மஞ்சள் நதிக் கரை கலாச்சாரம்
4,500 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த சீனர்களின் 'மஞ்சள் நதி கரையோர' கலாச்சாரத்தைப் பற்றி எடுத்துக் கூறும் அதே வேலை, சரித்திர ஆராச்சியாளர்கள் அந்த காலக் கட்டத்தில் அந்த பிரதேசங்களில் நடந்த பெரும் வெள்ளங்களைப் பற்றியும் எடுத்துறைகின்றனர்.
அன்றைய காலக் கட்டத்தில் இருந்து இன்றைய தேதி வரை சீன தேசத்தவர்கள் மஞ்சள் நதி பெருக்கெடுப்பால் மாறி, மாறி வந்த வெள்ளங்களினாலும், அவற்றை அடுத்து வந்த பஞ்சங்களினாலும் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் அந்த கரையோர பிரதேசங்களில் வாழ்ந்த சீனர்களின் வாழ்க்கை நிலை என்றுமே கடினமான ஒன்றாகத் தான் இருந்திருக்கின்றது.
பஞ்சங்கள் ஏற்படுத்திய கஷ்ட நிலையில் இருந்து விடுபடவும், விட்டு வந்த உறவினர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் வேண்டி பல சீன இளைஞர்கள் தென் சீன பிரதேசங்களில் இருந்து வேலையும், நல்ல வாழ்வும் தேடி தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதற்கும் கூலி ஆட்களாகவும், வர்த்தகர்களாகவும் 19ஆம் நூற்றாண்டு கடைசியிலும், 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் பெரிய எண்ணிக்கையில் வர தொடங்கியுள்ளனர்.
இப்படி வந்த சீனர்கள் அன்றைய சீன நாட்டு சூழ்நிலை இயல்பாக அவர்களிடையே வளர்ந்திருந்த சில குணாதிசியங்களையும், சீன பின்னனியில் அவர்கள் கற்றுக் கொண்ட பல வாழ்க்கை அனுகு முறைகளையும் அவர்களோடு சேர்த்து தாங்கள் குடியேறிய நாடுகளுக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.
வெள்ளம், பஞ்சம் போன்ற பேரிடர்கள் போக பிற மன்னர்களின் படையெடுப்பால் ஒய்வின்றி நடந்த போர்கள், வரி வசூலிப்பு என்கிற பேரில் சாதாரண மக்களின் ரத்தத்தை உறுஞ்சிய சிற்றரசர்கள், ஊழல் மிகுந்த அரசாங்க நிர்வாகஸ்தர்கள் என்று சராசரி சீனர்களின் அன்றாட வாழ்க்கையே ஒரு பெரும் பிரச்சனையானதாகவே இருந்திருக்கின்றது.
இப்படிப்பட்ட அன்றைய சீன நாட்டு சூழ்நிலையில் வாழ ஒருவருக்கு நல்ல உடல் வளமும், மன உரமும் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை. அதையும் மிஞ்சி சிற்றசர்களையும், அதிகாரிகளையும் எப்படி சமாளிப்பது, அவர்களை கவர்ந்து, தங்களுக்கு தீங்கு நேராமல் எங்கனம் பாதுகாத்து கொள்வது, என்பன போன்ற வித்தைகளிலும் கைதேர்ந்தவராக இருந்தால்தான் ஒரு மனிதன் அவன் குடும்பத்துடன் அன்றைய சீன நாட்டில் ஒரளவுக்காவது நிம்மதியாக வாழலாம் என்ற நிலைமை இருந்திருக்கின்றது.
இப்படி அன்றைய அன்றாட வாழ்க்கைக்காக சீனர்கள் தங்கள் சொந்த நாட்டில் கற்றுக்கொண்ட வித்தைகள் காலப் போக்கில் அவர்கள் குடியேறிய பிற நாடுகளில் தொழில் புரிவதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன. இதனால்தான் இன்றும் சீனர்கள் விருந்துபசரிப்பிலும், கேளிக்கைகளை முக்கியஸ்தர்களுக்கு அறிமுக படுத்துவதிலும், பரிசுகள் கொடுத்து பிறரை கவர்வதிலும் பெரும் வித்தகர்களாக உள்ளனர்.
சீனர்கள் கடின உழைப்பாளிகள்
சீனர்கள் மிக மிக கடினமான உழைப்பாளிகள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவர் பள்ளியில் படிக்கும் மாணாக்கராக இருந்தாலும் சரி, கடையில் வேலை செய்யும் சிப்பந்தியாக இருந்தாலும் சரி, காரியாலயத்தில் பணிபுரியும் நிர்வாகியாக இருந்தாலும் சரி, ஒரு பெரிய ஸ்தாபனத்தை வழிநடத்தும் தொழில் அதிபராக இருந்தாலும் சரி, சீனர்களில் பெரும்பாலோர் மிக கடின உழைப்பாளிகளாக தான் இருப்பார்கள்.
கடின உழைப்பு என்பது சீனர்களிடமுள்ள மிக மிக அடிப்படையான ஒரு கூறு. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 90 கோடி பல இன மக்களிடமும் சென்று, இங்கு அவர்களோடு வாழுந்து வரும் சீனர்களை ஒரே ஒரு வார்த்தையில் சித்தரிக்கும்படி கூறி ஒரு ஆய்வு நடத்தினால், அதற்கு கிடைக்கும் பதில் "உழைப்பாளிகள்" என்பதாக தான் இருக்கும்.
தமிழர்கள் பேச்சுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதை விட அதிக அளவு முக்கியத்துவம் சீனர்கள் உழைப்புக்கு கொடுக்கிறார்கள். தமிழர்கள் அதிகம் பேசுவது குறித்து ஒரு வயோதிக சீனர் ஒரு முறை என்னிடம் கூறியது: "பேச்சு என்பது விழை குறைந்த ஒன்று. யார் வேண்டுமானாலும் பேசலாம், எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அதற்கு அறிவும் தேவையில்லை, முதலும் தேவையில்லை. ஆனால் உன்னை உலகம் எடைபோடுவது உன் பேச்சை வைத்தல்ல. நீ இன்றுவரை என்ன செய்திருக்கிறாய், என்ன சாதித்திருக்கிறாய் எனப்தை வைத்து" என்றார்.
உண்மைதானே! நாம் சாதனையாளர்களா, இல்லையா என்பதற்கு அடையாளம் மற்றவரோடு ஒப்பிடும்போது நாம் என்ன சாதித்திருக்கிறோம் என்பதை பொருத்து தானே இருக்கிறது. வீட்டுக்குள்ளே நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு உட்காந்து இருக்கலாம், ஆனால் என்று கல்வி காரணமாக, வேலை சாரணமாக வீட்டை விட்டு வெளியே வருகிறோமோ அப்பொழுதே, நாம் மற்றவரின் பார்வைக்கும், எடைபோடலுக்கும் ஆளாகி விடுகிறோம் அள்ளவா?
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது - "You judge yourself by what you think you can do. Others judge you by what you have already done". அதாவது, "நீ உன்னை எடை போட்டுக் கொள்ளும் போது உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வைத்து எடை போட்டுக் கொள்வாய். ஆனால் உலகம் உன்னை எடைபோடும் போது, நீ இதுவரை என்ன செய்திருக்கிறாய் என்பதை வைத்தே எடை போடும்" என்பதுதான் அதன் தமிழாக்கம்.
வெளிநாட்டு சீனர்களின் பொருளாதார நிலைப் பாடு
சீனாவை விட்டு இதர நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குடியேறிய சீன வம்சாவளியினரின் ஒட்டு மொத்த பெயர் 'வெளிநாட்டுச் சீனர்கள்' (OVERSEAS CHINESE) என்பது.
இவர்கள் ஒரு அதி அட்டகாசமான, திறமைமிக்க வகுப்பினர். உலகம் முழுவதும் என்று பார்த்தால், சுமார் நான்கு கோடிப் பேர் இருப்பர். இந்த கூட்டத்தின் ஒட்டு மொத்த தனியார் பொருளாதார வளம் US$ 1,500 பில்லியன் (150,000 கோடி US$) என்று ஏழு, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அதிகாரபூர்வ அமெரிகக ஆய்வு காட்டியது. ஆதாவது ஒவ்வொரு வெளிநாட்டு சீனருக்கு RM. 37,500 சராசரி வளம் உள்ளது. நம்ப முடியவில்லையா ? ஆனாலும் நம்பத்தான் வேண்டும் .
மாதிரிக்கு, கீழே தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் சீனர்களின் ஜனத்தொகை விழுக்காடும், அதை அடுத்து அந்தந்த நாடுகளில் சீனர்களின் பொருளாதார பங்கீட்டின் விழுக்காடும் கொடுத்திருக்கிறேன்:-
1. மலேசியா - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 24 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 50 %
2. இந்தோனீசியா - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 3 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 50 %
3. பிலிப்பீன்ஸ் - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 2 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 40 %
4. வியட்நாம் - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 2 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 40 %
5. தாய்லாந்து - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 12 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 50 %
6. சிங்கப்பூர் - ஜனத்தொகையில் சீனர்களின் விழுக்காடு 75 % / பொருளாதாரத்தில் சீனர்களின் விழுக்காடு 80 %
சீனர்களின் வியாபார இயல்புகள்
சீனர்கள் அந்தந்த நாள் வேலையை அந்தந்த நாளே முடிக்கும் இயல்பு உடையவர்கள். குறிப்பாக கடை வைத்திப்பவர்கள் மறுநாள் வந்து கடையை திறந்து வியாபாரத்தை ஆரம்பிக்கும்போது, முதல் நாள் வேலையில் தங்கி போன மீதி வேலை எதுவுமே இருக்க கூடாது என்கிற நடைமுறை பழக்கத்தை பின்பற்றுபவர்கள்.
உதாரணத்திற்க்கு இங்குள்ள சீன உணவகங்கள் இரவு 10.30 மணிக்கு ஆர்டர் எடுப்பதை நிறுத்தி கொண்டு, பாத்திரங்களை கழுவுவதும், சமையற்கட்டை சுத்தம் செய்வதுமாக இருப்பார்கள். பிறகு எல்லா வாடிக்கையாளர்களும் உணவகத்திலிருந்து கிழம்பிய பிறகு மேசை நாற்காலிகளை எல்லாம் ஓரமாக தள்ளி வைத்து விட்டு, உணவத்தை கூட்டி பெருக்கு, கழுவி சுத்தம் செய்துவிட்டு, மறுநாள் வந்தவுடன் வியாபாரத்தை ஆரம்பிக்க ஏதுவாக எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்து விட்டு அவரவர் வீடு திரும்புவதற்கு்வதற்கு 12.00, 12.30 மணியாகும்.
பிறகு மறுநாள் பார்த்தால் சுத்தமான உடை உடுத்தி, சவரம் செய்து, நன்றாக தலைவாறி, பார்ப்பதற்கு பலிச்சென்று வியாபார ஸ்தலத்தில் அன்றைய வியாபாரத்திற்கு தயாராக புன்முறுவலுடன் நிற்பர். இது பெரிய, சிறிய வியாபாரம் என்கிற வித்தியாசம் எல்லாம் இல்லாமல், அத்தனை சீன வியாபாரிகளாலும் கடை பிடிக்க படும் ஒரு சாதாரண தடைமுறை அம்சம்.
ஆனால் இவர்களின் இந்த கூறுகளை எல்லாம் நூறு வருடங்களுக்கு மேலாக தினமும் பார்த்து வளர்ந்த இந்த நாட்டிலுள்ள பிற இன வியாபாரிகள் இவற்றை இன்றைக்கும் கடை பிடிப்பது கிடையாது.
இதில் இந்தியர்கள் நடத்தும் உணவு விடுதிகளின் இயல்புதான் மிகவும் மோசமானதாக இருக்கும். இங்குள்ள பெரும்பாலான இந்திய உணவு விடுதிகளில் வேலை செய்வோர் இந்தியாவில் இருந்து வந்தவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களுக்கு நம் மலேசிய இந்திய உணவு கடை முதலாளிகள் முறையான சம்பளம் கொடுக்காதது மட்டுமில்லை, அவர்கள் ஓய்வு எடுக்க போதுமான நேரமும் வழங்குவதில்லை.
நடைமுறையில் இதன் தாக்கம் என்னவென்றால், இந்திய உணவுக் கடை ஊழியர்கள் எப்பவும் வேர்வை நாற்றத்துடன், சவரம் செய்யப்படாத முகங்களுடன், முகத்தில் சிறிதுகூட கலை இல்லாது ஏதோ கடைமைக்கு பவனி வருபவர்கள் போல் காட்சி அளிப்பதுதான்.
(இங்கு சீனர்களைப் பற்றி பெருமையாக எழுதுவதும் , அதே நேரத்தில் தமிழர்களின் முட்டாள்தனத்தை அப்பட்டமாக விமர்சிப்பதும் பலருக்கு பிடிக்க வில்லை என்று எனக்கு தோன்றுவதால், நான் சொல்ல விரும்பும் பலவற்றை சுருக்கி கொண்டு வருகிறேன். அந்த வகையில், இந்த பகுதிக்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கொடுத்து விட்டு அடுத்த பகுதிக்கு செல்கிறேன்).
சீனர்கள் வியாபாரத்தில் கடுமையான போட்டியாளர்களும் கூட
சீனர்கள் வியாபாரத்தில் மிக கடினமான போட்டியாளர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது சீனாவில் உள்ள சீனர்களுக்கும் பொருந்தும், தென் கிழக்கு ஆசியாவில் உள்ள 'வெளிநாட்டு சீனர்களுக்கும்' பொருந்தும்.
போட்டி என்று வந்து விட்டால் அடுத்தவரை நிலைபெற சீனர்கள் விடவே மாட்டார்கள். அதற்கு இங்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கோடி காட்டிவிட்டு செல்கிறேன்.
இந்தியாவிலிருந்து, குறிப்பாக தெற்கு மாநிலங்களிருந்து ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் வருடாவருடம் மலேசியாவினுல் எனக்கு தெரிய 40-50 வருடங்களாக இறக்குமதி ஆகிகொண்டு இருக்கின்றது. ஆனால் இதை இறக்குமதி செய்பவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள். ஆம், சீன வியாபாரிகள்தான்.
இந்த வியாபார்த்தினுல் நுழைய எத்தனையோ மலேசிய இந்திய வணிகர்கள் முயன்றிருக்கின்றனர். அப்படி நுழைய முற்பட்ட எந்த இந்திய வியாபாரியையும் சீனர்கள் நிலை பெற விட்டதில்லை.
இந்திய வியாபாரி ஒருவர் வெங்காயத்தை இந்தியாவிலிருந்து தருவிக்க விளைகிறார் என்று தெரிந்த உடனேயே, சீன வியாபாரிகள் தங்களின் விலையை இங்கு குறைத்து விடுவார்கள்.
இறக்குமதி செய்ய முற்பட்ட இந்திய வியாபாரியும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல், வாங்குவதற்கு ஆள் இல்லாமல், கடைசியாக வேறு வழி தெரியாமல், சீன வியாபாரிகளிடமே தாங்கள் கொண்டு வந்த சரக்கை கை மாற்றி விட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டு விடுவர்.
இது குறித்து மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம் உள்ளது. தங்களின் வெங்காய வியாபாரத்தை முறையாக, பல காலம் தொடந்து செய்ய வெண்டும் என்று நினைத்த ஒரு மலேசிய சீன வியாபார குடும்பம், தம் மகன்களில் ஒருவரை நிரந்தரமாக தென் இந்தியாவில் குடிபுக வைத்து, அவருக்கு ஒரு தென் இந்திய பெண்ணையும் கல்யாணம் செய்து வைத்துள்ளார்கள். அவர் குடும்பமும், குட்டியுமாக பல காலம் இந்தியாவில் வசித்தும் வருகிறார்.
(இத்தோடு சீனரக்ளை ஒப்பிட்டு எழுதுவதை நான் நிறுத்தி கொள்கிறேன். அடுத்து வரும் இரண்டு பாகங்களும் "என் பார்வையில் மலேசிய தமிழர்களின் பிர்ச்சனைக்கான தீர்வுகள்" என்பதை சாராம்சமாக கொண்டவையாக இருக்கும். அதற்கு பிறகு இந்த ஊடகத்தில் எதையும் எழுத நான் நினைக்க வில்லை. அத்தோடு வேலை நிமித்தமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு நான் வெளி நாடு போக வேண்டி இருப்பதால், என் அடுத்த பதிவு பிப்ரவரி 10 ஆம் தேதி வாக்கில் தான் இருக்கும்).