Friday, June 12, 2009

உன்னையே நீ அறிவாய் ! (கடைக்கொள்ள படவேண்டிய சமூக / அரசியல் அனுகுமுறை) - பாகம் 12

மற்றவர்களின் பார்வைக்கு மலேசிய தமிழர்களான நாம் படிப்பறிவு அற்றவர்களாக, கூலிக் கூட்டமாக, கருப்பர்களாக .... எப்படி வேண்டுமானாலும் தென்படலாம், ஆனால் அரசியல் கண்ணோட்டத்தில் தீபகற்ப மலேசியாவில் உள்ள 165 நாடாளுமன்ற தொகுதிகளில் 50 தொகுதிகளிலும், 445 சட்ட மன்ற தொகுதிகளில் 133 தொகுதிகளிலும் இந்தியர்கள் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 10.0 விழுக்காட்டிற்கும் மேலான வாக்குறிமையை பெற்றுள்ளோம். இதில் 80 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் தமிழர்களான நாம் தான்.




1).
நமக்கான அரசியல் 'துருப்புச் சீட்டு'

மலேசிய அரசியலில், இந்த வாக்குறிமை நிலைப் பாடு ஒன்றுதான் நம் இனத்திற்கான 'துருப்பு சீட்டு'. ஓட்டுறிமையில் இந்த அளவு நிலைப் பாடு இருப்பதனால் தான் நம்மையும் ஒரு சிறு பொருட்டாக இந்த நாட்டு அரசாங்கம் நினைத்து ஓரளவுக்காவது மதித்து நடத்துகின்றது, நம் இனத்திற்கென்று அமைச்சரவையில் ஏதோ ஒரு மந்திரி பதவியாவது நிலைத்து நிற்கின்றது.


7.7 விழுக்காட்டு மக்கள் தொகையை கொண்ட இந்தியர்கள் 2008 க்கு முன்பு நமது ஓட்டுக்களை தேசிய முன்னணிக்கு தான் போட்டு வந்தோம். ஆனால் 2008 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு பிறகு நமது ஓட்டு குவியல் மொத்தமுமாக எதிர்கட்சியினருக்கு செல்ல ஆரம்பித்து விட்டது.


நடைமுறையில் இதன் தாக்கம் என்னவென்றால், இந்தியர்களின் இந்த எதிர்பாராத அரசியல் திருப்பம் மேற் குறிப்பிட்ட அந்த 50 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 133 சட்ட மன்ற தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணீக்கையில் தேசிய முன்னணிக்கு 20 விழுக்காட்டிற்கும் அதிகமான சரிவை ஏற்படுத்தி விட்டது ( தேசிய முன்னணிக்கு நம்மிடம் இருந்து வரும் என்று எதிர்பார்க்க பட்ட, ஆனால் கடைசியில் வராமல் போன வாக்கு எண்ணிக்கை 10 விழுக்காடு, எதிர்கட்சிகளுக்கு நம்மிடம் இருந்து புதிதாக வழங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மற்றுமொரு 10 விழுக்காடு).




2). இனி வேண்டாம் இனவாரி சாலை மறியல் / பேரணி


ஆனால் இந்த துருப்புச் சீட்டை (வாக்குறிமையை) நாம் புத்திசாலித் தனமாக பயன் படுத்த வேண்டும். அதற்கு முதலில் சமயத்தின் பெயரை சொல்லிக் கொண்டு, மகாத்மா காந்தியின் படத்தையும், பிரிட்டீஸ் அரசியாரின் படத்தையும் தாங்கி கொண்டு "ஆ...ஊ" என்று சாலை மறியலில் ஈடுபடும் தப்பான அனுகுமுறையை நாம் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.


நான் இந்த தொடரின் முதல் பாகத்தில் கூறியது போல "மலேசிய மக்கள்தொகையில் 93 விழுக்காடு உள்ள மற்ற இனத்தாரின் புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் இல்லாது நமது இனப் பிரச்சனைகளுக்கு மலேசியாவில் எந்த தீர்வும் ஏற்பட போவது இல்லை".


2008 ஆம் ஆண்டு பொது தேர்தலில் மலேசிய சீனர்களும் நம்மோடு சேர்ந்து எதிர்கட்சியினருக்கு வாக்களித்தார்கள் என்றாலும், நெடுங்கால அரசியல் ஓட்டத்தில் இஸ்லாம் அல்லாத வேறொரு மதத்தின் பெயரை உயர்த்தி பிடித்து, அரசாங்கத்திற்கு எதிராக நாம் கொடி பிடிக்க விளைந்தால், "சீனர்கள் நம்மோடு தொடர்ந்து எதிர் அணியில் நிற்பார்களா?" என்றால், அதற்கு "நிச்சயமாக இல்லை" என்பதுதான் பதில்.


தலைவர்களாக இருந்தாலும், தொண்டர்களாக இருந்தாலும் தமிழர்களான நாம் எல்லா காலங்களிலுமே நம் நுனிமூக்கு தூரத்தை தாண்டி சிந்திக்க தெரியாத முட்டாள்களாகத் தான் இருந்து வந்திருக்கிறோம்.


ஆனால், சீனர்கள் அப்படி அல்ல. பாரிசான் நேஷனல் அரசாங்கத்தை பெரும்பாலான சீனர்களுக்கு பிடிக்காவிட்டாலும், 1999 ஆம் ஆண்டு தேர்தலில் அன்வார் இப்ராஹிம் சர்ச்சையின் பொருட்டு மலாய் இனத்தவருக்குள் ஆழமான பிளவுகள் ஏற்பட்டு மலாய் ஓட்டுக்கள் பேரளவில் பாஸ் கட்சிக்கு போய்விடும் என்கிற நிலை ஏற்பட்ட போது, சீன சமூகம் ஒட்டுமொத்தமாக ஒன்று திரண்டு தேசிய முன்னணிக்கு ஒட்டு போட்டு தேசிய முன்னணியை ஜெயிக்க வைத்தார்கள்.


அந்த தேர்தலில் டீ.ஏ.பி யின் லின் கிட் சியாங், கர்ப்பால் சிங் உள்ளிட்ட பல எதிர்கட்சி தலைவர்கள் தோற்கடிக்கப் பட்டனர். ஆனால், அதே தேர்தலில் தான் அதுவரை கிளந்தான் மாகாணத்தை மட்டுமே ஆட்சி புரிந்து வந்த பாஸ் கட்சி திரங்கானு மாகாணத்தையும் கைப்பற்றிய்து.


பிறகு 2008 ஆம் ஆண்டு இந்திய சமூகத்தின் ஹிந்திராவ் பேரணி ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தின் தன்மையை புரிந்து கொண்டு, "தேசிய முன்னணிக்கு பாடம் புகட்ட இது தான் சரியான தருணம்" என்கிற முனைப்போடும், பெரும்பாலான சீனர்கள் பக்கத்தான் ராக்யாட்டிற்கு தங்கள் ஒட்டுக்களை போட்டனர். அதன் விளைவு, அன்வார் இப்ராஹிம் தலைமையில் களம் இறங்கிய எதிர்கட்சி அணிக்கு 2008 ஆம் ஆண்டு தேர்தலில் 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 82 தொகுதிகளில் வெற்றி கிட்டியதோடு, பேராக், பினாங்கு, கெடா, சிலாங்கூர் ஆகிய மாகாணங்களின் ஆட்சி உறிமையும் எதிர்கட்சி கூட்டணியின் வசம் கை மாறியது.


ஆனால், நாம் ஏற்படுத்திய அரசியல் தாக்கம்தானே மலேசிய அரசியலில் இவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. நாம் உள்ளபடியே 'பெரிய பருப்புக்கள் தான்' என்கிற தப்பு கணக்கை போட்டு கொண்டு மற்றொரு முறை சாலை மறியல் போராட்டத்தில் இந்தியர்கள் குதித்தால், நாம் விடும் அம்பு எப்படி திரும்பி, யார் மேல பாயும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மலாய் இனத்தவரும், சீன இனத்தவரும் நம்மை விட அரசியல் ஞாணத்திலும், அரசியல் அனுபவத்திலும் பல மடங்கு கைதேர்ந்தவர்கள்..


ஏதோ 2007 லில் இந்தியர்கள் ஏற்படுத்திய அரசியல் தாக்கம் தங்களுக்கு சாதகமாக அமைந்ததால், எல்லா எதிர்கட்சி தலைவர்களும் "மக்கள் சக்தி, மக்கள் சக்தி" என்று இரண்டு தமிழ் வார்த்தைகளைக் கூவி கொண்டும் இந்தியர்களின் உதவியோடு 2008 நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்றனர்.


ஆனால் நீண்ட கால அரசியல் கணிப்பில் இந்து சமயத்தின் பெயரை உபயோகித்து இந்தியர்கள் தாவிக் கொண்டும், கூவிக் கொண்டும் இயங்குவதை இந்த நாட்டில் எந்த மலாய்காரராவது பொருத்து கொள்வாரா என்றால், அதற்கான பதிலும் "நிச்சயமாக இல்லை" என்றுதான் வரும்.


இனவாரியாக பிற்படுத்தப் பட்டதால், பல காலமாக நம் இனத்தாரின் மனங்களில் கொதி நிலையிலேயே இருந்த வந்த வெறுப்பையும், ஆத்திரத்தையும் எந்த வகையிலாவது அரசாங்கத்திற்கு உணர்த்த வேண்டும் என்று பலரும் நினைத்திருந்த வேலையில், ஹிந்திராவ் இயக்கத்தினர் இன அளவில் அதற்கான பெரிய தொரு தளத்தை நமக்கு ஏற்படுத்தி கொடுத்தனர். அதை பயன் படுத்திக் கொண்டு நாமும் நம்மை பிரதிநிதிப்பதாக கூறிக் கொள்ளும் இந்திய கட்சி தலைவர்களுக்கும், தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் 2007 ஆம் ஆண்டு பேரணியின் மூலம் நம் நிலைப் பாட்டை அப்பட்டமாக தெரிவித்தோம். சரி, பிரமாதம்! அட்டகாசம்! அசத்தி விட்டோம்!


ஆனால், இத்தோடு இந்த இன அடிப்படையிலான சாலை மறியல் போராட்டத்தை நிறுத்தி கொள்வோம். காரணம், இந்த இன வாரி சாலை மறியல் போராட்டம் என்பது மகாபாரத்தில் வருகிற கர்ணனின் நாகாஸ்திரம் போன்றது. அதை ஒரே ஒரு முறைதான் பயன் படுத்தப் பட முடியும். அதைத் தாண்டி 2007 சாலை பேரணி மறியலைப் போல் மற்றொரு மறியலில் ஈடுபட நம் இன சமூக / அரசியல் தலைவர்கள் யாராவ்து நினைத்தால் அதைவிட வடிகட்டிய முட்டாள்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.


"10 படிகளுக்கு முன்பே பத்தாவது படியில் என்ன நடக்கும் என்பதை துல்லிதமாக கணக்கு போடத் தெரிந்தவன் வாழ்க்கையை வெல்பவன். அந்த கணக்கை போடத் தெரியாதவன் தோற்பவன். இது தான் வாழ்க்கையின் ரகசியம் என்பது என் கருத்து" என்று இந்த தொடரின் முதல் பாகத்தில் பின்னுட்டம் வழி நான் கூறியிருந்த கருத்து தான் இன்னமும், ( எப்போதும்) என் தனி மனித நிலைப்பாடு.


சரீ ...... சாலை மறியல் பேரணியை நடத்தினோமே, அதிலிருந்து நமக்கான நண்மைகள் எவற்றையாவது இதுவரை பெற்றுள்ளோமா? இல்லை ! இவ்வளவு பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட மூல காரணமாக இருந்த இந்தியர்களுக்கு அவர்கள் நடத்திய பேரணியின் மூலம் இதுவரை எந்த ஒரு பிரத்தியேகமான நண்மையையும் கிட்ட வில்லையே. ஏன்? ஏன் என்றால், பத்து படிகளுக்கு முன்னரே பத்தாவது படியில் என்ன நடக்கும் என்பதை யாரும் யோசித்து அதற்கு தகுந்த வழியில் தங்களை தயார் படித்திக் கொள்ள வில்லை !


"ஆ...ஊ" என்று உணர்ச்சி வசப் பட்டு கூவுவது, தாவுவது வேறு, புத்திசாலித்தனமான அனுகுமுறை கொண்டு நம்மைச் சுற்றி உள்ள சுழ்நிலைகளை நமக்கு சாதமாக மாற்றி அமைத்து கொண்டு வாழ்க்கையை வெழ்வது என்பது வேறு (உணர்ச்சி வசப் படுவதைத் தான் நம் கொள்ளுப் பாட்டனுக்கு, கொள்ளுப் பாட்டனுக்கு, கொள்ளுப் பாட்டன் காலத்தில் இருந்து பட்டு கொண்டிருக்கோமே! ).




3). சமூக / அரசியல் அனுகுமுறை


இந்த வாதத்தை இத்தோடு நிறுத்திக் கொண்டு, சமூக அரசியல் அளவில் நாம் எடுக்க வேண்டிய சில அடிப்படை முயற்ச்சிகளை பார்ப்போம்.



3a). வாக்காளர் பதிவு


ஒவ்வொரு வீட்டிலும் 21 வயதுக்கு மேல் உள்ள அத்தனை இந்தியரும் வாக்காளராக பதிந்து கொண்டிருக்க வேண்டும். 'சமூக சேவை.. சமூக சேவை' என்று குரல் கொடுக்கும் இயக்கங்களும், இந்திய சமுதாயத்தை தூக்கி நிமிர்த்தப் போவதாக கூறிக் கொள்ளும் அரசியல் கட்சிகளும், சமுதாய உணர்வு கொண்ட ஒவ்வொரு மலேசிய இந்தியரும் வேறு எதையும் பெரிதாக நம் இனத்திற்காக செய்யா விட்டாலும், இந்த ஒரு அடிப்படை செயலை ஒரு இனச் 'சேவை' யாக நினைத்து, அவர்களுக்கு தெரிந்த 21 வயதுக்கு மேல் உள்ள அத்தனை இந்திய இளைஞர்களையும் வாக்காளர்களாக பதிவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.



3b). இந்தியர் முன்னேற்ற கொள்கையைப் பொருத்து தான் எங்கள் ஓட்டு


மலேசியாவின் பல இன அரசியல் சூழ்நிலையில், ஜனத்தொகையில் நாம் வெறும் 7.7 விழுக்காடு மட்டும் இருந்தாலும், இந்தியர்கள் தீபகற்ப மலேசியாவின் மேற்கு திசை மாகாணங்களில் பரவலாக குடிபுகுந்திருப்பதால், தேர்தல் என்று வரும்போது இந்த நாட்டு அரசியல் நிலைப் பாட்டில் நாம் நம் ஜனத்தொகையை மீறிய ஒரு அரசியல் பலத்தை பெற்றுள்ளோம் என்பது ஆணித்தரமான உண்மை.


பெரும்பாலும் மேற்குறிப்பிட்ட அந்த 50 நாடாளுமன்ற தொகுதிகளில் நாம் போடும் வாக்குகளைப் பொருத்து தான் வெற்றி, தோல்வியே நிரணயமாகும். அதே போல பேராக், பினாங்கு, சிலாங்கூர், கெடா, நெகிரி செம்பிலான் ஆகிய மாகாணங்களில் நாம் ஒட்டு போடாமல் எந்த கட்சியும் எழிதில் ஆட்சி அமைக்க முடியாது.


ஆக உண்மை என்னவென்றால், இந்த நாட்டு அரசியலில் இந்தியர்களுக்கு (குறிப்பாக தமிழர்களுக்கு) உண்மையிலேயே அவர்களின் சிறு எண்ணிக்கையை மீறிய அசாத்திய பலம் ஒன்று உள்ளது. ஆனால், ஒற்றுமை இன்மையினாலும், நம் இன அரசியல் தலைவர்களின் சுயநலப் போக்காலும், நம் இனத்தின் ஒட்டுமொத்த அடி முட்டாள்தனத்தாலும் அந்த பலத்தை நாம் இதுவரை பயன்படுதாமலேயே இருந்து விட்டோம்.


இனிவரும் காலங்களிலாவது நாம் நம் அரசியல் பலத்தை உணர்ந்து நடந்து கொள்வோமா, மாட்டோமா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் இந்த தொடரை வைத்து நான் நம் இன மேம்பாட்டிற்காக எவ்வளவோ சொல்லி விட்டேன், இந்த அரசியல் ஆராய்ச்சியையும் என் சுய புத்திக்கு எட்டிய அளவு முடித்து கொண்டு, நான் சொல்ல வேண்டியவற்றை சொல்லிவிட்டி செல்கிறேன்.


எல்லா கட்சி தலைவர்களும் மலேசியாவில் உள்ள இந்தியர்களின் ஆதரவின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியர்கள் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதையும், இந்தியர்களின் பால் சிறப்பு கவனம் செலுத்தப் பட வேண்டியது அவசியம் என்பதையும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அறிந்தே உள்ளார்கள். ஆனால் மற்ற இனங்கள் சிறிதும் பதட்டப் பட்டுவிடாத வழியில், இந்தியர்களின் பிரச்சனைகள் என்ன என்று கண்டறிந்து, அவற்றை எப்படி கலைவது என்கிற அமுல் திட்ட அளவில்தான் முட்டு கட்டையே உள்ளது என்பது என்னுடைய கருத்து.


ஆக எது எப்படி இருந்தாலும் இனிமேல் இன அளவில் நமது நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்றால், " இந்தியர்களின் பிரச்சனைகளை களைவதில் பக்கத்தான் ராக்யாட், பாரிசான் நேஷனல் ஆகிய கூட்டணிகளில் எந்த கூட்டணி அதிக முனைப்பு காட்டுகிறதோ, அந்த கூட்டணிக்கு தான் இந்தியர்களின் ஓட்டு என்று நாம் இப்பொழுதிலிருந்தே பரை சாற்றிக் கொண்டு வர வேண்டும். இன்றைய அளவில் இதை இன அங்கீகாரத்தோடு செய்யக் கூடிய ஒரே அரசியல் / சமூக அமைப்பு 'ஹிந்திராவ்' மட்டும்தான்.


அவர்கள் அதை முறையாக செய்வார்களா? பாரிசான் நேஷனலின் பலமும் அதிகம், பணமும் அதிகம், அரசியல் அனுபவமும் அதிகம். 'ஹிந்திராவ்' இயக்கத்தில் சம்மந்தப் பட்டவர்களுக்கு சமுதாய உணர்வு என்பது அதிகம் தான். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது. "உணர்ச்சி என்பது வேண்டும்" என்று பாரதி பாடிச் சென்றது போல் ஹிந்திராவ் தலைவர்களுக்கு 'உணர்ச்சி' எனப்து நிறம்பவே உள்ளது. ஆனால் உணர்ச்சி ஒன்றை மட்டுமே வைத்து இங்கு எந்த சமுதாய மாற்றத்தை யாரும் ஏற்படுத்திவிட முடியாது. சம்மந்த பட்டவர்கள் சிந்தித்து செயல் படுவார்கள் என்று நம்புவோம்.



- தொடரும் -

6 comments:

sivanes said...

நீண்ட கால அரசியல் கணிப்பில் இந்து சமயத்தின் பெயரை உபயோகித்து இந்தியர்கள் தாவிக் கொண்டும், கூவிக் கொண்டும் இயங்குவதை இந்த நாட்டில் எந்த மலாய்காரராவது பொருத்து கொள்வாரா என்றால், அதற்கான பதிலும் "நிச்சயமாக இல்லை" என்றுதான் வரும்.

உண்மைதான், தமிழ் தவிர்த்த பிறமொழி வலைப்பதிவுகளில் இதை நாம் இப்பொழுதே பரவலாக காண முடிகிறது! இந்தியர்கள் மேல் அவர்களின் வெறுப்பையும், கடுப்பையும் அதற்கு ஒத்து ஊதும் ஒரு சில இந்தியர்களின் வாதங்களும் அதிகமாகவே தென்படுகின்றன‌!

சாமான்யன் said...

வாருங்கள் சிவனேஸ்,

தாங்கள் கூறுவது உண்மையே. ஹிந்திராவ் பேரணிக்கு பிறகு, மலாய் இனத்தவருக்கு இந்தியர்களின் பால் ஒரு தாழ்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதை நானும் உணருகிறேன்.

என்ன செய்வது. நமது குறைகளை சம்மந்தப் பட்டவர்களிடம் எடுத்து கூறாமலும் இருக்க முடியாது.பேரணியின் மூலம் எடுத்து காண்பித்ததை வேறு விதமாக உறைத்திருந்தாலும், நமது கஷ்டத்தின் ஆழமும், தாக்கமும் யாருக்கும் முறையாக புரிந்திருக்கவும் மாட்டாது.

சரி, நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடந்தவை எல்லாம் நம் நண்மைக்கே என்று நம்புவோம். ஆனால், அதே மாதிரி மற்றொரு பேரணி / சம்பவம் நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையும் கூட.

நான் இந்த தொடரில் எத்தனையோ முறை கூறியிருப்பது போல், நம் இனம் ஒரு புத்தியற்ற இனம். அவர்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டு அவர்களை குதிக்க வைப்பது என்பது மிகச் சுலபமான வேலை. சூடான நிலையில் 'ஏன்? எதற்கு?' என்கிற கேள்விகள் எல்லாம் கேட்டு அவர்களுக்கு பலக்கமே இல்லை.

சாமான்யன்

Tamilvanan said...

//எல்லா கட்சி தலைவர்களும் மலேசியாவில் உள்ள இந்தியர்களின் ஆதரவின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டார்கள்.//
இன்னும் ஓரிரு தேர்தலுக்குத்தான் நாம் துருப்புச் சீட்டாக இருப்போம் என்பது என் கணிப்பு. சபா மற்றும் சரவா மக்களின் தீபகற்ப குடியேற்றம் நமது ஆதரவு தேவையே யில்லை என்ற நிலைக்கு கொண்டு செல்ல வழி உண்டு. இதில் நமக்கு ஆயிரத்தெட்டு கட்சிகள்!! அதை விட கேவலம் எதிரணியில் இந்தியர்களுக்கென்று ஒரு கட்சியும் இல்லை, எல்லா எதிர் கட்சியிலும் ஒட்டுண்ணியாகவே இருக்கிறோம்.

நாம் சிறந்த அரசியல் பயனீட்டாளர்களாக ஆக வேண்டும் என்றால் நம்மை பிரதிநிதித்து இந்த கூட்டணியில் ஒரு கட்சி அந்த கூட்டணியில் ஒரு கட்சி என்று இருந்தாலே போதும்.

// இன்றைய அளவில் இதை இன அங்கீகாரத்தோடு செய்யக் கூடிய ஒரே அரசியல் / சமூக அமைப்பு 'ஹிந்திராவ்' மட்டும்தான்.//

ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை. இன்றைய நிலைமையில்
1) அதன் தலைவர்களின் நடவடிக்கைகள்
2) சீர்படுத்தப்படாத இயக்கமாக இருப்பது (தேசியம்,மாநிலம்,மாவட்ட அளவில்)
3) ஹிந்திராவ் எதை நோக்கி பயனிக்க போகின்றது
4) வெறும் எதிர்கட்சி கூட்டணியின் ஆதரவு இயக்கமா அல்லது எப்பொழுதுமே BN கூட்டணியின் எதிர்ப்பு இயக்கமா

இன்னும் பல கேள்விகளுக்கு முறையான பதில் கிடைக்கவில்லை. ஹிந்திராவ் இவற்றை விரைவில் தெளிவுபடுத்த அல்லது தெரிவுப்படுத்த வில்லை யென்றால் அதன் செல்வாக்கு நம் மக்களிடையே வெகு விரைவில் மங்கி விடும்.

சாமான்யன் said...

வாருங்கள் தமிழ்வாணன்,

தாங்கள் இத் தொடரை ஆரம்பத்தில் இருந்து படித்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

நம் இனத்தை பற்றிய என் நிலைப் பாடு என்னவென்று எத்தனையோ முறை, எவ்வளவோ எடுத்து சொல்லியுள்ளேன். நம் இனத்தில் நாம் என்ன குட்டி கரணம் போட்டாலும், பத்தில் இருவர் தான் மேல் எழும்பி மற்ற இனத்தாருக்கு ஒத்த நிலையில் வாழ்வோம் என்பது தான் என் கருத்து. காரணம் நம்மிடம் இருக்கும் சமாச்சாரம் அவ்வளவுதான்.

தாங்கள் சொல்வது உண்மைதான், நாம் இன்னம் ஒரு 10 - 15 வருடங்களுக்கு மட்டும்தான் ஒரு 'அரசியல் துருப்புச் சீட்டாக' இருப்போம். ஆனால், அதற்கு தாங்கள் கூறும் காரணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சாபா, சரவாக்கில் இருந்து பேரளவு குடியேற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், ஜனத்தொகை அதிகரிப்பில் மலாய்காரர்களுக்கு மற்ற இனங்களைவிட அதிகமாக குழந்தைகள் பிறப்பதால், மொத்த ஜனத்தொகையில் நம் பங்கு இப்போது இருக்கும் 7.7 விழுக்காட்டிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து நம் இனம் கடைசியில் 'லயின், லயின்' கெட்டகரிக்கு தள்ளப் பட்டுவிடுவோம்.

இன்று உள்ள சமூக அமைப்பில் ஹிந்திராவ் இயக்கத்திற்கு ஏதோ பிற அரசியல் கட்சிகளை விட இந்தியர்கள் மத்தியில் சிறிது கூடுதல் வரவேற்பு உள்ளது. ஆனால் அது அடுத்த தேர்தல்வரை தாங்குமா என்றால், 'தாங்குவது கஷ்டம்' என்றே சொல்ல தோன்றுகிறது.

நீங்கள் கூறுவது போல நமக்கு எந்த அரசியல் கட்சியாலும் எந்த பிரயோஜனமும் ஏற்படப் போவது இல்லை என்பது என் கணிப்பு.

இதையெல்லாம் வைத்து தான் 'தனி மனித அளவில் நான் என்னை எப்படி உயர்த்து கொள்வது' என்று மலேசிய தமிழர்கள் தங்களை தாங்களே கேட்டு தங்களை முன்னேற்றிக் கொள்ள அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நான் அடிக்கடி கூறி வருகீறேன்.

இப்படி கூறுவதால் நான் சுயநலவாதி என்று பொருள்படாது. மாறாக, நான் கூறுவதை - "பல கலங்களில் ஓடி வாழ்க்கையின் தன்மையை புரிந்த ஒரு அனுபவசாலியின் அறிவுரை" என்று எடுத்து கொள்ளுங்கள்.

சாமான்யன்

shivkanggai said...

இனவாரியாக பிற்படுத்தப் பட்டதால், பல காலமாக நம் இனத்தாரின் மனங்களில் கொதி நிலையிலேயே இருந்த வந்த வெறுப்பையும், ஆத்திரத்தையும் எந்த வகையிலாவது அரசாங்கத்திற்கு உணர்த்த வேண்டும் என்று பலரும் நினைத்திருந்த வேலையில், ஹிந்திராவ் இயக்கத்தினர் இன அளவில் அதற்கான பெரிய தொரு தளத்தை நமக்கு ஏற்படுத்தி கொடுத்தனர். அதை பயன் படுத்திக் கொண்டு நாமும் நம்மை பிரதிநிதிப்பதாக கூறிக் கொள்ளும் இந்திய கட்சி தலைவர்களுக்கும், தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் 2007 ஆம் ஆண்டு பேரணியின் மூலம் நம் நிலைப் பாட்டை அப்பட்டமாக தெரிவித்தோம். சரி, பிரமாதம்! அட்டகாசம்! அசத்தி விட்டோம்!

ஆனால், இத்தோடு இந்த இன அடிப்படையிலான சாலை மறியல் போராட்டத்தை நிறுத்தி கொள்வோம். காரணம், இந்த இன வாரி சாலை மறியல் போராட்டம் என்பது மகாபாரத்தில் வருகிற கர்ணனின் நாகாஸ்திரம் போன்றது. அதை ஒரே ஒரு முறைதான் பயன் படுத்தப் பட முடியும். அதைத் தாண்டி 2007 சாலை பேரணி மறியலைப் போல் மற்றொரு மறியலில் ஈடுபட நம் இன சமூக / அரசியல் தலைவர்கள் யாராவ்து நினைத்தால் அதைவிட வடிகட்டிய முட்டாள்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.


naan eppadi ninaikireno appadiye solgireergal, nanri

சாமான்யன் said...

வாருங்கள் சிவகங்கை,

தங்கள் பெயரே வித்தியாசமாக இருக்கிறது. ஊர் பெயரை புனைப் பெயராக வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

இந்த தொடரை முடிக்க இன்னும் எனக்கு சில பதிவுகளை எழுத வேண்டி உள்ளது. தொடர்ந்து படித்து வருவீர்கள் என்று நம்புகிறேன்.

Post a Comment