Friday, December 4, 2009

உன்னையே நீ அறிவாய் ! (முடிவுரை) - பாகம் 18

சென்ற பதிவோடு நான் இந்த 'உன்னையே நீ அறிவாய் !' தொடரின் 17 பாகங்களில் மலேசிய தழிர்களை பற்றி 22,553 வார்த்தைகள் எழுதியுள்ளேன். மேலும் எழுதுவதற்கு எனது வியாபாரப் பையின் அடியை தடவினால் என் கைக்கு எதுவுமே அகப்பட வில்லை. விற்பனைக்கு என்று என்னிடம் இருந்த சரக்கு எல்லாவற்றையும் நான் தங்களிடம் விற்றாகி விட்டதால், இத்தோடு இந்த பதிவை முடித்து கொண்டு உங்களிடம் இருந்து விடைபெற்று கொள்கிறேன்.

.

விடைபெறுவத்ற்கு முன்பு நான் கடைசியாக தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவது ஒன்று தான்:-

.

புத்தி. ஆம் புத்தி என்பதை நாம் எப்படி உபயோகிக்கிறோம் என்பதை பொருத்து தான் நம் வாழ்க்கையின் சாராம்சமே இருக்கின்றது. புத்திசாலித்தனமாக செயல்பட்டு, வாழ்க்கையின் வெவ்வேறு சூல்நிலைகளில் எடுக்க வேண்டிய முடிவுகளை திறம்பட எடுத்து, அந்தந்த காலக் கட்டத்தில் செய்ய வேண்டிய காரியங்களை முறையாக செய்து வருவோருக்கு வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் எல்லாம் பொதுவாக வருவது குறைவு.

.

ஆனால் புத்திசாலித்தனம் என்றால் என்ன? அதன் வெளிப்பாடு எப்படியிருக்கும்? அதை பெருவது எப்படி? ஏன் சிலர் மட்டும் எப்பவும் புத்திசாலித்தனமாக செயல் படுகிறாகள்? ஏன் பலருக்கு அது கடைசி வரை புரியாத புதிராகவே இருந்து விடுகிறது? என்கிற கேள்விகளுக்கு பதில் கண்டு பிடிப்பதுதான் கஷ்டமான வேலை. ஆனால் கேள்விகளுக்கு பொருள்கானும் அந்த வேலையை உங்களுக்காக வேறு யாரும் செய்ய முடியாது. அதை நீங்கள்தான் முட்டி மோதி புரிந்துகொள்ள வேண்டும். தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

.

சரி, தனிப்பட்ட அளவில் இந்த தொடரில் நான் நம் சமூகத்தின் பல குணாதிசயங்களையும், இயல்புகளையும் அப்பட்டமாகவும், அதிரடியாகவும், திமிருடனும் பலவாறு விமர்சித்து எழுதியுள்ளேன். அப்படியெல்லாம் விமர்சித்து விட்டு நான் யார், எனது பின்னனி என்ன என்பதை இங்கு சற்றும் தெரிவிக்காது விடைபெற்றுச் செல்வது என் மனதிற்கே சிறிது கோலைத் தனமாக படுகின்றது.

.

அதே நேரத்தில் நான் யார் என்பதை வெட்ட வெளிச்சமாக திறந்து காண்பித்து தற்போது 'சாமான்யன்' என்கிற அனாமதேய போர்வைக்குள் எனக்கு இருக்கின்ற எழுத்து சுதந்திரத்தை கெடுத்து கொள்ளவும் நான் தயாராக இல்லை. அதனால், நான் யார் என்பதை தெரிவிக்காமல், எனது வாழ்க்கை பின்னனியை மட்டும் உங்களிடம் சுருக்கமாக சொல்லி விட்டு செல்கிறேன்.

.

நான் சிறிது வித்தியாசமான குடும்ப சூழ்நிலையில் பிறந்தவன். என் தகப்பனார் ஒரு சிறு தொழில் வியாபாரியாக இருந்தவர். நன்கு வாழ்ந்தவர். ஆனால், எனக்கு விவரம் தெரியும் வயது வரும் முன்னரே, தொழில் மிக நொடித்து 'அக்கடா' என்று மூலையில் செயலிழந்து உட்கார்ந்து விட்டார். அதனால், நானும் என் தம்பி தங்கையரும் கடின ஏழ்மையில் தான் வளர்ந்தோம்.

.
அதில் பாருங்கள், இந்த நன்றாக வாழ்ந்து அதன் பிறகு ஏழ்மைக்கு வரும் நிலை இருக்கிறதே, அது மேலே ஏறவும் முடியாத, கீழே இறங்கவும் முடியாத ஒரு ரெண்டுங்கெட்டான் நிலை. மிகவும் பரிதாபத்திற்குரிய ஒரு பிழைப்பு. ஏழ்மையின் தாக்கம் எவ்வளவாக இருந்தாலும், இந்த நிலைக்கு உட்பட்டவர்கள் தங்கள் கஸ்ட்டத்தை வெளியில் காண்பித்து கொள்ளாமல், பள்ளைக் கடித்து கொண்டு வாழ்ந்து விடுவர். இதுதான் சிறு வயதில் எனக்கு தெரிந்த வாழ்வு (இப்படி பிஞ்சிலேயே பழுத்ததனால் தானோ என்னவோ என் சிந்தனை எப்போதுமே பிறரைவிட சிறிது கடினமானதாகவே இருந்து வந்துள்ளது).

.

17 வயதிலேயே வேலைக்கு போனவன் என்றாலும் என் சிறு வயது முதலே 'நாம் எப்படியாவது ஒரு தொழில் முனைவர் ஆகிவிட வேண்டும். நம் தலைமுறைக்கு பிறகு நம் குடும்பத்தில் யாரும் விடுபட முடியாத ஏழ்மையில் சிக்கி தவிக்கும் நிலையில் மாட்டி கொண்டுவிட கூடாது" என்கிற குறிக்கோளை என் மனதில் மிக ஆழமாக ஏற்றி கொண்டவனும் கூட.

.

அதனால் ஒரு சாதாரண குமாஸ்தாவாக நான் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே பகுதி நேரமாக ஏதாவது தொழில் முயற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருந்து வந்துள்ளேன். பத்து மலையில் தைப்பூச திருவிளாவின் போது கடை போட்டிருக்கிறேன். கோலாலம்பூரில் இந்தியர் அதிகம் புழங்கும் பகுதியில் ஒரு அறைக்கடையில் அறைக்கடை இடம் பிடித்து கோஸ்டியும் ஜுவல்லரி (கவரிங் நகைகள்) விற்றிருக்கிறேன், ஆள் வைத்து தீபாவளிக்கு பலகாரங்கள் செய்து விநியோகம் செய்திருக்கிறேன்.

.

இப்படியாக என்னென்னவோ சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டு கடைசியாக எனக்கு நன்கு பரிட்ச்சயமான, பல வருட அநுபம் இருந்த ஏற்றுமதி துறையில் இரண்டு முறை ஈடுபட எத்தனித்து அந்த முயற்ச்சிகளிலும் படு தோல்வியுற்றேன். அதன் பிறகு மூன்றாவது முறையாக ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்ட போதுதான் எனக்கு வெற்றி கிட்டியது. 'முறையான வியாபாரம்' என்கிற ஏணியின் முதற்படியில் பலமாக கால் ஊன்றி 'நானும் ஒரு நிலையான தொழில் முனைவர்' என்கிற அந்தஸ்த்திற்கு வந்து சேர்ந்தேன்.

.

ஆனால், நான் இப்படியெல்லாம் முட்டிமோதி, விழுந்து, எழுந்து தொழில் ரீதியாக ஸ்தரம் பெரும் நிலைக்கு வந்து சேர்வற்குள் எனக்கு நாற்பது ஐந்து, நாற்பத்து ஆறு வயது ஆகியிருந்தது. அந்த காலக் கட்டத்தில் (1997 - 1998) தென்கிழக்காசியா முழுவதும் பொருளாதார வீழ்ச்சியுற்றிருந்த நேரத்தில், யாரிடமும் கையில் பணம் இல்லாது இருந்த நேரத்தில் என் கையில் பணம் இருந்தது.

.

அதே கால கட்டத்தில்தான் எங்களது மூன்று பிள்ளைகளும் ஒருவர் பின் ஒருவராக பல்கலைக்கழகம் செல்லும் வயதுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது என்னிடம் இருந்த பணத்தை வைத்து என்னால் அவர்கள் மூவரையும் மிகச் சிறந்த வெளிநாட்டு பட்ட படிப்புக்களை படிக்க வைத்து விட முடியும் என்கிற உண்மை ஒரு புறம். ஆனால், அந்த திட்டத்தை சாதிப்பதற்கு நான் என் வியாபார நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தி என் நிறுவனத்தை மூடியாக வேண்டும் என்கிற நிர்பந்தம் மற்றொரு புறம்.

.

பிள்ளைகளின் படிப்பையும், எனது வியாபாரத்தையும் ஒருசேர நடத்துவது என்பது சாத்தியமற்ற விஷயமாக எனக்கு தெரிந்தது. என்னிடம் இருந்த பணத்தை என்னால் ஏதாவது ஒரு திட்டத்திற்கு தான் பயன்படுத்த முடியும் என்கிற அடிப்படை உண்மை.

.

17 வயதில் ஆரம்பித்து வியாபாரத்தில் ஸ்தரம்பெற எனக்கு கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகியிருந்ததாலும், நான் தாண்டி வந்த பாதையில் எத்தனையோ சோதனைகளையும் தோல்விகளையும் சந்தித்து வாழ்க்கையின் உண்மை தன்மைகளை நான் நன்கு உணர்ந்திருந்ததாலும் "அடுத்து வியாபாரத்தில் காற்று நமக்கு எதிராக ஒரு முறை வீசினாலும் இப்போது நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் நாம் முற்றாக இழக்கும் நிலை ஏற்பட்டு விடும். பேசாமல் வியாபார ரீதியாக நாம் செய்யும் எல்லாவற்றையும் நிறுத்திக் கொண்டு, பிள்ளைகளை படிக்க வைத்து விடுவோம்" என்று முடிவு செய்து அதன் படி நடவடிக்கைகளை முடிக்கி விட்டேன். நிறுவனத்தை மூடினேன். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு ப்டிக்க அனுப்பினேன்.

.

நான் 10 வ்ருடங்களுக்கு முன்பு துணிந்து எடுத்த அந்த முடிவின் தாக்கம் என்னவென்றால், இன்று என் மகள் ஒரு மருத்துவர். ஐரோப்பாவில் படித்ததால் சிங்கப்பூர் அரசாங்கம் அவரை வேலைக்கு எடுத்து கொண்டுள்ளது. மருத்துவராக அரசாங்க வேலை செய்து கொண்டே சிங்கப்பூரில் முதுநிலை நிபுணத்துவ பட்டத்திற்கு படித்து கொண்டிருக்கிறார். மகன் அஸ்திரேலியாவில் விளம்பர துறையில் பட்ட படிப்பு படித்து, பிறகு இங்கிலாந்தில் முதுநிலை பட்டம் பெற்று திரும்பியுள்ளார். ஜனவரி மாதம் கோலாலம்பூரில் தன் பெயரில் தன் துறையில் சொந்த நிறுவனம் ஒன்றை துவக்க உள்ளார். கடைசி மகள் நியூசிலாந்தில் தற்போது முதுநிலை படிப்பு படித்து கொண்டிருக்கிறார். மார்ச் மாதத்தோடு படிப்பு முடிந்து மலேசியா திரும்பி விடுவார். மூன்று பேர்களுமே தங்கள் பட்ட படிப்புக்களை உலகப் பிரசித்தி பெற்ற பல்கலைகழகங்களில் முடித்தள்ளனர். ஆனால், நான் ஓடிஓடி நிர்மானித்த தொழில் நிறுவனம் இப்போது இல்லை. முற்றாக மூடப்பட்டு விட்டது.

.

எங்கள் மூன்று பிள்ளைகளுக்கும் நாங்கள் சொல்லி வளர்த்து வந்துள்ள போதனை என்னவென்றால் "நீங்கள் தாய் தந்தையரான எங்களுக்கு எதுவும் பெரிதாக செய்ய வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் காலத்தில், உங்கள் குழந்தைகளை நாங்கள் உங்களை படிக்க வைத்ததைவிட ஒரு இம்மி அளவு அதிகமாக படிக்க வைத்து விடவேண்டும். இது தான் நீங்கள் எங்களுக்கு செய்ய வேண்டிய கடமை" எனப்து மட்டும் தான்.

.

ஒரு தகப்பனாக "நம் பிள்ளைகள் நன்கு படித்தவர்கள். எந்த கூட்டத்திலும், எந்த சூழ்நிலையிலும், எவருக்கும், உலகின் எந்த இனத்தவருக்கும் சலைத்தவர்களாக இருக்க மாட்டார்கள்" என்கிற பெருமிதமான எண்ண ஓட்டம் என் மனதில் இருந்தாலும், "நாம் நினனத்தது போல், நம் காலத்தில், நம் குடும்பம் ஒரு தொழில்துறை குடும்பம் ஆக முடியவில்லையே !" என்கிற ஒரு ஆதங்கமும் என்னுள் ஆழமாக உருத்திக் கொண்டே இருக்கின்றது.

.

பார்ப்போம். எங்கள் பிள்ளைகளாவது அவர்கள் காலத்தில் அவர் அவர் துறைகளில் வெற்றிகரமான தொழில் முனைவர்கள் ஆவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். தங்கள் பாட்டனாரால் முடியாததை, தங்கள் தகப்பனாரால் முடியாததை, அவர்கள் காலத்தில் அவர்கள் சாதிப்பார்கள் என்று நம்புகிறேன். பார்ப்போம்.

..

சென்று வருகிறேன். இது காலம் வரை எனக்கு மதிப்பளித்து என் படைப்புக்களை படித்து வந்த இனைய தோழர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

.

முற்றும்

.

.

.

- சாமான்யன் -

Sunday, November 29, 2009

உன்னையே நீ அறிவாய் ! (நிழல் எது? நிஷம் எது?) - பாகம் 17

"உன்னையே நீ அறிவாய்! எதையும் எதற்காக? ஏன்? எப்படி? என்று கேள். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும், அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப் பார்ப்பாய் !". இது நடிகர் சிவாஜி கணேசன் சினிமாவிற்கென்று பேசிய வசனம் மட்டும் அல்ல. இலகு தமிழில் சாமான்யனும் புரிந்து கொள்ளும் வகையில் பண்டைய கால கிரேக்க தத்துவஞானி சாக்ரட்டீஸ் கூறியதாக தமிழ் சினிமா நமக்கு கூறிய, எந்த காலத்திற்கும் பொருந்த கூடிய, வாழ்க்கை வழிகாட்டு உண்மைகளுள் ஒன்று.

வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நிஷம் போல் தோன்றி, ஆனால் நிஜம் அல்லாத நிலைப்பாடு ஒன்று எப்போதும் நம்மிடையே இருந்து கொண்டே இருக்கும். இந்த படைப்பிற்காக மதியை மழுங்கச் செய்து, சிந்தனையை திசை திருப்பும், அந்த உண்மை குறைந்த நிலையை நாம் 'நிழல் நிலை' என்று பெயர் இட்டுக் கொள்வோம்.

சரி, இனி 'நிழல் நிலை எது? நிஜம் எது?" என்பதை சில சாதாரண அன்றாட வாழ்க்கை உதாரணங்களை கொண்டு ஆராய்ந்து பார்ப்போம்.


1). ஒன்றாம் வகுப்பில் இருந்து கணக்கு பாடத்தில் கோட்டை விட்டு வந்துள்ள மகனுக்கு நான்காம் படிவத்தில் கணக்கு டியூஷன் வைத்தால், ஐந்தாம் படிவ SPM பரிட்ச்சையில் பிரமாதமான மார்க்குகள் வாங்குவான் என்கிற தந்தையின் நினைப்பு வெறும் 'நிழல் நிலை'.

நிஷம் என்னவென்றால் சரித்திரம், புலோகம் போன்ற பாடங்கள் போல் அல்லாமல் கணிதத்தில் வரும் சகல பாடங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. ஒன்றாம் வகுப்பில் சொல்லிக் கொடுக்க படும் வாய்பாடு சரியாக தெரியாமல், ஒருவன் அடுத்த அடுத்த வகுப்புகளில் வரும் பெருக்கல், வகுத்தல் கணக்குகளை முறையாக போட இயலாது. அதே போல் 2 ஆம் பாரத்தில் சொல்லிக் கொடுக்க படும் "A ஸ்குவேர் + B ஸ்குவேர் = C ஸ்குவேர்" என்கிற 'பைத்தகிரஸ் தியரம்' போன்ற சில கணித நியதிகளை முறையாக புரிந்து கொள்ளாமல் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பாரங்களில் வரும் பல ஜியோமட்ரி கணக்குகளை ஒருவனால் போட இயலாது.

அத்தோடு கணிதப் பாடத்தில் ஒருவன் திறமை மிக்கவனாக ஆக வேண்டுமேயானால், அவன் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான கணக்குகளை தொடந்தாற்ப் போல் போட்டு பயிற்ச்சி செய்திருக்க வேண்டும். அதெல்லாம் அல்லாமல், நான்காம், ஐந்தாம் படிவங்களில் டீயூஸனுக்கு போவதால் மட்டும் ஒரு மாணவனால் SPM பரிட்ச்சையில் கணிதப் பாடத்தை திறம்பட செய்ய முடியும் என்று நினைப்பது முட்டாள்தனம் - உண்மையைப் போல் தோன்றும், ஆனால் அது ஒரு உண்மை அற்ற வெறும் 'நிழல் நிலை'.


2).
எந்த முன் அனுபவமும் இல்லாத நிலையில், "எல்லோரும் தொழில் புரிகிறார்களே" என்று நினைத்து, "நாமும் ஒரு தொழிலை தொடங்கி நிறைய பணம் சம்பாதித்து விடலாம்" என்கிற நினைப்பு சிறிது மடமையோடு கூடிய 'நிழல் நிலையே'.

நிஷம் என்னவென்றால், வியாபாரத்தில் வெற்றியடைய 'சாதிக்க வேண்டும்' என்கிற வெறியும், வீராப்பும் மட்டும் போதாது. அதற்கு மேல் வியாபார முன் அனுபவமும் என்கிற ஒன்றும், ஈடுபடும் வியாபாரம் நிலை பெறும் வரை தாக்கு பிடிக்கும் அளவிற்க்கு பண பலமும் இருக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே எந்த வியாபாரமும் நிலை பெற்று விடாது. இந்த சில உண்மைகளை புரிந்து கொள்வதற்கே பெரும்பாலோருக்கு பிற வியாபார ஸ்தலங்களில் பல ஆண்டுகள் வேலை செய்த முன் அநுபவம் இருக்க வேண்டும்.

தான் ஆரம்பிக்க விரும்பும் தொழிலை எந்த இடத்தில் நிறுவுவது? தொழிலில் ஈடுபடும் பங்குதாரர்களில் யார் எந்த வேலையை செய்வது? தொழில் ஆரம்பிப்பதற்கான பணத்தை எங்கனம் திரட்டுவது? தொழில் நடந்தாலும் நடக்கா விட்டாலும் தொழில் ரீதியாக ஆகக் கூடிய மாதாந்திர சிலவு எவ்வளவு? அந்த சிலவை சரிகட்ட என்ன வழி? ஆரம்பிக்க நினைக்கும் தொழிலுக்கு 'லைசன்ஸ்' எதுவும் தேவையா? வேலை ஆட்கள் எத்தனை பேர் தேவை? அவர்கள் என்ன மாதிரி ஆட்களாக இருக்க வேண்டும்? விற்பனை வகையில் நமது விலை பட்டியல் எப்படி இருக்க வேண்டும்? நம் இனத்தவர் மட்டும்தான் நமக்கு வாடிக்கையாளர்களாக அமைவார்களா? அல்லது பிற இனத்தவரிடம் இருந்தும் வியாபாரம் கிட்டுமா? நமக்கு வியாபார போட்டியாளர்கள் யார்? அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அந்த வித்தியாசத்தை வைத்து நாம் எங்கனம் நமது வியாபாரத்தை ஸ்தர படுத்துவது? என்று ஆயிரம் கேள்விகளுக்கு நாம் பதில் காண வேண்டும். அவை எல்லாவற்றிற்குமே நமக்கு தெளிவான சிந்தனையும், முன் அனுபவமும் தேவை. அதெல்லாம் எதுவும் இல்லாமல், "நானும் தொழில் செய்யப் போகிறேன்" என்று கிளம்பினால் நம்மால் ஒரு மண்ணையும் சாதிக்க முடியாது.


3).
அழகுத் தமிழை ஆழமாக கற்று, அடுக்கு மொழியில் வார்த்தைகளை அள்ளி வீசி, மக்கள் மனதைக் க்வர்ந்து, தமிழ் அறிஞர் என்று பெயர் வாங்கிய பெரிய அரசியல்வாதிகளில் இருந்து, சிரித்த முகத்தோடு, தூய வெள்ளை உடை உடுத்தி, நெற்றி நிறைய பட்டையிட்டு, வருடத்திற்கு இரண்டொரு ஹோமம் வளர்த்து, செவ்வாய், வெள்ளி தோரும் கோவிலை சுற்றி வரும் உள்ளூர் சிறு நிலை பிறமுகர்கள் வரை, வெளிப் பார்வைக்கு பெரிய மனிதர்களாக தெரியும் எல்லோரும் உத்தம புத்திரர்கள் என்கிற நினைப்பு வெறும் 'நிழல் நிலையே'.

நிஷம் என்னவென்றால், நம்மில் பெரும்பாலோர் மனதில் நினைப்பதை அப்படியே வெளியே கொட்டி விடும் இயல்புடையவர். நமது சிந்தனை, நமது திட்டங்கள் என்று நமக்கு முக்கியமான எல்லா விஷயங்களையும் அப்படியே பிறரிடம் சொல்லி விடுவோம். ஆனால், எல்லோரும் அப்படி அல்ல.

மனதில் உள்ளதை மறைத்து, தங்கள் திட்டங்கள் எதுவும் வெளியில் தெரியாதபடி புகை திரையிட்டு, பிறர் பார்வையை திசைதிருப்பி, எல்லா நேரங்களிலும் பசுந்தோள் போத்திக் கொண்டு உலா வரும புலிகள் நாட்டில் எத்தனையோ இருக்கின்றன. அவர்களில் மிக முக்கியமானவர்கள் நமது அரசியல்வாதிகளும், சமுதாய பெரும்புள்ளிகளும் தான்.

.

இவர்கள் யாவருமே தமது மனதில் நினைப்பதை மறைத்து, வெளி உலகிற்க்கு தங்களை பரம சாதுக்களாகவும், உத்தமர்களாகவும் காட்டி கொளவ்தில் கைதேர்ந்தவர்கள். அதுவும் நமது இழிச்சவாய் இனத்திடம் ஒருவனுக்கு அதிகமான தெய்வ நம்பிக்கையும், பக்தியும் இருப்பதாக பாவனை காண்பித்தாலே போதும். கையில் இருப்பதை எல்லாம் தரையில் போட்டு விட்டு, தடால் என்று மேப்படியான் காலிலேயே விழுந்து விடுவோம்.

.

அரசியல் கட்சிகள், கோவில்கள், பொது ஸ்தாபணங்கள் என்று பணமும், அதிகார பலமும் எங்கெல்லாம் நிறைந்து நிற்கின்றனவோ அங்கெல்லாம் 'அரிச்சந்திரன் வீட்டிற்கு அடுத்த வீட்டுகாரர்களைப் போல்' பாவனை செய்து நிற்கும் இந்த கோஷ்டிகளை நாம் பரவலாக காணலாம்.
.
சாதாரண நிலையில் சாமான்யர்களாக இருக்கும் போது கோவில்களிலும், ஸ்தாபணங்களிலும், அரசியல் கட்சிகளிலும் பிரமுகர்களாக சேரும் இவர்கள், சில வருடங்கள் கழித்து பார்க்கும் போது பெரும் தனவந்தர்களாக கார், பங்களா, தோட்டம், துறவு என்று இருப்பார்கள்.

.

இவர்கள் எல்லாம் எப்படி சிறிது காலக் கட்டத்திற்குள் தனம் சேர்த்தார்கள், சமுதாயத்தில் பெரிய மனிதர்கள் என்று பெயர் பெற்றார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தால், எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா ஊர்களிலும், எல்லா ஸ்தாபனங்களிலும் ஒரே மாதிரி தான் நடவுகள் நடந்தேறி இருக்கும்.

.

சம்மந்த பட்டவர் எந்த நேரத்திலும் பலிச்சென்று சுத்தமான உடை உடுத்தி, சிரித்த முகத்தினராக, நன்றாகவும் இனிமையாகவும் பேசக் கூடியவராக, உடல் குனிந்து கைகூப்பி அடிக்கொரு முறை 'வணக்கம்' தெரிவிப்பராக, சகல காரியங்களிலும் முன் நின்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவராக ஆரம்பிப்பார்.

.

பிறகு சுற்றி உள்ளவர்கள் அவருக்கு அதிகமாக மறியாதை கொடுக்க, கொடுக்க அவர் ஸ்தாபன பதவிகளில் படிப்படியாக உயர்ந்து, ஒரு காலக் கட்டத்தில் அந்த ஸ்தாபனத்தின் ஆக உயரிய பதவியை வந்தடைந்து விடுவார். அதன் பிறகுதான் நம்ம ஆள் அதுவரை அணிந்திருந்த முகத் திரையை விளக்கி தன் உண்மையான கச்சேரியையே ஆரம்பிப்பார்.

.

முதலில் சாதாரண மக்களிடம் பேசுவதை வெகுவாக குறைத்து கொள்வார். அதன் பிறகு அவருக்கு வேண்டிய ஜாலராக்களாக பார்த்து ஸ்தாபனத்தின் முக்கிய பொருப்புக்களில் அமர்த்திக் கொள்வார். பெரிய காரில் ஜாலராக்கள் புடைசூழ வந்து இறங்குவார், சுற்றி உள்ள பிற ஸ்தாபன முக்கியஸ்தர்களிடம் மட்டும் பேசுவார், காரில் ஏறி சென்றுவிடுவார்.

.

இதற்கடையில் மனுஷன் 'எப்படியோ..யோ.. யோ..' பணம் சேர்ந்திருப்பார். அத்தோடு உயர் பதவி, அரசாங்க பட்டம், சமூக பட்டம், போகின்ற இடங்களில் எல்லாம் பொன்னாடை, மலர் மாலை என்று ஏகப்பட்ட தடபுடல்களை மனிதன் அனுபவிக்கவும் ஆரம்பித்திருப்பார்.

.

அப்புறம் என்ன? அவர் தான் ராஜா. அவரைச் சுற்றி இருப்பவர்களிலேயே ஆகப் பெரிய ஜாலராதான் மந்திரி. அதன் பிறகு வாழ்க்கையில் அவருக்கு உள்ள அதி முக்கிய குறிக்கோள் ஒன்றே ஒன்றாகத் தான் இருக்கும் - தான் வகிக்கும் ஸ்தாபன பதவிக்கு எந்த போட்டியும் வராமல், அந்த ஸ்தாபனம் ஏதோ அவர் பாட்டன் சொத்து போல, பிற யாரையும் அருகே அண்ட விடாமல் பார்த்து கொள்வது மட்டும்தான்.

.

பொது மக்களான நாம் விரலை சூப்பிக் கொண்டு 'பே' என்று வேடிக்கை பார்த்துகொண்டு நிற்க்கலாம். அவ்வளவுதான். அதற்குமேல் நம்மால் ஒரு டுபுக்கும் செய்ய முடியாது.

.

.

4). சீனர்கள் எல்லாம் ஏமாற்றுக் காரர்கள். ஏமாற்று வித்தையில் கைதேர்ந்த காரணத்தினால் தான் அவர்களால் திறம்பட வியாபாரம் செய்து பணம் ஈட்ட முடிகிறது என்கிற நினைப்பு 'நிழல் நிலையே'.

.

நிஷம் என்னவென்றால், நம் இனத்தவரிடம் இல்லாத வியாபாரத்திற்கு உகந்த பல குணாதிசங்கள் சீனர்களுக்கு பரவலாக உண்டு.

.

எந்த விஷயமானாலும் தாங்கள் எடுத்தக் கொண்ட முயற்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்கிற வெறி சீனர்களுக்கு மற்றவர்களை விட இயற்க்கையிலேயே சிறிது அதிகமாக இருக்கும். அதனால், எடுத்த காரியம் வெற்றி பெரும் வரை முயற்ச்சி என்பதை கைவிடாமல் தொடர்ந்து முட்டி மோதி அடைய வேண்டிய இலக்குக்கு சென்று சேர்ந்து விடுவார்கள்.

.

இரண்டாவதாக, வியாபாரம் தொழில் என்பவற்றை எல்லாம் சீனர்கள் சிறு வயது முதலே அவர்கள் வீட்டு சூழ்நிலையிலையிலேயே பார்த்து வளர்ந்திருப்பார்கள். காலையில் பசிஆர சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்ததில் இருந்து, இரவில் வீட்டுப் பாடம் செய்து முடிக்கும்வரை தங்கள் தகப்பன், சிற்றப்பன், மாமா, அண்ணன், உறவினர் என்று தங்களைச் சுற்றி உள்ள எல்லோரும் வியாபாரம் தொழில் என்று பேசுவதை கேட்டு கேட்டு வளர்பவர்களுக்கு தொழில் புரிவது ஒன்றும் புது அனுபவம் ஆக இருக்காது. ஆனால், நம் நிலை வேறு. நம்மில் ஐநூற்றில் ஒருவர் கூட தொழில், வியாபாரம் என்கிற அம்சங்களில் ஈடுபடுவதில்லை. அதனால், சீனர்களுக்கு தொழில் என்பது இலகுவாக படுகிறது. நமக்கு அதுவே பூதாகாரமாக தெரிகிறது.

.

மூன்றாவதாக, நம்மை விட சீனர்கள் அதி பெரிய உழைப்பாளிகள் என்பது அப்பட்டமான உண்மை. நாமும் உழைப்போம். ஆனால், சீனர்க்களைப் போல் வருடக்கணக்கில் புத்திசாலித்தனமாக ஒரே சிந்தனையோடு ஒன்றை சாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு நாம் உழைப்பதில்லை. நமது உழைப்பெல்லாம் உடம்பளவு உழைப்புத்தான். அதில் புத்தியெல்லாம் சம்பந்த படுவதில்லை. ஆனால் சீனர்களின் உழைப்பு உடம்பையும், மனதையும் ஒருமிக்க சார்ந்தது.

.

நான்காவதாக, சீனர்களிடம் இன ஒற்றுமை மிக, மிக அதிகம். காரணம் உலகில் உள்ள சீனர்கள் யாவரும் 'ஹான்' எனப்படும் ஒரே இனததை சேர்ந்தவர்கள். ஒரே மொழியை தாய் மொழியாய் கொண்டவர்கள். ஒரே கலாச்சாரத்தை பேணுபவர்கள். அதனால், ஒரு சீனர் ஒரு வியாபாரத்தை நிறுவினால் அதற்கு சீன சமூகத்தினர் யாவரும் ஆதரவு வழங்குவர். ஆனால், நம் கதை வேறு. இந்தியன் என்கிற பெரிய வட்டத்திற்குள் கூட நாம் நம்மை நிறுத்தி கொள்வது கிடையாது. எங்கு இருப்பதை எல்லாம் பிற இந்திய இனங்களிடம் பறிகொடுத்து விடுவோமோ என்கிற பயத்தில் 'நாங்கள் எல்லாம் தமிழர்கள். கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முந்தியவர்கள்", என்று நம்மை தனித்து கொள்பவர்கள். அத்தோடு, நம் இனம் ஒரு நழிந்துபோன இனம். நம் இனத்தவரால் தம் இன வியாபாரிகளுக்கு பெரிதாக எந்த ஆதரவும் வழங்க முடியாது.

.

ஐந்தாவதாக, சீனர்கள் நூற்றுக்கணக்கான வருடங்களாக் தொழில் புரிவதில் அதிக முன்னேற்றமும் வெற்றியும் கண்டுள்ளதால், அவர்க்ளிடம் இயல்பாகவே ஒரு அசாத்திய தன்னம்பிக்கை உள்ளது. அதனால், வியாபார ரீதியாக நாம் பயந்து, பயந்து எடுத்து வைக்கும் அடிகளை சீனர்கள் துணிந்து, அதிரடியாக எடுத்து வைப்பார்கள். அந்த அதிரடி அனுகு முறையிலேயே அவர்கள் எடுக்கும் முயற்ச்சி ஜெயித்துவிடும்.

.

கடைசியாக, தொழில் வியாபாரம் என்றாலே அங்கு சிறிது 'தில்லு முல்லு' இருக்கத்தான் செய்யும். சமீபத்தில் மலேசிய அரசாங்கம் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இரண்டு நீர்மூல்கி கப்பல்களை வாங்கினார்களே. அதற்கு கமிஷனாக இங்கு, மலேசியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு அந்த கப்பல் உற்பத்தியாளர்கள் கொடுத்த கமிஷன் மலேசிய ரிங்கிட் 500 மில்லியன். இது எதற்கு என்று நினைக்கிறீர்கள்? எல்லாம் அப்படி தான்!! "இதெல்லாம் வியாபாரத்திலே சகஷம் அப்பா!!". வியாபாரம், தொழில் என்றாலே சிறிது 'அப்படி, இப்படி' என்று இருக்கத்தான் செய்யும். ஏன் மலேசியாவில் எத்தனையோ இந்தியர்கள் 'பழைய உலோக' வியாபாரங்கள் செய்கிறார்களே. அவர்கள் யாராவது தில்லுமுல்லு இல்லாமல் தங்கள் வியாபாரத்தை செய்ய முடியும் என்று நெஞ்சைத் தொட்டு சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.

.

.

5). மலேசியாவில் பட்டப் படிப்பு படித்து விட்டால் போதும், ஒருவன் வாழ்க்கையில் மேம்பாடு அடைந்து விடலாம் என்கிற எண்ண ஓட்டம் ஒரு 'நிழல் நிலையே".

.

நிஷம் என்னவென்றால், 1970ல் நான் என் பள்ளிப் படிப்பை முடிக்கும் காலக் கட்டத்தில், மலேசியாவில் இரண்டு பொதுப் பல்கலைகழகங்கள் மட்டும்தான் செயல் பட்டு வந்தன. அவற்றில் இருந்து வருடத்திற்கு ஒரு 2,000 மாணவர்கள் பட்ட படிப்பை முடித்து வெளிவந்திருப்பர்.

.

ஆனால் இன்று, 2007 ஆம் ஆண்டு கல்வி அமைச்சின் கணக்கு வெளியீட்டின் படி, பொது பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை 382,997, தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை 365,800, பொலிடெக்னிக் - கமுனிட்டி காலேஸ் - கோலேஸ் துங்கு அப்துல் ரஹ்மான் ஆகிய கல்வி நிலயங்களில் படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கை 98,688, வெளிநாட்டு பல்கலைகழகங்களில் படிக்கும் மலேசிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 150,000. ஆக மொத்தம் 997,485 மாணவர்கள் உயர் கல்விகழகங்களில் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். (இது 2007 ஆம் ஆண்டிற்கான ஏண்ணிக்கை என்பதை மறந்து விடாதீர்கள். 2009 ஆம் ஆண்டிற்கான எண்ணிக்கை தெரிய வேண்டுமானால் இன்னுமொரு ஒரு லச்சம் மாணவர்களை மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையோடு சேர்த்து கொள்ளுங்கள்).

.

இந்த கூட்டத்தில் நம் பிள்ளை பட்ட படிப்பு படித்து முடித்ததால் மட்டும் ஒன்றும் பெரிதாக சாதித்து விட முடியாது. படிப்பை தாண்டி நல்ல ஆங்கிலத் தேர்ச்சி, பிறரிடம் இனிமையாகவும் இய்ல்புடனும் பலக கூடிய தன்மை, தன்னம்பிக்கை எல்லாம் இருந்து, அத்தோடு முன்னேற வேண்டும் என்கிற துடிப்பும் இருந்தால் தப்பிப்பார். இல்லை என்றால் ........

.

என் தகப்பனார் காலத்தில் வீட்டு வாடகை ரிங்கிட் 15 ஆகவும், மலிகைச் / காய்கறி சிலவு ரிங்கிட் 80 ஆகவும், போக்குவரத்து சிலவு 15 ஆகவும், இதர சிலவுகள் 40 ஆகவும் இருந்தன. ஒரு குடும்பமே ரிங்கிட் 150 குள் மாத சிலவை முடித்து கொள்ளலாம்.

.

ஆனால், இன்று கோலாலம்பூரில் ரிங்கிட் 1,000 க்கு குறைந்து வீடு வாடகைக்கு கிடைக்காது, கார் வைத்து கொள்வதானால் பெட்ரோல், டோல், ரிப்பேர், இன்சுரஸ், ரோட் டாக்ஸ் என்று மாதச் சராசரி ஒரு 1,000 வந்து விடும், அதன் பிறகு சாப்பாட்டு சிலவு, பிள்ளைகளுக்கான சிலவு என்று ஒரு 1,000, அப்புறம் தண்ணீர், விளக்கு, அஸ்ட்ரோ வகையரா சிலவு ஒரு 350.

.

அதுக்கப்புறம் இங்கம் டாக்ஸ், .பீ.வ்., கழித்து கையில் என்னய்யா இருக்குது ??? "கையில வாங்கினே பயில போடல காசு போன எடம் தெரியல" ... கைக்கு வரத வச்சு 25 ஆம் தேதியக் கூட தாண்ட முடியலையே அய்யா !!

.

ஆக கூட்டி கழிச்சு பார்த்தா, எங்க அப்பா காலத்திலெ அஞ்சாங் கிலாஸ் படிச்ச மனிஷங்க வாழ்ந்த வாழ்க்கையை கூட இந்த காலத்து பட்டதாரிகள் வாழ்றதா தெரியல. அப்புறம் என்னய்யா பட்ட படிப்புக்கு அவ்வளவு பெரிய மவுசு ?? உண்மையை சொல்லனும் என்றால், விவரம் தெரிந்த பெற்றோர்கள் எல்லாம் இப்போது த்ங்கள் பிள்ளைகளை ஒன்றுக்கு மேற்பட்ட பட்டங்களை படிக்கும்படி வற்புறுத்தி வருகிறார்கள். அதுவும் போதவில்லை என்று, சீனர்கள் எல்லாம் ஆங்கில மொழியையும், பிற மொழிகளையும் ஆழமாக படிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

.

.

இந்த பதிவோடு இந்த் தொடரை முடிக்க வேண்டும் என்றுதான் பார்த்தேன். முடியவில்லை. இதுவே 1,600 வார்த்தைகளை தாண்டி விட்டது. இதற்கு மேல் எழுதினால் ஓவராக போர் அடித்து விடும். அதனால் அடுத்த வாரம் இந்த தொடருக்கான முடிவுரையைக் கொடுத்துவிட்டு, உங்களிடம் இருந்து விடைபெருகிறேன்.