மலேசிய இந்தியர்களின், குறிப்பாகச் இங்குள்ள தமிழர்களின் அவல நிலையை அலசி ஆராயந்து, இன முன்னேற்றத்திற்கான வழிவகைகளையும் என் அறிவுக்கு எட்டிய வரை எடுத்து கூற வேண்டும் என்று நினைத்து நான் கம்ப்பூட்டர் முன் எழுத உட்கார்ந்த போது முதலில் எனக்கு தோன்றியது ஒரு விஷயம் தான்.
நம் இனத்திடம் இருக்கும் ஆழமான குறைபாடுகளையும், நம்மை ஒட்டிய அடிப்படை உண்மைகளையும் மேற்ப்பூச்சாக கூறிவிட்டு, தொட்டும் தொடாமல் நிறுத்தி கொண்டு, மலேசிய தமிழ் இனத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழிவகைகள் என்ன என்பதை ஆராய போவதாக கூறுவது .... போகாத ஊருக்கு வழி கேட்பது போன்றது - தேவையில்லாத வெட்டி வேலை.
நாம் யார்?, எப்படி இங்கு வந்தோம்?, நமது குறைபாடுகள் என்ன?, நாம் ஏழ்மையிலும், அன்றாட பிர்ச்சனைகளிலும் தத்தலித்து கொண்டிருக்கும் போது மற்ற இனங்கள் எல்லா வகைகளிலும் பேரளவு முன்னேற்றம் கண்டிருக்கிறார்களே அது எப்படி?, அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேற்றுமைகள் என்ன?, என்பதை எல்லாம் தெளிவாக நாம் புரிந்து கொண்டால் ஒலிய நம்மிடையே எந்த ஒரு முன்னேற்றமான சமுதாய மாற்றமும் ஏற்பட போவதில்லை.
நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதை புரிந்து கொண்டால் தான், நாம் எங்கு போக போகிறோம், அங்கு எப்படி போய் சேர்வோம் என்கிற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
மலேசியாவில் தமிழிலில் இந்த அளவுக்கு எழுத, பேச தெரிந்தவர்கள் ஒன்று அரசியல்வாதிகளாக இருப்பார்கள், அல்லது ஏதாவது ஸ்தாபன, கழக, சமூக அமைப்புகளின் பிரமுகர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இப்படி பட்ட யாவருமே எல்லோரிடத்திலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்கிற குறிக்கொளுடன் தான் எழுதுவார்கள், பேசுவார்கள். கசப்பான உண்மைகள் எவற்றையும் அவர்கள் பகிரங்கமாக மக்கள் முன் எடுத்து சொல்ல மாட்டார்கள். ஆனால், என் நிலை வேறு. நான் ஒரு சாதாரண மனிதன்.
நேரம் கிடைக்கும் போது, ஒரு நாலுமுல வேஷ்டியையும், அரைக்கை பணியனையும் அணிந்து கொண்டு சன்னலுக்கு வெளியே தெரியும் மரங்களில் உள்ள பறவைகள் போடும் சத்தத்தை கேட்டு கொண்டு, பக்கத்தில் வைக்கபட்ட கோப்பையில் இருக்கும் தேநீரை சிறிது, சிறிதாக அருந்தி கொண்டு மனதிற்கு வந்ததை எல்லாம் சாவகாசமாக எழுதும் ஒரு சாமான்ய தமிழன். எனக்கு யாரிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்கிற தேவை எல்லாம் கிடையாது. உண்மையை சொன்னால் "வெட்கப் பட வைக்கும் அளவிற்கு இப்படி எதுக்கும் தேராத, அடி முட்டாள்கள் இனமாக இருக்கிறதே நமது இனம்" என்கிற ஆத்திரம் மட்டும்தான் என் மனதில் தலை தூக்கி நிற்கின்றது.
ஆதலால், மற்றவர்கள் யாரும் என் எழுத்தை அமோதிப்பார்கள், அள்ளது மாட்டார்கள் என்கிற சிந்தனையோடு நான் எதையும் எழுதவில்லை. என் மனதிற்கு சரி என்று பட்டதை அழுத்தமாக மனதை உறுத்தும் வாசகத்தில் எழுதுவேன். இஸ்டப் பட்டவர்கள் படியுங்கள். முடிந்தால் 'நீங்கள் எழுதுவதை ஆமோதிக்கிறேன்.... அல்லது ...... ஆமோதிக்கவில்லை' என்கிற உங்கள் கருத்துக்களை ஆங்கிலத்திலோ, தமிழிலோ பின்னூட்டமாக (comments) இட்டுவிட்டு செல்லுங்கள். உங்கள் கருத்துக்களுக்கு பின்னூட்ட பதில் எழுதுகிறேன்.
என் எழுத்துக்களை படிப்பதற்கு இங்கு ஆள் இருக்கிறதா இல்லையா என்று தெரியாத நிலையில்தான், இந்த என் முதல் பதிப்பை பிரசுரிக்கிறேன். ஒரு 10 மலேசிய தமிழர்களாவது இதை படித்துவிட்டு பின்னூட்டம் விட்டுச் சென்றீர்களேயானால், இந்த தொடரின் அடுத்த பாகத்தை பிரசுரிப்பேன். இல்லையென்றால் ..... படிக்க ஆள் இல்லாத நிலையில் எழுதுவது, ஏதோ தானாக பேசிக் கொள்வதுபோல் எனக்கு படுகிறது ....... பார்ப்போம் !
நன்றி,
சாமான்யன்
நாம் யார் ? மலாயாவிற்கு எப்படி வந்து சேர்ந்தோம் ?
பத்தொன்றாம் நூற்றாண்டின் கடைசியில் தான் இந்தியாவிலிருந்து பரவலாக தமிழ் பேசும் மக்கள் மலாயாவிற்கு பிரிட்டீஸ்காரர்களால் இங்கு உள்ள ரப்பர் எஸ்டேட்டுகளில் வேலை செய்வற்காக கொண்டுவரப் பட்டனர்.
ஒரு மேஜயை போட்டு 'விருப்ப பட்டவர்கள் மலாயா போவதற்கு இங்கு பதிந்து கொள்ளலாம்' என்று பிரிட்டீஸ்காரர்கள் தங்களின் முதல் ஆள் சேர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதே மதராஸ் துரைமுகத்தில் தான்.
அந்த கால கட்டத்தில் கொத்தடிமைகளாக, கங்கானி ஏஜண்டுகள் காண்பித்த காகிதங்களிலில் எல்லாம் "ஏன், எதற்கு" என்று கேட்காமலேயே கைநாட்டு வைத்து, அயல் நாட்டு பயணத்திற்கு புள்ளையார் சூழி போட்ட அன்றே வாழ்க்கையையும் அடகு வைத்து மலாயா வந்து சேர்ந்த தமிழர்கள் எத்தகைய மக்களாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ?
நன்கு படித்தவர்களும், பொருளாதாரத்தில் மேம் பட்டவர்களும், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்தவர்களுமா எங்கு செல்கிறோம் என்பது தெரியாது, எப்போது திரும்புவோம் என்பது தெரியாது தம் தாய் நாட்டை விட்டு விட்டு பாய்மர கப்பல்களில் ஏறி 1500 மைல் தூரத்தில் இருக்கும் ஒரு முன்பின் தெரியாத நாட்டிற்கு வந்தார்கள்? இல்லை அய்யா !
(வாசகர்களுக்கு அடுத்த பாராவில் நான் கூறுவது சிறிது கசப்பாக இருக்கும் மன்னித்துக் கொள்ளுங்கள். சொல்பவன் வேற்று மனிதன் அள்ள, நானும் உங்களில் ஒருவன் தான்).
படிப்பு பொருளாதாரம் என்று எதுவும் இல்லாதவர்களும், குடும்பம் குட்டி, வீடு மனை என்று பாரம்பரியம் எதையும் சுட்டி காட்ட முடியாதவர்களும், சாதியம் என்ற அந்த நாளைய சமூக இயல்பின் அடி மட்டத்தில் இருந்தவர்களும்தான் அந்த நளாய மலாயாவிற்கு வந்தவர்களில் பெரும்பாலோர். சுருங்க சொன்னால், சொந்த நாட்டில் வாழ வழி தெரியாது தோற்றவர்கள் தான் இங்கு வந்து சேர்ந்த தமிழர்கள்.
இப்படி இங்கு வந்து குடியேறிய தமிழ் வம்சாவழியின் தரம் மிக குறைவாக அமைந்ததால் தான் இன்றளவிலும் இந்தியர்கள் உலகம் முழுவதிலும் 150 நாடுகளுக்கு மேல் குடியேறி நல்ல பொருளாதார நிலைகளில் இருந்தாலும், மலேசியாவில் உள்ள தமிழர்கள் மட்டும் நழிந்து போய் கிடக்கிறார்கள். காரணம் நாம் அடிப்படையிலேயே சற்று தரம் குன்றிய 'ஸ்டாக்' தான்.
"ஆய்....... எப்படி நாங்கள் தரம் குன்றியவர்கள் என்று நீர் சொல்லலாம் .... இன துரோகி" என்று யாரும் என்னை வசை பாட முனைவதற்கு முன் சிறிது சிந்தித்து பாருங்கள். சீனர்களும் எதுவும் இல்லாது இந்த நாட்டிற்கு வந்தவர்கள்தான். மலேசிய நாட்டில் அவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? நாம் எப்படி இருக்கிறோம்? இதற்கு காரணம் என்ன ? சரி அது போகட்டும்.
250 - 300 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஸ்காரர்கள் நாடு கடத்திய சிறை கைதிகள்தான் இன்றைய அமெரிக்க வெள்ளையர்கள். அவர்களெல்லாம் எப்படி இந்த அளவுக்கு திறம்பட எல்லா துறைகளிலும் முன்னேறியுள்ளனர் " அவர்களிடம் அப்படி என்ன இருக்கின்றது ? நம்மவர்களிடம் அப்படி என்ன இல்லை ?
சாதியம் எனும் சாபம்
இந்த நாட்டு தமிழர்கள் சீனர்களைப் போல், பிற இனத்தாரை போல ஏன் முன்னேறவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், என் அறிவுக்கு எட்டியவரை மலேசிய தமிழர்கள் முன்னேறாமல் போனதற்கு அதி முதற் காரணம் இந்தியர்களோடு ஆயிரக்கணக்கான வருடங்களாக பிறவியோடு சேர்ந்து வரும் "சாதியம்" எனும் சாபம்தான்.
"என்னய்யா உழழுகிறீர். சாதி என்பதை மலேசிய இந்தியர்கள் மறந்து வெகு காலம் ஆகிறது. இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி புது குழப்பம் ஏற்படுத்த பார்க்காதீர்" என்கிறீர்களா?
உண்மைதான், முன்போடு ஒப்பிடுகையில் நம்மிடையே 'சாதி' என்பது சன்னம், சன்னமாக குறைந்து இன்று மலேசிய நடைமுறை சமுதாய ஈடுபாட்டில் "சாதியம் இருக்கிறதா, இல்லையா?" எனறு சந்தேகத்தை எழுப்பும் நிலையில்தான் மேலோட்டமான சமூக சூழ்நிலை உள்ளது.
ஆனால் சாதியத்தை மலேசிய இந்தியர்கள் கைவிட்டிருந்தாலும், சாதியத்தின் தாக்கம் நம்மை இன்னமும் கைவிடவில்லை என்கிற உண்மை ஒன்று உள்ளது அள்ளவா ?
ஒரு மனிதனின் சிந்தனை, படிப்பு, அவனை சுற்றிய சமூக அமைப்பு, அவனின் குடும்ப சூழ்நிலை, அவனின் முன்னோர்கள் வாழ்ந்த விதம், அவனின் பாரம்பரிய பின்னனி, அவன் தோற்றம், அவனை சுற்றி நடக்கும் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், அந்த நிகழ்வுகள் அவன் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பு, கொடுக்கும் உத்வேகம் என்று எல்லாமகச் சேர்ந்துதான் மனிதனுக்கு அவனுக்கான பிரத்தியேக 'இயல்பு' எனும் சுபாவத்தை உருவாக்குகின்றன.
கூலி வேலை செய்யும் ஒருவன் ஒரு நாள் ஏதோ காரணத்தினால் ஒரு 200 ரிங்கிட் கூடுதலாக சம்பாதிக்க கூடிய ஒரு வாய்ப்பு ஏற்படும்போது, அந்த 200 ரிங்கிட்டை தன் பிள்ளைக்கு புத்தகங்கள், பள்ளி சீருடை என்று வாங்க பயன் படுத்துகிறானா, அல்லது பிற தேவைகள் இருந்தும், இரண்டு பாட்டில் விஸ்கியை வாங்கி நண்பர்களுடன் குடித்து கும்மாளம் அடித்துவிட்டு குப்பிற படுத்து கொள்கிறானா என்பதை நிர்ணயிப்பது, இந்த 'இயல்பு' எனும் தன்மை தான்.
அந்த 'இயல்பை' எழிதாக, நினைத்த மாத்திரத்தில் யாரும் மாற்றி கொண்டுவிட முடியாது. நான் மேலே குறிப்பிட்ட படி, ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவன் அன்றுவரை அனுபத்திற்கும் வாழ்க்கை அனுப ரசத்தின் ஒட்டு மொத்த தாக்கத்தின் வெளிப்பாடுதான் 'இயல்பு' என்பது . இது கால ஓட்டத்தில் வெவ்வேறு புதுப் புது அனுபவங்களை ஒருவன் எதிர்கொள்ளும் போது மாறலாமே ஒலிய, வெளியார் யாரும் சொல்வதனால் அது மாறாது.
ஆக சாதியத்தின் கீழ்மட்ட தாக்கத்தில் ஆயிரக்கணக்கான வருடங்கள் மிதித்து கீழ் தள்ள பட்டு, பயந்து, தாழ்வு மனப்பான்மையோடு பிறந்து, வளந்து, மடிந்த, எல்லா வகையிலும் பின் தங்கிய ஒரு சாராரால், திடீர் என்று அவர்களின் சூழ்நிலையையும், சுபாவத்தையும், இயல்பையும் மாற்றி கொண்டு மற்ற இனங்களுக்கு ஈடுகொடுத்து வாழந்து வாழ்க்கையின் எல்லா பரிநாமங்களிலும் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்க வில்லை.
கேட்கிறது "சாதியத்தின் தாக்கத்தை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றோர் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள்", என்று நீங்கள் கூறுவது எனக்கு கேட்கின்றது. உண்மைதான், சாதியத்தின் தாக்கத்தை மீறி வெற்றி பெற்றவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் தான், அனால் நமது சமுதாயத்தின் ஜனத்தொகையில் எத்தனை விகிதம் பேர் நீங்கள் நினைப்பது போல் இப்படி தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டிருக்கிறார்கள் ?
மிஞ்சி போனால் ஒரு 30 விழுக்காடு இந்தியர்கள் மற்ற இனங்களுக்கு ஒப்பாக முன்னேறி இருக்கலாம். இந்த 30 விழுக்காட்டிலும் யால்பான தமிழர்கள், மலையாளிகள், சீக்கியர்கள், வட இந்திய வம்சாவலியினர், இந்திய முஸ்லீம்கள், தெலுங்கர்கள் என்பவரை எல்லாம் ஒதுக்கி விட்டு பார்த்தால் தான் இந்தியாவிலிருந்து இங்கு வந்த தமிழர்களின் வளர்ச்சி விகிதம் என்ன என்பது தெரியும். அந்த கணக்கை எல்லாம் போட்டால், மலேசிய இந்தியர்களின் ஜனத்தொகையில் 80 விழுக்காடு இருக்கும் தமிழர்களின் இன வளர்ச்சி 10 - 15 விழுக்காடு தேருமா என்பது சந்தேகமே.
"சரி, தமிழ்நாட்டில் சாதியத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் எவ்வளவோ முன்னேறி இருக்கிறார்களே அது எப்படி ?" என்கிறீர்களா? 50 - 60 ஆண்டுகளுக்கு முன்னர் 'திராவிட இயக்கம்' என்று பெரியார் ஈ.வே.ரா. என்ற ஒரு பெரியவர் எழுப்பிய சமுதாய தீயின் தாக்கம்தான் அதற்கு காரணம். அன்று அவர் எழுப்பிய சமுதாய விழிப்புணர்ச்சியின் காரணமாக, மேல் சாதிக்காரர்களிடமிருந்து தமிழக அரசாங்கமே பிற சாதிக்காரர்கள் வசம் கைமாறியது.
அத்தோடு தமிழகத்தின் கதை வேறு - சமுதாய உணர்வு கொண்ட படித்தவர்கள், சிந்தனைவாதிகள், அறிஞர்கள், உணர்ச்சியையும் சிந்தனையையும் தூண்டிவிட கூடிய கவிஞர்கள், பேச்சாளர்கள் என்று ஆயிரக்கணக்கான பேர் உள்ளனர்.
இங்கு நமது நிலைமை வேறு. மலாயாவிற்கு வந்து நிரந்தரமாக குடியேறின தமிழர்களில் 95 விழுக்காட்டினர் கூலி வேலை ஒன்றுக்கு மட்டுமே பொருத்தமானவர்களாக இருந்திருக்கிறார்கள். கால ஓட்டத்தில் அவர்களின் சந்ததியினர் சிலர் முன்னேறி இருந்தாலும், முன்னேறிய பெரும்பாலோருக்கு அவரவரின் முன்னேற்றத்தை தற்காத்து கொள்வதற்கு மட்டுமே நேரம் சரியாக இருந்திருக்கிறது.
இதற்கிடையில் 50 - 60 களில் மலேசிய எஸ்டேட்டுகளில் நடந்த துண்டாடல், இந்தோனீசியாவிலிருந்து வந்த கள்ள குடியேறிகளுக்கு எஸ்ட்டேட் வேலைகள் கைமாறியது, இந்திய இளைஞர்கள் எஸ்டேட்டுகளில் இருந்து வேலை வாய்ப்பு தேடி மாநகரங்களுக்கு புலம்பெயர்ந்தது, 1969 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இனக் கலவரம், தொடர்ந்து அமுல் படுத்தபட்ட புதிய பொருளாதார கொள்கை, பொருளாதாரத்தில் மலாய்காரர்களின் நிலையை உயர்த்துவதை முதல் கடமையாக கொண்ட அரசாங்க அனுகுமுறை, படிப்பறிவு குறைந்திருந்ததால் 80 - 90 ஆம் ஆண்டுகளில் நாடே வலப்பட்டு பொருளாதாரம் மேம்பட்ட போதிலும் மாநகர் வாழ் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிட்டாது போனது, உண்மையான சமூதாய உணர்வும், தன்நலம் அற்ற மனோநிலையும் கொண்ட தலைவர்கள் நம் இனத்தில் தோன்றாதது என்று தட்டுதடுமாறும் நமது கதை, துடுப்பில்லாமல் கடலில் தத்தலிக்கும் படகின் கதை.
சமுதாயம் வளம்பெற ..... 'அரசியல் அனுகுமுறை '
இந்த நாட்டில் நம் இனம் வளம்பெற வேண்டுமேயானால், அதற்கான ஒரே வழி, மலாய்காரர்களை எந்த அளவு மேம்படுத்த வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் முனைப்பு காட்டுகிறதோ, அதில் கால்வாசியாவது நம் இனத்தின் முன்னேற்ற வளர்ச்சிக்கும் அது முனைப்பு காட்ட வேண்டும். அதற்கு தோதாக வழிமுறைகளும், திட்டங்களும் தீட்ட பட்டு ஒரு தூர நோக்கு கொள்கையோடு கூடிய "இந்தியர் மேம்பாட்டு 5 ஆண்டு திட்டம்" என்ற ஒரு தொடர் 5 ஆண்டு திட்டம் நாடு தழுவிய அளவில் மலேசிய அரசாங்கத்தால் அமுல் படுத்த பட வேண்டும்.
மேலும், இப்படி போடப் படும் திட்டங்கள் மூலம் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள், சலுகைகள் யாவும் அரசாங்கத்தால் நேரடியாக நம் இனத்திற்கு வழங்க பட வேண்டும். அது அல்லாமல் இப்போது உள்ளது போல் "இந்தியர் சார்ந்த அரசியல் கட்சிகள் மூலமாக தான் உங்களுக்கான சேவைகளைச் செய்வோம்" என்கிற கூற்றை நாம் ஏற்க கூடாது. இதை எல்லாம் அமுல் படுத்த பாரிசான் நேஷனல், பக்கத்தான் ராக்யாட் ஆகிய் இரண்டு கட்சிகளில் எந்த அரசியல் கட்சி தயாராக இருக்கிறதோ, அந்த கட்சிக்கு நம் சமுதாயத்தின் ஒட்டு மொத்த ஓட்டையும் போடும்வோம் என்று பறை சாற்றுவோம்.
அது அல்லாமல் "நாங்கள் அதை செய்வோம், இதை செய்வோம்" என்று சிறு, சிறு ஸ்தாபனங்களும். அரசியல் கட்சிகளும் சொல்வதை எல்லாம் நாம் ஏற்று கொள்ள கூடாது. நடைமுறையில் அவர்கள் கூற்றேல்லாம் எடுபடவும் மாட்டா.
மத்திய அரசாங்க நிலையில் இந்திய சமுதாயத்தின் நிலையை மேம்படுத்த வேண்டும் என்கிற தீர்க்கமான முனைப்பு இருந்தால் ஒலிய, நம் சமுதாய பிர்ச்சனைகளுக்கு எந்த தீர்வும் காணப்பட போவதில்லை. இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் நாம் பின் தங்கிதான் இருப்போம்.
மற்றுமொரு விஷயம் - சாதியத்தால் தமிழர்கள் எப்படி பாதிக்க பட்டிருக்கிறார்கள் என்பதை வெட்க படாமல் மற்ற இனங்களுக்கு நாம் எடுத்து கூறினால் ஒலிய பிற இனத்தாருக்கு நமது பிர்ச்சனைகளின் தீவிரமோ, அழமோ நிச்சையமாக புரிய போவது இல்லை.
"சீன பிள்ளைகள் எல்லாம் முறையாக படித்து பழ்கலைகழகம் வறை செல்லும்போது தமிழ் குழந்தைகளால் ஏன் படிக்க முடியவில்லை ? மற்ற இனங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்தி பொருளாதாரத்தில் மேம்பாடு கொள்ளும்போது, தமிழர்களால் ஏன் பொருளாதார ரீதியாக சிறிது கூட தம்மை மேம்படுத்தி கொள்ள முடியவில்லை?", என்று எல்லாவற்றிற்கும் பிற இனத்தை சுட்டி காட்டி கேள்வி எழுப்புவார்கள்.
மலேசிய மக்கள்தொகையில் 93 விழுக்காடு உள்ள மற்ற இனத்தாரின் புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் இல்லாது நமது பிரச்சனைகளுக்கு மலேசியாவில் எந்த தீர்வும் ஏற்பட போவதும் இல்லை. ஆதலால் நம் சமுதாயம் முன்னேற வேண்டுமேயானால் சாதி என்பதை ஒலிவுமறைவு இல்லாமல் பிற இனத்தாருக்கு உடைத்து காண்பித்து, நாம் ஏன் பின் தங்கி இருக்கிறோம் எனும் உண்மையான காரணங்களை மற்ற இனங்களுக்கு நாம் புரிய வைத்துதான் ஆகவேண்டும். வேறு வழி இல்லை.
சமுதாயம் வளம்பெற ..... 'தனிமனித அனுகுமுறை'
எது? ..... என்ன சொல்கிறீர்கள்?.... 'முடியாதா ?'. உங்களின் தன்மான உணர்ச்சி அதற்கு இடங்கொடுக்காதா ? ஓ..ஓ..ஓ !!..... பரம்பரை உண்மைகளை வெளிப்படையாக ஒத்து கொள்ள நமது தன்மானம் இடங்கொடுக்காது என்கிற ஒரு சமாச்சாரம் இருக்கிறதோ ? ஆமாம்..... அட அதை மறந்துவிட்டேனே !! ..... சாதியத்தின் உண்மைகளை உடைத்து, அவை நம்மிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பிற இனத்தாரிடம் நாம் எப்படி பேசுவது !? ஆமாம் ..... முடியாதுதான் ! மலாய்காரர்களிடமும், சீனர்களிடமும் போய் "எங்கள் பாட்டன் பூட்டன் எல்லாம் சாதியத்தில் குறைந்தவர்கள் ..... பரம்பரை, பரம்பரையாக பின் தள்ள பட்டதின் தாக்கம்தான் இன்று நாங்கள் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்கான காரணம். ஆதலால் அரசாங்கம் எங்களுக்கு சிறப்பு சலுகைகள் செய்து தர வேண்டும்", என்று எப்படி கூசாமல் கூறுவது ? கஷ்டம்தான்.
சரி, அப்படியானால் ஒன்று செய்யலாமா ? ...... "சமுதாய முன்னேற்றம், சமுதாய முன்னேற்றம்" என்று பேசுவதை, நினைப்பதை ஒரு 10 விழுக்காடாக குறைத்து கொண்டு, "என் சுய முன்னேற்றத்திற்கு என் அளவில் நான் என்ன செய்ய வேண்டும்? என்னை முன்னேற்றி கொள்ள என் சக்திக்குள் இருக்கும் சாதனங்கள் என்ன? அவற்றை எந்த முறையில் உபயோகித்தால் என்னால் என் பொருளாதார, சமூக நிலமையை ஒரளவுக்காவது மேம்படுத்தி கொள்ள முடியும்" என்கிற கேள்விகளுக்கு 90 விழுக்காடு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிப்போமே !
சமுதாயத்தை பற்றி "ஆய்.... ஊய்... அப்படி... இப்படி" என்று வீர வசனம் பேசுவதற்கு என்றே உள்ள நம்மூர் இந்திய அரசியல்வாதிகளிடம் சமுதாய பொருப்பை விட்டு விடுவோம்.
தக்காளி !! ஓட்டு வேண்டும் என்றால் சமுதாயத்திற்கு செய்ய வேண்டியவற்றை அவர்கள் செய்யட்டுமே ! இல்லையென்றால் மார்ச் 2008 தேர்தலில் வைத்தபோல் எல்லோருக்கும் சேர்த்து வைப்போம் பெரியதொரு "ஆப்பு".
தனி மனித அளவில் எததனை தமிழர்கள் தம் சுய முன்னேற்றத்திற்காக அயராது பாடுபடுகிறார்களோ, அந்த அளவிற்குதான் மலேசிய தமிழ் சமுதாய முன்னேற்றம் அமையும். இதுதான் நடைமுறை உண்மை. இதுதான் செயல் படுத்தகூடியது.
மேலும் இந்த வழியில் தீவிரம் காட்டினோம் என்றால், ஒட்டு மொத்த தமிழ் சமுதாயம் என்கிற அளவில் முன்னேற்றம் எதுவும் பெரிதாக நடைபெறாமல் போனாலும், கால ஓட்டத்தில் தனி மனித அளவில் எதோ 10 மலேசிய தமிழர்களில் 2 பேராவது விரல் காண்பித்து பெருமை கொள்ளகூடிய அளவில் பிற இனங்களுக்கு ஈடாக முன்னேறி இருப்போம்.