Sunday, January 11, 2009

உன்னையே நீ அறிவாய் ! (சீனர்களும் இன ஒற்றுமையும்) - பாகம் 3

காலனித்துவ ஆட்சியாளர்களான ஆங்கிலேயர்கள் கூலி வேலை செய்வதற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்று தென்னிந்திய தமிழர்களை தேர்வு செய்து இந்த நாட்டிற்கு கொண்டு வந்தற்கான காரணங்களை ஆராயும்போது, "தமிழர்களிடையே இருந்த இன வேறுபாடுகளும், அதன் காரணமாக அவர்களிடையே இயல்பாக இருந்த ஒற்றுமை இன்மையும், பிரித்தாலும் இயல்புடைய ஆங்கிலேயருக்கு மிகவும் சாதகமாக அமைந்தது" என்று மலாயாவில் ஆரம்ப கால தமிழர்களின் நிலையை ஆராய்ச்சி செய்திருக்கும் ஒரு சமூக ஆய்வுத்துறை பேராசிரியர் கூறுகிறார்.

சமீப காலமாக மலேசிய தமிழர்களிடையே சிறிதளவு இன ஒற்றுமை ஏற்பட்டிருப்பதை நாம் உணர்ந்தாலும், சரித்திர கோணத்தில் இருந்து பார்க்கும்போது அடிப்படையில் நாம் ஒரு ஒற்றுமையற்ற இனமாகத்தான் என்றும் இருந்து வந்திருக்கிறோம்.

அதே சமயம், நம் இனத்திற்கு நேர் மாறாக இங்கு வந்து சேர்ந்த சீனர்களிடம் ஒருமைப்பாடு என்பது மிக, மிக அதிகமாகவே இருந்து வந்துள்ளது. எந்த சூழ்நிலையிலும் - அது விளையாட்டானாலும் சரி, தருமகாரியங்கள் என்றாலும் சரி, தொழில் சார்ந்த விஷயங்கள் ஆனாலும் சரி, பேரிடர்களின்போது வெளிப்படும் தனி மனித சேவைக் குணமானாலும் சரி, தம் சொந்த இனத்தை குறித்த எந்த நிகழ்வென்றாலும் உடனே அரவணைக்க, தோள் கொடுக்க அனைத்து சீனர்களும் ஒன்று திரண்டு விடுகின்றனர்.

பிற சில இனங்களுக்கும் இந்த இயல்பு வெகுவாக பொருந்தும் என்றாலும் சீனர்களிடம் இன ஒற்றுமை என்பது சந்தேகமில்லாமல் சற்று அதிகமாகவே தான் உள்ளது. இதற்கு பல காரணங்களை கூறலாம். ஆனால் அவை அனைத்திற்கும் மூல காரணம் என்ன வென்றால் பிற இனங்களோடு ஒப்பிடுகையில் சீன கலாச்சார, சரித்திர பின்னணியில் மக்களை பிளவு படுத்தகூடிய அடிப்படை அம்சங்கள் மிக மிக குறைவு என்பதுதான.

இனத்தால் சீனர்களில் 95 விழுக்காட்டினர் 'ஹான்' என்று அழைக்க படும் ஒரே இன வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். மொழி என்பதும் அதே போலத்தான். பேச்சளவில் பிரதேசத்திற்கு பிரதேசம் பாசைகள் வித்தியாச பட்டாலும் சீன மக்கள் அனைவரும் எழுதுவது, படிப்பது எல்லாம் 'மாண்டரின்' என்கிற ஒரே மொழியில்தான்.

மற்ற இனங்களைப் போல் மதத்தின் தாக்கமும் சீனர்களிடையே அதிகம் கிடையாது. சிலர் கிருஸ்த்துவம், பொளத்தம், தொளயிசம் என வெவ்வேறு மதங்களை தழுவியிருந்தாலும், பெரும்பாலான சீனர்கள் அன்றாட அடிப்படை வாழ்க்கை நிலையில் எந்த மதத்தையும் தழுவாதவர்களாகத் தான் இருப்பார்கள். அதனால் மதத்தை மையமாக கொண்டு சீனர்களிடம் எந்த பிளவும் ஏற்படுவதில்லை.

ஆக உண்மை என்னவென்றால், வாழ்க்கை தர வித்தியாசங்களை தவிர சீனர்களிடம் வேறு எந்த ஏற்ற தாழ்வுகளையும் ஒருவர் நடைமுறையில் பார்க்க முடியாது என்பதுதான்.

இந்தியர்களைப் போல் அல்லாமல், சீனாவில் தென் துருவத்தின் கடைசியில் உள்ள ஒரு ஆண், நாட்டின் வட துருவத்திலோ, மேற்கு துருவத்திலோ, கிழக்கு துருவத்திலோ உள்ள ஒரு பெண்ணை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம எனும் நிலைதான் என்றும் இருந்து வந்துள்ளது. அதே நிலைப்பாடு தான் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும்.


ஒரு திருமணத்தால் மொழிப் பிரச்சனை, இனப் பிரச்சனை, மத பிரச்சனை என்று எந்த பிரச்சனையும் சீனர்கள் இடையில் நடந்ததாக சரித்திரம் இல்லை.


இதனால்தானோ என்னவோ சீன தாய்தகப்பனமார் தம் வயதுக்கு வந்த பிள்ளைகளின் காதல்களுக்கு என்றுமே தடையாக நிற்பதில்லை. சீன இனத்தில் 95 விழுக்காட்டு திருமணங்கள் காதல் திருமணங்களாகவே தான் இருக்கும்.


சீனப் பிள்ளைகள் 14, 15 வயது முதலேயே ஆண் பெண் இரு சாராரும் ஊரே அறிய காதல் வய பட்டு விடுவதை நாம் யாவரும் கண் கூடாக கண்டிருக்கோம். காரணம் காதல் என்பது சீன கலாச்சாரத்தில் இலகுவாக ஏற்று கொள்ளப்பட வேண்டிய வாழ்க்கை இயல்புகளில் ஒன்றாகத் தான் காலங்காலமாக கருத பட்டு வந்திருக்கிறது.


(காதல் குறித்த அனுகுமுறையில், சீனர்களுக்கு நேர் மாறாக தமிழ் இனம் இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஆம்! மறுபடியும் சாதியம் எனும் சாபம் தான் முன் நிற்கின்றது - "யாரோ, என்ன குலமோ, என்ன ஜாதியோ ?" என்கிற பயம்தான் தமிழ் பெற்றோர்கள் காதல் என்பதற்கு பயந்து நடுங்குவதற்கான அடிப்படை காரணம்).


மனிதருள் பிறப்பால் வேறுபாடுகள் கிடையாது என்பதே சீன கலாச்சாரத்தின் அடிப்படை மனிதநேயக் கூறு. இன்றும் சீனருள் ஒரு கடையின் முதலாளியும் தொழிலாளியும் ஒரே மேஜயில், ஒன்றாக உட்கார்ந்து ஒரே பாத்திரத்தில் வைக்க பட்டிருக்கும் சாப்பாட்டை பகிர்ந்து உண்பதை மலேசியா, சிங்கப்பூர், ஹாங் காங், வியட்னாம், சீனா போன்ற சீனர்கள் வசிக்கும் அத்தனை நாடுகளிலும் பரவலாக நாம் பார்க்கலாம்.

சீனர்களிடம் உள்ள இன ஒற்றுமையையும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் எத்தனையோ உதாரணங்கள் மூலம் என்னால் எடுத்து காட்ட முடியும். ஆனால் அந்த அளவு யோசித்து, சிரமம் எடுத்து எழுதி என்ன ஆக போகிறது ? இஙகு சீரியஸாசான எழுத்துக்களை படிப்பதற்கும் ஆளும் இல்லை, துணிந்து பின்னூட்டம் இடுவதற்கும் யார் மனதிலும் தைரியமும் இல்லை. எதோ உதாரணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கொடுத்து இந்த பாகத்தை முடித்து கொள்கிறேன்.

தென் கிழக்கு ஆசியா முழுவதிலும் சீன காப்பி கடைகள் உள்ளன. இந்த காப்பி கடைகள் பல வற்றில், கடை ஒரு சீனருக்கு சொந்தமானதாக இருக்கும், அல்லது ஒருவர் அக் கடையை மொத்த வாடகைக்கு எடுத்திருப்பார். மொத்த வாடகைக்காரிடம் சில்லரை வாடகையை பேசி கொண்டு, கடையினுல், சுவர்களுக்கு ஓரமாக 3 அடிக்கு x 6 அடியில் அலுமீனியத்தால் செய்ய பட்ட கவுண்டர்களை போட்டு கொண்டு ஒரு 10, 15 சீன அங்காடிகாரர்கள் வெவ்வேறு விதமான சீன பதார்த்தங்களை விற்று கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொருவருக்கும் தனி அடுப்பு, தனி கல்லா, பாத்திரங்கள் வைப்பதற்கு இடம் என்று எல்லாம் அவரவரின் அலுமீனிய கவுண்டருக்குள்ளேயே இருக்கும்.

கடைக்கு நடுவிலும், வெளியிலும் வாடிக்கையாளர்கள் உட்கார்வதற்கு ஏதுவாக மேசை, நாற்காலிகள் போடப் பட்டிருக்கும். மதியத்திலும், இரவு நேரங்களிலும் பார்த்தால் திருவிளா கூட்டம் போல் வாடிக்கையாளர்களின் கூட்டம் இந்த இடங்களில் அலை மோதும். ஒவ்வொரு நாலும் நூற்று கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த கடைகளுக்கு் வந்து உணவு அருந்தி செல்வர். கடையிலுள்ள அத்தனை அங்காடிகாரர்களுக்கும் வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கும்.

இதில் ஆச்சரிய பட வைக்கும் அம்சம் என்ன வென்றால், இத்தனை அமளி துமளியிலும் எந்த இரண்டு அங்காடிகாரர்கள் இடையிலும் எந்த பிரச்சனையும் நிகழாது. அந்த சிறு இடத்திற்குள் அத்தனை அங்காடிகாரர்களும் ஒற்றுமையாக வருடக் கணக்கில் தொழில் செய்து கொண்டிருப்பார்கள்.

இதை மேலோட்டமாக பார்த்தால் இதில் பெரிய ஆச்சரியம் இல்லையே என்று சொல்லத் தோன்றும். ஆனால் நன்றாக யோசித்து பாருங்கள் வாடிக்கையாளர் ஒருவர், அங்காடிகாரர்கள் 15 பேர். வாடிக்கையாளர் நாற்காலியில் உட்கார்ந்த பிறகே என்ன சாப்பிடலாம் என்று யோசித்து முடிவு எடுப்பார். அந்த சிறிது நேரத்தில் வாடிக்கையாளரின் கவனத்தை நம் பக்கம் திருப்ப வேண்டும். ஆனால், அது அப்பட்டமாகவும் தெரிய கூடாது, மற்ற அங்காடிகாரகளுக்கும் இடங் கொடுக்க வேண்டும், குரலை சற்று உயர்த்தினாலும் அநாகரீகமாக போய்விடும், இதற்கு நடுவில் வாடிக்கையாளரின் ஆர்டரைப் பிடிக்க வேண்டும்.

அனுசரித்து போகும் இயல்பு இருந்தால் மட்டுமே இந்த மாதிரியான சூழலில் ஒருவர் குப்பை கொட்ட முடியும். அது சீனர்களிடம் மிக அதிகமாகவே உள்ளது.

நம் இனத்தவரால் இந்த மாதிரி சூழ்நிலையில் வியாபாரம் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? 15 தமிழ் அங்காடிகாரர்கள் ஒரே இடத்தில் வியாபாரம் செய்வதை விட்டுவிடுங்கள், அதெல்லாம் பகல் கனவு. இரண்டு தமிழர்களால் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில சண்டை சச்சரவு இல்லாமல் வியாபாரம் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா ? முடியும் என்று நினைத்தால் பின்னூட்டம் வழி 'முடியும்' என்று சொல்லுங்கள்.

6 comments:

Anonymous said...

பொங்கல் வாழ்த்துக்கள். ஆரம்ப காலம் முதல் நம்மிடையே ஒற்றுமை மிக குறைவு என்பதை காரைக்கிலார் தன் கவிதையில் குறிப்பிட்டுயிருப்பார். ஊர்,ஜாதி,மதம்,உட்ஜாதி பிரிவு,உட்ஜாதியில் உட்ஜாதி பிரிவு என எல்லா காலத்திலும் நாம் பிரிந்தே கிடக்கிறோம். இப்போதோ கட்சி, இயக்கம் என்கிற பெயரில் பிரிந்து கிடக்கிறோம்.

சாமான்யன் said...

மதியழகன்,

தங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.

வந்து, படித்து, பின்னூட்டமும் இட்டதற்கு நன்றி.

நம்மிடம் ஒன்று, இரண்டல்ல ஆயிரம் ஓட்டைகள் இருக்கின்றன. முதலில் நமது நிலை என்ன, இந்த நிலைப் பாட்டை வைத்து கொண்டு நம்மால் எந்த அளவு உயர முடியும். அதையும் தாண்டி எதிர்பார்த்தால், அதற்கு நமக்கு என்னென்ன தகுதிகள், குணாதியங்கள் தேவை, அவற்றை எப்படி பெருவது என்பதுதான் முன்னேற்றத்திற்கான முதல் படி.

ஆனால் இந்த விழிப்புணர்வை பெருவதற்கே மனதில் ஒரு ஒயாத 'தேடுதல்' இயல்பு வேண்டும். ஒரு மண்ணும் இல்லாமல், ஆகாயத்தில் இருந்து தானாக எல்லாம் நம் மடியில் விழும் என்ற நினைப்போடு டீவீயில் சீரியல் பார்த்து கொண்டு இருந்தோமானால், நாம் எப்படி உருப்படுவது. இதுதான் நம் இனத்தின் பிரச்சனை. சுருங்கச் சொன்னால் - 'நமக்கு ரோஷம் பத்தாது'.

சுப.நற்குணன்,மலேசியா. said...

மலேசியத் தமிழ் வலைப்பதிவு அன்பரே,
வணக்கம்! வாழ்க! தமிழ்நலம் சூழ்க!

தொடர்ந்து எழுதுவது என்ற முடிவுக்கு வந்து சூடான சிந்தனைகளைப் பரிமாறும் உங்களுக்கு நன்றி. இவ்வண்ணமே தொடருங்கள். சிக்கல்களை ஆய்வது முகாமையான ஒன்று.. அதற்கான தீர்வுகளைச் சொல்வதும் முக்கியமான மற்றொன்று.

இவ்விரண்டையும் செய்யுங்கள்..!

"குறைசொல்லி குறைசொல்லி தலைமுறை பல கழித்தோம்;
குறை களைந்தோமில்லை" என்பார் புரட்சிக்கவி பாரதிதாசனார்.

இங்கே தங்களுடன் சேர்ந்து நாங்களும் தீர்வுகளைச் சிந்திப்பதற்கு நல்ல களம் அமைத்துக் கொடுத்துள்ளீர்கள்.

மறுமொழி எழுதும் அன்பர்களும் ஆழச் சிந்தித்து சிக்கல்களுக்கான தீர்வுகளைச் சொன்னால் அனைவருக்கும் பயனாக அமையும்.

அடுத்தமுறை, நான் கண்டிப்பாக சில தீர்வுகளோடு வருகிறேன்.

தங்களுக்குப் பொங்கல்,
திருவள்ளுவராண்டு 2040
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தமிழிய விழுமியங்களோடு
தமிழியல் வழியில் வாழ்ந்து
வெற்றிகள் பெறுவோம்.

தங்கள் வலைப்பதிவை என்னுடைய
'திருமன்றில்' திரட்டியில்
இணைத்துள்ளேன்.

http://thirumandril.blogspot.com
பார்க்கவும். நன்றி..!

சாமான்யன் said...

நற்குணன்,

தங்களுக்கு என் பொங்கள் வாழ்த்துக்கள்.

முதல் முறையாக பின்னூட்டம் வழி ஒருவர் (தாங்கள்) குறுக்கு கேள்வி/சிந்தனையை எடுத்துரைத்திருக்கிறீர்கள். மிகுந்த சந்தோஷம்.

பெரும்பாலும் நம் இனத்தில் யாரும் குறுக்கு சிந்தனை எதையும் எதிலும் தினிக்க மாட்டோம். காரணம், 'பாலிசாக' யார் மனதும் புண்படாதபடி நடக்கிறோமாம். வெங்காயம் !!

என்றும், எதிலும் குறுக்கு கேள்வி கேட்கப் பட வேண்டும். எதிரில் நின்று சொல்பவன் ஒன்றும் ஆண்டவன் அல்ல, சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள எனும் சிந்தனை ஒவ்வொரு தமிழர் மனதிலும் எழும்ப வேண்டும். அப்போதுதான் சொல்பவரும் யோசித்த பிறகு சொல்வார். கேட்பவர் மனதிலும் தெளிவு ஏற்படும்.

//"குறைசொல்லி குறைசொல்லி தலைமுறை பல கழித்தோம்; குறை களைந்தோமில்லை"//

நற்குணன் சார், இது மூன்றாம் பாகம்தான். இன்னும் நமது வண்டவாலங்களை அலசும் சில பாகங்கள் உள்ளன. அவற்றை முடித்துக் கொண்ட பிறகு, தாங்கள் கூறும் "சிக்கல்களுக்கான தீர்வுகளுக்கு" அவசியம் வந்து சேர்வேன்.

அப்போது நம் இனப் பிரச்சனைகள் குறித்த இந்த விவாதம் சூடு பிடித்திருந்தால் என் சிந்தனை, தங்கள் சிந்தனை, பிற வலைப் பதிவர்கள் சிந்தனை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி ஒரு 'ரிப்போர்டாக' தயாரித்து எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுமானால் அனுப்பி வைப்போம்.

போகப் போக பார்ப்போம்!!!

Anonymous said...

தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும். வேலைப் பளு அதிகமாக இருந்த காரணத்தினால் எதிலும் முழுமையாக ஈடுபட முடியவில்லை. சரி விஷயதுக்கு வருவோம்.

தங்களுடைய பதிவை படித்தேன். உண்மைகள் அப்பட்டமாக எழுதப்பட்டிருக்கிறது. அண்மைய காலமாக நம்மினதவரிடையே பற்று ஓங்கி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளீகள். உண்மைதான். மகிழ்ச்சி. அதே அண்மைய காலமாக நமக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று இப்பொழுது எத்தனைப் பேர் கிளம்பி விட்டார்கள் தெரியுமா? என்ன நடக்குதுனு தெரியாமல் போயிட்டது. நாளோரு மேனி பொழுதொரு வண்ணமாக அறிக்ககைப் போர் பெருகிக் கொண்டே போய்க் கொண்டே இருக்கின்றது. ஒருகால் இதுதான் ஒற்றுமையின் வெளிப்பாடோ? நம்மில் எத்தனைப் பேர் Wilayah Pembangunan Iskandar பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள்? அங்கு எப்படிப் பட்ட வாய்ப்புகள் இருக்கிறதுனு எத்தனைப் பேருக்கு தெரியும்? நம்மவர்கள் எப்படி போராடி அங்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார்கள்? சரிங்க...அது இருக்கட்டும் நம்ப அறிக்கை வீரர்கள் எத்தனை பேர் நம்மவர்களுக்கு Wilayah Pembangunan Iskandar பற்றி விளக்கி சொல்லியிருப்பார்கள்?

சாமான்யன் said...

திருமூர்த்தி சுப்ரமணியம்,

வந்து, படித்து, பின்னூட்டம் விட்டுச் சென்றதற்கு நன்றி.

//'சமீப காலமாக மலேசிய தமிழர்களிடையே சிறிதளவு இன ஒற்றுமை ஏற்பட்டிருப்பதை நாம் உணர்ந்தாலும்'//

என்று நான் குறிப்பிட்டது - சரியோ தவறோ 10,000 இந்தியர்கள் (பெரும்பாலும் தமிழர்கள்) 2007 நவம்பர் 26ஆம் தேதி தம் பிரச்சனைகளை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டி பல அரசாங்க தடைகளைத் தாண்டி ஒரே இடத்தில் குழுமினரே - அதை.

Wilayah Pembangunan Iskandar பற்றியோ, பிற அரசாங்க திட்டங்களைப் பற்றியோ யாரும் நமக்கு எடுத்து கூறப் போவதில்லை. எல்லா அரசாங்க திட்டங்களும் மலாய்காரர்களின் முன்னேற்றத்திற்காகத் தான் என்பது UMNO வின் நிலைப் பாடு.

அந்த வகையில் நம்மைவிட 3 மடங்கு கூடுதல் ஜனத்தொகையை கொண்ட சீனர்கள்கள், அரசாங்கம் தங்களுக்கு என்ன செய்யும் என்பதை பற்றி எல்லாம் கவலை படுவதில்லை. அவர்களுக்கு தேவைப் படுவதை எப்படி பெருவது, யாரைப் பிடித்து பெருவது, என்ன கொடுத்து பெருவது என்பதை எல்லாம் நன்கு புரிந்தவர்கள்.

இதில் நாம்தான் ரெண்டுங் கெட்டான். அரசாங்க அனுசரனயும் இல்லாது, நடைமுறை வாழ்க்கைக் கான சீனர்களைப் போன்ற விழிப்புணர்ச்சியும் இல்லாது. நடுவில் ஊசலாடும், எல்லோராலும் பிரச்சனை வாதிகள் என்று முத்திறையிட பட்ட ஏழைக் கூட்டம்.

அப்படியே அரசாங்க ஏதோ ஒரு காரணத்திற்காக நமக்கு கோட்டா முறையில் எதுவும் செய்ய வேண்டும் என்று முனைந்தால், நம்மை பிர்திநிதிப்பதாக கூறிக் கொள்ளூம் முதலை கூட்டம் அதை முழுசாக விழுங்கி விடும்.

அதை எல்லாம் தட்டி கேட்க நமக்கு மனத்தில் திராணி இல்லை. அதனால், எல்லாம் எப்போதும்பொல நடந்து வருது.

இவை எல்லாம் மாற்றப் பட வேண்டுமா? முடியும்.... மாற்றலாம். ஆனால், அதற்கு நாங்கள் பெரிய பருப்புக்கள் ஆக்கும் ... புரம் கொண்டு புலியை விரட்டிய தமிழச்சி வம்சம் நாங்கள்... மகன் நெஞ்கில் காயமின்றி மாண்டதை கண்ட தாய், கத்தியால் மார்பை கிழித்து, அதன் பிறகே அவனை சுடலையில் எறிப்போம்... என்கிற கதையெல்லாத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு நடைமுறையில் நம் வீரத்தை காண்பிக்க வேண்டும்.

ஐயா, முதலில் உங்கள் மனதில் இருப்பதை இனையத்தில் திறந்து பேச முற்படுங்கள். முகம் தெரியாத இனையத்தில் கூட எதையும் துணிந்து சொல்ல தைரியம் இல்லையென்றால், நம் இனத்தால் பிறகு என்னத்தை சாதிக்க முடியும் ?

சாமான்யன்

Post a Comment