Friday, December 4, 2009

உன்னையே நீ அறிவாய் ! (முடிவுரை) - பாகம் 18

சென்ற பதிவோடு நான் இந்த 'உன்னையே நீ அறிவாய் !' தொடரின் 17 பாகங்களில் மலேசிய தழிர்களை பற்றி 22,553 வார்த்தைகள் எழுதியுள்ளேன். மேலும் எழுதுவதற்கு எனது வியாபாரப் பையின் அடியை தடவினால் என் கைக்கு எதுவுமே அகப்பட வில்லை. விற்பனைக்கு என்று என்னிடம் இருந்த சரக்கு எல்லாவற்றையும் நான் தங்களிடம் விற்றாகி விட்டதால், இத்தோடு இந்த பதிவை முடித்து கொண்டு உங்களிடம் இருந்து விடைபெற்று கொள்கிறேன்.

.

விடைபெறுவத்ற்கு முன்பு நான் கடைசியாக தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவது ஒன்று தான்:-

.

புத்தி. ஆம் புத்தி என்பதை நாம் எப்படி உபயோகிக்கிறோம் என்பதை பொருத்து தான் நம் வாழ்க்கையின் சாராம்சமே இருக்கின்றது. புத்திசாலித்தனமாக செயல்பட்டு, வாழ்க்கையின் வெவ்வேறு சூல்நிலைகளில் எடுக்க வேண்டிய முடிவுகளை திறம்பட எடுத்து, அந்தந்த காலக் கட்டத்தில் செய்ய வேண்டிய காரியங்களை முறையாக செய்து வருவோருக்கு வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் எல்லாம் பொதுவாக வருவது குறைவு.

.

ஆனால் புத்திசாலித்தனம் என்றால் என்ன? அதன் வெளிப்பாடு எப்படியிருக்கும்? அதை பெருவது எப்படி? ஏன் சிலர் மட்டும் எப்பவும் புத்திசாலித்தனமாக செயல் படுகிறாகள்? ஏன் பலருக்கு அது கடைசி வரை புரியாத புதிராகவே இருந்து விடுகிறது? என்கிற கேள்விகளுக்கு பதில் கண்டு பிடிப்பதுதான் கஷ்டமான வேலை. ஆனால் கேள்விகளுக்கு பொருள்கானும் அந்த வேலையை உங்களுக்காக வேறு யாரும் செய்ய முடியாது. அதை நீங்கள்தான் முட்டி மோதி புரிந்துகொள்ள வேண்டும். தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

.

சரி, தனிப்பட்ட அளவில் இந்த தொடரில் நான் நம் சமூகத்தின் பல குணாதிசயங்களையும், இயல்புகளையும் அப்பட்டமாகவும், அதிரடியாகவும், திமிருடனும் பலவாறு விமர்சித்து எழுதியுள்ளேன். அப்படியெல்லாம் விமர்சித்து விட்டு நான் யார், எனது பின்னனி என்ன என்பதை இங்கு சற்றும் தெரிவிக்காது விடைபெற்றுச் செல்வது என் மனதிற்கே சிறிது கோலைத் தனமாக படுகின்றது.

.

அதே நேரத்தில் நான் யார் என்பதை வெட்ட வெளிச்சமாக திறந்து காண்பித்து தற்போது 'சாமான்யன்' என்கிற அனாமதேய போர்வைக்குள் எனக்கு இருக்கின்ற எழுத்து சுதந்திரத்தை கெடுத்து கொள்ளவும் நான் தயாராக இல்லை. அதனால், நான் யார் என்பதை தெரிவிக்காமல், எனது வாழ்க்கை பின்னனியை மட்டும் உங்களிடம் சுருக்கமாக சொல்லி விட்டு செல்கிறேன்.

.

நான் சிறிது வித்தியாசமான குடும்ப சூழ்நிலையில் பிறந்தவன். என் தகப்பனார் ஒரு சிறு தொழில் வியாபாரியாக இருந்தவர். நன்கு வாழ்ந்தவர். ஆனால், எனக்கு விவரம் தெரியும் வயது வரும் முன்னரே, தொழில் மிக நொடித்து 'அக்கடா' என்று மூலையில் செயலிழந்து உட்கார்ந்து விட்டார். அதனால், நானும் என் தம்பி தங்கையரும் கடின ஏழ்மையில் தான் வளர்ந்தோம்.

.
அதில் பாருங்கள், இந்த நன்றாக வாழ்ந்து அதன் பிறகு ஏழ்மைக்கு வரும் நிலை இருக்கிறதே, அது மேலே ஏறவும் முடியாத, கீழே இறங்கவும் முடியாத ஒரு ரெண்டுங்கெட்டான் நிலை. மிகவும் பரிதாபத்திற்குரிய ஒரு பிழைப்பு. ஏழ்மையின் தாக்கம் எவ்வளவாக இருந்தாலும், இந்த நிலைக்கு உட்பட்டவர்கள் தங்கள் கஸ்ட்டத்தை வெளியில் காண்பித்து கொள்ளாமல், பள்ளைக் கடித்து கொண்டு வாழ்ந்து விடுவர். இதுதான் சிறு வயதில் எனக்கு தெரிந்த வாழ்வு (இப்படி பிஞ்சிலேயே பழுத்ததனால் தானோ என்னவோ என் சிந்தனை எப்போதுமே பிறரைவிட சிறிது கடினமானதாகவே இருந்து வந்துள்ளது).

.

17 வயதிலேயே வேலைக்கு போனவன் என்றாலும் என் சிறு வயது முதலே 'நாம் எப்படியாவது ஒரு தொழில் முனைவர் ஆகிவிட வேண்டும். நம் தலைமுறைக்கு பிறகு நம் குடும்பத்தில் யாரும் விடுபட முடியாத ஏழ்மையில் சிக்கி தவிக்கும் நிலையில் மாட்டி கொண்டுவிட கூடாது" என்கிற குறிக்கோளை என் மனதில் மிக ஆழமாக ஏற்றி கொண்டவனும் கூட.

.

அதனால் ஒரு சாதாரண குமாஸ்தாவாக நான் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே பகுதி நேரமாக ஏதாவது தொழில் முயற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருந்து வந்துள்ளேன். பத்து மலையில் தைப்பூச திருவிளாவின் போது கடை போட்டிருக்கிறேன். கோலாலம்பூரில் இந்தியர் அதிகம் புழங்கும் பகுதியில் ஒரு அறைக்கடையில் அறைக்கடை இடம் பிடித்து கோஸ்டியும் ஜுவல்லரி (கவரிங் நகைகள்) விற்றிருக்கிறேன், ஆள் வைத்து தீபாவளிக்கு பலகாரங்கள் செய்து விநியோகம் செய்திருக்கிறேன்.

.

இப்படியாக என்னென்னவோ சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டு கடைசியாக எனக்கு நன்கு பரிட்ச்சயமான, பல வருட அநுபம் இருந்த ஏற்றுமதி துறையில் இரண்டு முறை ஈடுபட எத்தனித்து அந்த முயற்ச்சிகளிலும் படு தோல்வியுற்றேன். அதன் பிறகு மூன்றாவது முறையாக ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்ட போதுதான் எனக்கு வெற்றி கிட்டியது. 'முறையான வியாபாரம்' என்கிற ஏணியின் முதற்படியில் பலமாக கால் ஊன்றி 'நானும் ஒரு நிலையான தொழில் முனைவர்' என்கிற அந்தஸ்த்திற்கு வந்து சேர்ந்தேன்.

.

ஆனால், நான் இப்படியெல்லாம் முட்டிமோதி, விழுந்து, எழுந்து தொழில் ரீதியாக ஸ்தரம் பெரும் நிலைக்கு வந்து சேர்வற்குள் எனக்கு நாற்பது ஐந்து, நாற்பத்து ஆறு வயது ஆகியிருந்தது. அந்த காலக் கட்டத்தில் (1997 - 1998) தென்கிழக்காசியா முழுவதும் பொருளாதார வீழ்ச்சியுற்றிருந்த நேரத்தில், யாரிடமும் கையில் பணம் இல்லாது இருந்த நேரத்தில் என் கையில் பணம் இருந்தது.

.

அதே கால கட்டத்தில்தான் எங்களது மூன்று பிள்ளைகளும் ஒருவர் பின் ஒருவராக பல்கலைக்கழகம் செல்லும் வயதுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது என்னிடம் இருந்த பணத்தை வைத்து என்னால் அவர்கள் மூவரையும் மிகச் சிறந்த வெளிநாட்டு பட்ட படிப்புக்களை படிக்க வைத்து விட முடியும் என்கிற உண்மை ஒரு புறம். ஆனால், அந்த திட்டத்தை சாதிப்பதற்கு நான் என் வியாபார நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தி என் நிறுவனத்தை மூடியாக வேண்டும் என்கிற நிர்பந்தம் மற்றொரு புறம்.

.

பிள்ளைகளின் படிப்பையும், எனது வியாபாரத்தையும் ஒருசேர நடத்துவது என்பது சாத்தியமற்ற விஷயமாக எனக்கு தெரிந்தது. என்னிடம் இருந்த பணத்தை என்னால் ஏதாவது ஒரு திட்டத்திற்கு தான் பயன்படுத்த முடியும் என்கிற அடிப்படை உண்மை.

.

17 வயதில் ஆரம்பித்து வியாபாரத்தில் ஸ்தரம்பெற எனக்கு கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகியிருந்ததாலும், நான் தாண்டி வந்த பாதையில் எத்தனையோ சோதனைகளையும் தோல்விகளையும் சந்தித்து வாழ்க்கையின் உண்மை தன்மைகளை நான் நன்கு உணர்ந்திருந்ததாலும் "அடுத்து வியாபாரத்தில் காற்று நமக்கு எதிராக ஒரு முறை வீசினாலும் இப்போது நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் நாம் முற்றாக இழக்கும் நிலை ஏற்பட்டு விடும். பேசாமல் வியாபார ரீதியாக நாம் செய்யும் எல்லாவற்றையும் நிறுத்திக் கொண்டு, பிள்ளைகளை படிக்க வைத்து விடுவோம்" என்று முடிவு செய்து அதன் படி நடவடிக்கைகளை முடிக்கி விட்டேன். நிறுவனத்தை மூடினேன். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு ப்டிக்க அனுப்பினேன்.

.

நான் 10 வ்ருடங்களுக்கு முன்பு துணிந்து எடுத்த அந்த முடிவின் தாக்கம் என்னவென்றால், இன்று என் மகள் ஒரு மருத்துவர். ஐரோப்பாவில் படித்ததால் சிங்கப்பூர் அரசாங்கம் அவரை வேலைக்கு எடுத்து கொண்டுள்ளது. மருத்துவராக அரசாங்க வேலை செய்து கொண்டே சிங்கப்பூரில் முதுநிலை நிபுணத்துவ பட்டத்திற்கு படித்து கொண்டிருக்கிறார். மகன் அஸ்திரேலியாவில் விளம்பர துறையில் பட்ட படிப்பு படித்து, பிறகு இங்கிலாந்தில் முதுநிலை பட்டம் பெற்று திரும்பியுள்ளார். ஜனவரி மாதம் கோலாலம்பூரில் தன் பெயரில் தன் துறையில் சொந்த நிறுவனம் ஒன்றை துவக்க உள்ளார். கடைசி மகள் நியூசிலாந்தில் தற்போது முதுநிலை படிப்பு படித்து கொண்டிருக்கிறார். மார்ச் மாதத்தோடு படிப்பு முடிந்து மலேசியா திரும்பி விடுவார். மூன்று பேர்களுமே தங்கள் பட்ட படிப்புக்களை உலகப் பிரசித்தி பெற்ற பல்கலைகழகங்களில் முடித்தள்ளனர். ஆனால், நான் ஓடிஓடி நிர்மானித்த தொழில் நிறுவனம் இப்போது இல்லை. முற்றாக மூடப்பட்டு விட்டது.

.

எங்கள் மூன்று பிள்ளைகளுக்கும் நாங்கள் சொல்லி வளர்த்து வந்துள்ள போதனை என்னவென்றால் "நீங்கள் தாய் தந்தையரான எங்களுக்கு எதுவும் பெரிதாக செய்ய வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் காலத்தில், உங்கள் குழந்தைகளை நாங்கள் உங்களை படிக்க வைத்ததைவிட ஒரு இம்மி அளவு அதிகமாக படிக்க வைத்து விடவேண்டும். இது தான் நீங்கள் எங்களுக்கு செய்ய வேண்டிய கடமை" எனப்து மட்டும் தான்.

.

ஒரு தகப்பனாக "நம் பிள்ளைகள் நன்கு படித்தவர்கள். எந்த கூட்டத்திலும், எந்த சூழ்நிலையிலும், எவருக்கும், உலகின் எந்த இனத்தவருக்கும் சலைத்தவர்களாக இருக்க மாட்டார்கள்" என்கிற பெருமிதமான எண்ண ஓட்டம் என் மனதில் இருந்தாலும், "நாம் நினனத்தது போல், நம் காலத்தில், நம் குடும்பம் ஒரு தொழில்துறை குடும்பம் ஆக முடியவில்லையே !" என்கிற ஒரு ஆதங்கமும் என்னுள் ஆழமாக உருத்திக் கொண்டே இருக்கின்றது.

.

பார்ப்போம். எங்கள் பிள்ளைகளாவது அவர்கள் காலத்தில் அவர் அவர் துறைகளில் வெற்றிகரமான தொழில் முனைவர்கள் ஆவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். தங்கள் பாட்டனாரால் முடியாததை, தங்கள் தகப்பனாரால் முடியாததை, அவர்கள் காலத்தில் அவர்கள் சாதிப்பார்கள் என்று நம்புகிறேன். பார்ப்போம்.

..

சென்று வருகிறேன். இது காலம் வரை எனக்கு மதிப்பளித்து என் படைப்புக்களை படித்து வந்த இனைய தோழர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

.

முற்றும்

.

.

.

- சாமான்யன் -