Friday, December 4, 2009

உன்னையே நீ அறிவாய் ! (முடிவுரை) - பாகம் 18

சென்ற பதிவோடு நான் இந்த 'உன்னையே நீ அறிவாய் !' தொடரின் 17 பாகங்களில் மலேசிய தழிர்களை பற்றி 22,553 வார்த்தைகள் எழுதியுள்ளேன். மேலும் எழுதுவதற்கு எனது வியாபாரப் பையின் அடியை தடவினால் என் கைக்கு எதுவுமே அகப்பட வில்லை. விற்பனைக்கு என்று என்னிடம் இருந்த சரக்கு எல்லாவற்றையும் நான் தங்களிடம் விற்றாகி விட்டதால், இத்தோடு இந்த பதிவை முடித்து கொண்டு உங்களிடம் இருந்து விடைபெற்று கொள்கிறேன்.

.

விடைபெறுவத்ற்கு முன்பு நான் கடைசியாக தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவது ஒன்று தான்:-

.

புத்தி. ஆம் புத்தி என்பதை நாம் எப்படி உபயோகிக்கிறோம் என்பதை பொருத்து தான் நம் வாழ்க்கையின் சாராம்சமே இருக்கின்றது. புத்திசாலித்தனமாக செயல்பட்டு, வாழ்க்கையின் வெவ்வேறு சூல்நிலைகளில் எடுக்க வேண்டிய முடிவுகளை திறம்பட எடுத்து, அந்தந்த காலக் கட்டத்தில் செய்ய வேண்டிய காரியங்களை முறையாக செய்து வருவோருக்கு வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள் எல்லாம் பொதுவாக வருவது குறைவு.

.

ஆனால் புத்திசாலித்தனம் என்றால் என்ன? அதன் வெளிப்பாடு எப்படியிருக்கும்? அதை பெருவது எப்படி? ஏன் சிலர் மட்டும் எப்பவும் புத்திசாலித்தனமாக செயல் படுகிறாகள்? ஏன் பலருக்கு அது கடைசி வரை புரியாத புதிராகவே இருந்து விடுகிறது? என்கிற கேள்விகளுக்கு பதில் கண்டு பிடிப்பதுதான் கஷ்டமான வேலை. ஆனால் கேள்விகளுக்கு பொருள்கானும் அந்த வேலையை உங்களுக்காக வேறு யாரும் செய்ய முடியாது. அதை நீங்கள்தான் முட்டி மோதி புரிந்துகொள்ள வேண்டும். தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

.

சரி, தனிப்பட்ட அளவில் இந்த தொடரில் நான் நம் சமூகத்தின் பல குணாதிசயங்களையும், இயல்புகளையும் அப்பட்டமாகவும், அதிரடியாகவும், திமிருடனும் பலவாறு விமர்சித்து எழுதியுள்ளேன். அப்படியெல்லாம் விமர்சித்து விட்டு நான் யார், எனது பின்னனி என்ன என்பதை இங்கு சற்றும் தெரிவிக்காது விடைபெற்றுச் செல்வது என் மனதிற்கே சிறிது கோலைத் தனமாக படுகின்றது.

.

அதே நேரத்தில் நான் யார் என்பதை வெட்ட வெளிச்சமாக திறந்து காண்பித்து தற்போது 'சாமான்யன்' என்கிற அனாமதேய போர்வைக்குள் எனக்கு இருக்கின்ற எழுத்து சுதந்திரத்தை கெடுத்து கொள்ளவும் நான் தயாராக இல்லை. அதனால், நான் யார் என்பதை தெரிவிக்காமல், எனது வாழ்க்கை பின்னனியை மட்டும் உங்களிடம் சுருக்கமாக சொல்லி விட்டு செல்கிறேன்.

.

நான் சிறிது வித்தியாசமான குடும்ப சூழ்நிலையில் பிறந்தவன். என் தகப்பனார் ஒரு சிறு தொழில் வியாபாரியாக இருந்தவர். நன்கு வாழ்ந்தவர். ஆனால், எனக்கு விவரம் தெரியும் வயது வரும் முன்னரே, தொழில் மிக நொடித்து 'அக்கடா' என்று மூலையில் செயலிழந்து உட்கார்ந்து விட்டார். அதனால், நானும் என் தம்பி தங்கையரும் கடின ஏழ்மையில் தான் வளர்ந்தோம்.

.
அதில் பாருங்கள், இந்த நன்றாக வாழ்ந்து அதன் பிறகு ஏழ்மைக்கு வரும் நிலை இருக்கிறதே, அது மேலே ஏறவும் முடியாத, கீழே இறங்கவும் முடியாத ஒரு ரெண்டுங்கெட்டான் நிலை. மிகவும் பரிதாபத்திற்குரிய ஒரு பிழைப்பு. ஏழ்மையின் தாக்கம் எவ்வளவாக இருந்தாலும், இந்த நிலைக்கு உட்பட்டவர்கள் தங்கள் கஸ்ட்டத்தை வெளியில் காண்பித்து கொள்ளாமல், பள்ளைக் கடித்து கொண்டு வாழ்ந்து விடுவர். இதுதான் சிறு வயதில் எனக்கு தெரிந்த வாழ்வு (இப்படி பிஞ்சிலேயே பழுத்ததனால் தானோ என்னவோ என் சிந்தனை எப்போதுமே பிறரைவிட சிறிது கடினமானதாகவே இருந்து வந்துள்ளது).

.

17 வயதிலேயே வேலைக்கு போனவன் என்றாலும் என் சிறு வயது முதலே 'நாம் எப்படியாவது ஒரு தொழில் முனைவர் ஆகிவிட வேண்டும். நம் தலைமுறைக்கு பிறகு நம் குடும்பத்தில் யாரும் விடுபட முடியாத ஏழ்மையில் சிக்கி தவிக்கும் நிலையில் மாட்டி கொண்டுவிட கூடாது" என்கிற குறிக்கோளை என் மனதில் மிக ஆழமாக ஏற்றி கொண்டவனும் கூட.

.

அதனால் ஒரு சாதாரண குமாஸ்தாவாக நான் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே பகுதி நேரமாக ஏதாவது தொழில் முயற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருந்து வந்துள்ளேன். பத்து மலையில் தைப்பூச திருவிளாவின் போது கடை போட்டிருக்கிறேன். கோலாலம்பூரில் இந்தியர் அதிகம் புழங்கும் பகுதியில் ஒரு அறைக்கடையில் அறைக்கடை இடம் பிடித்து கோஸ்டியும் ஜுவல்லரி (கவரிங் நகைகள்) விற்றிருக்கிறேன், ஆள் வைத்து தீபாவளிக்கு பலகாரங்கள் செய்து விநியோகம் செய்திருக்கிறேன்.

.

இப்படியாக என்னென்னவோ சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டு கடைசியாக எனக்கு நன்கு பரிட்ச்சயமான, பல வருட அநுபம் இருந்த ஏற்றுமதி துறையில் இரண்டு முறை ஈடுபட எத்தனித்து அந்த முயற்ச்சிகளிலும் படு தோல்வியுற்றேன். அதன் பிறகு மூன்றாவது முறையாக ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்ட போதுதான் எனக்கு வெற்றி கிட்டியது. 'முறையான வியாபாரம்' என்கிற ஏணியின் முதற்படியில் பலமாக கால் ஊன்றி 'நானும் ஒரு நிலையான தொழில் முனைவர்' என்கிற அந்தஸ்த்திற்கு வந்து சேர்ந்தேன்.

.

ஆனால், நான் இப்படியெல்லாம் முட்டிமோதி, விழுந்து, எழுந்து தொழில் ரீதியாக ஸ்தரம் பெரும் நிலைக்கு வந்து சேர்வற்குள் எனக்கு நாற்பது ஐந்து, நாற்பத்து ஆறு வயது ஆகியிருந்தது. அந்த காலக் கட்டத்தில் (1997 - 1998) தென்கிழக்காசியா முழுவதும் பொருளாதார வீழ்ச்சியுற்றிருந்த நேரத்தில், யாரிடமும் கையில் பணம் இல்லாது இருந்த நேரத்தில் என் கையில் பணம் இருந்தது.

.

அதே கால கட்டத்தில்தான் எங்களது மூன்று பிள்ளைகளும் ஒருவர் பின் ஒருவராக பல்கலைக்கழகம் செல்லும் வயதுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது என்னிடம் இருந்த பணத்தை வைத்து என்னால் அவர்கள் மூவரையும் மிகச் சிறந்த வெளிநாட்டு பட்ட படிப்புக்களை படிக்க வைத்து விட முடியும் என்கிற உண்மை ஒரு புறம். ஆனால், அந்த திட்டத்தை சாதிப்பதற்கு நான் என் வியாபார நடவடிக்கைகளை முற்றாக நிறுத்தி என் நிறுவனத்தை மூடியாக வேண்டும் என்கிற நிர்பந்தம் மற்றொரு புறம்.

.

பிள்ளைகளின் படிப்பையும், எனது வியாபாரத்தையும் ஒருசேர நடத்துவது என்பது சாத்தியமற்ற விஷயமாக எனக்கு தெரிந்தது. என்னிடம் இருந்த பணத்தை என்னால் ஏதாவது ஒரு திட்டத்திற்கு தான் பயன்படுத்த முடியும் என்கிற அடிப்படை உண்மை.

.

17 வயதில் ஆரம்பித்து வியாபாரத்தில் ஸ்தரம்பெற எனக்கு கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகியிருந்ததாலும், நான் தாண்டி வந்த பாதையில் எத்தனையோ சோதனைகளையும் தோல்விகளையும் சந்தித்து வாழ்க்கையின் உண்மை தன்மைகளை நான் நன்கு உணர்ந்திருந்ததாலும் "அடுத்து வியாபாரத்தில் காற்று நமக்கு எதிராக ஒரு முறை வீசினாலும் இப்போது நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் நாம் முற்றாக இழக்கும் நிலை ஏற்பட்டு விடும். பேசாமல் வியாபார ரீதியாக நாம் செய்யும் எல்லாவற்றையும் நிறுத்திக் கொண்டு, பிள்ளைகளை படிக்க வைத்து விடுவோம்" என்று முடிவு செய்து அதன் படி நடவடிக்கைகளை முடிக்கி விட்டேன். நிறுவனத்தை மூடினேன். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு ப்டிக்க அனுப்பினேன்.

.

நான் 10 வ்ருடங்களுக்கு முன்பு துணிந்து எடுத்த அந்த முடிவின் தாக்கம் என்னவென்றால், இன்று என் மகள் ஒரு மருத்துவர். ஐரோப்பாவில் படித்ததால் சிங்கப்பூர் அரசாங்கம் அவரை வேலைக்கு எடுத்து கொண்டுள்ளது. மருத்துவராக அரசாங்க வேலை செய்து கொண்டே சிங்கப்பூரில் முதுநிலை நிபுணத்துவ பட்டத்திற்கு படித்து கொண்டிருக்கிறார். மகன் அஸ்திரேலியாவில் விளம்பர துறையில் பட்ட படிப்பு படித்து, பிறகு இங்கிலாந்தில் முதுநிலை பட்டம் பெற்று திரும்பியுள்ளார். ஜனவரி மாதம் கோலாலம்பூரில் தன் பெயரில் தன் துறையில் சொந்த நிறுவனம் ஒன்றை துவக்க உள்ளார். கடைசி மகள் நியூசிலாந்தில் தற்போது முதுநிலை படிப்பு படித்து கொண்டிருக்கிறார். மார்ச் மாதத்தோடு படிப்பு முடிந்து மலேசியா திரும்பி விடுவார். மூன்று பேர்களுமே தங்கள் பட்ட படிப்புக்களை உலகப் பிரசித்தி பெற்ற பல்கலைகழகங்களில் முடித்தள்ளனர். ஆனால், நான் ஓடிஓடி நிர்மானித்த தொழில் நிறுவனம் இப்போது இல்லை. முற்றாக மூடப்பட்டு விட்டது.

.

எங்கள் மூன்று பிள்ளைகளுக்கும் நாங்கள் சொல்லி வளர்த்து வந்துள்ள போதனை என்னவென்றால் "நீங்கள் தாய் தந்தையரான எங்களுக்கு எதுவும் பெரிதாக செய்ய வேண்டியதில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் காலத்தில், உங்கள் குழந்தைகளை நாங்கள் உங்களை படிக்க வைத்ததைவிட ஒரு இம்மி அளவு அதிகமாக படிக்க வைத்து விடவேண்டும். இது தான் நீங்கள் எங்களுக்கு செய்ய வேண்டிய கடமை" எனப்து மட்டும் தான்.

.

ஒரு தகப்பனாக "நம் பிள்ளைகள் நன்கு படித்தவர்கள். எந்த கூட்டத்திலும், எந்த சூழ்நிலையிலும், எவருக்கும், உலகின் எந்த இனத்தவருக்கும் சலைத்தவர்களாக இருக்க மாட்டார்கள்" என்கிற பெருமிதமான எண்ண ஓட்டம் என் மனதில் இருந்தாலும், "நாம் நினனத்தது போல், நம் காலத்தில், நம் குடும்பம் ஒரு தொழில்துறை குடும்பம் ஆக முடியவில்லையே !" என்கிற ஒரு ஆதங்கமும் என்னுள் ஆழமாக உருத்திக் கொண்டே இருக்கின்றது.

.

பார்ப்போம். எங்கள் பிள்ளைகளாவது அவர்கள் காலத்தில் அவர் அவர் துறைகளில் வெற்றிகரமான தொழில் முனைவர்கள் ஆவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். தங்கள் பாட்டனாரால் முடியாததை, தங்கள் தகப்பனாரால் முடியாததை, அவர்கள் காலத்தில் அவர்கள் சாதிப்பார்கள் என்று நம்புகிறேன். பார்ப்போம்.

..

சென்று வருகிறேன். இது காலம் வரை எனக்கு மதிப்பளித்து என் படைப்புக்களை படித்து வந்த இனைய தோழர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

.

முற்றும்

.

.

.

- சாமான்யன் -

8 comments:

மனோவியம் said...

தங்கள் வாழ்க்கை சரித்திரத்தில் இவ்வளவு துன்பயியல் இருக்கும் என்பது தங்களின் கருத்தோட்டத்தை பார்த்த் பிறகு தான் தெரிந்துக்கொண்டேன்.ஆனாலும் நீங்கள் உதாரணப் பெற்றோராய் இருப்பதில் மகிழ்ச்சி ஐயா.உண்மையில் அடிப்படை தமிழர்கள் எதையும் போராடித்தான் பெறமுடிகிறது.

சாமான்யன் said...

//ஏதோ காரணத்தினாலோ என் ஊடகத்திலேயே என்னால் பின்னூட்ட பதில்களை பிரசுரிக்க முடியாமல் இருக்கிறது. ஒரு வேளை வார்த்தைகள் அதிகமாக உள்ளதால் பிரசுரிக்க முடியவில்லையோ என்னவோ என்று இதை இரண்டு பகுதிகளாக பிரித்து பிரசுரிக்க பார்க்கிறேன்//

வாருங்கள் மனோகரன் கிருஸ்ணன்,

நான் என்னைப் பற்றி இவ்வளவு தகவல்களை யாருக்கும், எதற்காகவும் கொடுத்தது கிடையாது. ஆனால், இங்கு என் வாழ்க்கையின் சாராம்சத்தை சொல்லி விட்டு செல்கிறேன் என்றால் அதற்கு 2 காரணங்கள்:-

ஒன்று, மலேசிய தமிழர்களின் அவல நிலையை அலசி ஆராய்ந்த இந்த ஊடகத்தில் நான் பலவாறு நம் இனத்தை அப்பட்டமாக திட்டித் தீர்த்திருக்கிறேன். அடி முட்டாள்கள் என்று கூப்பிட்டிருக்கிறேன், கேனக் கிறுக்கர்கள் என்று விமர்சித்திருக்கிறேன், ரோஷம் கெட்டவர்கள் என்று முத்திரை குத்தியிருக்கிறேன்.

இதையெல்லாம் படித்த பலர் "இவர் ஏதோ வசதியான பின்னனியில் இருந்து வந்தவர். இவருக்கு அடிமட்ட தமிழனின் பரிதாப நிலையை பற்றி என்ன தெரியும்?" என்று பரவலாக நினைத்திருப்பர்.

"அய்யா, நான் ஒன்றும் வசதி வாய்ப்பான சூழ்நிலையில் இருந்து வந்தவன் அல்ல. சிறு வயதில் கடின ஏழ்மையில் துவண்டு, வயது வந்த பிறகு அடித்து பிடித்து, முட்டி மோதி, கஸ்ட்டப் பட்டு வழிகண்டு, திருமணம் ஆன பிறகு முட்டு மோதல் தொடர்ந்து 8 வருடங்கள் ரயில்வே தண்டவாள விழும்பில் கல்லத்தனமாக கட்ட பட்ட அடிப்படை வசதியற்ற ஒற்றை அரை பலகை வீட்டில் மூன்று குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்தி, தொடர்ந்து விடியலை தேடி ஓடி, எவர் உதவியும் இல்லாது வாழ்வில் வளம்பெற்ற தமிழன் நான்" என்று பலருக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவும்.

சாமான்யன் said...

மனோகரன் கிருஸ்ணன்,


இரண்டு, வாழ்க்கையில் வெல்வதற்கு எல்லாவற்றையும் விட 'ரோஷம்' என்பது மிக, மிக முக்கியம். அது இல்லாமல் யாரும் ஒரு புண்ணாக்கையும் சாதித்து விட முடியாது. முதலில் பிறர் நமக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பே ரோஷம் கெட்ட பிழைப்புதான்.

அதனால் 'முடியாது, முடியாது'
என்று புலம்புகிற தமிழர்களுக்கு எனது நிலை ஒரு உதாரணமாக இருக்கட்டும் என்பதற்காகவும் எழுதப்பட்டதுதான் இந்த பதிவு.

ஆனால் யார் என்ன சொன்னாலும் தனிமனித மாறுதல் என்பது அவ்வளவு எழிதாக நடந்தேறி விடக்கூடிய விஷயம் அல்ல என்பதும் எனக்கு நன்கு தெரியும்.

ஆழ்ந்த சிந்தனை, கடின உழைப்பு, விடாமுயற்ச்சி, ரோஷ உணர்வு எல்லாம் பிறர் சொல்லி வராது. அவை ஆழ்மனதில் இருந்து, சுய புத்தியின் ஊந்தலினாலும், பாரம்பரிய இயல்பின் வெளிப்பாடாகவும் தானாக ஊத்தெடுக்க வேண்டும்.

சீனர்களுக்கு அவை எல்லாம் இயல்பாகவே வந்து விடுகின்றன. நம் இனத்தில் பத்தில் ஒருவருக்கு கூட இந்த உணர்வுகள் எல்லாம் வருவதில்லை. திசை தெரியாது தலையை சொரிந்து கொண்டு நிற்ப்பது ஒன்றுதான் நமக்கு இயல்பாக வருகிறாற் போல் தெரிகிறது.

N.Thirumalai Nambi said...

anbulla ayya ..ungal thodar mudivirkku vanthathu kurithu varuthamey ..yeninum ithu varai kooriyathey silarai thatti yezhupinal athuvey intha thodarin vetriaagum .
nanri ungal vaasagan
n.thirumalai nambi

சாமான்யன் said...

வாருங்கள் திருமலை நம்பி,

எனது தொடர் சிறப்பாக இருந்ததா, இல்லையா என்பதை நானே நிரணயம் செய்ய முடியாது. அப்படி நான் செய்தால் அது அர்த்தமில்லாத வெத்து பிதட்டலாகவும், பீத்தலாகவும் ஆகிவிடும்.

என்னைப் போல் எவரையும் பொருட்படுத்தாது, தான் நினைத்ததை நினைத்தபடி எழுதுகிற படைப்பாளிகளுக்கு பெரும்பாலும் வரவேற்ப்பு கிடைப்பதில்லை. காரணம் அன்றாட வாழ்க்கையின் அப்பட்ட அதிரடி தாக்கத்தில் அகப்பட்டு சிக்கி திண்டாடும் சாதாரண மனிதனுக்கு, முகத்தில் அரைந்தாற்போல் சொல்லப் படும் அறிவுறைகளை கேட்பதற்கு மனதில் தெம்பு இருப்பதில்லை.

அவன் எவ்வளவு அடிமுட்டாளாக இருந்தாலும் "நாளைப் பொழுது நல்ல பொழுதாகுமென்று நம்பிக்கை கொள்வாயடா" என்று தட்டி கொடுத்தால் போல் ஒருவர் கூறுவதை கேட்கத்தான் எவரும் பிரிய படுவார். ஆனால் அப்படியெல்லாம் பேச, எழுத என்னால் முடியாது. "அட முட்டாள் நேற்று உழைத்ததுபோல், இரண்டு மடங்கு கூடுதலாக நாளை நீ உழைக்காவிட்டால், நீ பின் தள்ள பட்டுவிடுவாய்", என்று அப்பட்டமான உண்மைகளை சட்டையை பிடித்து கூறும் இயல்பு உள்ளவன் நான்.

எது எப்படி இருப்பினும், என் எழுத்தை பாராட்டி பின்னூட்டம் எழுதியுள்ள தங்கள் நல் உள்ளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிக்ள்.

Tamilvanan said...

இன‌ம், ச‌ம‌ய‌ம்,ம‌தம் பேத‌ங்க‌ளை க‌ட‌ந்து த‌மிழ் பேசும் அனைவ‌ரும் ஒன்றினைந்து த‌மிழ‌ர் திருநாளை த‌மிழ்ப் புத்தாண்டை வ‌ர‌வேற்றுக் கொண்டாடிடுவோம்.

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Ramesh DGI said...

I would highly appreciate it if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Trending Tamil News | Current News in Tamil | Top Tamil News | Kollywood News

Post a Comment