Sunday, April 26, 2009

உன்னையே நீ அறிவாய் ! (1969 மே 13க்கு பின்) - பாகம் 81969 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி

1969 வருடம் மே மாதம் 13 ஆம் தேதி மலேசியர்கள் யாரும் மறக்க முடியாத ஒரு நாள். இங்குள்ள இந்தியர், மலாய்க்காரர், சீனர் அனைவரது தலை எழுத்தும் என்றென்றும் நிரந்தரமாக மாறும் வகையில் ஒரு சோக வரலாற்று நிகழ்வு நடந்த நாள்.

பெரும்பான்மை மலாய் இனத்தவருக்கும், அடுத்த பெரும்பான்மை சீன இனத்தவருக்கும் இடையில் ஒரு பயங்கர இனக் கலவரம் நடந்தது அன்றுதான். கலவரத்தை தொடர்ந்து அரசாங்கம் நாடாளுமன்றத்தை கலைத்து அவசரகால ஆட்சிமுறையை அமல் படுத்தியது.


புதிய பொருளாதாரக் கொள்கை

அதை தொடர்ந்து தான் இன்றுள்ள பூமிபுத்ரா பாலிசி அமுல் படுத்தப் பட்டது. அதாவது "மலாயா மண்ணுக்கு உரிமையாளர்களான மலாய் இனத்தவர்கள், அவர்கள் நாட்டிலேயே பொருளாதார பலத்தை மற்ற இனத்தவருக்கு தாரைவார்த்து கொடுத்து விட்டு, ஒன்றும் இல்லாத ஒரு ஏழ்மையான அவல நிலையில் இருக்கின்றனர். இந்த நிலை நீடிக்கும் வரை மலாயாவில் நிரந்தர அமைதியை எதிர் பார்க்க முடியாது" என்ற கூற்றை மலாய் இனத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட அன்றைய அரசாங்கம் முன் வைத்ததோடு அல்லாமல், "NEW ECONOMIC POLICY" என்ற ஒரு புதிய மலேசிய பொருளாதாரத் கொள்கையை நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பித்தது.

இத்திட்டத்தின் கீழ் 1970 ல் தொடங்கி 20 வருடங்களுக்கு மலாய் இனத்தவருக்கு பலவிதமான பிரதான சலுகைகள் வழங்கப் படவேண்டும் என்பதும், இந்த காலக் கட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் மலாய்காரர்களின் பங்குரிமை 30% எட்ட எல்லா முயற்சிகளும் மேற்க் கொள்ளப் படவேண்டும் என்பதும் அரசாங்க கொள்கையாக்கப் பட்டது.

இக் கொள்கை / திட்டம் வேலை வாய்ப்பு, பல்கலைக் கழகப் படிப்பு, தொழில்துறை உரிமங்கள், பூமிபுத்ராக்களை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீடு யாவற்றையும் உள்ளடிக்கிய ஒரு காம்ப்ரிஹன்சிவ் மாடலாக உருவெடுத்தது. அதே நேரத்தில் இத்திட்டத்தோடு வேறு ஒரு துணைத் திட்டமும் பார்லிமெண்டின் முன் சமர்ப்பிக்கப்பட்டு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

அதாவது, மலாய்காரர்களின் நிலையை மேம்படுத்த முனையும் அதே வேலை, இனப்பாகுபாடு அன்றி மலாயாவில் உள்ள எல்லா எழை மக்களின் நிலைகளையும் மேம்படுத்துவது அரசாங்கத்தின் தலயாய குறிக்கோள் என்பதுதான் அந்த துணைத் திட்டம்.

ஆனால், இருபது வருடங்களுக்கு மட்டும் என்று ஆரம்பிக்கப் பட்ட புதிய பொருளாதார கொள்கை சொன்ன காலத்தில் முடிவடையாமல், வெவ்வேறு காரணங்களை சொல்லிக்கொண்டு, அவ்வப்போது பெயர் மாறறம் கண்டு, இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இனப் பாகுபாடின்றி வறுமையை ஒழிப்பதாகச் சொன்ன கூற்றில் மலேசிய அரசாங்கம் ஒர் அளவுக்கு முனைப்பு காட்டி இருந்தாலும், வேறு எல்லா அரசாங்க திட்டங்களையும் மீறி, மலாய்க்கார மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஒன்றே அரசாங்கத்தில் சகல நிலைகளிலும் ஒலிக்கும் தாரக மந்திரமாக மாறியுள்ள நிலைப்பாடு, வேறு யாரையும் விட இந்த நாட்டில் உள்ள இந்தியர்களை (குறிப்பாக மலேசிய தமிழர்களை) வெகுவாக பாதித்திருக்கிறது. "எப்படி?" என்று கேட்கிறீர்களா?

இந்த "எப்படி?" என்கிற கேள்விக்கான பதில் தனி ஒரு பதிவாகவே அமையும் என்று நினைக்கிறேன். ஆதலால் அதை நாம் இப்போது தொட வேண்டாம். இந்த தொடரின் அடுத்த பதிவை இந்த கேள்விக்கு பதிலாக எழுதுகிறேன்.


தமிழர்களின் தோட்டப்புற வாழ்க்கை முறை

1957 ஆம் ஆண்டு மலாயாவிற்கு சுதந்திரம் கிடைத்த போது மலேசிய இந்தியர்களில் 20 விழுக்காட்டினர் தான் பட்டனங்களில் வாழ்ந்தனர், பிற யாவரும் தோட்டங்களில் வாழ்ந்து வந்தனர். ஆனால் 1990 க்குள் 80 விழுக்காட்டு இந்தியர்கள் பட்டனங்களிலும், வெறும் 20 விழுக்காட்டினர் மட்டுமே தோட்டங்களிலும் வாழ்க்கிறார்கள் என்ற நிலை உருவானது. இந்த நிலையில் "தோட்டத்திலிருந்து பட்டனத்திற்கு" என்ற மாறுதலுக்கு மலேசிய இந்தியர்கள் தங்களை தயார் படித்திக் கொண்டு வந்தார்களா என்றால், "இல்லை".

மலேசிய இந்தியர்களில் 80 விழுக்காட்டினர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தோட்டப்புற சூழ்நிலையிலேயே வாழ்ந்தவர்கள். சீனர்களைப் போன்று தம் வாழ்க்கையை தொழில்துறை, வியாபாரம் போன்றவற்றின் மூலம் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்ற வேட்கையால் ஊந்தப் பட்டு அவர்கள் பட்டனங்களுக்கு வரவில்லை. பட்டன வாழ்விற்கு புலம்பெயர்ந்த பெரும்பாலோர், தோட்டபுறங்களை விட்டு வேறு வழியில்லாமல் வெளியேறியவர்கள் தான்.

உண்மையை அப்பட்டமாக சொல்ல வேண்டும் என்றால், பட்டன வாழ்க்கை தோட்டங்களில் இருந்து வந்த அன்றைய தமிழர்களை வெகுவாக பயமுறுத்தி இருக்க வேண்டும். "ஏன்?" என்று கேட்கிறீர்களா?

இந்த தொடரின் முதல் பாகத்தில் நான் கூறியிருப்பது போல, இந்த நாட்டிற்கு வந்த இந்திய தமிழர்களில் 90 விழுக்காட்டிற்கும் மேல் பட்டவர்கள் இங்கு கூலி வேலைக்காக வந்தவர்கள்தான். இவர்களிடம் படிப்பறிவு இல்லாததோடல்லாமல், சாதியம் என்ற அந்த நாளைய சமூக இயல்பின் அடி மட்டத்தில் இருந்தவர்கள் தான் மலாயாவிற்கு வந்தவர்களில் பெரும்பாலோர்.

சுருங்க சொன்னால், சொந்த நாட்டில் வாழ வழி தெரியாது தோற்றவர்கள் தான் இங்கு வந்து சேர்ந்த தமிழர்கள். மலாயாவில் கால் பதிப்பவதற்கு முன்பே, நம் இனத்தவர் அவர்களின் சொந்த நாடான இந்தியாவிலேயே ஆயிரக்கணக்கான வருடங்களாக பிற்பட்டவர்களாகவும், அடிமைப் படுத்த பட்டவர்களாகவும் தான் இருந்திருக்கிறார்கள்.

அப்படி பட்டவர்களுக்கு மலேசிய தோட்டத்துறை வாழ்க்கை முறை ஓரளவுக்கு பொருத்தமானதாகவும், ஏற்புடையதாகவும் தான் இருந்திருக்கின்றது. மலேசிய தோட்டங்களில், அன்றைய வாழ்க்கைத் தரம் எவ்வளவு மோசமாக இருந்திருந்தாலும், கூட்டமாக ஒரே இடத்தில் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என்று உறவினர்களோடு வாழும் வாழ்க்கை படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய நிலையில் இருந்த தமிழ் இனத்திற்கு வெகுவாக பொருந்தி தான் இருந்திருக்கின்றது.

கூலிவேலையானாலும், அவர்களுக்கு என்று ஒரு நிரந்தர வேலை, தோட்ட நிர்வாகம் கட்டிக் கொடுத்திருந்த வீடு, பிள்ளைகள் படிப்பதற்கென்று எஸ்டேட்டிலேயே ஒரு தமிழ் பள்ளிக்கூடம், அவர்களாகவோ எஸ்டேட் நிர்வாகத்தின் துணையுடனோ கட்டிக்கொணட ஒரு சிறு கோவில், அருகாமையிலேயே ஒரு கள்ளுக்கடை, ஒரிரு பலசரக்குக் கடைகள், வாரம் ஒரிரு முறை செயல் பட்ட ஒரு மருத்துவ நிலையம், ஒரு 10-20 கிலோமீட்டர் தொலைவில் ஒரு பட்டினம், அதற்கு மாதம் ஒர்இரு முறை போய்வர பேரூந்து வசதி, போழுது போக்கிற்கு எஸ்டேட் நிர்வாகம் திரையில் போட்டுக் காட்டிய தமிழ் படங்கள், வருடத்திற்கு ஓரிரு முறை நடந்த கோவில் திருவிழாக்கள், பிறகு அவர்களுக்கிடையே நடந்த கல்யாணம், காது குத்து, இறப்பு, பிறப்பு என்று ஏதோ ஒரு மாதிரியாக, சிறிது சுவாரஸ்யமாகத் தான் எஸ்ட்டேடுகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைச் சக்கரம் ஒடிக்கொண்டு இருந்திருக்கிறது.

மேலும் சீனர்களைப் போலோ, மலாய்காரர்களை போலோ நம் இனத்தார் "இன்றைய, இப்போதைய" என்கிற நிலையை தாண்டி யோசிக்காத ஒரு கூட்டம். கண்ணதாசன் பாடிச் சென்றதை போல "நாளைப் பொழுதை இறைவனுக்கு அழித்து நடக்கும் வாழ்வில் நிம்மதி நாடு" என்ற கொள்கையுடன் செயல படுபவர்கள் நாம். இத்தகைய மக்களுக்கு தோட்டத்துறை வாழ்க்கை பொருத்தமானதாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், என்று சூழ்நிலையால் உந்தப்பட்டு தமிழர்கள் தோட்டப்புற வாழ்க்கையை விட்டு மாநகரங்களுக்கு வரத்தொடங்கினார்களோ அன்றே அவர்களின் பாதுகாக்கப்பட்ட வாழ்க்கை நிலை மாறி, மாநகரங்களின் கீழ் மட்ட வாழ்க்கையின் இயல்பான தாக்கம் அவர்களையும் பாதிக்க தொடங்கி விட்டது.


தமிழர்களின் பட்டனப் பிரவேசம்

தோட்டப்புறங்களில் இருந்த வரை தமிழர்களுக்கு நிலையான ஒரு வேலை இருந்தது. தோட்ட நிர்வாகம் கட்டி கொடுத்திருந்த வீட்டு வசதி இருந்தது. சுற்றங்களின் கண்காணிப்பும் அரைவனைப்பும் இருந்தன. அந்த சிறு தோட்ட சமூகத்தில் தான் ஒரு அங்கத்தினன் என்கிற சமூதாய அங்கீகாரம் இருந்தது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளத் தேவையான சிறிதளவு மலாய் மொழி ஆற்றலும், தமிழ் மொழி ஆற்றலும் இருந்தன.

ஆனால் தோட்ட துண்டாடல் காரணமாக, இந்தோனீசிய கள்ள குடியேறிகளுக்கு தோட்ட வேலைகள் கைமாறியதின் காரணமாக, மாநகரங்களை ஒட்டிய தோட்டங்கள் அழிக்க பட்டு குடியிருப்பு திட்டங்கள் அறிமுக படுத்தப் பட்டதின் காரணமாக என்று தமிழர்கள் நகர்புறங்களுக்கு குடியேறினார்களோ, அன்றே அவர்கள் தங்களுக்கு சாதகமாக ஆண்டாண்டு காலமாக இருந்த பல சமூக அனுகூலங்களை சிதைத்து கொண்டுள்ளனர்.

இப்படி பட்டனங்களுக்கு வந்து சேர்ந்த பெரும்பாலோர் சேரிகளுக்கு ஒப்பான, வசதி குறைந்த பட்டண விளிம்புகளிலும், ரயில் பாதைகளின் ஓரத்திலும் கள்ளத்தனமாக அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து சிறு சிறு குடிசைகளைக் கட்டிக் கொண்டு இன்றும் வசித்து வருகிறார்கள்.

தோட்டபுறத்தில் இருந்ததைப் போல் இவர்களுக்கு பட்டனங்களில் வீட்டுக்கு அருகாமையிலேயே வேலைகள் கிடைப்பது இல்லை, கிடைக்கும் வேலைகளில் இருந்து வரும் ஊதியம் குடும்பத்தை ஒர் அளவுக்காவது நிம்மதியாக காப்பாற்றக் கூடிய அளவில் இருப்பதும் இல்லை, தோட்டப்புறத்தில் இவர்களுக்கு சுற்றமும் சூழலும் கொடுத்த சமூகத் தோழமை பட்டனத்தில் இவர்களுக்கு கிடைப்பது இல்லை, சமுதாய அங்கீகாரம் என்பது சிறிதளவும் இருப்பது இல்லை, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு தேவையான கூடுதலான மலாய், ஆங்கில மொழி அறிவு சிறிதும் இருப்பது இல்லை.

அத்தோடு உறவுகளோடு ஒன்றாய் இணைந்து வாழ்ந்த வாழ்க்கை சிதைந்து போகும்போது கேட்பாரற்ற சூழ்நிலை இயல்பாக ஏற்படுத்தும் தான்தோன்றித் தனமும், ஒழுக்கமின்மையும் மலேசியத் தமிழ் இனத்தில் மிகப் பரவலான பிரச்சனையாக உருவாகியுள்ளன. இது குறித்து நாம் யாரையும் குறை சொல்ல முடியாது. இப்படித் தான் நிகழ்வுகள் நடந்தேறும். அதுதான் இயற்கையான சமூகவியல் நியதி.

மலாய்காரர்களும் நம்மைப் போல் கிராம சூழ்நிலைகளில் இருந்து பட்டனங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் தான் என்றாலும், அவர்களின் மனோ இயல்பு வேறு நம் இனத்தின் இயல்பு வேறு. ஒரு மலாய் மாணவன் பள்ளியில் ஒழுக்கமில்லாமல் நடந்து கொள்ளும் போது அவன் வகுப்பு ஆசிரியரோ, தலமை ஆசிரியரோ அவனை அழைத்து பதினைந்து நிமிடம் அரிவுறை செய்தால் போதும், உடனே அம் மாணவன் அடங்கி, மன்னிப்பு கேட்டு, போய் இருக்கையில் அமர்ந்து விடுவான். ஆனால், நம் இனத்தில் பிரச்சனை கொடுக்கும் பிள்ளைகள் எவருக்குமே அடுங்குவதில்லை. மாறாக அறிவுறை சொல்லும் ஆசிரியருக்கே மிறட்டல் விடுவார்கள். (இது குறித்து இங்கு ஆசிரியர் பதவிகளில் இருக்கும் வாசகர்கள் தங்கள் அனுபவங்களை பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்).

அத்தோடு மலாய் இனத்தவர் வழி தவறாமல் நன்னெறியில் செல்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு எத்தனையோ சமூக இயக்கங்களும், சாதனங்களும், குழுமங்களும் உள்ளன. அவர்களைச் சுற்றி நடப்பன யாவும் மலாய்காரர்களின் சமய, மொழி, கலாச்சார பின்னனியில் அவர்களின் சொந்த இனத்தவரால், அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பில் நடத்தப் படுகின்றன. நமக்கு அப்படி எந்த அமைப்பும் இல்லை. ஆதலால், மலாய் இனத்தவரோடு நம் தமிழ் இனத்தை ஒப்பிட்டு பார்ப்பது அர்த்தமில்லாத வேலை. அவர்கள் வேறு. நாம் வேறு.

மலாயா என்பது மலாய்காரர்களின் நாடு. சீனரைப் போல் நீங்கள் இங்கு பிழைப்பு தேடி வந்தவர்கள். அவ்வளவுதான். மேலும் உங்களை இங்கு கொண்டு வந்தவர்கள் மலாய் இனத்தவர்கள் அல்ல. தங்களின் சொந்த தேவைக்காக உங்களை இங்கு கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள்.

இரண்டாவது உலக யுத்தம் முடிந்து தங்கள் காலனித்துவ நாடுகளில் இருந்து வெளியேற வேண்டிய நேரம் வந்த போது "என்னடா பண்ரது. லட்ச்சக்கணக்கான இந்தியர்களையும், சீனர்களையும் இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கோமே. நாம போவதற்கு முன்பு இவர்களுக்கு ஏதாவது வழி பண்ணனுமே" என்று குழம்பிய நிலையில், "இவர்களுக்கு குடியுரிமை கொடுங்கள், ஆனால் என்றென்றும் மலாய் இனத்தவருக்கு மற்ற இனத்தவரை காட்டிலும் சிறப்பு சலுகைகள் இந்த நாடு உள்ளவரை வரை இருக்கும் என்று மலேசிய அரசியல் சாசனத்தில் விரிவான சில ஸரத்துக்களை எழுதிக் கொள்வோம்" என்று ஆங்கிலேயர்கள் பரிந்துரைத்ததை அன்றைய மலாய் தலைவர்கள் வேண்டா வெறுப்பாய் ஏற்றுக் கொண்டு உங்களையும், சீனர்களையும் இந்த நாட்டு பிரஜைகள் ஆக்கினர். இதுதான் உண்மை.

இன்று மலாய்காரர்கள் எல்லாவற்றையும் தங்களுடையது என்று மார்போடு இழுத்து அனைத்து கொள்கிறார்கள் என்றால், அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். மேலும் அவர்கள் வெறும் 7.5 விழுக்காடே ஜனத்தொகையை உடைய உங்களை நினைத்து, உங்கள் திறமைக்கு பயந்து அப்படி நடந்து கொள்ள வில்லை.

மாறாக, மலாய்காரர்களின் இன்றைய சுயநல நினைப்பிற்கும், செயலுக்கும் காரணம் "நாம் சிறிது கண் அயர்ந்தால், சீனர்கள் எல்லாவற்றையும் விழுங்கி விடுவார்கள்" என்கிற பயம் தான். மலேசிய இந்தியர்களான நாம், அவர்கள் இனத்தை தாண்டி சென்றுவிடுவோம் என்கிற பயம் எல்லாம் அவர்களுக்கு சுத்தமாக கிடையாடு. நம்ம வண்டவாலம் தான் உலகறிந்த விஷய்ம ஆச்சே !! நாம் அவர்களுக்கு வெறும் "ஜுஜுபி". ஒரே விழுங்கில் நம்மை அவர்கள் விழுங்கி விடுவார்கள்.

ஆதலால், இந்தியர்கள் இங்கு "ஆ....ஊ..." என்று ஒரு புறம் அரசியல் முழக்கம் இடத்தான் வேண்டும். இட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அழுகிற குழந்தைக்குத் தான் பால் கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் இந்த இன்றைய நிகழ்வுகளுக்கும், சமுதாய சூழ்நிலைகளுக்கும் இடையில் சீன இனத்தவரைப் போல் நாம்தான் நம்முடைய நிலைப் பாட்டை தற்காத்து, மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து, அதற்கு தகுந்தாற்போலும் நாம் நடக்க வேண்டும். செயல் பட வேண்டும்.


துருப்புச் சீட்டு

எது எப்படி இருந்தாலும் சரி. யார் என்ன சொன்னாலும் சரி. இந்த நாட்டை விட்டுச் செல்லும் முன்பு ஆங்கிலேயர்கள் நமக்கு ஒரு நல்லதைச் செய்து விட்டுத்தான் சென்று இருக்கிறார்கள். மலாய்காரர்களிடம் பேரம் பேசி நமக்கு ஓட்டுரிமை வாங்கி கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள் அல்லவா?

இன்று இந்த ஓட்டுரிமை தான் நமக்கான "துருப்புச் சீட்டு". இதை உருப்படியாக பயன் படுத்தும் ஜாலத்தை கற்றுக் கொண்டோமானால் நாம் பல வகையில் நன்மை அடையலாம். இந்த விஷயம் குறித்து பிரிதொரு பதிவில் தீவிரமாக யோசிப்போம்.

Monday, April 13, 2009

உன்னையே நீ அறிவாய் ! (அடிப்படை உண்மைகள்) - பாகம் 7சென்ற பதிவில் நான் செய்திருந்த 'மலேசிய இந்திய' இனவாரிய ஆராய்ச்சியை மையமாக வைத்து மேலே கொடுக்கப் பட்ட அட்டவணையை தயாரித்துள்ளேன். இது எங்கிருந்து கிடைக்க பெற்றது, எங்கனம் இந்த எண்ணிக்கைகளுக்கு வந்தீர்கள் என்றெல்லாம் கேட்காதீர்கள். மலேசிய அரசாங்க ஜனத்தொகை கணக்கீட்டில், தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் என்ற பாகுபாடெல்லாம் காட்டப்பட வில்லை. அத்தகைய இனவாரி கணக்கீட்டை நீங்கள் எங்கு தேடுனீர்கள் என்றாலும், அது உங்களுக்கு கிடைக்கவும் மாட்டாது.

மேலை கொடுக்கப் பட்டுள்ள அட்டவணை நானாக, என் சுய புத்திக்கு எட்டிய வகையில் தயாரித்தது. அதை 'சரியான கணக்கு தான்' என்று ஏற்றுக் கொண்டால் சரிதான். 'சரியில்லை' என்று கூறினால், சரியில்லை தான். நான் கொடுத்திருக்கும் எண்ணிக்கைகளும், அட்டவணை கணக்கீடும் 'சரியே' என்கிற நிலைப்பாட்டோடு, என் எழுத்தை தொடருகிறேன்.

(என் முந்திய பதிப்பில் யாழ்பான தமிழர்களும், இந்திய முஸ்லீம்கள் மலேசிய ஜனத்தொகையில் தலா 150,000 இருப்பார்கள் என்று கூறியிருந்தேன். அதை தலா 120,000 ஆக மாற்றி இந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ளேன்).சரி, இனி அட்டவணையில் கண்டுள்ள விவரங்களுக்கு வருவோம்.

இந்த அட்டவணையை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், கீழ்கண்ட உண்மைகளை நீங்கள் உணர்வீர்கள்:-

1)). 2,100,000 மலேசிய இந்தியர்களின் ஜனத்தொகையில், 77 விழுக்காட்டினர் இந்திய தமிழர்கள்தான். மீதியுள்ள 23 விழுக்காட்டினர் தமிழர் அள்ளாத மற்ற இந்தியர்கள் (பஞ்சாபிகள், வட இந்தியர்கள், மலையாளிகள், யாழ்பான தமிழர்கள், தெலுங்கர்கள், இந்திய முஸ்லீம்கள்).

2)). ஆனால் நடுத்தர மற்றும் மேல்தர இந்தியர்கள் எனும் கணக்கீட்டில் உள்ள 730,600 இந்தியர்களில் வெறும் 322,000 (அதாவது 44%) பேர்கள்தான் இந்திய தமிழர்கள். மீதிப்பேர் இந்திய தமிழர் அல்லாத இனத்தவர்கள்.

3)). மேலும், வசதிகுறைந்த வகுப்பினர் எனும் கணக்கீட்டில் உள்ள 1,369,400 இந்தியர்களில் 1,288,000 (அதாவது 94%) பேர்கள் இந்திய தமிழர்கள் தான்.


(இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலோர் தமிழர்களாக இருந்தாலும், இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள் என்கிற காரணத்தினால், மற்ற மலேசிய இந்திய இனங்களுக்கு இல்லாத, மலாய்கார்களை ஒட்டிய, பல சலுகைகளை இவர்கள் கெட்டிகாரத் தனமாக பெற்று விடுகிறார்கள் என்கிற உண்மை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆதலால், இந்த வகுப்பினரை இந்திய தமிழர்கள் என்று வகைப் படுத்தாது, அவர்களை தனி ஒரு இன வகுப்பினாராக வரிசை படுத்தி உள்ளேன்).சரி, இனி சில நடைமுறை உண்மைகளுக்கு வருவோம்.


உண்மை நம்பர் 1

அரசாங்கத்தில் உள்ள மலாய்கார, சீனத் தலைவர்களை பொருத்த வரை 'மலேசிய இந்தியன்' என்பவர் இந்தியாவில் இருந்து இங்கு வந்து குடியேறிய ஒரு மலேசிய குடிமகன், அவ்வளவுதான். அவர் இந்திய தமிழரா, யாழ்பான தமிழரா, மலையாளியா, தெலுங்கரா, சீக்கியரா என்கிற பாகுபாடெல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை.

மலேசிய பிற இன அரசியல் தலைவர்களை பொருத்தவரை, மலேசியாவில் உள்ள இந்தியர்களின் ஆதரவு அரசாங்கத்திற்கு குறைந்து வருகிறது. அந்த நிலைப்பாட்டை சரிசெய்ய, இந்தியர்களின்பால் சிறப்பு கவனம் செலுத்தப் பட வேண்டியது அவசியம் என்று அனைவரும் நினைக்கிறார்கள்.

இந்தியர்களுக்கு பிரத்தியேகமாக தக்க உபகாரங்கள் செய்யப் படாவிட்டால், அடுத்த தேர்தலில் இந்தியர்களின் ஆதரவு ஒட்டு மொத்தமாக எதிர்கட்சியினருக்க சென்று விடும் என்று யாவரும் பயப் படுகிறார்கள்.இந்த நிலையில், பாரிசான் நேஷனல் அரசாங்கமும் சரி, பக்கத்தான் ராக்யாட் தலைவர்களும் சரி, இந்தியர்களை விஸேசமாக கவனித்து தான் ஆக வேண்டும் என்கிற நிலைப் பாட்டிற்கு ஆணித்தரமாக வந்து விட்டார்கள்.

ஆனால், இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காண முனையும் முன்னர், இந்தியர்களின் உண்மையான நிலை என்ன என்பதை முறையாக கிரகித்து, நம் இனத்தின் இன்றைய நிலைப் பாட்டை அவர்கள் முதலில் தின்னமாக புரிந்து கொண்டாக வேண்டும். அப்படி புரிந்து கொள்ளாத நிலையில் மலேசிய இந்திய இனத்திற்கு யாராலும் பெரிய் முறுமலர்ச்சி எதையும் ஏற்படுத்த முடியாது என்பது என்னுடைய அபிப்பிராயம். (வியாதி என்னவென்று அடையாளம் கண்டால்தானே அதற்கு தகுந்த சிகிச்சை செய்ய முடியும்).

இங்கு அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள் யாருக்காவது இங்குள்ள "இந்தியர்களின் பிரச்சனைகள் என்ன? அவற்றை எப்படி அனுகி, எப்படி கலைவது?" என்கிற கேள்விகளுக்கு பதில் தெரியுமா என்று கேட்டால், "இல்லை தெரியாது" என்றே சொல்லத் தோன்றுகிறது. காரணம் 'மலேசிய இந்தியன்' என்பவன் ஒரு ஒற்றை இனத்தவன் அல்ல. ஒரே மாதிரி இனக் குணாதிசயங்களை கொண்டவனும் அல்ல. ஆறு, ஏழு வெவ்வேறு இனங்களை உள்ளடக்கிய ஒரு பலதரப் பட்ட இனக் குழுமத்தின் அவன் ஒரு உள்ளடக்கப் பட்ட அங்கத்தினன்.

அந்த குழுமத்தில் பல பாசைகளை இழகுவாக பேசி, பிற இனத்தவரின் தோளில் கை போட்டு, அனைவருக்கும் ஈடு கொடுத்து, இனிமையாகப் பலகி வாழ்க்கையையும் அட்டகாசமாக ஜெயித்து வந்த அசோக்கும் இருப்பான், வேலை வெட்டி இல்லாமல், பிற மொழி எதுவும் புரியாமல், கள்ள சம்சுவுக்கு அடிமையாகி, பட்ட பகலில் பஸ் ஸ்டாண்டில் கிழிந்த, அழுக்குச் சட்டையுடன் யாவரும் பார்க்க, குடி போதையில் மல்லாந்து கிடக்கும் கருப்பையாவும் இருப்பான்.

பிற இனத்தவருக்கு, அசோக்கையும் கருப்பையாவையும் மாறி, மாறி பார்க்கும் போது ஒன்றுமே புரியாது. இவர்களிடையே ஏன் இந்த வேறுபாடு? இருவரும் இந்திய வம்சாலியினர் தானே? ஒருவரால் முடியும்போது, ஏன் மற்றவரால் முடியவில்லை? என்கிற கேள்விகள் எல்லாம் அவர்கள் மனங்களில் அடிக்கடி எழுந்தாலும், அது குறித்து விடைகள் கிடைக்கும் அளவிற்கு அவர்கள் யாரும் சிந்திக்க மாட்டார்கள். காரணம் உங்களை பற்றி அவ்வளவு அக்கரை எடுக்க வேண்டிய அவசியம் சீனர்களுக்கோ மலாய்காரர்களுக்கோ கிடையாது. அவர் அவருக்கு, அவரவர் இனத்தின் நலன்களை பாதுகாப்பதற்கே நேரம் போதாது. இதற்கிடையில் இந்தியர்களை பற்றி அவர்கள் ஆளமாக யோசிக்க என்ன இருக்கிறது. "அதற்காகத் தான் இந்திய அரசியல்வாதிகள் இருக்கிறார்களே !" என்ற நினைப்பில் சும்மா இருந்து விடுவார்கள்.


உண்மை நம்பர் 2

இங்கு உள்ள நம் சமுதாய தலைவர்கள் யாருக்காவது இந்தியர்களின் உண்மையான நிலை என்ன என்பது புரிந்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா? புரிந்திருந்தால் 2008 ஆம் ஆண்டு தேர்தலில் நாம் கொடுத்த சவுக்கடிக்கு பின்னும் 'பாரிசான் நேஷனல் அரசாங்கத்தின் கீழ் இங்குள்ள இந்தியர்கள் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளனர்" என்று அறிக்கை விடுவார்களா?

நடைமுறை என்னவென்றால், இங்கு பதவியில் இருக்கும் யாருக்காகுமே இந்தியர்களின் பிரச்சனைகளை கிண்டி கிளறி, அலசி, ஆராய்ந்து, ஆணி வேர் வரை போய் பார்த்து உண்மைகளை கண்டறிய வேண்டும் எனும் வேட்கை கிடையாது. இங்குள்ள இனவாரி அரசியல் சூழ்நிலையில் சிறுபாண்மை இனங்களின் நலன்களுக்காக அதி தீவிரமாக யாரும் கொடி பிடிக்க தயார் நிலையில் இல்லை. அப்படி செய்வதால் அம்னோ தலைவர்களை தாம் பகைத்து கொள்ள நேரிடலாம் என்கிற உண்மை அவர்களை ஒரு பக்கம் அச்சுருத்தலாம். அல்லது நம் இனத்திற்கென்று அதிகமாக சவுண்டு விட்டால், எங்கு நமது பழைய கேஸுகளை எல்லாம் தூசு தட்டி சட்டத்தின் முன் இழுத்து விடுவார்களோ என்கிற பயமாகவும் இருக்கலாம்.

நம் ஊர் இந்திய அரசியல்வாதிகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஒருவர் இந்தியர்களுக்கு என்று இருந்த இரண்டு மந்திரி பதவிகளில் ஒன்றை திருப்பி கொடுத்துவிட்டு, அதற்கு ஒரு பெரிய வியாக்கியானத்தையும் அளித்து, 30 வருஷமாக சிம்மாசனத்தை விட்டு எந்திரிப்பேனா என்று யானை பசை போட்டு உட்கார்ந்து இருக்கிறார்.

மற்றொருவர் ஒரு கட்சியை ஆரம்பித்து "அடிமட்ட இந்தியர்களை நாங்கள்தான் பிரதிநிதிக்கிறோம்" என்று கூறி, சிவப்பு சீருடை பெருங்கூட்டங்களை கூட்டி குவித்தார். ஆனால், "மனிதன் ஏதோ நல்லது செய்வார்" என்று அவரை சுற்றி இருந்தவர்கள் நினைத்து கொண்டு இருந்த நேரத்தில், இல்லத்தரசியாக இருந்த அவர் மனைவியையே அடுத்த கட்சி தலைவராகவதற்கு வகை செய்து விட்டு காலமாகி விட்டார்.

இன்னுமொருவர் சமீப காலம்வரை கெஅடிலான் கட்சியில் அன்வார் இப்றாகிமோடு இனைந்து பினைந்து, கூடிக் குலாவி கும்மி அடித்து விட்டு, அவருக்கு இடைத் தேர்தலில் இடம் கொடுக்க படவில்லை என்ற நிலை ஏற்பட்டவுடன், தானே ஒரு கட்சியை ஆரம்பித்து தான் பாரிசான் நேஷனலுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தருவதாக மேடையில் பரைசாற்றியதோடு உட்கார்ந்து விட்டார்.

இந்த கோஸ்டிகள் தான் உங்களைப் பற்றி ஆழமாக யோசித்து உங்கள் இனத்திற்கு நல்லது செய்யப் போகிறார்களாக்கும் ? !! ஏன்ய்யா !! .... சரியான கேனக் கிருக்கனுங்களா இருக்கீங்களே!! நடக்கிறத பத்தி யோசிங்கய்யா !!


உண்மை நம்பர் 3

எது எப்படி இருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். மலேசிய இந்தியர்களில் ஒரு சாரார் மிக மேம்பட்ட நிலையில் உள்ளவர்கள். அவர்களுக்கு எவர் தயவும் தேவையில்லை. ஐயாயிரம் ஆண்டு இந்திய கலாச்சாரத்தின் சாரம்சத்தை தாய்பாலோடு சேர்த்து குடித்து வளந்தவர்கள் போல் எந்த துரையிலும் பீடு நடை போடக் கூடியவர்கள். எந்த மாதிரி சூழ்நிலையிலும் பிரகாசிக்க கூடியவர்கள். அவர்கள் இந்த நாட்டில் முன்னுக்கு வந்து, இன்று மேம்பட்ட நிலைகளில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் மலேசிய அரசாங்கம் அளித்த உதவிகள் அல்ல.

அவர்களின் இன்றைய செலுமை தம் தாய் வழி வந்த கலாச்சார பாரம்பரியத்தால் வந்த செலுமை. மலேசியா அல்லாது பிற எந்த நாட்டில் அவர்கள் குடி புகுந்திருந்தாலும், இந்த இந்திய வகுப்பினர் அங்கும் ஒரு மேம்பட்ட சமூகமாகத் தான் உருவெடுத்திருப்பார்கள். ஆனால் அந்த கெட்டகரியில் இங்குள்ள இந்திய தமிழர்கள் விகிதாச்சாரப் படி மிக சொர்ப்ப நிலையில் தான் பங்கு வகிக்கிறோம்.

காரணம் இங்கு வந்த நமது ஆரம்ப கால இந்திய தமிழ் ஸ்டாக்கின் தரம் மிக, மிகக் குறைவானதாக அமைந்தது தான். இதைபற்றிய நடைமுறை உண்மைகளை நாம் பார்க்க விளங்கினால், கிழே கொடுக்கப் பட்டுள்ள இரண்டு பட்டியல் உதாரணங்களே போதுமானவை-


பட்டியல் 1

மலேசிய இந்தியர்களைப் பற்றி மலேசிய அரசாங்கத்தாலும், வெளிநாட்டு சஞ்சிகைகளாலும் பிரசுரிக்கப் பட்ட கணக்கீடுகளின் படி மலேசியாவில் சிறைக் கைதிகளுல் 45 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், குடும்ப நிலை வன்முறை குற்றம் புரிபவர்களுல் 20 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், போதைப் பித்தர்களுல் 20 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், பிச்சைக்காரர்களுல் 45 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், கொலை கொள்ளை பொன்ற கொடூர குற்றங்கள் புரிபவர்களுல் 40 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், குண்டர் கும்பல்களில் பங்கு பெருவர்களுல் 60 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான்.

சரி, இனி தமிழ் வாசகர்களான உங்கள் புத்திக் கூர்மைக்கு ஒரு 'டெஸ்ட்'. மேற்கூறிய கணக்கீடு பட்டியல் எந்த மலேசிய இந்திய இனத்திற்கு வெகுவாக பொருந்தும் என்று கூறுங்கள் பார்ப்போம். "கரெக்ட், கரெக்ட், கரெக்ட் ...... இந்திய தமிழர்களான நமக்குத்தான்".கொலை செய்வது, கொள்ளை அடிப்பது, பிச்சை எடுப்பது, கட்டிய மனைவியை காட்டுமிராண்டி தனமாக அடித்து உதைப்பது எல்லாவற்றிலும் இந்திய தமிழர்களை மிஞ்ச வேறு எந்த மலேசிய இந்திய இனத்தாலும் முடியாது. இதிலெல்லாம் நாம் தான் முடிசூடாத மன்னர்கள்.

சரி, பட்டியல் ஒன்றை பார்த்தோம் .... இனி பட்டியல் 2 க்கு வருவோமா !


பட்டியல் 2

மலேசிய இந்திய இனங்களைப் பற்றி பிரசுரிக்கப் பட்டுள்ள கணக்கீடுகளின் படி மலேசியாவில் உள்ள மருத்துவர்களுல் 28 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், வழக்குரைஞர்களுல் 27 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், பல் மருத்துவர்களுல் 21 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், விலங்கின மருத்துவர்களுல் 29 விழுக்காட்டின இந்தியர்கள்தான், பொறிளியலாளர்களுல் 7 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான், கணக்கார்ய்வாளர்களுல் 6 விழுக்காட்டினர் இந்தியர்கள்தான்.

சரி, மலேசியாவில் இந்தியர்களுக்கு உள்ள எல்லா பிரச்சனைகளுக்கு நடுவிலும் முட்டி, மோதி, அடித்து, பிடித்து இப்படி மலாய்காரர்களுக்கும், சீனர்களுக்கும் ஈடுகொடுத்து வாழ்க்கையை ஜெயித்து வருபவர்கள் யார்? இந்திய தமிழர்களான நாமா?

நாமும் இந்த குழுமத்தின் ஒரு அங்கத்தின இனமாக இருக்கலாமே ஒலிய, நாமாக மட்டும் இங்கு இருக்க மாட்டோம். இந்த பட்டியலில் நாம் பத்தில் ஒரு மூன்று பேர் என்ற விகிதாச்சாரத்தில் தான் இருப்போம். பிற எழுவரும் தமிழர் அள்ளாத மற்ற இந்திய இனங்களைச் சார்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள்.

இதை மோலோட்டமாக பார்த்தால் உங்களுக்கு உண்மை புரியாது. காரணம், 'டாக்டர் சிவலிங்கத்திற்கு அமெரிக்க அரசாங்கத்தின் உயரிய விருது வளங்கப் பட்டுள்ளது. குமாரி சுமதி ஸ்.பி.எம் தேர்வில் 15 ஏ பெற்றார்' என்ற செய்தியைப் பார்ப்பீர்கள். ஆகா, தமிழன் கொடி பறக்குதைய்யா என்று மனதில் ஒரு பூரிப்பு எழும்பும். ஆனால் சிவலிங்கமும், சுமதியும் இந்திய தமிழர்களா, யாழ்பான தமிழர்களா, மலையாளிகளா, தெலுங்கர்களா என்பதெல்லாம் உங்களுக்கு தெரியாது. அவர்கள் பிற இந்திய இனங்களுல் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

(முதலில் இந்த பதிவை நான் பிரசுரித்த போது 'எடிட்டிங்' மோசமாக இருந்தது. அதை சரிசெய்யும் பொருட்டு இந்த பதிவை மறுபடியும் செட் செய்து பிரசுரித்தேன். அதில் இந்த 7ஆம் பாகத்திற்கு இதற்கு முன்பு திரு. ஆய்தன், திரு. குமார் ஆகியோரிடம் இருந்து வந்திருந்த 2 பின்னூட்டங்களும், அதற்கு மறுமொழியாக நான் இட்டிருந்த 2 இரண்டு பின்னூட்டங்களும் காணாமல் போய்விட்டன. மன்னிக்கவும்).