில் பண பற்றாக்குறையின் காரணமாக முற்றாக நிறுத்த பட வேண்டிய நிர்பந்தத்திற்கோ, சுருக்கபட வேண்டிய சூழ்நிலைக்கோ தள்ளப் பட்டு விடுகின்றன.
ஆனால் சீனர்கள் ஏற்படுத்தும் சமூக சீர் அமைப்பு / கடன் உதவி பண்டுகள் வருடா வருடம் திரும்ப வசூலிக்கபடும் பணத்தோடு, கடனுதவி பெற்ற பழைய மாணாக்கர்கள் அவ்வப்போது வளங்கும் நன்கொடைகளையும் சேர்த்து செழித்து ஓங்கி வளர்கின்றன.
உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாது, வெளியில் இருந்து பார்ப்போருக்கு ஏதோ சீனர்கள் பணக்காரர்களாகவும், அதனால் அவர்கள் ஏற்படுத்தும் நிதிகள் யாவும் வெற்றி அடைவதாகவும், இந்தியர்கள் ஏழைகளாக இருக்கிற படியால் தம் சொந்த சமூக நலனுக்காக அவர்களால் போதிய அளவு நிதி திரட்ட முடியாமல் போய்விடுகிறதென்றும் ஒரு அபிப்பிராயம் இருக்கும்.
ஓரளவுக்கு இந்த கூற்றில் உண்மை இருந்தாலும், நாம் ஏற்படுத்தும் கல்வி கடனுதவி நிதிகள் சுருக்கப் படவோ, நிறுத்தப் படவோ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப் படுவதற்கான காரணம் வெளியில் இல்லை. அது நம்மிடைமே தான் இருக்கிறது. "நம் படிப்பிற்கென ஒரு இந்திய ஸ்தாபனம் நமக்கு செய்த உதவிக்கு நாம் ஒன்றும் பெரிதாக கைமாறு செய்யா விட்டாலும், அவர்கள் கொடுத்த பணத்தை நாம் திருப்பிக் கொடுக்க வேண்டும்" எனும் 'தன்மான உருத்தல்' நம் இனத்தவரிடம் இல்லாம் போனதுதான் அதற்கான முக்கால்வாசி காரணம்.
'டிப்ஸ்' வாங்குதல்
சீனாவின் உட்புறங்களில் குறிப்பாக பெய்ஜிங், சாங்ஹாய் போன்ற மாநகரங்கள் அல்லாது உட்பகுதியில் உள்ள பெரும்பாலான ஊர்களில் உணவருந்தும் விடுதிகளிலும், மது அருந்தும் பார்களிலும், கேளிக்கை மையங்களிலும் அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் ' டிப்ஸ்' வாங்க இன்றைக்கும் மறுத்து விடுவார்கள்.
இதற்கு காரணம் என்னவென்று பல சீன நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் - " பெரிய மாநகரங்களில் வெளிநாட்டு தாக்கம் வந்து விட்டதால், அங்கு உள்ள சீனர்களின் இயல்பு சமீபமாக மேல்நாட்டு பாணியில் மாறியுள்ளது. ஆனால் சீனாவின் உட்பகுதிகளில் இன்னமும் சீன பாரம்பரிய இயல்புகள் அப்படியே உள்ளன. எங்களின் பாரம்பரிய முறைப்படி செய்யும் வேலைக்கு உள்ள ஊதியத்தில் யாவரும் குறியாக இருப்போம். அது அல்லாது, யாராவது 'சன்மானம்' எனறு கொடுப்பதை வாங்குவது எங்கள் கலாச்சாரத்தில் ஒரு இழிவான செயலாகவே கருதப் பட்டு வந்திருக்கிறது.
ஆதலால் 'டிப்ஸ்' வாங்கும் பழக்கம் இங்கு பொதுவாக பழக்கத்தில் இல்லை. நீங்களும் யாருக்கும் 'டிப்ஸ்' கொடுக்காதீர்கள். அது அவமரியாதையான செயலாக கருதப் படும்" என்றார்கள்.
இதுகுறித்து நான் என் கண்ணால் நேரில் கண்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறுகிறேன், கேளுங்கள். நான் ஒரு முறை சீனாவில் உள்ள 'ஹுனான்' மாநிலத்தில் தலைநகரமான 'சங்ஸா' என்கிற ஊருக்கு போயிருந்தேன். இது சீனாவின் 12 வது பெரிய நகரம். அங்கு ஒரு நாள் இரவு நானும் அங்கு வசித்து வரும் என் நண்பரும் அவரின் மனைவியும் ஒரு உணவகத்தில் உணவருந்தி கொண்டு இருந்தோம்.
அப்போது எங்கள் மேசைக்கு அடுத்து உள்ள மேசையில் நடுத்தர வயதுடைய அமெரிக்க தம்பதிகள் இருவர் உணவருந்தி கொண்டிருந்தனர். தங்களின் சாப்பாட்டிற்கான பில் செட்டில் செய்யப்பட்டு, மீதியாக வந்த சில்லறையிலிருந்து 30 யுவானை ( 15 ரிங்கிட்) எடுத்து அந்த அமெரிக்கர் தங்களுக்கு உணவு பறிமாறின பணிப் பெண்ணிடம் 'டிப்ஸாக' நீட்டினார். அதை எப்போதும்போல அந்த சீன பணிப் பெண் வாங்க மறுத்து விட்டார்.
அந்த அமெரிக்க தம்பதிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அப் பெண் அந்த பணத்தை பிடிவாதமாக வாங்க மறுக்கவே, அமெரிக்கர் தன் புருவங்களையும், கைகளையும் , தோழ்களையும் 'சரணடைந்தேன' என்கிற பாணியில் உயர்த்தி காட்டிவிட்டு, அந்த பணத்தை எடுத்து தன் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டு மனைவியோடு உணவகத்தின் வாசல் வரை சென்றார். பிறகு மனைவியிடம் பேசி கொண்டே திரும்பி பார்க்கும் பொழுது, அப்பணி பெண் கையில் சில தட்டுக்களோடு உணவகத்தின் பின்புறமிருந்த கதவை தள்ளிக் கொண்டு சமையற்கட்டின் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.
உடனே அந்த அமெரிக்கர் மிகுந்த களிப்புடன், சிறு பிள்ளைபோல் தன் சட்டை பையில் வைத்த அந்த 30 யுவானை எடுத்து கொண்டு கிடு கிடு என்று ஒடி வந்து அவர் சாப்பிட்டு முடித்த மேசையின் மீது வைத்து விட்டு, கிடு கிடு என்று ஒடி மனைவியோடு வெளியில், வீதியில் சென்ற கூட்டத்தோடு கலந்து விட்டார்.
சமையற்கட்டிலிருந்து வெளிவந்த அந்த பணிப்பெண் மேசை மீது இருந்த பணத்தை பார்த்ததும், பணத்தை சட்டென்று கையில் எடுத்து கொண்டு உணவகத்தின வெளியில் ஒடி வீதிக்கு வந்தார். இதற்கிடையில் எங்களின் சாப்பாடு முடிந்து நானும் என் நண்பரும் அவர் மனைவியும் உணவகத்திலிருந்து கிளம்பி வீதிக்கு வந்து விட்டோம்.
இது மற்ற இருவருக்கும் அன்றாட நிகழ்வு என்றாலும், எனக்கு இந்த நாடகம் எப்படி முடிகிறது என்று பார்க்க ஆவல் அதிகமாக இருந்ததால் "நீங்கள் இங்கேயே இருங்கள், நான் என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறேன்" என்று கூறி அப் பெண்ணை நொடர்ந்து நானும் சென்றேன்.
அந்த பணிப்பெண் அந்த அமெரிக்க தம்பதிகளை தேடியபடி ஒரு நான்கைந்து நிமிடங்கள் இங்கும் அங்குமாக அலைந்த பிறகு் உணவகத்திலிருந்து ஒரு 50 மீட்டர் தூரத்தில், ஒரு குறுக்கு சாலையில் அவர்கள் ஒரு டாக்சியில் ஏறிகொண்டிருப்பதை பார்த்து, அவர்களை நோக்கி ஓடினார். பின் தொடர்ந்து சென்ற நான் டாக்சி நின்றிருந்த இடத்திற்கு ஒரு 10 மீட்டர் தூரத்திலேயே என் நடையை நிறுத்திக் கொண்டு, என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்தபடி நின்றேன்.
டாக்ஸியை அணுகிய அப்பெண் ஓட்டுனரின் கதவை தட்டி டாக்சியை நிறுத்திவிட்டு, ஜன்னல் வழியாக பின்புறம் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதிகள் முன் அந்த 30 யுவானை நீட்டியபடி, தான் வேண்டி கேட்டு கொள்வதற்கு அடையாளமாக முதுகையும், தலையையும் குனிந்து குனிந்து சீனத்தில் ஏதேதோ கூறி கெஞ்சினார்.
வேறு வழியில்லாமல் அந்த அமெரிக்கர் அந்த பெண்ணின் கையிலிருந்த பணத்தை திரும்ப பெற்று கொண்ட பின்னரே, அப்பணிப் பெண் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
நான் பல நாடுகள் போய் வந்த அநுபவம் உள்ளவன். இந்தகைய தன்மான உணர்வை வெளிக்காட்டும் ஒரு சம்பவத்திற்கு ஒப்பான ஒரு சுற்று பயண நிகழ்வை நான் வேறு எங்குமே பார்த்தது கிடையாது. (இந்தியாவில் நான் பார்த்தெல்லாம் .... எதுக்குங்க .... வேண்டாம் .... இந்திய அஙபவங்களை இங்கு பேச வேண்டாம் .... விட்டிடுவோம்..!!).
நான் மேற்கூறிய இந்த நிகழ்வின் அர்த்தம் என்ன என்று நினைக்கிறீர்கள் ? "நான் செய்யும் வேலைக்கான உண்மையான கூலியை கொடு. அதைவிடுத்து எனக்கு சன்மானமானமென்று நீ எதற்கு கொடுக்கிறாய் ? உன சன்மானமெல்லாம் எனக்கு தேவையில்லை" என்று கூறாமல் கூறும் ஒரு தன்மானமும், ரோஷமும் மிகுந்த இன வளர்ப்பின் வெளிப்பாடுதான் என் கண்ணுக்கும், புத்திக்கும் தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
இப்படி ரோஷமும், தெனாவெட்டும் உள்ள இனத்தாரோடு தான் நாம் 150 வருடங்களாக் அண்டை வீட்டுகாரர்களாக பழகியும், வாழ்ந்தும் இருக்கிறோம். ஆனால் அவர்களிடமிருந்து நாம் எதாவது கற்றுக் கொண்டிருக்கிறோமா என்றால், இல்லை.
எவரிடமுமிருந்தும் எதையும் நாம் உறுப்படியாக கற்றுக் கொண்டதில்லை. அப்படி எதையும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்று நாம் நினைத்ததும் இல்லை. வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு, "எங்கள் பாட்டன் பூட்டன் காலத்திலெல்லாம், 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில்" என்று வெத்து வேதாந்தம் பேசி கொண்டு இருந்து விட்டு, நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான எதையுமே நாம் கற்று கொள்ள வில்லை. அதன் விளைவு தான் நம்முடைய இன்றைய நிலை.
ஐயா, உண்மை பல நேரங்களில் கசக்கும். மேலும் கண்களையும், காதுகளையும் பொத்திக் கொளவதனால் அது காணாமலும் பொய்விடாது. உண்மை என்ன வென்று தெரிந்து, தெளிந்து, அதன் பிறகு நடமுறை நிலைப் பாட்டை ஒட்டி தான் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும். நம் இனப் பிறச்சனையும் அப்படித் தான் என்பது என் கருத்து.
Saturday, January 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சாமான்யன்,
நீங்கள் எழுதிய நான்கு பதிவுகளையும் படித்தேன். மிகவும் வித்தாயமான முறையில் எழுதுகிறீர்கள், நீங்கள் கூறுபவற்றை கேட்டு கோபம் வந்தாலும், உங்கள் எழுத்துக்கள் உண்மை நிலையையே பிரதிபலிக்கின்றன என்பதால், நீங்கள் சொல்வதை ஏற்று கொள்ளத் தான் வேண்டி இருக்கிறது.
உள்ளதை உள்ளபடி எழுத எல்லோராலும் முடியாது. உங்கள் முதல் பதிப்பில் நீங்கள் கூறியிருப்பது போல், இனையத்திலும், பத்திரிக்கைகளிலும் எழுதுவோரில் பெரும்பாலோர் யார் மனதையும் புண்படுத்தாத வகையில் எழுதுவோராகத் தான் இருப்பார்கள். அப்படி எழுதப் படும் எழுத்துக்கள் எதையும் வித்தியாசமாகவோ, புதிதாகவோ சொல்வதும் கிடையாது.
ஒவ்வொரு பதிவிலும் தமிழ்ச் சமுதாயத்தை நீங்கள் மட்ட படுத்தினாலும், உங்கள் எழுத்துக்கு பின்னால் ஆழ்ந்த சமுதாய உணர்வு இருக்கிறது என்று நம்புகிறேன்.
வாழ்க உங்கள் சமுதாய உணர்வு! வளர்க உங்கள் எழுத்து பணி!
குமார்
மந்தின்,
நெகிரி செம்பிலான்
//வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு, "எங்கள் பாட்டன் பூட்டன் காலத்திலெல்லாம், 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில்" என்று வெத்து வேதாந்தம் பேசி கொண்டு இருந்து விட்டு,//
இப்படி மொழி இன மரப்பைப் பற்றிப் பேசும் தமிழர்கள் இன்று மிகக் குறைவே. இன்னும் சொல்லப்போனால், மொழி இனப் பெருமைகளையும் வரலாற்றையும் அறியாத குருட்டுத் தமிழர்கள்தான் இன்று அதிகம்.
அப்படியிருக்க "கல்தோன்றி மண்தோன்றா காலத்தில்.." என்று பழம்பெருமை பேசுவதால்தான் தமிழன் கெட்டான் என்பது அடிப்படையற்றதாகும்.
பழம்பெருமையை உணர்ந்தால்தான் வாழ்க்கையில் இன்னும் உறுதியாக நிலைபெற முடியும். நீங்கள் குறிப்பிடும் சீனர்கள் இன்னமும் தங்களின் மரபுவழிப் பெருமைகளை விட்டுவிடாமல் காத்துவருவதில்தான் அவர்களின் பலமே இருக்கிறது.
எடுத்துக்காட்டு சொல்லவேண்டுமானால், சீனர்கள் தங்களின் மொழியை எப்போதும் விட்டுக்கொடுப்பதில்லை. தங்கள் பாரம்பரியத்தை அழிய விடுவதில்லை.
சீனாவைக் கடந்து மலேசியாவிலும் எல்லா ஊர்களிலும் சீன மருந்து கடை வைத்து தங்கள் மரபுவழி மருத்துவத்தைக் காத்து வருகின்றனர்.
ஊர்கள் தோறும் ஆண்டு தவறாமல் மேடை போட்டு 'சீனக்கூத்து' நடத்தி தங்கள் பாரம்பரிய கலை பண்பாட்டைக் காத்து வருகின்றனர்.
ஒவ்வொரு சீனனும் கண்டிப்பாக ஒரு சீனப் பத்திரிகை வாங்குகிறான்; சீனன் கடையில்தான் பொருள் வாங்குகிறான்; மற்றொரு சீனனுக்கு முடிந்தவரை உதவுகிறான்; தன் பிள்ளையைக் கண்டிப்பாகச் சீனப்பள்ளியில்தான் போடுகிறான்.
இப்படியாக, பழம்பெருமையில் நம்பிக்கை வைத்து விட்டுக்கொடுக்காமல் இருப்பதால்தான் சீனன் தன் காலில் நின்று முன்னேறுகிறான். ஆக, பழம்பெருமை என்பது எந்த வகையிலும் பின்னடைவுக்கு வழிகாட்டாது. மாறாக, தன்னம்பிக்கை - தன்மானம் ஆகியவற்றை வளர்த்தெடுக்கும். பழம்பெருமை பேசுவதும் நீங்கள் குறிப்பிட்டபடி 'சுப்பிரியாரிட்டி கொம்ப்லெக்ஸ்' அதாவது உயர்ச்சி மனப்பான்மை தான்.
//நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான எதையுமே நாம் கற்று கொள்ள வில்லை. அதன் விளைவு தான் நம்முடைய இன்றைய நிலை.//
இதுவே தமிழன் தாழ்ச்சிக்கு உண்மையான காரணமாக இருக்க முடியும்.
>நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான அரசியல் நிலைத்தன்மை, அரசியல் பலம், பொருளியல் வலிமை, குமுகவியல் அமைப்பு, இறைமைக் கொள்கை, கல்வி, அறிவாண்மை, தொழில்திறன் ஆகியவை பற்றிய தெளிவும் உறுதியும் அறவே இல்லாத காரணத்தால்தான் தமிழன் தாழ்ந்து தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறான்.
இதிலிருந்து மீண்டு 'சுப்பிரியாரிட்டி கொம்ப்லெக்ஸ்' உணர்வு மனத்தில் ஆழ வேறூன்றினால் மட்டுமே தமிழன் உருப்படுவான். அதற்கு, மொழி, இன, சமய, பண்பாட்டு, கலை, இலக்கிய, மரபியல் கூறுகள் பற்றிய அறிவும் புரிதலும் மிக மிக அவசியமும் அடிப்படையும் ஆகும்.
குமார்,
தங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன்.
என் மனத்திற்கு உண்மை என்று பட்டதை படிப்பவர் நெஞ்சை உறுத்த வேண்டும் என்கிற நினைப்போடு எழுதுகிறேன். ஆனால் என் எழுத்து எததனை பேர் மனதை உறுத்தி இருக்கிறது என்பது தெரியவில்லை.
நம் இனம் ஒரு 'non confrontational' இனம். எதற்கு வம்பு என்று ஒதுங்கி போகும் ஒரு பயந்த சுபாவம் உள்ள ஒரு இனம். அதனால், என் போன்றோரின் எழுத்து குறித்து பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது எப்பவும் சிறிது கஷ்டம்தான். அந்த வகையில் தங்களைப் போன்றோரின் பின்னூட்டங்களை அபரிதமானகவே நான் கருதுகிறேன்.
எது எப்படி இருப்பினும், தங்களின் வாழ்த்துக்கும் நல்லாசிக்கும் எனது நன்றி.
சாமான்யன்
வாருங்கள் நற்குணன்,
தாங்கள் என் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருவது குறித்து மிகுந்த சந்தோஷம்.
நான் 'வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு' என்று எழுதியது இன்றைய மலேசிய தமிழனை பற்றி அல்ல. இன்றைய மலேசிய தமிழன் ஒரு 'lost soul'. அவன் இப்போது விழுந்து கிடக்கும் குழியிலிருந்து அவனால் முலுமையாக மீள முடியும் என்று நான் நினைக்க வில்லை. பத்தில் இருவர் ஓரளவுக்கு மீளலாம். அதில் ஒருவர் மற்ற இனத்தவருக்கு ஒப்பாக வளர்ந்து ஓங்கலாம். இதுதான் நடக்க கூடியது என்பது என் கணிப்பு.
நமது சமூகம் பிற்பட்டதாக இருந்தாலும், நமது 150 வருட சமீப சரித்திரத்தில் நம்மிலும் படித்தவர், விவரம் தெரிந்தவர், சுற்றுச் சூழலை புரிந்தவர் என்று ஒரு இரண்டு விழுக்காடு இருந்திருப்பர். ஆனால் அந்த இரண்டு விழுக்காட்டினரும் தம் மூக்கை தாண்டி யோசிக்க முடியாதவராகத் தான் இருந்திருக்கிறார்கள். இல்லையென்றால் நம் இனம் இப்போது உள்ள அளவு பிற்ப்பட்டவதாக இருக்காது.
சீனர்கள் தங்கள் மொழியை, கலாச்சாரத்தை விட்டு கொடுக்காதது மட்டுமல்ல. எந்தெந்த துறைகளில் கை வைத்தாலும் அந்தந்த துறைகளில் அட்டகாசமாக ஜெயித்தும் விடுகிறார்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம் ? நம்மிடம் இல்லாத ஒன்று ஏதோ அவர்களிடம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
இந்தியாவில் உள்ள தமிழர்கள் பிற இந்திய இனங்களை தவிர பிற யாரோடும் பழக வாய்ப்பில்லாவர்கள். அதனால், அவர்கள் எங்களை மிஞ்சிய கலாச்சாரம் இல்லை என்று பெருமைப் பட்டு கொள்ளலாம். அதை அறியாமை என்று ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இங்கு நம் நிலை வேறு.
இந்தியர் அல்லாத ஒரு இனம் நமது மத்தியிலேயே வாழ்ந்து, 150 வருடங்களாக வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நடைமுறையில் டியூஷன் கற்றுக் கொடுப்பது போல கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தும் நமக்கு புத்தி வரவில்லை என்றால், பிறகு நமக்கு எப்ப புத்தி வரும்? எப்படி வரும்?
சாமான்யன்
வணக்கம் வாழ்க
புதிதாக வலைப்பதிவினைத் தொடங்கியிருக்கும் தங்களுக்கு வாழ்த்துகள். தமிழன் தன் இனத்தாலும் மொழியாலும் தமிழனாக வாழாதவரை அவனுக்கு விடிவு என்பதே கிடையாது என்பது எனது கருத்து.
ஒட்டுமொத்த தமிழினமும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் எதனையும் சாதிக்க முடியும்.
வாருங்கள் மதிவரன்,
வந்து, படித்து, பின்னூட்டம் இட்டு சென்றதற்கு மிக்க நன்றி.
நடக்க வேண்டியவை முறையாக நடைபெற்றால், சிந்திக்க வேண்டிய வளியில் அனைவரும் சிந்தித்தால் தான் எல்லாமே சரியாக நடந்து விடுமே. அப்படி எதுவும் நடவாமல் போவதால் தானே இத்தனை பிர்ச்சனைகளும்.
ஆண்டவர் சொன்னதை ஆடாம் கேட்டிருந்தால் ஈடனை விட்டு விறட்டப் பட்டிருக்க மாட்டான். சீனரைப் போல் ஒற்றுமையாக, தமிழ மரபுப் படி நம் இனம் வாழ்ந்திருந்தால் இப்படி பின் தங்கிய, அடி முட்டாள்கள் இனமாக காட்சியளிக்க மாட்டோம்.
நீங்கள் சொல்கிற படி நடந்தால், நல்லது தான். ஆனால் நூற்றுக் கணக்கான வருடங்களாக நாம் அப்படி நடக்க வில்லையே. இனி புத்தி வந்து, நாம் விழித்து, நம் சிந்தனை சீர் பட்டு ..... நடக்கலாம். ஆனால் அதற்கு ஏதாவது தூண்டுகோள் வேண்டும்.
ஈவேரா பெரியார் தமிழகத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியை போல ஏதோ ஒரு சமுதாயத் தீ இங்குள்ள தமிழர்களின் மத்தியில் பரவினால், ஒரு வேளை ஏதாவது மாற்றம் ஏற்படலாம். ஆனால் அப்படி வரும் மாற்றம் நம் ஆழ் மனதில் இருந்து வருவதாக இருக்க வேண்டும். அதற்கு இங்குள்ள தமிழரின் அடிப்படை சிந்தனை மாற வேண்டும்.
மாறுமா ?!
சாமான்யன்
Post a Comment