"தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" - பாரதி பாடிய பாட்டு, கேட்பதற்கு இனிமையாக தான் இருக்கிறது. ஆனால் இதை கூறிக்கொள்ளும் போது உண்மையிலேயே நெஞ்சு புடைத்து, நாம் தலை நிமிர்கிறோமா ?
வேறு ஆளே இல்லாது, மற்றம் சில இனங்களோடு தமிழர்கள் மட்டுமே வாழும் உலகம் என்று ஒன்று இருந்தால், தமிழனென்று சொல்லும் போதெல்லாம் நெஞ்சு புடைக்கலாம், தலை நிமிரலாம். ஆனால், தமிழோடு சேர்த்து பூமியில் சுமார் 6,000 மொழிகள் பேச படுவதாக மனித வர்க்க சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த உலக அளவிலான இன கும்பலில் முதலில் தமிழ் இனம் என்பது எந்த நிலையில் உள்ளது. அதில் மலேசியா வாழ் தமிழர்களான நாம் இன வளர்ச்சி பட்டியலில் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை சிறிது ஆராய்ந்து பார்த்தால் தான் உலக அளவில், நம் இனத்தின் உண்மையான வளர்ச்சி நிலை என்ன என்பதே புரியும்.
இந்த மாதிரியெல்லாம் ஏன் கேள்விகள் கேட்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? காரணமாக தான். நமது வீட்டில், சொந்த நான்கு சுவர்களுக்குள் மனைவி, மக்களோடு தனித்திருக்கும் போது நாம் என்ன வேண்டுமானாலும் பேசி கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் சிந்திக்கலாம். ஆனால் வேலை காரணமாக, தொழில் காரணமாக, கல்வி கற்க வேண்டி எப்போது வீட்டை வீட்டு வெளியே வருகிறோமோ, அப்பொழுதே அர்த்தமற்ற பந்தாக்களுக்கும், அதாரமற்ற பீத்தல்களுக்கும், வெத்து வேதாந்தங்களுக்கும் வேலை இல்லாமல் போய்விடுகின்றது.
தமிழ் மொழி என்பது ஒரு தொன்மையான மொழி. பல்வேறு சிறப்புக்களை பெற்ற செம்மொழி என அங்கீகாரம் பெற்றது. சரி.... ஒத்துகொண்டாகி விட்டது. அதன் பிறகு? அதற்கு அப்புறம்? அதற்கும் மேலே? மற்ற இனங்களிடம் இல்லாதது, அப்படி உங்களிடம் என்னய்யா இருக்கிறது ?
என்னய்யா முழிக்கிறீர்கள்? 5,000 வருடங்களுக்கு முன்பு தோன்றிய மூத்த மொழியின் சொந்தகாரர்கள் எனும் ஒரு அடையாளத்தை ஒதுக்கி விட்டு பார்த்தால் உங்களிடம் வேறு ஒன்றும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லையே !
இந்தியாவில் உள்ள தமிழர்கள் மலேசிய தமிழர்களை காட்டிலும் பல மடங்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், தமிழ்ச் சமுதாயத்தை மட்டும் சார்ந்தல்லவே இந்த இன்றைய முன்னேற்றம். உலகில் எத்தனையோ பிற இனங்களும் அதி வேக முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களே !
எனக்கு தெரிய 6 கோடி தமிழர்களில் இரண்டு பேர் இதுவரை 'நோபல் பரிசு' வாங்கியிருக்கிறார்கள். ஆனால், வெறும் 1 கோடியே 40 லட்சம் உலக ஜனத்தொகையை கொண்ட 'யூதர்கள்' சமூகத்தில் கிட்டதட்ட 100 பேர் நோபல் பரிசு வாங்கியிருக்கிறார்களே!
அதே போல் வெறும் 120,000 பேரை மொத்த ஜனத்தொகையாக கொண்ட 'பார்சி' இனம், இந்திய பொருளாதாரத்தில் வியக்கதக்க அளவு பங்கு வகிக்கிறார்கள் (இந்தியாவில் உள்ள டாட்டா நிறுவனம் ஒரு பார்சி நிறுவனம்தான்)। ஆனால் "கோழி மேய்த்தாலும் கும்பனியில் மேய்க்க வேண்டும்" எனும் நமது பாரம்பரிய பழமொழியை தலைமேல் கடமையாய் கொண்ட நமது தமிழ் இனம், பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டில் கூட ஒன்றும் பெரிதாக சாதித்து விட வில்லை. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பெரிய தொழில் நிறுவனங்கள் தமிழர் அல்லாதாருக்கு சொந்தமானதாகத் தான் இன்றும் இருக்கின்றன.
சரி, நாம் வேறு எதில்தான் மற்றவரை விட சிறப்பானவர்களாக இருக்கிறோம் ? ஆ... ஆ.... நமக்கு சாதகமாக ஒரு விஷயம் உள்ளத! காரியம் ஆக வேண்டுமானால் அடுத்தவர் காலில் விழுவதில் நம்மை மிஞ்ச வேறு யாருமே இல்லை.
மந்திரியாக நியமிக்க பட்ட அன்றே, தம் பதவியை தற்காத்து கொள்ளும் பொருட்டு பதவி கொடுத்த பெண் முதல்வர் காலில் உலகறிய வரிசையாக 'பொத்து, பொத்தென்று' விழுந்து பாத பூஜை செய்த மந்திரிகள் எல்லாம் நம் இனத்தில்தான் இருக்கிறார்கள்.
இதை உலகில் வேறு எந்த இனத்திடமாவது பார்த்திருக்கிறீர்களா? எதற்கெடுத்தாலும் காலில் விழுவதில் நாம் தான் வல்லவர்கள். நம்மைபோல் அடுத்தவர் காலில் விழ வேறு யாராலும் முடியாது.
அண்மையில் நான் குடியிருக்கும் இடத்தில், தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்தியர்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. சண்டை வலுத்து ஒருவர் கொடாரியையும், மற்றொருவர் செடி வெட்டும் கத்திரியையும் தூக்கி கொண்டனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த, தோட்ட வேலையை குத்தகைக்கு எடுத்திருந்த சீன முதலாளி அந்த இடத்திலேயே அந்த இரண்டு இந்தியர்களையும் வேலையில் இருந்து நீக்குவதாக கூறினார். சிறிது நேர கெஞ்சலுக்கு பிறகு, அந்த இரண்டு இந்திய வேலையாட்களும் நெடுஞ்சாங்கடையாக தரையில் விழுந்து அந்த சீனரின் காலை பிடித்து கொண்டு புழம்ப ஆரம்பித்தனர். பார்த்து கொண்டிருந்த எனக்கு உடம்பெல்லாம் அனலாகி, 'த்தூ' என்று காறி உமில வேண்டும் போல் தோன்றியது. அந்த சீனரை கண்ணுக்கு நேராக பார்க்க வெட்கப் பட்ட நிலையில் முகத்தை திருப்பி கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
இந்த காலில் விழும் கலாச்சாரம் நமக்கு எங்கிருந்து வந்தது ?? சாதியம்। ஆம் சாதியம் எனும் சாபம் நமக்கு கொடுத்திருக்கும் மற்றுமொரு பரிசுதான் இது। சிந்தித்து பாருங்கள் தன்னை உயர்வாக நினைக்கும், தன்மானம் உள்ள யாராவது ஒரு இரண்டு காசு காரணத்திற்காக ஒரு மூன்றாமவர் காலில் 'தடால்' என்று விழுவாரா ?
சரி..... ஒட்டு மொத்தமாக தமிழ் இனம் என்பதை பற்றி நாம் இங்கு பேச வேண்டாம். அது வம்பை வீணாக விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பாகும். மேலும், எனது சிந்தனையின் அளவு 'மலேசிய தமிழர்' எனும் எல்லைகோட்டிற்கு மட்டுமே உட்பட்டது. அதனால் நான் பேசாமல் நம்மூர் மேட்டருக்கே வந்து விடுகிறேன்.
மலேசிய பொது பல்கலைக்கழகங்கள் "நாங்கள் பெரிய பருப்புக்களாக்கும், பிஸ்தாக்களாக்கும்... எங்கள் கல்வி தரம் அப்படியாக்கும், இப்படியாக்கும், ஆ..ஆகாவாக்கும்... ஓ..ஓகோவாக்கும்" என்று உள்ளூரில் பீத்திக்கொண்டு இருந்துவிட்டு, THES உலக பல்கலைக்கழக தேர்வு கணக்கீட்டில் வருடா வருடம் 350 ஆவது, 450 ஆவது இடங்களில் இடம் பெருவது வழக்கமான ஒன்று. அதுபோல் தான் மலேசிய தமிழர்களின் நிலை. உலகத்தில் உள்ள எல்லா இனங்களையும் வரிசைபடுத்தி அதில் ஒவ்வொரு இனமும் எந்த அளவு முன்னேற்றம் அடைந்திருக்கின்றன என்பதை கணக்கெடுத்தால், மலேசிய தமிழ் இனம் நிச்சயமாக முதல் 50 விழுக்காட்டுகளுக்குள் இருக்காது என்பது என் கருத்து.
இதற்கெல்லாம் காரணங்கள் என்ன? உலகில் உள்ள மற்ற எல்லா இனங்களோடும் ஒப்பிட்டு பார்த்து நமது சமுதாயத்தின் குறைந்த வளர்ச்சிக்கான காரணங்களை கண்டு பிடிப்பது ஒரு மிகப் பெரிய வேலை. அதை நம்மால் செய்யவும் முடியாது। ஆனால் 150 வருடங்களாக நம்மோடு அண்டை வீட்டாராக வாழ்ந்து வரும் சீனர்களோடு நமது நிலையை ஒப்பிட்டு பார்க்க நம்மால் முடியும். அப்படி செய்வதன் மூலம், நமக்கும் சுய முன்னேற்றத்திற்கான வழி வகைகள் ஏதாவது தென்படலாம்.
அத்தோடு சீனர்களோடு நூற்று ஐம்பது ஆண்டுகளாக நாம் ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம் என்கிற நிலைபாட்டால், நம்மோடு அவர்களை ஒப்பிட்டு பார்த்து கொள்வது நமக்கு சுலபமாகவும், விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ள கூடிய நிலையிலும் இருக்கும்।
வாருங்கள், சீனர்களையும் நம்மையும் ஒப்பிட்டு சிறிது அலசிப் பார்ப்போம். காசா, பணமா .... மூலைக்கு சிறிது வேலை அவ்வளவுதானே !
சீனர்களும் கல்வியும்
கல்வியை எடுத்து கொள்வோம். தமிழர்கள் எப்போது பரவலாக அடிப்படை கல்வியை பெற்றனர் என்று நினைக்கின்றீர்கள் ? மிஞ்சி போனால் ஒரு 200 வருட இடைவழியில் தான் தமிழ் இனம் பரவலாக அடிப்படை கல்வியை கற்றிருக்கும். அதற்கு முன்னர், பிராமணருக்கும் பிற மேல் சாதி காரர்களுக்கும் மட்டும் தான் கல்வி எனும் நிலைதான் தமிழகத்தில் இருந்திருக்கின்றது.
ஆனால் கல்வி குறித்த சீனர்களின் நிலையே வேறு. சீனர்களின் கல்வி தறத்தை / நிலையை நம் இனத்தின் கல்வி நிலையோடு ஒப்பிட்டு பார்க்க நாம் விளங்கினால், முதலில் சீனர்களின் பாரம்பரிய சரித்திர பூர்வ உண்மைகள் சிலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
சீனர்களின் பாரம்பரியத்தில் ( confucius ) /'கன்பியூசியஸ்'/ என்று அழைக்க படும் தத்தவ ஞானியினுடைய சிந்தனையின் தாக்கம் அளவிற்கறியது. இவர் கி.மு. 551 லிருந்து, கி.மு. 479 வரை சீனாவில் வாழ்ந்த ஒரு மாமேதை.
இவர் இறப்புக்கு பின்னர் இவரிடம் கல்வி கற்ற 3,000 மாணாக்கர்களில் பலர் சீன தேசத்தின் முக்கியமான அரச பதவிகளில் அமர்த்தப் பட்டனர். கால போக்கில் இப்படி அரசாங்க நிர்வாகஸ்த்தர்கள் ஆன சிஸியபாடிகள் தங்கள் குருவினுடைய போதனைகளை பரவலாக மக்கள் மத்தியில் பரப்ப, 'கன்பியூஷியனிஸம்' எனும் வாழ்க்கை வழிமுறைத் தத்துவம் சீன நாட்டில் மெது மெதுவாக வேர் ஊன்ற ஆரமிபித்தது.
கன்பியூஷியஸின் சிந்தனைகளில் படிப்பை பற்றின அடிப்படை கூறு என்ன வென்றால், "கல்வி கற்க உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம். கல்வி கற்பதற்கு வேண்டிய திறமையும் மனிதருக்கு, மனிதர் பெரிதாக வித்தியாசப் படுவதுமில்லை. சிலர் சூழலின் காரணமாக கற்பது யாவற்றையும் சிறிது எழிதாக கற்ப்பர், வேறு சிலர் சிறிது தாமதமாக கற்ப்பர். அவ்வளவே. கல்வியை கொண்டுதான் மனிதனை பாதை தவறி போகாமல் நல் வழிப் படுத்த முடியும். ஆதலால் நாடாலும் அரசனின் பல கடமைகளுள், பொது மக்களுக்கு கல்வி புகட்டும் கடமை மிகப் பெரிய ஒன்று" என்பதுதான்.
காலப் போக்கில் கன்பியூஷியஸின் சிந்தனைகள் சீன மக்கள் மத்தியில் மிக ஆழமாக வேர் ஊன்றவே, கி.மு. 220 ஆம் ஆண்டு வாக்கில் சீனாவில் கன்பியூஷியஸின் காப்பியங்களையும், தத்துவங்களையும், இதர எழுத்துகளையும் மையமாக வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரச பாடசாலைகள் நிறுவப் பட்டன.
இந்த பாடசாலைகளில் படிப்பதற்கு பொதுமக்களிடம் எந்த நிபந்தனையும் விதிக்கப் படவில்லை। விருப்பப் பட்ட, திறமையுள்ள யார் வேண்டுமானாலும் அங்கு படிக்கலாம் என்ற நிலைதான் இருந்துள்ளது. (அன்றிலிருந்து தொடர்ந்து 2,000 வருடங்களுக்கு மேலாக இந்த கன்பியூஷியனிஸததை மையமாக கொண்ட பாட முறையே சீன நாட்டின் பாடசாலைகளில் அமுல் படுத்த பட்டு வந்துள்ளது. இந்த நிலை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் வேறு பாடத் திட்ட முறைக்கு மாற்ற பட்டுள்ளது).
மேலும் இந்த பாடசாலைகளில் படித்து கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள்தான் பறந்து கிடந்த சீன சாம்ராஸியத்தின் நான்கு திசைகளுக்கும் அரசரால் அனுப்ப பட்டு, அரசாங்க அதிகாரிகளாக நியமிக்க பட்டுள்ளார்கள்.
இப்படி படிப்பின் மூலமாக ஒரு ஏழையின் மகன் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்த பட்ட போது, அவனின் குடும்பம் மட்டுமின்றி அவனை சார்ந்த உறவினர் அனைவருடைய வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கின்றது.
ஆதலால், அன்றைய சீன நாட்டு சூழ்நிலையில் ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு குழந்தை நன்றாக படிக்க கூடியவன் என்று பட்டால், அந்த கிராமமே ஒன்று சேர்ந்து அவன் அரசாங்க பாடசாலையில் சேர்ந்து படிப்பதற்கான எல்லா உதவிகளையும் செய்து அவனை படிக்க வைத்திருக்கின்றார்கள். காரணம், அவன் ஒருவன் மேல் எழும்போது அந்த கிராம மக்கள் அனைவருமே அவனால் பயன் அடைய வாய்ப்பு இருந்த படியால்.
சுருங்க சொன்னால், 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீனர்களுக்கு படிப்பின் முக்கியத்துவம் மிக நன்றாக புரிந்திருக்கின்றது. மலேசிய தமிழர்களின் முன்னோர்கள் 'அ, ஆ...' என்று ஆரம்பிப்பிதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் பரவலாக கல்வியை கற்று, கரைத்து, குடித்து, ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.
கேட்கிறது. "இப்படியெல்லாம் பேசி கொண்டு போனால், நம் இனம் முன்னேறவே முடியாது. இது நம் இனத்தை நாமே இழிவு படுத்திகிறார்போல் இருக்கிறது. நாம் முயன்றால் முடியாதது எதுவுமில்லை" என்று வாசகர்கள் சிலர் சொல்கிற வசனம் நன்றாக கேட்கின்றது.
உண்மைதான். முயன்றால் முடியாதது எதுவுமில்லைதான். ஆனால், அந்த உண்மை நமக்கு மட்டும் பொருந்துகிற உண்மை அல்லவே. உலக மனிதர் அத்தனை பேருக்கும் அது பொருந்துமே. நம்மை விட பல படிகள் கீழே உள்ள சில ஆப்பிரிக்க இனத்தவருக்கும் அது பொருந்தும், நம்மைவிட பல படிகள் மேலே உள்ள சீனர்களுக்கும் அது பொருந்தும். இருந்தும் பொதுவாக சில சமூகங்கள் மட்டும்தானே உழைப்பின் மூலம் தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கொண்டிருக்கின்றனர்.
பிற எல்லோரும் "முயன்றால் முடியாதது எதுவுமில்லை", "நம் வாழ்க்கை நம் கையில்", "மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்று அவரவர் மொழிகளில் வாய் முழக்கம் மட்டும்தானே இட்டு கொண்டு இருக்கிறார்கள்.
ஐயா, அத்தைக்கு மீசை முலைத்த அன்னைக்கு சித்தப்பா என்று கூப்பிடுவோம். அது வரை அத்தை அத்தைதானே ! சரி.... காமடியை ஒதுக்கி விட்டு கையிலிருக்கும் மேட்டருக்கு வருவோம்.
ஏன் சில சமூகங்கள் மட்டும் காலத்திற்கு உகந்த வழியில் தங்களை மாற்றி கொண்டு, பக்குவ படுத்தி கொண்டு, எந்த முயற்ச்சியில் இறங்கினாலும் அதில் வெற்றியும், முன்னேற்றமும் அடைகின்றனர் ? மற்ற இனங்களுக்கும் அவர்களுக்கும் அப்படி என்ன வித்தியாசம் ?
அந்த 'ஏன்', 'எதனால்', 'எப்படி' என்கிற கேள்விகளுக்கான ஒட்டுமொத்த பதில்தான் பாரம்பரியம். நமது பாரம்பரியத்தின் உண்மைகளையும், அதனால் நமக்கு ஏற்பட்டிருக்கும் தாக்கங்களையும் நாம் சரிவர புரிந்து கொண்டால் ஒலிய நம் இனத்தை சுற்றி நடக்கிற பல விஷயங்களை நம்மால் சறியாக கிரகிக்க முடியாது. எதையும் முறையாக புரிந்து கொள்ளவும் முடியாது.
நம்மை சுற்றி நடப்பவற்றை புரிந்து கொள்ள முடியாத நிலையில், நம்மால் என்ன சமுதாய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் ?? ஒரு மண்ணும் செய்ய முடியாது !!
எப்போதும்போல "மறத் தமிழன் .... திருக்குறள் ..... ராமாயணம் .... சிலப்பதிகாரம் ... இதிகாசங்கள் .... 5,000 ஆண்டுகள்" என்று சிலர் பேசியும், எழுதியும் கொண்டிருப்பார்கள் .... எப்போதும்போல அரசியல்வாதிகள் 'நாங்கள் அதைச் செய்ய போகிறோம், இதைச் செய்ய போகிறோம், சமுதாயத்திற்கு அந்த திட்டம் வைத்திருக்கிறோம், இந்த திட்டம் வைத்திருக்கிறோம்' என்று ப்பிராடு பண்ணி கொண்டிருப்பார்கள் ...... எப்போதும்போல நம் இனம் குண்டர்கள் இனமாகவும், குடிகாரர்கள் இனமாகவும் பிச்சைகாரர்கள் அதிகம் உள்ள இனமாகவும் வெளி உலகிற்கு காட்சி அளித்து கொண்டிருக்கும் ... எப்போதும்போல பிற எல்லோரும் நம்மை தாண்டி ஓடிக் கொண்டே இருப்பார்கள். ...... எப்போதும்போல சூரியன் கிழக்கில் உதித்து, மேற்க்கில் அஸ்தமனமாகும் ... உலகம் சுற்றிக் கொண்டே இருக்கும் .... எப்போதும்போல நமது சமூகம் திசை தெரியாது, தலையை சொரிந்து கொண்டு நின்ற இடத்திலேயே நிற்போம்.
இன்னொரு 50 வருடங்கள் ஆகியிருக்கும. நாமெல்லாம் போய் சேர்ந்திருப்போம. புதிதாக என்னை போல், உங்களைப் போல் புதிய தமிழர் செட் "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று முலக்கமிட்டு பேசியும், எழுதியும் கொண்டிருக்கும். அப்பவும் நம் இனம் மட்டும் இப்போது உள்ளது போலவே மற்றவறை விட பின் தங்கியே இருக்கும்..... திக்கும் தெரியாமல், திசையும் தெரியாமல்.
இந்த பரிதாப நிலைக்கு, விமோசனம் இல்லையா ? ......... இருக்கிறது !
அதற்கு முதலில் நம்முடைய அடிப்படை சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும. ஆனால் அதைவிட முக்கியம் - 'ரோஷம்' என்பதை இப்போது உள்ளதை விட நாம் சிறிது கூடுதலாக வளர்த்து கொள்ள வேண்டும்.
4 comments:
உங்களுடைய பதிவு காலத்திற்கேட்ப ஒன்று என்றால் அது மிகையில்லை. நம்முடைய எதிரி என்று யார்-யாரையோ கூறலாம். உண்மை என்ன? நம்மினத்தவர்களுக்கு எதிரி யார்? வேறு யாருமில்லை. நாமே தான். இது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. பழங்காலத்திலிருந்து பார்ப்போமே. நம்முடைய முன்னோர்கள் தோட்ட புறங்களில் வேலை பார்க்கும் கால கட்டத்தில் துறைகளுக்கு கும்பிடு போட்டு வேட்டு வைத்தவர்கள் எல்லாம் யார்-யார்? நான் சொல்ல வேண்டுமா? நவீன காலத்திற்கு வருவோம். பட்டணத்து மண்டோராக இருந்து இந்திய சமுதாயதினரை கட்டி போட்டது யார்? எல்லாதுக்கும் ஆமாம் சாமி போட்டது யார்? அவ்வளவு ஏன்...25 நவம்பர் பேரணியைப் பற்றி மற்ற இனத்து அமைச்சர்கள் பேசும் முன்னே கேலியும் கிண்டலும் செய்தது யார்? அப்படி இருக்கையில் பிரதமருக்கு உண்மையான நிலவரம் புரியுமா?
தமிழ்ப்பள்ளியைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாகி விட்டது ( அப்படி பேசுபவர்களின் பிள்ளைகள் த.பள்ளியில் பயில்கிறார்களா என்று கேட்க கூடாது) நம்முடைய அடையாளம் என்றால் அது தமிழ்ப்பள்ளி தான். இருப்பினும் நம் நாட்டில் கோவில்கள் செழித்து வளர்ந்த அளவிற்கு பள்ளிகள் வளர்ந்துள்ளனவா? ஆரம்ப காலம் தொட்டே நம்முடைய பள்ளிகளுக்கு என்ன தேவை என்பதனைக் கண்டறிந்து கொஞ்சம்-கொஞ்சமாக நிறைவேற்றி இருந்தால் இப்பொழுது அவசர-அவசரமாக அமைக்கப்பட்டிருக்கும் தமிழ்பள்ளி வாரியம் அப்பொழுது இருந்தே சீராக செயல்பட்டிருக்கும். இப்பொழுது அமைக்கப்பட்டுள்ள வாரியம் எப்பொழுது முழுமைய வீரியம் கொண்டு செயல்படும்? அரசாங்கத்தின் பார்வையில் ஆயிரக் கணக்கான பள்ளிகள் உள்ளன என்பதனை நாம் அறிய வேண்டும். குறிப்பெடுத்து தமிழ்ப்பள்ளி என்று பார்க்க நேரம் இருக்காது. அரசாங்கத்தின் பார்வையை நம் பள்ளிகளின் பக்கம் திருப்ப என்ன செய்திருக்க வேண்டும்? சீனர்களைப் போல் நம்முடைய ஒற்றுமையை கல்வியின் பால் காட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் நடந்தது என்ன? நம்முடைய அரசியல் சாணக்கியர்கள் பலம் காட்டும் இடமாக பள்ளிகள் மாறி விட்டது. அப்புறம் யார் நம்மை மதிப்பார்கள் கூறுங்கள்?
என்னுடைய பதிவில் இலக்கண மீறல்கள் இருக்கலாம். மன்னிக்கவும். சமுதாயத்தில் நடைமுறை மீறல்கள் இருக்ககூடாது என்பதே என் நோக்கம். நன்றி.
வணக்கம் சாமான்யன்
மிக மிக சரியாக எழுதியுள்ளீர்கள்
இவ்விடயம் பற்றி நானும் இன்று யோசித்துக்கொண்டு இருந்தேன் என் பதிவில் இதைப்பற்றி எழுதுவேன்
நன்றி
இராஜராஜன்
திருமூர்த்தி,
தாங்கள் இந்து வந்து என் பதிவை படித்து, பின்னூட்டம் விட்டு சென்றது குறித்து சந்தோஷம்.
இத்தகைய பதிவுகளை எழுதுவதற்கு நிறைய நேரமும் அதிக பிரகாசையும் தேவைப்படுகிறது. அப்படி கஷ்டப் பட்டு எழுதி விட்டு, அதை படிப்பதற்கு ஆள் இல்லாமல் போனால் அடுத்து எதையும் எழுதலாமா, வேண்டாமா எனும் சிந்தனை அடுத்து மனதில் வந்து விடுகிறது.
அந்த வகையில் தாங்கள் வந்து சென்றது, மனதிற்கு இதமாக இருக்கிறது. நன்றி.
இராஜராஜன்,
இங்கு வந்து சென்றமைக்கு நன்றி. தங்கள் ஊடம் காலியாக இருப்பதை கண்டேன். எழுதுங்கள். நைக்கீ சுலோகனை போல் - 'ஜஸ்ட் டூ இட்'.
:-).
Post a Comment