ஆனால் தரை அளவில் நடந்தேறும் உண்மை நிலை என்ன? அத்தனை அரசாங்க நிர்வாகத் துறைகளிலும் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் மலாய்காரர்களாக உள்ளார்கள். இதனால் அரசாங்கம் சம்மந்தபட்ட அத்தனை நிகழ்வுகளிலும், திட்டங்களிலும், செலவுகளிலும், வாய்ப்புக்களிலும் அம்னோ அரசாங்கத்தின் தாரக மந்திரமான "மலாய்காரர்களின் முன்னேற்றம்" என்கிற ஒற்றை குறிக்கோள் மட்டும்தான் நடைமுறையில் செயலாக்கம் கண்டு வருகிறது.
அது போக மலாய்காரர்கள் தங்களுக்குள்ளே குழுமும் எல்லா இடங்களிலும், கூட்டங்களிலும் "நம் இனத்தின் துரித மேம்பாட்டிற்கான வழிகள் என்ன?", "மலாய்காரர்களின் முன்னுறிமையை எப்படி காலங் காலத்திற்கும் நிலை நாட்டுவது?", "மலாய் இன ஆழுமைக்கு பிறகு தான் பிற எல்லாம்" என்பதை தான் திரும்ப திரும்ப பேசுகிறார்கள், ஆராய்கிறார்கள். அப்படி எந்த மலாய்கார தலைவராவது 'மலாய் இன மேம்பாட்டு குறிக்கோளை' முதன்மையாக தம் பேச்சின் சாராம்சமாக அமைத்து அடித்து, மேசையை குத்தி, உறக்க கூவி அப்பட்டமாக சூழுரைக்காது விட்டால், அவரால் அம்னோவில் தன் கட்சி பதவியை தற்காத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
இதனால், பிரதமர் பொருப்பில் உள்ள மலாய் தலைவர் வரை "UNTUK BANGSA, AGAMA DAN NEGARA" என்று பல இன, பல மத மக்கள் வாழும் நாட்டில் 'இனத்தையும், மதத்தையும்' முதலில் குறிப்பிட்டு விட்டு, எல்லா குடிமக்களுக்கும் சம உறிமை உள்ள, சம ஈடுபாடு உள்ள, ஒரு மக்களாக ஐக்கியபடக் கூடிய 'நாடு' என்கிற அம்சத்தை கடைசியில் வைத்து தான் தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பின் போதே பேசுகிறார்.
ஹிந்திராவ்
இத்தகைய அரசியல் சூழ்நிலையில், ஒரு அப்பட்டமான் இஸ்லாமிய நாட்டில், ஹிந்திராவ் காரர்கள் 'ஹிந்து ஆக்ஸன் ப்வோர்ஸ்' என்று தங்கள் சமூக அமைப்பிற்கு பிற ஒரு சமயத்தின் பெயரை சூட்டிக் கொண்டது அடி முட்டாள் தனங்களில் எல்லாம் பெரியதொரு முட்டாள்தனம்.
இந்த 'ஹிந்து' எனும் வார்த்தையை அவர்கள் தம் அமைப்பின் பெயரில் சேர்த்த அன்றே நமது ஹிந்திராவ் தலைவர்கள் பாதி தோற்று விட்டனர். அதன் பிறகு, உதயகுமார் / வேதமூர்த்தி இருவரும் என்று தங்கள் சமூக அமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்தார்களோ அன்று ஹிந்திராவ் எனும் இயக்கம் முழுவதுமாக தோற்றுவிட்டது.
'சமுதாய மேம்பாடு' என்பது சில வினாடிகளில் ஓடி முடிக்கும் 100 மீட்டர் விரைவோட்டம் அல்ல. அது வெகு காலத்திற்கு, வெகு தூரத்திற்கு தொடர்ந்து நாம் ஒடிக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு 'தொடர் மராத்தன் ஓட்டம்'.
அதை வெற்றிகரமாக ஓடுவதற்கு நமக்கு சுய தெம்பும், ஆற்றலும் மட்டும் போதாது. அவற்றோடு, மலேசியாவில் உள்ள பிற இன மக்களுடைய நட்புறவும், புரிந்துணர்வும் நமக்கு மிக, மிகத் தேவை. அந்த புரிந்துணர்வை நாம் மற்ற இனத்தவரின் சட்டையை பிடித்து, அடிதடியில் இறங்கி எல்லாம் பெற முடியாது.
அதை நாம் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து, பேசி, பழகி, உணர்த்தி, கருத்தொருமித்து, அதன் பிறகு தான் பெற முடியும். அதற்கு அடிப்படையில் நம் சமூக / அரசியல் இயக்கங்களில் சம்மந்த பட்ட தலைவர்கள் உணர்ச்சி என்பதை ஒதுக்கி வைத்து விட்டு காரியத்தில் குறியாக உள்ள புத்திசாலிகளாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் நம் ஹிந்திராவ் தலைவர்கள் புத்திசாலிகளா?? ஒரே குறிக்கோளுக்காக ஐந்து பேர் ISA சட்டத்தின் கீழ் சிறை சென்றனர். ஆனால், இன்று அவர்களுக்கிடையே மூன்று கட்சிகள் உருவாகியுள்ளன. இது புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடா?
சம்மந்தப் பட்ட ஹிந்திராவ் தலைவர்கள் இப்படியெல்லாம் நிகழ்வுகள் நடக்கும் என்பதை ஆரம்பத்திலேயே அறியவில்லையா? எத்தனையோ பிற இன அரசியல் ஆய்வாளர்கள் இப்படி தான் சம்பவங்கள் ஹிந்திராவில் அடுத்தெடுத்து நடந்தேறும் என்பதை வெகு நாட்களுக்கு முன்பே கூறியிருந்தார்களே! அவர்கள் சிந்தனையில் மட்டும் நாளை நடகக இருப்பவை என்ன என்பது எப்படி முன்கூட்டியே தெரிந்தது?
இனி போகப் போக என்ன நடக்கவிருக்கிறது என்று பாருங்கள். ஹிந்திராவ் தலைவர்களுக்கு தனி மனித அளவில் வேண்டுமானால் எதாவது முன்னேற்றம் ஏற்படலாமே ஒழிய, இந்திய சமுதாயத்திற்கு ஹிந்திராவ் சம்மந்தப் பட்ட கட்சியினரால் இனி எதுவும் ஆகப் போவது கிடையாது என்பது என் கருத்து
தலைவனுக்கு தேவை: தூரநோக்கும் இயல்பு / புத்திசாலித்தனம்
"பத்து படிகளுக்கு முன்னரே பத்தாவது படியில் என்ன நடக்கும் என்பதை துல்லிதமாக கணக்கு போடத் தெரிந்தவன் மட்டும்தான் உண்மையான தலைவன் ஆக முடியும்" என்பது என்னுடைய ஆழமான கருத்தும் கூட. அதுவும் பத்திரிக்கைகளைக் கூட படிக்காமல், அஸ்ட்ரோவில் சீரியலையும், சினிமாவையும் வெட்டியாக பார்த்து கொண்டு வீணாக பொழுதைக் கழிக்கும் நம்மைப் போன்ற ஒரு அடி முட்டாள் இனத்திற்கு தலைவனாக விளைகிறவர், ஆழமாக சிந்திக்க கூடிய, தூர நோக்கு இயல்புடைய அட்டகாசமான சிந்தனைவாதியாகவும், புத்திசாலியாகவும் இருக்க வேண்டும்.
தன் அளவில், தன் கட்சியில், அரசாங்கத்தில், தன் சுய முன்னேற்றத்தில், தன் நிலையை ஸ்தர படுத்திக் கொள்வதில், அவர் ஒரு மிக பெரிய திறமைசாலியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தன் ஒட்டு மொத்த இனத்தையும் விடியலை நோக்கி எப்படி பயணிக்க வைப்பது என்பதற்கான 'தேடலுக்கு' தெளிவான விடைகளையும், வழிவகைகளையும் கோடிட்டு காண்பிக்க கூடிய அறிவாளியாகவும் இருக்க வேண்டும்.
அப்படிபட்ட ஒரு திறமைசாலி நம்மிடையே தலைவராக தோன்றினால் ஒலிய, நம் தமிழ் இனத்திற்க்கு இந்த நாட்டில் விடியல் என்பது நாம் தலைகீழாக நின்றாலும் ஏற்படாது என்பது என்னுடைய ஆழமான கருத்து.
"அப்படியென்றால் ஒரு அதி புத்திசாலி நமக்கு தலைவராக வந்தால்நம் இனத்திற்கு விடிவு காலம் உடனே வந்துவிடுமா?" என்றால், அதுவும் இல்லை! இன்று,இப்போது, உடனே என்கிற அளவில் எந்த சமூகத்திலும், எந்த மாறுதலும் இதுவரை வந்ததும் கிடையாது, இனி வரப்போவதும் கிடையாது.
ஒரு பிற்பட்ட சமூகம் விருத்தி அடையும் நிலைக்கு வரும் முன், அந்த சமூகத்தின் சராசரி மனிதனிடம் சில அடிப்படை மாறுதல்களும், விழிபுணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.
அதனால் எவ்வளவு அபாரமான மனிதர் நம்மிடையே சமூக தலைவராக வந்தாலும் உண்மையான சமூக மாறுதல் என்பது நம் இனத்திடம் வந்து சேர்வதற்கு வெகு காலம் ஆகும். ஆனால், தூர நோக்கு இயல்புடைய ஒரு நல்ல மனிதர் நமக்கு தலைவராக அமைந்தால், நம் இனத்திடம் தொடர்ந்து நடந்து வரும் 'சமூக பின்னடைவு' என்பது அடுத்த ஒரு 10 வருடங்களுக்குள் நிச்சயமாக பேரளவுக்கு தடுத்து நிறுத்தப் படலாம்.
இன முன்னேற்றம் என்பது, நம்மிடையே பரவலாக உள்ள சமூக பின்னடைவு சீர் செய்ய பட்டதன் பிறகு நடைபெற வேண்டிய ஒரு அடுத்த கட்ட நிகழ்வு. அதற்கு, விஷேச யுக்திகள் மூலமாகவும், திட்டங்கள் மூலமாகவும், அரசாங்க வழிப் பயிற்ச்சிகளின் மூலமாகவும் தனி மனித அளவில் நம்மிடையே பல மாற்றங்களை நமக்கு சமூக தலைவராக தேர்ந்தெடுக்க படுபவர் முதலில் ஏற்படுத்த வேண்டும்.
தலைவனுக்கு தேவை: அடிப்படை நேர்மை
மலேசிய சீனர் சங்கத்தில் அறு, ஏழு வருடங்களுக்கு முன்பு 'லிங் லியொங் சிக்' என்று ஒரு கட்சி தலைவர் இருந்தார். அவருக்கு 'துன்' பட்டம் வழங்கப் பட்டு, இப்போது கட்சிக்கு ஆலோசனைகள் வழங்கும் மூத்த தலைவராக இருக்கிறார். அவர் சீனர்கள் இந்த நாட்டில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பேசும் போது அடிக்கடி ஒரு இரண்டு வரி அறிவுரை ஒன்றை கொடுப்பார்.
அது என்னவென்றால் "நாம் இந்த நாட்டில் ஒரு சிறுபாண்மையினர். சிறுபாண்மையினர், சிறுபாண்மையினரைப் போலத்தான் நடந்து கொள்ள வேண்டும். ஓவராக சவுண்டு விடக் கூடாது" என்பது.
பல வருடங்களுக்கு முன்பு இதே துன் லிங் லியோங் சிக்கிடம் அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த லிம் கிட் சியாங், நாடாளுமன்றத்தில் "நீங்கள் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். மருத்துவராக இருந்து, பிறகு அரசியலுக்கு வந்தீர்கள். ஆனால், 26 வயதில் உங்கள் மகன் பெயரிலும், அவர் சம்மந்த பட்ட வரையிலும், மலேசிய பங்கு சந்தையில் 1,000 மில்லியன் ரிங்கிட்டை தாண்டி பங்குச் சொத்து இருக்கிறதே, அது எப்படி?" என்று கேட்ட கேள்விக்கு, அந்த சீனப் பெருந்தலைவர் கூறிய பதில் "சிறு வயதானாலும் என் மகன் மிக, மிக கெட்டிகாரர். அவர் திறமையை கொண்டு அவன் சம்பாதித்து சேர்த்தது அவ்வளவும்" என்றார்.
அவர் சொன்னது உண்மையா? இல்லையா? என்பதெல்லாம் வேறு விஷயம். சீனர்கள் தம் தலைவர்கள் இந்த மாதிரி கூறும் காரணங்களை ஏற்று கொள்கிறார்களோ, இல்லையோ .... ஆனால், நம் இனத்தில் நம் தலைவர்களில் ஒருவர் இப்படி கூறினால், அதை யாரும் நம்புவார்கள் என்று நினைக்கிறார்களா?
உண்மையில் அந்த சொத்து எப்படி சேர்க்க பட்டிருக்கும் என்பதை சாலை ஓரத்தில் வடை சுட்டு விற்க்கும் பாட்டியுடன் நின்று, பொட்டலம் போட்டு கொடுக்கும் பொக்கை வாய் தாத்தாவை கேட்டாலும் "அட ஏ..ம்..ப்பா ! வக்..*&** ... **%*# ...' என்று கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்த பிறகு, அந்த பணம் எப்படி சம்பாதிக்கப் பட்டிருக்கும் என்பதை விளாவாரியாக விளக்கி சொல்வார்.
இப்படி தன்னிடம் இருக்கும் தனம் தனக்கு எங்கிருந்து வந்தது என்பதை முறையாக விவரித்து கூற இயலாத நிலையில் ஒரு தலைவன் இருந்தால், அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி பருப்பாக இருந்தாலும் இந்த நாட்டு சூழ்நிலையில் அவரால் தன் இனத்திற்கென்று பெரிதாக ஒன்றும் வெட்டி முறிக்க முடியாது.
நன்றாக யோசித்து பாருங்கள். இப்படி பட்டவர் தன் கழுத்தில் தானே ஒரு சுருக்கு கயிற்றை மாட்டி கொண்டு, கயிற்றின் மறு நுனியை பிற இனத்தவரிடம் கொடுக்கும் ஒரு அரை வேக்காட்டு சுயநலவாதி. இப்படி நடந்து கொள்பவர் நாளை எங்கனம் தன் இனத்திற்கு என்று இந்த நாட்டு அரசியல் சூழ்நிலையில் சவுண்டு விடுவார்?
ஏதோ வெளிப் பாவனைக்கு வேண்டுமானால் அவரால் அவ்வப்போது ஏதாவது அறிக்கை விட முடியுமே அல்லாது, தன் இனத்திற்கென்று ஒன்றும் பெரிதாக அவரால் எந்த காலத்திலும் சாதிக்க முடியாது.
நம்ம ஆளு மீசையை முறுககி, கட்ட பொம்மன் வசனம் பேசி "சென்று வருகிறேன். வென்று வருகிறேன்" என்று வீர முழக்கமிட்டு, பிற இன பெருந்தலைவரை காண 'டஸ்ஸ்ஸ்ஸ்' என்று காரில் கிளம்பிச் செல்லுவார். அங்கு போனால் நம்ம ஆளை நன்கு அறிந்த பிற இன பெருந்தலைவர், இவர் வண்டவாளங்களை குறித்த பற்பல 'பைல்களை' கையில் தயாராக வைத்து கொண்டு இருப்பார்.
அப்புறம் என்ன, 'ட்ஸ்ஸ்ஸ்ஸ்' என்று கிளம்பிய நம்ம ஆளுக்கு, பிற இன பெருந்தலைவர் அவர் முன் தூக்கி போட்ட 'பைல்களை' பார்த்த உடன், 'புஸ்ஸ்ஸ்ஸ்' என்று காற்றை புடுங்கி விட்ட நிலை ஏற்பட்டு விடும்.
இருந்தாலும், வெருங்கையை வீசிக் கொண்டு வந்தால், வெளியில் இமேஜ் கெட்டு விடும் என்பதற்காக "நான் பெருந்தலைவரிடம் பேசி விட்டேன். அவரும் ஒப்புக் கொண்டு விட்டார். இப்போதைக்கு நமக்காக உடனே மூன்று மில்லியன் ரிங்கிட் ஒதுக்கி உள்ளார்" என்று ஏதோ பெரும் வெற்றிச் சாதனை புரிந்து விட்டது போல் பாவனை செய்வார்.
நாம் தான் இழிச்சவாய் இனமாயிற்றே! "என்னடா முன்னூறு மில்லியன் பெற்று வருவார் என்று நினைத்திருந்தோம், இவர் மூன்று மில்லியன் என்கிறாரே?" என்றெல்லாம் நமக்கு யோசிக்க தோன்றாது. நம்ம புத்திக்கு "அரசி சீரியல்ல இன்னிக்கு என்ன நடக்கும்?", "இந்த தீபாவளிக்கு RTM ல் என்ன சினிமா படம் போடுவான்?" என்கிற அளவில் தான் புத்தி வேலை செய்யும்.
பிறகு என்ன? நம்ம ஆளுக்கு 'நேக்கா, டேக்கா' கொடுத்த பிற இன பெருந்தலைவர் ஜெயித்தவராவார், மூன்று மில்லியனாவது வாங்கி வந்த நம்ம ஆளும் ஜெயித்தவராவார், தலையில் இடியே விழுந்தாலும் அசராது சீரியல் பார்க்கும் நாமும் ஜெயிக்காவிட்டாலும், தோத்தவர்கள் ஆக மாட்டோம் (கிடைக்கும் என்று நினைத்த ஒன்று கிடைக்காமல் போனால்தானே தோற்றவர்கள் ஆவோம். நாம் தான் எதுவுமே நினைப்பது கிடையாதே). பிறகு யார்தான் தோற்பது என்கிறீர்களா?
வேறு யாரு? தம் முப்பாட்டன்களைப் போலவே, அவர்கள் காலத்தில் அங்கலாய்த்து தட்டு தடுமாறப் போகிற நம் இனத்தின் வருங்காலத் தலைமுறைதான் தோற்பவர்கள்!
இப்போது சொல்லுங்கள், தன்னிடம் உள்ள பணத்திற்கு முறையாக கணக்கு சொல்ல முடியாதவர்களை எல்லாம் நாம் தலைவராக ஏற்று கொள்ள முடியுமா? ஏற்றுக் கொள்ளலாமா?