Friday, March 27, 2009

உன்னையே நீ அறிவாய் ! (நான் யார்? நீ யார்? நாம் யார்?) - பாகம் 6

.

இந்த தொடரின் முதல் 5 பதிவுகளிலும் மலேசிய தமிழர்களான நாம் யார், எப்படி மலாயாவிற்கு வந்து சேர்ந்தோம், நமது குறிகிய கால சரித்திர பின்னனி என்ன, மற்ற இனங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது நம்மிடையே எல்லா நிலைகளிலும் வளர்ச்சி குன்றியிருக்க காரணங்கள் என்ன, சாதியம் எனும் சாபம் நமது சமூகத்தை எப்படி பாதித்திருக்கின்றது, நமக்கும் மற்ற மலேசிய இனங்களுக்கும் (குறிப்பாக சீனர்களுக்கும்) இடையே உள்ள அடிப்படை கூறுகளின் வித்தியாசங்கள் என்னென்ன என்பதை எல்லாம் விரிவாக அலசி ஆராய்ந்து பார்த்தாகி விட்டது.


மேலும் விரிவாக நம் இனத்திடம் உள்ள நிலைப் பாடுகளையும், குறை பாடுகளையும் படம் போட்டு காட்ட நிறைய விஷயங்கள் இருந்த போதிலும், "இதற்கு மேல் இவர்களை தலையில் தட்டி எழுதுவதால் என்ன ஆகப் போகிறது? சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும். குருடனை ராஜ முழி முழிக்கச் சொன்னால், அவன் எப்படி முழிப்பான்?" என்கிற சளிப்பு ஒரு புறம் என் மனதை ஆட் கொண்டு விட்டது.

அத்தோடு "மாற்றம் என்பது ஒரு மனிதனின் சுய சிந்தனையின் வெளிப் பாட்டாய் அமையும் போது தான் அது நிறந்தரமானதாக இருக்குமே ஒலிய, யாரோ பிற ஒருவர் சொல்லி மற்றொருவர் மாறுவது என்பது நடமுறையில் எடுபடாத ஒன்று. மிஞ்சிப் போனால் அப்படி ஏற்படும் மாற்றம் ஒரு பலமற்ற, தற்காலிக மாற்றமாகத் தான் இருக்க முடியும்" என்பது என்னுடைய ஆழமான கருத்தும் கூட.

ஆதலால், நம் சமூகத்தை பற்றிய என் அப்பட்ட விமர்சனங்களை இத்தோடு நிறுத்திக் கொண்டு, "மலேசிய தமிழ்ச் சமுதாயம் முன்னேற என்ன வழி?" என்கிற அடிப்படை கேள்விக்கு என் சுய புத்திக் கெட்டிய வழிவகைகளை இந்த பதிவில் இருந்து கொடுக்க நினைத்து எழுதத் துவங்குகிறேன். என் சிந்தனைகள் உங்களுக்கு பிரயோஜன படுகிறதா என்று படித்து பாருங்கள்.

நம்மை பிற்றி பிற இனங்களின் கண்ணோட்டம்

நாம் பிற எந்த ஆராய்ச்சியையும் ஆரம்பிப்பதற்கு முன்பு, முதல் வேலையாக மலேசியாவில் உள்ள பிற இனங்கள் 'மலேசிய இந்தியன்' என்பவனை என்ன கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கிறார்கள் என்பதை சற்று கவனித்தில் எடுத்து கொள்வோம். எனக்கு தெரிந்த வகையில் மலேசியாவில் உள்ள பிற இனத்தவர்கள் இங்குள்ள இந்தியர்களை இரண்டு வகையாக பிரித்து பார்க்கிறார்கள்:-

""சீக்கியர்கள், வட இந்தியர்கள், மலையாளிகள் என்று சிறிது சிவப்பு நிறம் கொண்டவர்களோடு, யாழ்பானத்தினரையும் சேர்த்து இவர்களெல்லாம் முன்னேற்றமான இந்திய வகுப்பினர் என்றும், சிறிது கருமை நிறம் களந்த பிற யாவரையும் இந்தியர்களில் பிற்ப்போக்கானவர்கள்"" என்றும் தான் பார்க்கிறார்கள். இதுதான் நடைமுறையில் நான் அறிந்த உண்மை.

இப்படி பிற இனங்கள் நினைப்பதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்தால். "ஆம், அவர்கள் நினைப்பது உண்மைதான்" என்றே சொல்ல தோன்றுகிறது. "ஏன்? எப்படி? எதை வைத்து சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறீர்களா?

சரி இந்த கேள்விகளுக்கான பதிலை நாம் ஆராய முற்படுமுன், மலேசிய இந்தியர்கள் என்பவர்களை உள்ளடக்கிய ஒவ்வொரு இனத்தின் தற்போதைய நிலைப் பாட்டையும் தனித் தனியாக பார்ப்போம்:-

1). சீக்கியர்கள்

மலேசியாவில் சீக்கிய இனத்தின் எண்ணிக்கை ஒரு 70,000 இருக்கும். இவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிட்டீஸ்காரர்களால், சிப்பாய்களாகவும், போலீஸ்காரர்களாகவும் மலாயாவிற்கு கொண்டு வரப்பட்டவர்கள். உழைப்பிற்கும், ஒழுக்கத்திற்கும், மனத் திடத்திற்கும், வைராக்கியத்திற்கும் பேர் போனவர்கள்.

இனவாரியாக சீக்கியர்களின் சாதனைகளை எடை போட்டு பார்த்தால், இவர்கள் தான் மலேசியாவில் உள்ள இனங்களிலேயே அதி முன்னேற்றமான, பணக்கார இனமாக இருப்பார்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? நீங்கள் எங்காவது ஒரு சீக்கியர் அடுத்தவருக்கு கூலி வேலை செய்து பார்த்து இருக்கிறீர்களா? இல்லை, எங்காவது ஒரு சீக்கிய பிச்சைக்காரரை பார்த்து இருக்கிறீர்களா? இல்லை, அன்றாட அலவல்களில் பலதரப் பட்ட இனாங்களோடு பலகும் போது எப்போதாவது ஒரு சீக்கியர் எந்த காரணத்திற்காகவும் அடுத்தவருக்கு பயந்து பின்வாங்குவதை பார்த்திருக்கிறீர்களா?

("இனவாரியாக பார்த்தால், சிங்கப்பூரில் அதிக சராசரி வருமான வரி கட்டுபவர்கள் சீக்கிய இனத்தவர்கள் தான்" என்று சிங்கப்பூரின் முன்னால் பிறதமர் திரு. லீ குவான் யூ ஒரு முறை தேர்தல் மேடையில் சொல்லியதை நானே கேட்டிருக்கிறேன்).

2). வட இந்தியர்கள்

மலேசியாவில் வட இந்திய இனங்களான குஜராத்தி, சிந்தி, பங்காளி பொன்ற இனங்களின் மொத்த ஜனத்தொகை ஒரு 10,000 இருக்கும். இவர்கள் வட இந்தியாவில் இருந்து வர்த்தகர்களாக அந்தக் கால மலாயாவிற்கு வந்தவர்கள். இன்றும் இவர்களின் சந்ததியினர் பெரும்பாலும் வர்த்தகர்களாக தான் இருந்து வருகிறார்கள். நிறுவையில் வைத்து எடை போட்டு பார்த்தால், இவர்களும் படிப்பாலும், பொருளாதார ரீதியாகவும், வாழ்க்கை தரத்தாலும் மிகவும் மேம்பட்ட, மலேசியாவின் பிற எல்லா இனங்களையும் தூக்கி விழுங்க கூடிய ஒரு சமூகத்தினர் தான்.

3). மலையாளிகள்

மலேசியாவில் மலையாளிகளின் ஜனத்தொகை ஒரு 120,000 இருக்கும் என்பது என்னுடைய பல மலையாள நண்பர்களின் மதிப்பீடு. அந்த கால மலாயாவிற்கு மலையாளிகள் பிரிட்டீஸ்காரர்களால் ரப்பர் தோட்ட நிர்வாகத்தினருக்கு குமாஸ்தாக்களாகவும், மண்டோர்களாகவும், மருத்துவ உதவியாளர்களாகவும் கொண்டு வரப் பட்டுள்ளாகள். இங்கு வந்த தமிழர்களைப் போல் அல்லாமல், மலையாளிகள் சுமார் எண்பது, தொன்னூறு வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டிற்கு வரும்போதே படித்தவர்களாகவும், நன்கு ஆங்கிலம் பேச, படிக்க, எழுதத் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

நாளடைவில், இவர்களின் சந்ததியினரும், நன்கு படித்து பட்டம் வாங்கியவர்களாக அமைந்ததால் இவர்களுக்கு மலேசிய தமிழரைப் போன்ற அடிப்படை பிர்ச்சனைகள் எல்லாம் என்றுமே இருந்ததில்லை. அத்தோடு, பிறரை கவரும் வகையில் இவர்களுடைய நிறமும் சிவப்பாக இருந்தது இவர்களுக்கு மற்றுமொரு பெரிய அனுகூலமாக என்றுமே இருந்துள்ளது.

மலையாளிகள் பொதுவாக வர்த்தகம், தொழில் என்பவையில் ஈடுபடாதவர்களாக இருந்துள்ள படியால், இந்த சமூகத்தில் குறிப்பிட தக்க அளவில் பெரும் பணக்காரர்கள் உருவாகமல் இருந்திருக்கிறார்கள் என்கிற உண்மை ஒரு புறம் இருந்தாலும், மலையாளிகள் காலங்காலமாக படிப்பிற்கு கொடுத்து வந்துள்ள முக்கியத்துவம் நாம் யாவரும் நன்கு அறிந்த ஒன்று. அந்த வகையில் படிப்பிற்கு முன்னுரிமை கொடுத்ததின் வழி, தங்கள் வாழ்க்கை தறத்தை மேம்படுத்தி கொண்ட இனங்களுல், மலையாளிகள் முதல் நிலை பெற்றவர்கள்.

4). யாழ்பானத் தமிழர்கள்

மலேசிய ஜனத்தொகையில் யாழ்பானத் தமிழர்கள் ஒரு 150,000 பேர் இருப்பார்கள் என்பது என்னுடைய மதிப்பீடு. இவர்களும் மலேசியாவில் உள்ள பிற எல்லா இனத்தையும் தூக்கி விழுங்க கூடிய ஒரு இனத்தவர்தான். மலேசியாவின் அதி பெரிய பணக்காரர்களில் திரு. ஆனந்த கிருஷ்ணன், டத்தோ ஞானலிங்கம், டான் ஸ்ரி ஆறுமுகம் போன்று எத்தனையோ யாழ்பானத் தமிழர்கள் இருக்கிறார்கள்.

இந்த நாட்டில் எந்த இனத்திடம் சராசரி அதிக சொத்துக்கள் இருக்கின்றது என்பதை கணக்கெடுத்து பார்த்தால் அது நிச்சயமாக யாழ்பான தமிழர்கள் இனமாகத் தான் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மலாயாவைப் போல் 43 நாடுகளை தங்களின் காலனிகளாக கொண்ட பிரிட்டீஸ் அரசாங்கத்தினர், மலாயாவின் தட்ப்ப வெட்ப சூழ்நிலையில் ரப்பர் மரம் நன்றாக வளரும் என்பதை உணர்ந்த போது, 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் மற்ற பல காலனித்துவ நாடுகளை விட மலாயாவின் பால் அதிக நாட்டம் காட்ட துவங்கினர்.

அந்த வகையில் மலாயாவில் காடுகளை அழித்து, ரப்பர் மரங்களை நட்டு வளர்க்க மிகவும் பொருத்தமானவர்கள் என்று படிப்பறிவு இல்லாத இந்திய தமிழர்களையும், அரசாங்க நிர்வாகத்திற்கு பொருத்தமானவர்களாக படித்த யாழ்பான தமிழர்களையும் அடையாளம் கண்டு, இந்த இரு தமிழ் பிரிவினரையும் மலாயாவிற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வந்தனர்.

இப்படி யாழ்பானத்தில் இருந்து வந்த தமிழர்கள் பெரும்பாலும் சாதியத்தில் மேம்பட்ட அள்ளது நடுத்தர இனங்களைச் சேர்ந்தவர்களாகவும், நன்கு படித்தவர்களாகவும், ஆங்கிலத்தை சரளமாக எழுத, படிக்க, பேசத் தெரிந்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

அத்தோடு அந்த கால சூழ்நிலையில், ஒரு வளர்ந்து வரும் செழிப்பு நிரைந்த புது நாட்டில் ஆங்கில நிர்வாகிகளுக்கு துணையாளர்களாக, குமாஸ்தாக்களாக, சர்வேயர்களாக, மருத்துவ உதவியாளர்களாக, ஆசிரியர்களாக, தொழில் நுட்ப உதவியாளர்களாக அரசாங்க சேவையில் யாழ்பான தமிழர்கள் செயல்பட்ட போது, இயல்பாக அந்த பதவிகளில் யாருக்கும் கிடைக்க கூடிய பல அனுகூலங்கள் அவர்களுக்கும் கிடைத்துள்ளன. அப்படி கிடைத்த அனுகூலங்களை யால்பான தமிழர்கள் திறம்பட பயன்படுத்திக் கொண்டு, நன்மை அடைந்திருக்கிறார்கள்.

அரசாங்கத்தில் என்னென்ன வேலைகள் காலியாக உள்ளன, எப்போது அந்த இடங்கள் நிரப்ப பட உள்ளன, அதற்கான நேர்கானல், தேர்வு எல்லாம் எப்போது நடத்த பட உள்ளது, யாரால் நடத்தப் பட உள்ளது என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் முதலில் தெரிய வருவது அங்கு வேலை செய்யும் இவர்களுக்கு தான். அதை சாதகமாக பயன் படுத்தி, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என்று சங்கிலித் தொடர் போல் அவர்களுக்கு தெரிந்தவர்களாக அரசாங்க உத்தியோகத்தில் சேர்த்து விட்டிருக்கிறார்கள். இப்படி அரசாங்கத்தில் யாழ்பான தமிழர்களுக்கு இருந்த சொகுசு நிலை, 1969 வருடம் நடந்த இனக் கலவரத்திற்கு பிறகு முன் வைக்க பட்ட புதிய பொருளாதார கொள்கையின் அமுலாக்கத்திற்கு பிறகே முற்றுக்கு வந்துள்ளது.

ஆனாலும் 1969 ஆம் ஆண்டிற்க்கு 100 வருடங்களுக்கு முன்பு வரை யாழ்பான தமிழர்களுக்கு அரசாங்கத்தில் இருந்த சலுகைகளின் மூலம் தங்கள் இனத்திற்க்கு ஏற்படுத்திக் கொண்ட பலம் (வலம்) மிகப் பெரியது. அந்த நிலைப் பாட்டின் தாக்கம் இன்றும் அவர்களுக்கு துணை நிற்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

யாழ்பானத்தாரின் பலத்தை, வளர்ச்சியை சரியாக புரிந்து கொள்ளும் முன், வாசகர்கள் அவர்களைப் பற்றிய மற்றொரு விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும். யாழ்பானத் தமிழர்களிடையே பெண் குழந்தைகளுக்கு அதிகமான வரதட்சனை கொடுத்து மணம் முடித்து வைப்பது என்பது காலங்காலமாக பின்பற்றப் பட்டு வந்துள்ள ஒரு சமூக வளக்கம். அதனால், ஒவ்வொரு யாழ்பான தமிழரும் தம் பெண் பிள்ளைகளின் வரதட்சனைக்கு பிற்பாடு தேவைப் படும் என்பதற்காக தங்களின் சேமிப்புகளை அன்றைய மலாயாவில் 'நில பலங்களில்' முதலீடு செய்துள்ளார்கள். அன்று அப்படி வாங்க பட்ட நில பலங்கள்தான் பிற்பாடு யாழ்பான தமிழ் பிள்ளைகளின் வெளிநாட்டு படிப்பிற்கும், அவர்களின் தொழில் முயற்ச்சிகளுக்கும், பிற முக்கிய செலவுகளுக்கும் பயன் படுத்தப் பட்டுள்ளன.

இதன் தாக்கத்தை வாசகர்கள் முறையாக புரிந்து கொள்ளவதற்கு ஏதுவாக, உங்களுக்கு இங்கு ஒரு எடுத்து காட்டை முன் வைக்கிறேன். கோலாலம்பூரில் 'பங்சார்' என்று ஒரு இடம் உள்ளது. இந்த 'பங்சார்' எனும் பகுதிதான் மலேசியாவிலேயே அதிக விலையுள்ள நடுத்தர வீடுகளை கொண்ட இடம். இங்கு ஒரு ஒற்றை மாடி ட்டெரஸ் வீட்டின் இன்றைய விலை மலேசிய ரிங்கிட் 600,000 ஐ தாண்டி ஓடிக் கொண்டுள்ளது. இந்த பங்சாரில் உள்ள சுமார் 2,000 வீடுகளில் எப்படியும் ஒரு 30 விழுக்காடு வீடுகள் இன்றும் யாழ்பான தமிழர்களுடையதாக தான் இருக்கின்றன. 1970 ஆம் ஆண்டு இந்த வீடுகள் கட்டி முடிக்க பட்ட போது யாழ்பானத்தார்கள் தான் வலைத்து. வலைத்து இந்த வீடுகளை ஓரு வீடு மலேசிய ரிங்கிட் 14,000 என்ற விலைக்கு வாங்கினார்கள். இன்று அதே வீடுகளின் விலை மலேசிய ரிங்கிட் ஆறு லட்ச்சம். எனக்கு தெரிந்த பல யாழ்பானத் தமிழர்கள் பங்சாரில் இன்றும் இரண்டு, மூன்று வீடுகள் வைத்திருக்கின்றனர்.

இதே போல் வீடு, வாசல், நிலம் புலம், எஸ்டேட்டுகள் என்று மலேசியாவில் யாழ்பானத்தார்கள் வாழ்ந்த பல நகரங்களில் இன்றும் அவர்களுக்கு சொத்து சுகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

5). தெலுங்கர்கள்

மலேசியாவில் உள்ள தெலுங்கர்களை பற்றி எனக்கு தனி மனித அளவில் எந்த அநுபவமும் இருந்தது இல்லை. அதனால் அவர்களை பற்றி எதுவுமே தெரியாத நிலையில் இனையத்தில் மலேசிய தெலுங்கர்கள் குறித்து என்ன சொல்லப் பட்டிருக்கிறது எனப்தை கண்டு பிடிக்க பல இணைய தலங்களை எட்டி பார்த்தேன். மலேசிய ஆந்திரா அசோசியேஷனின் இணைய தலத்தில் மலேசியாவில் தெலுங்கர்களின் ஜனத்தொகை 300,000 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சரிதானா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சரி மலேசியாவில் தெலுங்கு இனத்தினரின் ஜனத்தொகை எவ்வளவு என்கிற கேள்வியை இங்கு விட்டு விடுவோம். நான் கண்டு பிடித்த வரை, தமிழ் நாட்டில் இருந்து வந்த தமிழர்களைப் போல், ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கர்களும் எந்த படிப்பறிவும் இல்லாத நிலையில் மலாயாவிற்கு கூலி வேலை செய்வதற்காக வந்தவர்கள் தான். ஆனால், தமிழர்களை விட மலேசியாவில் உள்ள தெலுங்கு இனத்தவர் மேம்பட்ட பொருளாதார நிலையிலும், கூடுதலான படிப்பறிவோடும் உள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

யாழ்பானத்து தமிழர்களை போல், தெலுங்கர்களும் 1960 - 1970 களில் நில பலங்களில் அதிகமாக முதலீடு செய்திருக்கிறார்கள். குறிப்பாக தோட்ட துண்டாடல் நடந்த நேரத்தில் நூற்றுக்கணக்கான தெலுங்கர்கள் அவர் அவர்களால் முடிந்த அளவு நிலங்களை வாங்கி போட்டிருக்கிறார்கள். அப்படி வாங்கி போடப் பட்ட நிலங்களின் விலை இன்று ஒன்றுக்கு, பத்து, இருபது என்கிற நிலையில் உள்ளன.

அப்படியானால் மலேசிய தெலுங்கர்களும் நம்மை விட (மலேசிய தமிழர்களான நம்மை விட) விவரமான, முன்னேற்றமான இனத்தினர் தானே.

6). இந்திய முஸ்லீம்கள்

மலேசியாவில் இந்திய முஸ்லீம்களின் ஜனத்தொகை ஒரு 150,000 இருக்கலாம் என்பது என் கணிப்பு. நாட்டுக் கோட்டை செட்டியார்கள் இனத்தை போல், வட இந்திய இனங்களைப் போல் தமிழ் நாடு, கேரளா ஆகிய இந்திய மாநிலங்களில் இருந்து மலாயாவிற்கு வணிகர்களாக வந்தவர்கள் தான் இன்றைய இந்திய முஸ்லீம்கள்.

பொதுவாக படிப்பில் அதிகம் கவனம் செலுத்தாத ஒன்றுதான், இந்த இனத்தவரை பற்றி யாரும் குறையாக சொல்லக் கூடிய ஒரே விஷயம். அதுவும் இப்போதைய நிலையில் மாறிக் கொண்டு வருகிறது. மற்ற வகையில் இந்திய முஸ்லீம்கள் வணிகத்திலும், வியாபாரத்திலும் அசாத்திய அசுரர்கள்.

சீனர்களை ஒத்த உழைக்கும் தன்மை இவர்களுக்கும் வெகுவாக உண்டு. பொருளாதார ரீதியாக மிகவும் மேம்பட்ட ஒரு வகுப்பினர். ஆனால், மற்றவரைப் போல இவர்களிடம் இருக்கும் பொருள் வலம் இலகுவில் வெளியில் தெரியாத வகையில் வாழ்க்கையை சாதாரணமாக நடத்திச் செல்லும் இயல்பு உள்ளவர்கள்.

7). இந்திய தமிழர்கள்

இந்திய தமிழர்கள் (ஆம்.... நாம்) இந்தியாவில் தமிழ் நாட்டில் இருந்து 150 வருடங்களுக்கு முன்பு ரப்பர் எஸ்டேட்டுகளில் வேலை செய்வதற்காக பிரிட்டீஸ்காரர்களால் கொத்தடிமைகளாக, கங்கானி ஏஜண்டுகள் மூலமாக மலாயாவிற்கு கொண்டு வரப் பட்டவர்கள்.

இவர்கள் மலேசிய இந்திய ஜனத்தொகையில் 75 விழுக்காடு இருப்பார்கள் என்பது பலரது கணிப்பு. படிப்பறிவு சிறிதும் இல்லாத நிலையில், கூலி வேலைக்கென்றே இந்த நாட்டுக்கு கொண்டு வரப் பட்ட இனத்தினர்.

மலேசிய இந்திய இனங்களிலேயே படிப்பு, பொருளாதாரம், சமூக இயல் என்று எல்லா வகையிலும் பிற எல்லா இனங்களையும் விட பொதுவாக பின் தங்கிய நிலையிலேயே இன்றும் இருந்து வரும் ஒரு சமூகத்தினர்.

ஆக இதுதான் மலேசிய இந்தியன் எனும் குழுமத்தின் உள்ள எல்லா இனங்களின் இன்றைய நிலைப் பாடு. இதில் எல்லா இனங்களையும் விட கடைசி வரிசையில் இருப்பது நாம் தான்.

சரி, இப்படி இனவாரியான ஆராய்ச்சி எதற்கு என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. அடுத்த பதிவில் காரணங்களை பார்ப்போம்.