ஜனத்தொகை கணக்கெடுப்பு கூறும் உண்மைகள்
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஜனத்தொகையில் 12.0 விழுக்காடாக இருந்த நாம், மேல்நிலை இந்தியர்கள் பேரளவுக்கு மலேசியாவில் இருந்து பிற நாடுகளுக்கு புலம் பெயர்ந்ததாலும், அண்டை நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறி எப்படியோ மலேசிய குடியுறிமை பெற்ற லட்ச்சக் கணக்கான இந்தோனீசிய, பிலிப்பீன்ஸ் நாட்டு இஸ்லாமியர்களின் வருகையினாலும், மலாய் இனத்தவரின் கூடுதல் ஜனத்தொகை பெருக்கத்தினாலும் மலேசியாவின் மொத்த ஜனத்தொகையில் இன்று வெறும் 7.7 விழுக்காட்டாக குறைந்துள்ளோம்.
சரி, மலேசியாவில் இந்தியர்களின் இந்த ஜனப்பெருக்க சரிவு இதோடு நிற்க்குமா என்றால், நிற்க்காது. ஜனத்தொகை கணக்கீடுகளின் படி இன்னும் 11 ஆண்டுகளில், அதாவது 2020 ஆம் ஆண்டு ஜனத்தொகை கணக்கெடுப்பின் போது மலேசியாவின் மொத்த ஜனத்தொகையில் இந்தியர்கள் வெறும் 6.4 விழுக்காடு மட்டுமே இருப்போம் (மலேசியாவில் பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஜனத்தொகை கணக்கெடுப்பு நடத்த படுகின்றது) .இந்த ஜனத்தொகை கணக்கெடுப்பின் தொடர் நிலையை ஆராய்ந்து பார்த்தால், 2050 ஆம ஆண்டு வாக்கில் மலேசியாவின் மொத்த ஜனத்தொகையில் இந்தியர்கள் வெறும் 3.6 விழுக்காடு மட்டும் தான் இருப்பார்கள் (28 மலேசியர்களில் ஒரு இந்தியர் என்கிற நிலைப்பாட்டில்).
அன்றய நிலையில் இந்த நாட்டு அரசியலில் இந்தியர்களுக்கு இன்று உள்ளதுபோல் மலேசிய மந்திரி சபையில் பிரத்தியேக பிரதினித்துவம் எதுவும் இருக்காது என்பது என்னுடைய கணிப்பு. மிஞ்சிப் போனால் நம் இனத்திற்கென்று ஒரு துணை அமைச்சர் பதவி கொடுக்கப் பட்டிருக்கும். எல்லா அன்றாட நிலைகளிலும் இன்று உள்ள 'இந்தியர்கள்' எனும் தனி வகுப்பீடு போய், 'லயின் லயின்' எனும் கெட்டகரியில் கடாசான், இபான், மூருட் போன்ற பிற இனங்களோடு இந்தியர்களும் சேர்க்கப் பட்டிருப்பார்கள்.
ஆக இந்த நாட்டில் தமிழர்களின் வருங்காலத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய அதி முக்கிய உண்மை என்னவென்றால், இன அளவில் நாம் என்ன குட்டி கரணம் அடித்தாலும் மலேசியாவில் இன்று நமக்கு இருக்கும் ஏதோ ஓரளவு அரசியல் பலம் அடுத்த ஒரு 20 வருடங்களுக்கு மட்டும்தான் நிலைத்திருக்கும் என்பதை.
அதற்கு பிறகு மலேசிய அரசாங்கமோ, மலாய் இனமோ நம்மை ஒரு பொருட்டாக மதித்து நடத்த வேண்டிய நிர்பந்தமே இருக்காது. ஓட்டுறிமை எண்ணிக்கையில் நமக்கு இருக்கும் பலம் சிறிது, சிறிதாக கரைந்து மொத்தமாக சரிவு கண்ட நிலையில், மலாய்காரர்கள் நம்மை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது ?
இந்த உண்மையை புரிந்து கொள்ளாது, 'காற்று உள்ள போதை தூற்றிக் கொள்ளாது', நம் நிலையை மேம்படுத்தி கொள்வதற்கு தேவையான எந்த தனி மனித முயற்ச்சியும் செய்யாது, நமது பெண்கள் அஸ்ட்ரோவில் நாள் ஒன்றுக்கு பத்து பதினைந்து சீரியல்களைப் பார்த்து கொண்டு, நமது பிள்ளைகள் பள்ளீயில் படிப்பை கோட்டை விட்டு விட்டு, நமது வாழிபர்கள் வேலை இடத்தில் எந்த துறையிலும் எந்த உருப்படியான நிபுணத்துவமும் பெறாது காலத்தை வீணடித்து, சமுதாய அளவில் நாம் அர்த்தமுள்ள பிற இன தொடர்புகள் எவற்றையும் ஏற்படுத்திக் கொள்ளாது, நமது மக்கள் தமிழ் மொழி பேசும் இந்தியர்களுடன் மட்டுமே பழகிக் கொண்டு, எந்த குறிக்கோளும் முனைப்பும் அற்ற ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டு, நன்றாக தின்று கொழுத்து அருவருக்கத் தக்க அளவு உடல் பருமனை கூட்டிக் கொண்டு, முறையாக உடை உடுத்த கூட தெரியாத பின் தங்கிய நிலையில், வியர்வை நாற்றமும் வெட்டப் பட்டிராத மீசையும் தாடியுமாக 'என்னலா .... கைங்களெல்லாங் ... பன்னாஸ் ஆகி.... தூருன் பாடாங் ... பண்ணிட்டாங்க லா" என்று தமிழும், மலாயும் கலந்த ரெண்டுங்கெட்டான் பாஷை ஒன்றை பேசிக் கொண்டு, ஆண்களில் பலர் காதில் கடுக்கன்களையும், சிலர் மூக்குத்திகளையும் மாட்டிக் கொண்டு அடி முட்டாள்களைப் போலவும், கேணக் கிருக்கன்களைப் போலவும் சுற்றி திரிந்தார்களேயானால், 2050 ஆம் ஆண்டு வாக்கில் இந்த நாட்டில் தமிழன் என்பவன் பலங்காலத்து இந்தியாவில் இருந்த ஹரிஜனனின் நிலைக்கு ஒப்ப, யாராலும் தீண்டப் படாத ஒரு இழிநிலைக்கு தள்ளப் பட்டிருப்பான் என்பதை அடித்து கூறலாம். என் சுய புத்திக்கு இன்னும் 40 - 50 ஆண்டுகளில் மலேசியாவில் சராசரி தமிழனின் நிலை இப்படித்தான் இருக்கப் போகிறது என்று மிக ஆழமாகப் படுகின்றது.
"என்னடா இவன் இவ்வளவு பெரிய குண்டை தூக்கி போடுகிறான்?!" என்று குழம்புகிறீர்களா? நான் கூறுவது நூறு விழுக்காடு உண்மை அய்யா ! இருந்தாலும் என் கூற்றுக்களை இங்கு யாரும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம். நீங்களே உங்கள் அளவில் சுயமாக கணக்குகளை போட்டு பாருங்கள். சிறிது சிறமப் பட்டு மலேசிய அரசாங்க ஜனத்தொகை கணக்கெடுப்புக்களை தேடிக் கண்டுபிடுத்து நான் கூறுபவை உண்மையா, இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்து பாருங்கள். உண்மை என்னவென்பது உங்களுக்கே புரியும்.
"சரி, அப்ப்டியானால் நம் இனத்திற்க்கு என்னதான் விமோச்சனம்?" என்று கேட்கிறீர்களா? நான் அரசியல்வாதியாக இருந்தால் " நமக்கு இன்னமும் காலம் இருக்கிறது. இந்த நாட்டில் தமிழர்களின் வருங்காலம் மிகப் பிரகாசமாக உள்ளது. நாம் முயற்ச்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை. மரத்தமிழர்களான நாம் வெறுமனே களங்களாமா? தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா! அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பது இல்லையே! " என்று மேடை ஏறி "ஆய்... ஊய்" என்று உறத்த கூவி விட்டு, தன்னளவில் "நமக்கென்ன காசா, பணமா ஏதோ கேக்கிறவன் காதுக்கு குளுர்ச்சியா, ஆதரவா, நாலு வார்த்தைகளை கோர்வையாக சொல்லிவிட்டு போவோமே! எல்லாமே பூஜியமா தெரியுதுடான்னா பிறகு எவன் தான் நமக்கு ஓட்டு போடுவான்?" என்று எண்ணுவேன்.
ஆனால், இந்த தொடரை ஆரம்பிப்பதற்கு முன்பு நான் கூறியதைப் போல், நான் சமுதாய உணர்வு கொண்ட ஒரு சாதாரண மனிதன். எனக்கு யாரிடமும் பாலிஸாக பேசி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்கிற தேவை எல்லாம் கிடையாது. என் மனதிற்கு சரி என்று படுவதை, என் பாணியில் 'ஆணி அடித்தாற்ப் போல்' எழுதுகிறேன். படிக்க விருப்பம் இருப்போர் படியுங்கள்.
இப்படி ஏட்டிக்கு போட்டியாகவே நினைப்பவன் பிறகு எதற்காக சமுதாய மேம்பாட்டை பற்றி எழுதி கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா!? காரணமாகத் தான். நான் இந்த தொடரில் எத்தனையோ தடவை கூறி உள்ளதைப் போல், தமிழர்களில் பத்து பேர்களில் இருவரால் மட்டும்தான் ஏதோ முண்டி அடித்து பிற இனங்களுக்கு ஈடுகொடுத்து முன்னேற முடியும் என்பது என்னுடைய ஆழமான கருத்து.
நான் இங்கு எழுதுவதெல்லாம், மிஞ்சிப் போனால் அந்த பத்தில் இரண்டு அல்லது மூன்று பேர்களின் விழிப்புணர்ச்சிக்கு மட்டும்தான் பயன் படும். அதை தாண்டி அடுத்த 20 - 30 ஆண்டு இடைவேலையில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயம் என்கிற அளவில் என்ன காரணத்திற்காகவும், எந்த உருப்படியான சமுதாய மாற்றமும் நம்மிடையே நிகழப் போவதாக என் சுய புத்திக்கு படவில்லை.
சரி, வேறு என்ன புத்திசாலித்தனமான அரசியல் அனுகுமுறைகளை நாம் கடைப் பிடிக்கலாம் என்பதை பார்ப்போம்:-
தன் நிலை அறிதல்
சமுதாய நிலையில் நமது பிரச்சனைகள் தான் என்ன என்பதை, பிற யாருக்கும் நாம் புரிய வைப்பதற்கு முன்பு, நம் அளவில் நாம் அவற்றை புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு அரசியல் சார்பற்ற ஸ்தாபனம் இந்த நாட்டு பல்கலைக் கழகங்களில் படிக்கும் இந்திய மாணாக்கர்களின் துணை கொண்டு நாடு தழுவிய நிலையில் நுனுக்கமான, பரவலான நேர்முக ஆய்வுகளை மேற் கொண்டு சமுதாய அளவில் நமது இனத்தின் உண்மை நிலை என்ன என்பதை கண்டறிய வேண்டும்.
இந்த மாதிரி நாடு தழுவிய சமுதாய அளவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு நிறைய பணம் செலவாகும். ஆனால் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கிறதே என்கிற பயத்தில் இந்த வேலையை தேசிய முன்னணியிடமோ, அதன் இந்திய உருப்புக் கட்சிகளிடமோ விட்டோமேயானால் நம் இனத்தை பற்றிய அப்பட்ட உண்மைகள் நமக்கு என்றுமே தெரியாமலேயே போய்விடும்.
இன்றைய நிலையில், இந்த வேலையை முறையாக செய்ய கூடிய சமுதாய அங்கீகாரமும், அதற்கு தேவையான பணத்தையும் ஆள் பலத்தையும் ஒன்று திரட்டக் கூடிய ஒரே சமூக அமைப்பு ஹிந்திராவ் மட்டும் தான். ஆனால், இந்த இயக்கத்தின் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்தார்கள். பிறகு பிரிட்டீஸ் தூதரிடம் மகஜர் கொடுப்பதறகாக ஒரு பேரணியை ஏற்பாடு செய்தார்கள். இவர்கள் எதிர்பார்த்ததை மிஞ்சி கூட்டமும் கூடியது, குழப்பமும் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகள் இசா சட்டத்தின் கீழ் சிறை சென்றார்கள். பிறகு விடுவிக்கப் பட்டார்கள்.
அதில் ஒருவர் அகில உலக அளவில் இங்குள்ள இந்தியர்களின் அவல நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டினார். இந்திய அரசாங்கம் வரை நமது பிரச்சனைகளின் தீவிரம் தெரியப் படுத்தப் பட்டது. இதற்கிடையில் இந்த நாட்டு ஜனத்தொகையில் 66.0 விழுக்காடு இருக்கும் மலாய்காரர்களுக்கு ஹிந்திராவ்வின் செய்கை பேரளவுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. இதனால், பக்கத்தான் ராக்யாட்டில் உள்ள மலாய் தலைவர்கள் இந்திய பிரச்சனைகளை முன்னெடுத்து பேசுவதற்கு தயங்கி, தயங்கி மென்று முழுங்கி கொண்டிருக்கிறார்கள். சிலர் மலாய்காரர் ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும் என்றும், மலேசிய இஸ்லாமிய கட்சியும், அம்னோவும் கூட்டு புரிந்துணர்வு பேச்சு வாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரைகூவல் விடுத்து கொண்டுள்ளார்கள்.
இதற்கெல்லாம் நடுவில், தேசிய முன்னணி அரசாங்கம் ஹிந்திராவ் இயக்கத்தை ஒரு பொருட்டாக மதிப்பதாகவே தெரியவில்லை. இதுவரை ஹிந்திராவ் குறித்த தேசிய முன்னணியின் போக்கு "ஒனக்கும் பெப்...பே ஒங்க அப்பனுக்கும் பெப்...பே" என்கிற அளவில்தான் உள்ளது. இந்த நிலையில் ஹிந்திராவ் தலைவர்கள அடுத்து என்ன செய்ய விருக்கிறார்கள்?
நான் அடிக்கடி கூறி வருவது போல் "பத்து படிகளுக்கு முன்னரே பத்தாவது படியில் என்ன நடக்கும் என்பதை துல்லிதமாக கணக்கு போட்டு, எதிர்வரும் சூழ்நிலைக்கு உகந்தாற்போல் தன்னை தயார் படுத்தி கொள்ளத் தெரிந்தவன் வாழ்க்கையை வெழ்பவன். அது தெரியாதவன் தோற்பவன்". இந்த நாட்டில் உள்ள தமிழ் இனம், இந்த கணக்கை சிறிதளவு கூட போடத் தெரியாதவர்கள்.
சமுதாய தலைவர்களாக உருவெடுத்திருக்கும் உங்களுக்கு இந்த கணக்குகள் எல்லாம் மிக நன்றாக போடத் தெரியும். அடுத்தடுத்து எடுக்க வேண்டிய முடிவுகளை முறையாக எடுத்து இந்த நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் அவல நிலையை துடைப்பதற்கு வழிவகைகள் கண்டு பிடித்து விடுவீர்கள் என்கிற எண்ணத்தில்தான், ஹிந்திராவ் தலைவர்களான நீங்கள் இட்ட அறைகூவல்களுக்கு மதிப்பளித்து 2007 நவம்பர் 25 ல் கோலாலம்பூரில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சாலை பேரணியில் ஈடுபட்டனர்.
ஆனால் இன்றைய நிலையை பார்த்தால், ஹிந்திராவ் தலைவர்களான உங்களுக்கும் இந்த 'பத்து படிகளுக்கு முன்னரே பத்தாவது படியில் என்ன நடக்கும்" என்கிற தூர நோக்கு கணக்கு போடத் தெரியாது போல தோன்றுகிறது. அப்படியானால், தலைவர்கள் என்று மலேசிய தமிழர்கள் நினைத்தவர்களும் வெறும் தொண்டர்கள்தானா?
பார்ப்போம். சுருக்கென்று ஒரு கேள்வியை கேட்டுள்ளோம். ஹிந்திராவ் சம்மந்தபட்ட சிலர் இந்த தொடரை படித்து வருகிறார்கள். பதில் ஏதாவது வருகிறதா என்று பார்ப்போம் !!
- தொடரும் -