Wednesday, September 16, 2009

உன்னையே நீ அறிவாய் ! (வல்லவன்+ நல்லவன் = தலைவன்) - பாகம் 15


மலேசிய அரசியல்வாதிகள் அதுவும் மலாய் அரசியல்வாதிகள் பல இன சூழ்நிலைகளில் மேடையேறிப் பேசும் போது பலவற்றும் சொல்வார்கள் "நாங்கள் எல்லோருக்கும் முறையாக, சமமாகத் தான் வாய்ப்புகள் வழங்குகிறோம். இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு தனி இடம் உள்ளது. இந்தியர்கள் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் பற்பல திட்டங்களை தீட்டியுள்ளது. இந்த செழிப்பான நாட்டில் நாம் யாவரும் சகோதரர்கள், சம பங்குதாரர்கள்" என்று ஏதேதோ கூறி விட்டு போவார்கள்.

ஆனால் தரை அளவில் நடந்தேறும் உண்மை நிலை என்ன? அத்தனை அரசாங்க நிர்வாகத் துறைகளிலும் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் மலாய்காரர்களாக உள்ளார்கள். இதனால் அரசாங்கம் சம்மந்தபட்ட அத்தனை நிகழ்வுகளிலும், திட்டங்களிலும், செலவுகளிலும், வாய்ப்புக்களிலும் அம்னோ அரசாங்கத்தின் தாரக மந்திரமான "மலாய்காரர்களின் முன்னேற்றம்" என்கிற ஒற்றை குறிக்கோள் மட்டும்தான் நடைமுறையில் செயலாக்கம் கண்டு வருகிறது.

அது போக மலாய்காரர்கள் தங்களுக்குள்ளே குழுமும் எல்லா இடங்களிலும், கூட்டங்களிலும் "நம் இனத்தின் துரித மேம்பாட்டிற்கான வழிகள் என்ன?", "மலாய்காரர்களின் முன்னுறிமையை எப்படி காலங் காலத்திற்கும் நிலை நாட்டுவது?", "மலாய் இன ஆழுமைக்கு பிறகு தான் பிற எல்லாம்" என்பதை தான் திரும்ப திரும்ப பேசுகிறார்கள், ஆராய்கிறார்கள். அப்படி எந்த மலாய்கார தலைவராவது 'மலாய் இன மேம்பாட்டு குறிக்கோளை' முதன்மையாக தம் பேச்சின் சாராம்சமாக அமைத்து அடித்து, மேசையை குத்தி, உறக்க கூவி அப்பட்டமாக சூழுரைக்காது விட்டால், அவரால் அம்னோவில் தன் கட்சி பதவியை தற்காத்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

இதனால், பிரதமர் பொருப்பில் உள்ள மலாய் தலைவர் வரை "UNTUK BANGSA, AGAMA DAN NEGARA" என்று பல இன, பல மத மக்கள் வாழும் நாட்டில் 'இனத்தையும், மதத்தையும்' முதலில் குறிப்பிட்டு விட்டு, எல்லா குடிமக்களுக்கும் சம உறிமை உள்ள, சம ஈடுபாடு உள்ள, ஒரு மக்களாக ஐக்கியபடக் கூடிய 'நாடு' என்கிற அம்சத்தை கடைசியில் வைத்து தான் தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பின் போதே பேசுகிறார்.


ஹிந்திராவ்

இத்தகைய அரசியல் சூழ்நிலையில், ஒரு அப்பட்டமான் இஸ்லாமிய நாட்டில், ஹிந்திராவ் காரர்கள் 'ஹிந்து ஆக்ஸன் ப்வோர்ஸ்' என்று தங்கள் சமூக அமைப்பிற்கு பிற ஒரு சமயத்தின் பெயரை சூட்டிக் கொண்டது அடி முட்டாள் தனங்களில் எல்லாம் பெரியதொரு முட்டாள்தனம்.

இந்த 'ஹிந்து' எனும் வார்த்தையை அவர்கள் தம் அமைப்பின் பெயரில் சேர்த்த அன்றே நமது ஹிந்திராவ் தலைவர்கள் பாதி தோற்று விட்டனர். அதன் பிறகு, உதயகுமார் / வேதமூர்த்தி இருவரும் என்று தங்கள் சமூக அமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்தார்களோ அன்று ஹிந்திராவ் எனும் இயக்கம் முழுவதுமாக தோற்றுவிட்டது.

'சமுதாய மேம்பாடு' என்பது சில வினாடிகளில் ஓடி முடிக்கும் 100 மீட்டர் விரைவோட்டம் அல்ல. அது வெகு காலத்திற்கு, வெகு தூரத்திற்கு தொடர்ந்து நாம் ஒடிக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு 'தொடர் மராத்தன் ஓட்டம்'.

அதை வெற்றிகரமாக ஓடுவதற்கு நமக்கு சுய தெம்பும், ஆற்றலும் மட்டும் போதாது. அவற்றோடு, மலேசியாவில் உள்ள பிற இன மக்களுடைய நட்புறவும், புரிந்துணர்வும் நமக்கு மிக, மிகத் தேவை. அந்த புரிந்துணர்வை நாம் மற்ற இனத்தவரின் சட்டையை பிடித்து, அடிதடியில் இறங்கி எல்லாம் பெற முடியாது.

அதை நாம் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து, பேசி, பழகி, உணர்த்தி, கருத்தொருமித்து, அதன் பிறகு தான் பெற முடியும். அதற்கு அடிப்படையில் நம் சமூக / அரசியல் இயக்கங்களில் சம்மந்த பட்ட தலைவர்கள் உணர்ச்சி என்பதை ஒதுக்கி வைத்து விட்டு காரியத்தில் குறியாக உள்ள புத்திசாலிகளாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் நம் ஹிந்திராவ் தலைவர்கள் புத்திசாலிகளா?? ஒரே குறிக்கோளுக்காக ஐந்து பேர் ISA சட்டத்தின் கீழ் சிறை சென்றனர். ஆனால், இன்று அவர்களுக்கிடையே மூன்று கட்சிகள் உருவாகியுள்ளன. இது புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடா?

சம்மந்தப் பட்ட ஹிந்திராவ் தலைவர்கள் இப்படியெல்லாம் நிகழ்வுகள் நடக்கும் என்பதை ஆரம்பத்திலேயே அறியவில்லையா? எத்தனையோ பிற இன அரசியல் ஆய்வாளர்கள் இப்படி தான் சம்பவங்கள் ஹிந்திராவில் அடுத்தெடுத்து நடந்தேறும் என்பதை வெகு நாட்களுக்கு முன்பே கூறியிருந்தார்களே! அவர்கள் சிந்தனையில் மட்டும் நாளை நடகக இருப்பவை என்ன என்பது எப்படி முன்கூட்டியே தெரிந்தது?

இனி போகப் போக என்ன நடக்கவிருக்கிறது என்று பாருங்கள். ஹிந்திராவ் தலைவர்களுக்கு தனி மனித அளவில் வேண்டுமானால் எதாவது முன்னேற்றம் ஏற்படலாமே ஒழிய, இந்திய சமுதாயத்திற்கு ஹிந்திராவ் சம்மந்தப் பட்ட கட்சியினரால் இனி எதுவும் ஆகப் போவது கிடையாது என்பது என் கருத்து


தலைவனுக்கு தேவை: தூரநோக்கும் இயல்பு / புத்திசாலித்தனம்

"பத்து படிகளுக்கு முன்னரே பத்தாவது படியில் என்ன நடக்கும் என்பதை துல்லிதமாக கணக்கு போடத் தெரிந்தவன் மட்டும்தான் உண்மையான தலைவன் ஆக முடியும்" என்பது என்னுடைய ஆழமான கருத்தும் கூட. அதுவும் பத்திரிக்கைகளைக் கூட படிக்காமல், அஸ்ட்ரோவில் சீரியலையும், சினிமாவையும் வெட்டியாக பார்த்து கொண்டு வீணாக பொழுதைக் கழிக்கும் நம்மைப் போன்ற ஒரு அடி முட்டாள் இனத்திற்கு தலைவனாக விளைகிறவர், ஆழமாக சிந்திக்க கூடிய, தூர நோக்கு இயல்புடைய அட்டகாசமான சிந்தனைவாதியாகவும், புத்திசாலியாகவும் இருக்க வேண்டும்.

தன் அளவில், தன் கட்சியில், அரசாங்கத்தில், தன் சுய முன்னேற்றத்தில், தன் நிலையை ஸ்தர படுத்திக் கொள்வதில், அவர் ஒரு மிக பெரிய திறமைசாலியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தன் ஒட்டு மொத்த இனத்தையும் விடியலை நோக்கி எப்படி பயணிக்க வைப்பது என்பதற்கான 'தேடலுக்கு' தெளிவான விடைகளையும், வழிவகைகளையும் கோடிட்டு காண்பிக்க கூடிய அறிவாளியாகவும் இருக்க வேண்டும்.

அப்படிபட்ட ஒரு திறமைசாலி நம்மிடையே தலைவராக தோன்றினால் ஒலிய, நம் தமிழ் இனத்திற்க்கு இந்த நாட்டில் விடியல் என்பது நாம் தலைகீழாக நின்றாலும் ஏற்படாது என்பது என்னுடைய ஆழமான கருத்து.

"அப்படியென்றால் ஒரு அதி புத்திசாலி நமக்கு தலைவராக வந்தால்நம் இனத்திற்கு விடிவு காலம் உடனே வந்துவிடுமா?" என்றால், அதுவும் இல்லை! இன்று,இப்போது, உடனே என்கிற அளவில் எந்த சமூகத்திலும், எந்த மாறுதலும் இதுவரை வந்ததும் கிடையாது, இனி வரப்போவதும் கிடையாது.

ஒரு பிற்பட்ட சமூகம் விருத்தி அடையும் நிலைக்கு வரும் முன், அந்த சமூகத்தின் சராசரி மனிதனிடம் சில அடிப்படை மாறுதல்களும், விழிபுணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.

அதனால் எவ்வளவு அபாரமான மனிதர் நம்மிடையே சமூக தலைவராக வந்தாலும் உண்மையான சமூக மாறுதல் என்பது நம் இனத்திடம் வந்து சேர்வதற்கு வெகு காலம் ஆகும். ஆனால், தூர நோக்கு இயல்புடைய ஒரு நல்ல மனிதர் நமக்கு தலைவராக அமைந்தால், நம் இனத்திடம் தொடர்ந்து நடந்து வரும் 'சமூக பின்னடைவு' என்பது அடுத்த ஒரு 10 வருடங்களுக்குள் நிச்சயமாக பேரளவுக்கு தடுத்து நிறுத்தப் படலாம்.

இன முன்னேற்றம் என்பது, நம்மிடையே பரவலாக உள்ள சமூக பின்னடைவு சீர் செய்ய பட்டதன் பிறகு நடைபெற வேண்டிய ஒரு அடுத்த கட்ட நிகழ்வு. அதற்கு, விஷேச யுக்திகள் மூலமாகவும், திட்டங்கள் மூலமாகவும், அரசாங்க வழிப் பயிற்ச்சிகளின் மூலமாகவும் தனி மனித அளவில் நம்மிடையே பல மாற்றங்களை நமக்கு சமூக தலைவராக தேர்ந்தெடுக்க படுபவர் முதலில் ஏற்படுத்த வேண்டும்.

தலைவனுக்கு தேவை: அடிப்படை நேர்மை

மலேசிய சீனர் சங்கத்தில் அறு, ஏழு வருடங்களுக்கு முன்பு 'லிங் லியொங் சிக்' என்று ஒரு கட்சி தலைவர் இருந்தார். அவருக்கு 'துன்' பட்டம் வழங்கப் பட்டு, இப்போது கட்சிக்கு ஆலோசனைகள் வழங்கும் மூத்த தலைவராக இருக்கிறார். அவர் சீனர்கள் இந்த நாட்டில் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பேசும் போது அடிக்கடி ஒரு இரண்டு வரி அறிவுரை ஒன்றை கொடுப்பார்.

அது என்னவென்றால் "நாம் இந்த நாட்டில் ஒரு சிறுபாண்மையினர். சிறுபாண்மையினர், சிறுபாண்மையினரைப் போலத்தான் நடந்து கொள்ள வேண்டும். ஓவராக சவுண்டு விடக் கூடாது" என்பது.

பல வருடங்களுக்கு முன்பு இதே துன் லிங் லியோங் சிக்கிடம் அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த லிம் கிட் சியாங், நாடாளுமன்றத்தில் "நீங்கள் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். மருத்துவராக இருந்து, பிறகு அரசியலுக்கு வந்தீர்கள். ஆனால், 26 வயதில் உங்கள் மகன் பெயரிலும், அவர் சம்மந்த பட்ட வரையிலும், மலேசிய பங்கு சந்தையில் 1,000 மில்லியன் ரிங்கிட்டை தாண்டி பங்குச் சொத்து இருக்கிறதே, அது எப்படி?" என்று கேட்ட கேள்விக்கு, அந்த சீனப் பெருந்தலைவர் கூறிய பதில் "சிறு வயதானாலும் என் மகன் மிக, மிக கெட்டிகாரர். அவர் திறமையை கொண்டு அவன் சம்பாதித்து சேர்த்தது அவ்வளவும்" என்றார்.

அவர் சொன்னது உண்மையா? இல்லையா? என்பதெல்லாம் வேறு விஷயம். சீனர்கள் தம் தலைவர்கள் இந்த மாதிரி கூறும் காரணங்களை ஏற்று கொள்கிறார்களோ, இல்லையோ .... ஆனால், நம் இனத்தில் நம் தலைவர்களில் ஒருவர் இப்படி கூறினால், அதை யாரும் நம்புவார்கள் என்று நினைக்கிறார்களா?

உண்மையில் அந்த சொத்து எப்படி சேர்க்க பட்டிருக்கும் என்பதை சாலை ஓரத்தில் வடை சுட்டு விற்க்கும் பாட்டியுடன் நின்று, பொட்டலம் போட்டு கொடுக்கும் பொக்கை வாய் தாத்தாவை கேட்டாலும் "அட ஏ..ம்..ப்பா ! வக்..*&** ... **%*# ...' என்று கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்த பிறகு, அந்த பணம் எப்படி சம்பாதிக்கப் பட்டிருக்கும் என்பதை விளாவாரியாக விளக்கி சொல்வார்.

இப்படி தன்னிடம் இருக்கும் தனம் தனக்கு எங்கிருந்து வந்தது என்பதை முறையாக விவரித்து கூற இயலாத நிலையில் ஒரு தலைவன் இருந்தால், அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி பருப்பாக இருந்தாலும் இந்த நாட்டு சூழ்நிலையில் அவரால் தன் இனத்திற்கென்று பெரிதாக ஒன்றும் வெட்டி முறிக்க முடியாது.

நன்றாக யோசித்து பாருங்கள். இப்படி பட்டவர் தன் கழுத்தில் தானே ஒரு சுருக்கு கயிற்றை மாட்டி கொண்டு, கயிற்றின் மறு நுனியை பிற இனத்தவரிடம் கொடுக்கும் ஒரு அரை வேக்காட்டு சுயநலவாதி. இப்படி நடந்து கொள்பவர் நாளை எங்கனம் தன் இனத்திற்கு என்று இந்த நாட்டு அரசியல் சூழ்நிலையில் சவுண்டு விடுவார்?

ஏதோ வெளிப் பாவனைக்கு வேண்டுமானால் அவரால் அவ்வப்போது ஏதாவது அறிக்கை விட முடியுமே அல்லாது, தன் இனத்திற்கென்று ஒன்றும் பெரிதாக அவரால் எந்த காலத்திலும் சாதிக்க முடியாது.

நம்ம ஆளு மீசையை முறுககி, கட்ட பொம்மன் வசனம் பேசி "சென்று வருகிறேன். வென்று வருகிறேன்" என்று வீர முழக்கமிட்டு, பிற இன பெருந்தலைவரை காண 'டஸ்ஸ்ஸ்ஸ்' என்று காரில் கிளம்பிச் செல்லுவார். அங்கு போனால் நம்ம ஆளை நன்கு அறிந்த பிற இன பெருந்தலைவர், இவர் வண்டவாளங்களை குறித்த பற்பல 'பைல்களை' கையில் தயாராக வைத்து கொண்டு இருப்பார்.

அப்புறம் என்ன, 'ட்ஸ்ஸ்ஸ்ஸ்' என்று கிளம்பிய நம்ம ஆளுக்கு, பிற இன பெருந்தலைவர் அவர் முன் தூக்கி போட்ட 'பைல்களை' பார்த்த உடன், 'புஸ்ஸ்ஸ்ஸ்' என்று காற்றை புடுங்கி விட்ட நிலை ஏற்பட்டு விடும்.

இருந்தாலும், வெருங்கையை வீசிக் கொண்டு வந்தால், வெளியில் இமேஜ் கெட்டு விடும் என்பதற்காக "நான் பெருந்தலைவரிடம் பேசி விட்டேன். அவரும் ஒப்புக் கொண்டு விட்டார். இப்போதைக்கு நமக்காக உடனே மூன்று மில்லியன் ரிங்கிட் ஒதுக்கி உள்ளார்" என்று ஏதோ பெரும் வெற்றிச் சாதனை புரிந்து விட்டது போல் பாவனை செய்வார்.

நாம் தான் இழிச்சவாய் இனமாயிற்றே! "என்னடா முன்னூறு மில்லியன் பெற்று வருவார் என்று நினைத்திருந்தோம், இவர் மூன்று மில்லியன் என்கிறாரே?" என்றெல்லாம் நமக்கு யோசிக்க தோன்றாது. நம்ம புத்திக்கு "அரசி சீரியல்ல இன்னிக்கு என்ன நடக்கும்?", "இந்த தீபாவளிக்கு RTM ல் என்ன சினிமா படம் போடுவான்?" என்கிற அளவில் தான் புத்தி வேலை செய்யும்.

பிறகு என்ன? நம்ம ஆளுக்கு 'நேக்கா, டேக்கா' கொடுத்த பிற இன பெருந்தலைவர் ஜெயித்தவராவார், மூன்று மில்லியனாவது வாங்கி வந்த நம்ம ஆளும் ஜெயித்தவராவார், தலையில் இடியே விழுந்தாலும் அசராது சீரியல் பார்க்கும் நாமும் ஜெயிக்காவிட்டாலும், தோத்தவர்கள் ஆக மாட்டோம் (கிடைக்கும் என்று நினைத்த ஒன்று கிடைக்காமல் போனால்தானே தோற்றவர்கள் ஆவோம். நாம் தான் எதுவுமே நினைப்பது கிடையாதே). பிறகு யார்தான் தோற்பது என்கிறீர்களா?

வேறு யாரு? தம் முப்பாட்டன்களைப் போலவே, அவர்கள் காலத்தில் அங்கலாய்த்து தட்டு தடுமாறப் போகிற நம் இனத்தின் வருங்காலத் தலைமுறைதான் தோற்பவர்கள்!

இப்போது சொல்லுங்கள், தன்னிடம் உள்ள பணத்திற்கு முறையாக கணக்கு சொல்ல முடியாதவர்களை எல்லாம் நாம் தலைவராக ஏற்று கொள்ள முடியுமா? ஏற்றுக் கொள்ளலாமா?




Friday, September 11, 2009

உன்னையே நீ அறிவாய் ! ('தேடலை' தொலைத்த சாதியம்) - பாகம் 14


தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் பொருள் இருக்கும்

சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும், அடிப்படை வாழ்க்கை அனுகுமுறையில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. சீனர்கள் தங்கள் வாழ்க்கை தம் கையில் தான் உள்ளது, தம் மேம்பாடு தம் சுய உழைப்பை பொருத்தது என்று ஆணித்தரமாக நம்புபவர்கள்.

ஆனால், தமிழர்களோ 'விதியைப் பொருத்து தான் வாழ்க்கை' என்ற ஆழமான எண்ணத்தை உடையவர்கள். இப்படி தமிழர்களிடையே பிற்போக்காக எண்ண ஓட்டம் அமைந்ததற்கு இரண்டு முக்கிய சரித்திர பூர்வ காரணங்கள் உள்ளன.

ஒன்று - காலங்காலமாக தமிழர்களிடையே மத வழிபாட்டின் வழி ஆழமாக வேர் ஊன்றிவிட்ட "எல்லாம் அவன் செயல்" என்று எடுத்தற்கெல்லாம் ஆண்டவனை / விதியை சுட்டி காட்டும் அடிப்படை சமய இயல்பு.

இரண்டு - பண்டைய கால இந்திய சமூகவியலில் ஒவ்வொரு மனிதனுக்கும் "இது, இது தான் உன் பொருப்பு. இது, இதைச் சுற்றித் தான் உன் நிலைப்பாடு, வாழ்க்கை எல்லாம் உள்ளது. இதைத் தாண்டி உனக்கு பிற எந்த சமூக ஈடுபாடும் கிடையாது" என்று சாதியத்தை வைத்து வரையருக்கப் பட்ட சமூக நிலை.

ஒரு சலவைத் தொழிலாளியின் மகன் சலவைத் தொழில் மட்டுமே செய்ய முடியும். ஒரு குயவன் மகன் குயவனாக மட்டுமே இருக்க முடியும், ஒரு சிகை அலங்காரரின் மகன் அதே குலத் தொழிலைத் தான் தொடர முடியும், ஒரு போர் வீரனின் மகனும் போர் வீரனாக தான் இருக்க வேண்டும் என்கிற சமூக நிலைப்பாடு ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்மிடையே இருந்ததால், நம் பாட்டன் பூட்டன்களில் பெரும்பாலோர் வாழ்க்கையில் எந்த 'தேடலும்' இல்லாமலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மடிந்து விட்டிருந்தனர்.

தன் நிலையை உயர்த்தி கொள்வதற்கான, அல்லது மாற்றிக் கொள்வதற்கான அடிப்படை 'வாய்ப்பு' என்பது ஒன்று இருப்பதாக ஒருவன் தன் அளவில் உணர்ந்தால் தானே, தன்னை மேம்படுத்தி கொள்ள வேண்டும் எனும் 'தேடல் உணர்வு அவன் மனதில் எழும்பும் !! அப்படி ஒரு வாய்ப்பே இல்லா பட்ச்சத்தில், அவன் என்னத்தை 'தேடி' என்ன ஆக போகிறது !!!

"
என்னய்யா உளறுகிறீர்கள், நீங்கள் கூறும் இந்த நிலை சில நூறு வருடங்களுக்கு முன்பே நம் இனத்தவரிடையே மாறிவிட்டது. இன்றைய நிலையில் சீனர்களைப் போல் தமிழர்கள் இடையேயும் 'தேடல்' என்பது பேரளவில் இருந்து கொண்டு தான் இருக்கிறது" என்று கூறுகிறீர்களா? பொடலங்காய் !!! நம்மில் பாதி பேருக்கு மேல் 'தேடல்'' என்பதற்கான அர்த்தம் கூட தெரியாதவர்கள் தான்.

(
இதை தங்களுக்கு தெளிவு படுத்த கீழே சில பாராக்கள் தாண்டி பத்திரிக்கை படித்தல் குறித்தும், அஸ்ட்ரோ பார்த்தல் குறித்தும் சில குறிப்புகளை கொடுத்துள்ளேன். அவற்றை படித்து விட்டு சீனர்களுக்கு ஒப்ப தமிழர்களிடம் 'தேடல்' எனும் இயல்பு பரவலாக உள்ளதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.)

என் சீன நண்பர்களோடு நான் சந்தித்து அலாவும் போதெல்லாம், அவர்கள் சிந்தனையில், பேச்சில் தங்கள் நிலையை மேம்படுத்தி கொள்ளூம் பொருட்டு, ஒரு 'தேடுதல்' கோடு எப்பவும் ஓடிக் கொண்டே இருக்கும். "புதிதாக ஒரு சாப்பிங் மால் வந்திருக்கிறதே பார்த்தாயா? அங்கு மூன்றாவது மாடியில் ஒரு உணவருந்தும் பகுதி திறக்க உள்ளார்கள். அதில் ஒரு ஸ்டாலின் வாடகை மூவாயிரமாம், அங்கு ஒரு பீசா ஸ்டாலைத் திறந்தால் லாபகரமாக ஓடும் என்று நினைக்கிறாயா?", "நான் வசிக்கும் இடத்தில், தங்கள் உடல் எடையை குறைக்க விரும்பும் சிலர் தினமும் காலை ஏழு மணிக்கு குழுமி ஒன்றாக உடற்பயிற்சி செய்கிறார்கள். நானும் அதில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நீயும் வருகிறாயா?", "எனக்கு கணினியில் பவர்பாயிண்ட் எப்படி உபயோகிப்பது என்று தெரியவில்லை. உனக்குதான் அது நன்றாக தெரியுமே, ஒரு இரண்டு மணி நேரம் ஒதுக்கி எனக்கு அதை சொல்லித் தருகிறாயா?", இப்படித்தான் சீனர்கள் ஒன்றாக குழுமும் போது தங்களுக்குள்ளே பேசிக் கொள்வார்கள்.

தமிழர்கள் ஒன்றாக குழுமும் போது குடும்ப விஷயங்களை பேசுவோம், அரசியலைப் பேசுவோம், சினிமாவைப் பற்றி பேசுவோம், கோவில் திருவிழாக்களைப் பற்றி பேசுவோம், அவன் இதைச் சொன்னான் இவன் அதைச் சொன்னான் என்று பேசுவோம். அனால், நாம் பேசும் எந்த பேச்சிலும் சீனர்களைப் போன்று மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான 'தேடல்' என்பது பெரும்பாலும் இருக்காது.

வாயளவில் நாம் "நம் வாழ்க்கை நம் கையில்" என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டாலும், அந்த கூற்றை நாம் ஆணித்தரமாக நம் மனதில் ஏற்றிக் கொள்வதில்லை. காரணம், காலங்காலமாக நாம் மதியை விட விதியைத் தான் அதிகம் நம்பி வந்துள்ளோம்.

சரி, இனி நான் மேற்கூறிய பத்திரிக்கை / அஸ்ட்ரோ குறிப்புக்களுக்கு வருவோம். இந்த நாட்டு ஜனத்தொகையில் இந்தியர்கள் 7.4 விழுக்காடு இருக்கிறோம். அதில் தமிழர்களின் விகிதாச்சாரம் ஒரு 6.0 விழுக்காடு இருக்கும். இதே போல் மொத்த ஜனத்தொகையில் சீனர்கள் 23.5 விழுக்காடும், பூமிபுத்ராக்கள் 65 விழுக்காடும் இருக்கிறார்கள். சரியா !!


தேடல் என்பதன் பொருள்

சரி, இப்போது 'தேடல்' என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
தேடல் என்பதை 'அறிய அல்லது, அடைய முயற்ச்சித்தல்' என்று கூறலாம். ஒரு மனிதன் எந்த ஒரு துறையிலும் தனது இன்றைய நிலையை மாற்றிக் கொள்ள விரும்பினால், விளைந்தால், அதற்காக அவன் எடுக்க கூடிய முதல் முயற்ச்சி அவன் விரும்பும் மாற்றத்தை எங்கனம் செயல் படுத்தலாம் என்று அறிந்து கொள்வதற்காக அவன் உள்ளும் புறமும் கேட்கும் கேள்விகளும், எடுக்கும் முயற்ச்சிகளும் தான். அதை தான் நான் 'தேடல்' என்று பொருள் கொள்கிறேன்.

சரி, நாம் இளகுவில் அடையாளம் கண்டுகொள்வதற்கு இந்த 'தேடல்' என்பதற்கு எதுவும் குறியீடு உள்ளதா? அதன் முக வெளிப்பாடு எப்படி இருக்கும்? ஒரு சமூகம் 'தேடல்' என்பதன் தன்மையில் ஆலமாக ஈடுபட்டிருக்கிறது என்பதை நாம் எங்கனம் அடையாளம் கண்டு கொள்வது? என்பன போன்ற கேள்விகளுக்கு என் பதில் இதுதான்.


பத்திரிக்கை, இணையம், தொலைக்காட்சி ஆகியவையும் 'தேடலும்'

ஒரு சமூகம் பத்திரிக்கை படிப்பதில், சஞ்சிகைகள் படிப்பதில், இணையத்தை உபயோகிப்பதில் எவ்வளவு சிறத்தை காண்பிக்கிறார்கள் என்பதை பொருத்து அவர்கள் மனதில் 'தேடல்' என்பதற்கு எவ்வளவு முன்னுறிமை கொடுக்கிறார்கள் என்று கண்டு பிடித்து விடலாம். காரணம் 'தகவல் சேகரித்தல்' தான் தேடல் என்பதற்கான முதற் கட்ட நடவடிக்கையே.

அந்த வகையில் நம் இனத்தவரிடம் உள்ள பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை முதலில் பார்ப்போம். மலேசியாவில் வெவ்வேறு மொழி தினப் பத்திரிக்கைகளின் விற்பனை நிலையை சிறிது ஆராய்ந்தாலேயே, மற்ற இனங்களோடு ஒப்பிடும் போது தமிழர்களின் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் என்ன என்பது தெள்ளத் தெளிவாகி விடும்.

அரசாங்க கணக்கீடுகளின் படி மலேசியாவில் நாள் ஒன்றுக்கு எத்தனை தமிழ் பத்திரிக்கைகள் விற்பனை ஆகின்றன என்று நினைக்கிறீர்கள்? வெறும் 28,000 ல் இருந்து 33,000 பிரதிகள் தான் நமது மூன்று தமிழ் தினப் பத்திரிக்கைகளுக்கும் ஆன மொத்த அன்றாட விற்பனை.

அதே நேரத்தில் நம்மை விட நான்கு மடங்கு ஜனத்தொகையை மட்டுமே கூடுதலாக கொண்ட சீனர்கள் மத்தியில் 760,000 சீன மொழிப் பத்திரிக்கைகள் சராசரியாக அன்றாடம் விற்பனை ஆகின்றன. ஆங்கிலம், மலாய் மொழிப் பத்திரிக்கைகள் சராசரி 1,200,000 பிரதிகளுக்கு குறையாமல் விற்பனை ஆகின்றன.

இதன் அர்த்தம் என்ன? தழிழர்களில் பலர் ஆங்கில, மலாய் மொழி பத்திரிக்கைகளைப் படிக்கிறார்கள், அதனால் தமிழ் பத்திரிக்கைகள் குறைவாக விற்பனை ஆகின்றன என்று பொருள் கொள்ளலாமா ?

ஹா..ஹா..ஹா..ஹா !! அதெல்லாம் ஒரு டுபுக்கும் கிடையாது. தமிழர்களில் ஒரு 10 விழுக்காட்டினரும், சீனர்களில் ஒரு 20 விழுக்காட்டினரும் ஆங்கில / மலாய் பத்திரிக்கை படிப்பவர்களாக இருப்பார்கள். அவ்வளவுதான். உண்மை என்ன வென்றால், நம் தமிழ் மக்களில் முக்கால் வாசிக்கும் மேல் பட்டவர்களுக்கு பத்திரிக்கை படிக்கும் பழக்கமே கிடையாது.

சரி இனி இணையத்தை நம் மக்கள் எத்தனை பேர் உபயோகிப்பார்கள் என்பதை பார்ப்போம் - அரசாங்க கணக்கீட்டின் படி மலேசியாவில் சராசரி நான்கு குடும்பங்களுள் ஒரு குடும்பம் இணைய தொடர்பு உள்ளவர்களாக உள்ளார்கள். இதில் தமிழ் குடும்பங்களின் இணைய பயனீடு எத்தனை விழுக்காடு என்பது எங்குமே துள்ளிதமாக தெரிவிக்க பட்வில்லை. ஆனால், என் சுய சிந்தனைப் படி தமிழர்களில் பத்து குடும்பங்களுள் ஒரு குடும்பத்தில் மட்டும் தான் இணைய தொடர்பு இருக்கும் என்பது என் கணிப்பு.

ஆக இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள கூடியது என்னவென்றால், மலேசியாவில் உள்ள நம் மறத் தமிழர்கள் அவர்களின் முப்பாட்டன்களைப் போல் இன்னமும் 'தேடல்' எனும் இயல்பு குறைந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

'
இவன் என்னடா நம் இனத்தை குறை சொல்லிக் கொண்டே இருக்கிறான்' - "குறைசொல்லி குறைசொல்லி தலைமுறை பல கழித்தோம்; குறை களைந்தோமில்லை" என்று பாரதிதாசன் பாட்டை யாரும் பின்னூட்டமாக கொடுத்து எனக்கு நினைவுறுத்தும் முன், நம் இனத்தின் அடிப்படை தன்மையை தாங்கள் முறையாக புரிந்து கொள்வதற்கு உகந்தவாறு மற்றுமொரு முக்கிய விஷயத்தை தங்கள் முன் உதாரணமாக வைக்கிறேன்.

அதையும் படித்து விட்டு 'நாம் யார்? நமது தன்மை என்ன? நாம் எவ்வளவு பின்னடைவில் இருக்கிறோம், இன்றைய உலகில் பிறருக்கு ஈடுகொடுத்து வாழ்வதற்கு நாம் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? அங்கு நாம் செல்ல முடியாது நம்மை தடுப்பது மற்றவர்களா? விதியா? நம் சோம்பேரித்தனமா? அலட்ச்சியமா? அல்லது வெற்றிக்கான அம்சங்கள் நம்மிடைய குறைவாக உள்ளனவா? அப்படியானால் அவற்றை நாம் பெருவது எப்படி? என்று யோசித்து பாருங்கள். அதன் பிறகு நான் இதுவரை கூறி வந்தவை சரியா, தவராக என்பதை கூறுங்கள். ஓ. கே. ..யா ?!

நம் மக்கள் பத்திரிக்கை படிக்காதவர்களாகவும், இணையத்தை பயன் படுத்தாதவர்களாகவும் இருந்தாலும், விகிதாச்சாரப் படி மலேசிய இனங்களுள் 'அஸ்ட்ரோ' தொடர்பு வைத்துள்ளவர்களில் நாம் தான் 'நம்பர் ஒன்'.

சென்ற வருடம் அஸ்ட்ரோ தலைமை அதிகாரி ஸ்டார் பத்திரிக்கைக்கு கொடுத்த நேர்காணலின் படி மலேசியாவில் உள்ள மலாய் இல்லங்களுள் 37 விழுக்காட்டினரும், சீன இல்லங்களுள் 48 விழுக்காட்டினரும், இந்திய இல்லங்களுள் 68 விழுக்காட்டினரும் அஸ்ட்ரோ சந்தாதாரர்களாக இருக்கிறார்கள்.

இதன் அர்த்தம் என்ன? நம் முப்பாட்டன்கள் காலத்தில் கோவில் திருவிளாக்களை ஒட்டி நம் கேளிக்கைகளுக்காக நடத்தப் பட்ட 'கூத்துக்களையும்', நாட்டியங்களையும், கச்சேரிகளையும் பார்த்து கொண்டு காலத்தை கடத்தினோம், அதன் பிறகு நம் பாட்டன்கள் காலத்தில் எஸ்டேட் நிர்வாகம் நமக்காக திரையில் போட்டு காட்டிய சினிமா படங்களையும், திருவிளாக்களின் போது நடந்த புலி ஆட்டம், மயில் ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றை பார்த்து பொழுதை கடத்தினோம், இப்போது நம் காலத்தில் சாவகாசமாக சோபாவில் உட்கார்ந்தவாரே அஸ்ட்ரோவில் சீரியல்களையும், சினிமாவையும் பார்த்து கொண்டு காலத்தை கடத்துகிறோம். நம் பேரன் பேத்தி காலத்தில் அவர்கள் எப்படி காலத்தை கடத்த இருக்கிறார்களோ?! ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.


ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், இன்றைய மலேசிய சீனர்களின் பேரன், பேத்திகள் இப்போதுள்ள தலைமுறையை விட தங்களை முன்னேற்றி கொள்ளும் பொருட்டு 'தேடல்' என்பதில் இன்னும் ஆக்ககரமாக ஈடுபடுவார்கள் என்பதை மட்டும் அடித்து சொல்லலாம். காரணம், அவர்களின் வம்ச இயல்பு அப்படி.

தன்னை தலைவன் என்று கூறி கொள்பவன் எல்லோரும் தலைவனா ?

நாம் எவ்வளவு குட்டிகரணம் அடித்தாலும் 'ஒட்டுர மண் தான் நம் மீது ஒட்டும்'. நம்மில் பலரிடம் என்ன சொன்னாலும் விழுப்புணர்ச்சி ஏற்பட்டு அவர்களிடம் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. சிலருக்கு யாரும் எதுவும் சொல்லத் தேவையில்லை. உலக நடைமுறையைப் பார்த்து, பார்த்து தாங்களாகவே தங்களை மாற்றிக் கொண்டு, வாழ்க்கையில் பீடு நடை போடுவதற்கு வழிமுறைகளை கண்டு பிடித்து விடுவார்கள்.

சரி, இனி இன்றைய மலேசிய அரசியல் சூழ்நிலையில் எங்கனம் ஒரு தலைவனை நாம் தேர்ந்தெடுப்பது என்பதை பார்ப்போம்.
இதுவரை இந்த நாட்டில் நமக்கு ஏற்பட்ட அரசியல் அனுபவம் என்ன? ம.இ.கா. எனும் ஒரு கட்சி, ஐ.பீ.எப். எனும் ஒரு கட்சி, கிராக்கான் எனும் ஒரு கட்சி, பி.பி.பி. எனும் ஒரு கட்சி, பீ.கே.ஆர். எனும் ஒரு கட்சி, டி.ஏ.பீ. எனும் ஒரு கட்சி, அது போக முத்துகருப்பன் ஆரம்பித்த கட்சி, பிறகு இந்திராவ் காரர்கள் ஆரம்பித்த மூன்று கட்சிகள்.

ஏன்ய்யா, ஜனத்தொகையில் வெறும் 7.4 விழுக்காடு இருக்கும் இந்தியர்களுக்கு எத்தனை கட்சிகள் அய்யா !! சரி, இத்தனை கட்சிகளும் நமக்காக என்ன வெட்டி முறித்தார்கள்? இது வரையிலும் ஒரு மண்ணும் இல்லை. இனியும் ஒரு மண்ணும் முறிக்கப் போவதும் இல்லை. ஏன் இப்படி கூறுகிறேன் என்று கேட்கிறீர்களா?

அரசியல்வாதிகள் நமக்கு முறையாக எதுவும் செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு நம் மீது சிறிது பயம் இருக்க வேண்டும். அப்படி பிறர் மனதில் பயத்தை ஏற்படுத்துவதற்கு நாம் முதலில் ஒரு புத்திசாலி இனமாகவும், கருத்து ஒருமித்த ஒரு இனமாகவும் இருக்க வேண்டும். நாம் புத்திசாலிகளா? ஒருமித்தவர்களா? ஏன்ய்யா !!!!

மலையாளிகளைக் கண்டால் தமிழர்களுக்கு ஆகாது, தமிழர்களைக் கண்டால் யாழ்பாணத்தார்களுக்கு ஆகாது, யாழ்பாணத்தாரை கண்டால் தெலுங்கர்களுக்கு ஆகாது, இவர்கள் யாருக்கும் வட இந்தியர்களுக்கு ஆகாது, வட இந்தியர்களுக்கு இவர்கள் யாரையுமே ஆகாது. இந்திய முஸ்லீம்கள் நாங்கள் இந்தியர்களே இல்லை என்கிறார்கள். இதற்கு நடுவில் உலகில் வேறு எந்த இனத்திடமும் இல்லாத சாதியம் எனும் ஒரு சாபம் ஒவ்வொரு இந்தியர் முதுகிலும் வாழ்நாள் குத்தகை எடுத்து, ட்டெண்டு போட்டு உட்கார்ந்து இருக்கிறது.

அம்னோவைப் பொருத்தவரை, இன்னும் ஒரு பத்து இந்தியக் கட்சிகள் ஆரம்பிக்க பட்டாலும் நல்லது தான். கட்சிக்கு 3 - 4 விழுக்காடு ஒட்டுக்களை வாங்கி கொண்டார்களேயானால், இந்தியர்களின் ஒட்டுக்கள் ஒரு மண்ணுக்கும் ஆகாமல் போய்விடும் அல்லவா !!


Saturday, June 27, 2009

உன்னையே நீ அறிவாய் ! (சுருங்கி வரும் ஜனத்தொகை) - பாகம் 13

மலாய் இனத்தையும் இஸ்லாமிய மதத்தையும் பெரும்பாண்மையாக கொண்ட மலேசிய நாட்டில், இந்தியாவில் இருந்து வந்த நாம் வேறொரு இனத்தையும், பிற மதங்களையும் சார்ந்தவர்கள். ஜனத்தொகையில் நமது தற்போதைய 7.7 விழுக்காடு என்பது 13 மலேசியர்களில் ஒரு இந்தியர் என்கிற கணக்கு.


ஜனத்தொகை கணக்கெடுப்பு கூறும் உண்மைகள்


நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஜனத்தொகையில் 12.0 விழுக்காடாக இருந்த நாம், மேல்நிலை இந்தியர்கள் பேரளவுக்கு மலேசியாவில் இருந்து பிற நாடுகளுக்கு புலம் பெயர்ந்ததாலும், அண்டை நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறி எப்படியோ மலேசிய குடியுறிமை பெற்ற லட்ச்சக் கணக்கான இந்தோனீசிய, பிலிப்பீன்ஸ் நாட்டு இஸ்லாமியர்களின் வருகையினாலும், மலாய் இனத்தவரின் கூடுதல் ஜனத்தொகை பெருக்கத்தினாலும் மலேசியாவின் மொத்த ஜனத்தொகையில் இன்று வெறும் 7.7 விழுக்காட்டாக குறைந்துள்ளோம்.

சரி, மலேசியாவில் இந்தியர்களின் இந்த ஜனப்பெருக்க சரிவு இதோடு நிற்க்குமா என்றால், நிற்க்காது. ஜனத்தொகை கணக்கீடுகளின் படி இன்னும் 11 ஆண்டுகளில், அதாவது 2020 ஆம் ஆண்டு ஜனத்தொகை கணக்கெடுப்பின் போது மலேசியாவின் மொத்த ஜனத்தொகையில் இந்தியர்கள் வெறும் 6.4 விழுக்காடு மட்டுமே இருப்போம் (மலேசியாவில் பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஜனத்தொகை கணக்கெடுப்பு நடத்த படுகின்றது) .

இந்த ஜனத்தொகை கணக்கெடுப்பின் தொடர் நிலையை ஆராய்ந்து பார்த்தால், 2050 ஆம ஆண்டு வாக்கில் மலேசியாவின் மொத்த ஜனத்தொகையில் இந்தியர்கள் வெறும் 3.6 விழுக்காடு மட்டும் தான் இருப்பார்கள் (28 மலேசியர்களில் ஒரு இந்தியர் என்கிற நிலைப்பாட்டில்).

அன்றய நிலையில் இந்த நாட்டு அரசியலில் இந்தியர்களுக்கு இன்று உள்ளதுபோல் மலேசிய மந்திரி சபையில் பிரத்தியேக பிரதினித்துவம் எதுவும் இருக்காது என்பது என்னுடைய கணிப்பு. மிஞ்சிப் போனால் நம் இனத்திற்கென்று ஒரு துணை அமைச்சர் பதவி கொடுக்கப் பட்டிருக்கும். எல்லா அன்றாட நிலைகளிலும் இன்று உள்ள 'இந்தியர்கள்' எனும் தனி வகுப்பீடு போய், 'லயின் லயின்' எனும் கெட்டகரியில் கடாசான், இபான், மூருட் போன்ற பிற இனங்களோடு இந்தியர்களும் சேர்க்கப் பட்டிருப்பார்கள்.

ஆக இந்த நாட்டில் தமிழர்களின் வருங்காலத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய அதி முக்கிய உண்மை என்னவென்றால், இன அளவில் நாம் என்ன குட்டி கரணம் அடித்தாலும் மலேசியாவில் இன்று நமக்கு இருக்கும் ஏதோ ஓரளவு அரசியல் பலம் அடுத்த ஒரு 20 வருடங்களுக்கு மட்டும்தான் நிலைத்திருக்கும் என்பதை.

அதற்கு பிறகு மலேசிய அரசாங்கமோ, மலாய் இனமோ நம்மை ஒரு பொருட்டாக மதித்து நடத்த வேண்டிய நிர்பந்தமே இருக்காது. ஓட்டுறிமை எண்ணிக்கையில் நமக்கு இருக்கும் பலம் சிறிது, சிறிதாக கரைந்து மொத்தமாக சரிவு கண்ட நிலையில், மலாய்காரர்கள் நம்மை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது ?

இந்த உண்மையை புரிந்து கொள்ளாது, 'காற்று உள்ள போதை தூற்றிக் கொள்ளாது', நம் நிலையை மேம்படுத்தி கொள்வதற்கு தேவையான எந்த தனி மனித முயற்ச்சியும் செய்யாது, நமது பெண்கள் அஸ்ட்ரோவில் நாள் ஒன்றுக்கு பத்து பதினைந்து சீரியல்களைப் பார்த்து கொண்டு, நமது பிள்ளைகள் பள்ளீயில் படிப்பை கோட்டை விட்டு விட்டு, நமது வாழிபர்கள் வேலை இடத்தில் எந்த துறையிலும் எந்த உருப்படியான நிபுணத்துவமும் பெறாது காலத்தை வீணடித்து, சமுதாய அளவில் நாம் அர்த்தமுள்ள பிற இன தொடர்புகள் எவற்றையும் ஏற்படுத்திக் கொள்ளாது, நமது மக்கள் தமிழ் மொழி பேசும் இந்தியர்களுடன் மட்டுமே பழகிக் கொண்டு, எந்த குறிக்கோளும் முனைப்பும் அற்ற ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டு, நன்றாக தின்று கொழுத்து அருவருக்கத் தக்க அளவு உடல் பருமனை கூட்டிக் கொண்டு, முறையாக உடை உடுத்த கூட தெரியாத பின் தங்கிய நிலையில், வியர்வை நாற்றமும் வெட்டப் பட்டிராத மீசையும் தாடியுமாக 'என்னலா .... கைங்களெல்லாங் ... பன்னாஸ் ஆகி.... தூருன் பாடாங் ... பண்ணிட்டாங்க லா" என்று தமிழும், மலாயும் கலந்த ரெண்டுங்கெட்டான் பாஷை ஒன்றை பேசிக் கொண்டு, ஆண்களில் பலர் காதில் கடுக்கன்களையும், சிலர் மூக்குத்திகளையும் மாட்டிக் கொண்டு அடி முட்டாள்களைப் போலவும், கேணக் கிருக்கன்களைப் போலவும் சுற்றி திரிந்தார்களேயானால், 2050 ஆம் ஆண்டு வாக்கில் இந்த நாட்டில் தமிழன் என்பவன் பலங்காலத்து இந்தியாவில் இருந்த ஹரிஜனனின் நிலைக்கு ஒப்ப, யாராலும் தீண்டப் படாத ஒரு இழிநிலைக்கு தள்ளப் பட்டிருப்பான் என்பதை அடித்து கூறலாம். என் சுய புத்திக்கு இன்னும் 40 - 50 ஆண்டுகளில் மலேசியாவில் சராசரி தமிழனின் நிலை இப்படித்தான் இருக்கப் போகிறது என்று மிக ஆழமாகப் படுகின்றது.

"என்னடா இவன் இவ்வளவு பெரிய குண்டை தூக்கி போடுகிறான்?!" என்று குழம்புகிறீர்களா? நான் கூறுவது நூறு விழுக்காடு உண்மை அய்யா ! இருந்தாலும் என் கூற்றுக்களை இங்கு யாரும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம். நீங்களே உங்கள் அளவில் சுயமாக கணக்குகளை போட்டு பாருங்கள். சிறிது சிறமப் பட்டு மலேசிய அரசாங்க ஜனத்தொகை கணக்கெடுப்புக்களை தேடிக் கண்டுபிடுத்து நான் கூறுபவை உண்மையா, இல்லையா என்பதை ஆராய்ச்சி செய்து பாருங்கள். உண்மை என்னவென்பது உங்களுக்கே புரியும்.


"சரி, அப்ப்டியானால் நம் இனத்திற்க்கு என்னதான் விமோச்சனம்?" என்று கேட்கிறீர்களா? நான் அரசியல்வாதியாக இருந்தால் " நமக்கு இன்னமும் காலம் இருக்கிறது. இந்த நாட்டில் தமிழர்களின் வருங்காலம் மிகப் பிரகாசமாக உள்ளது. நாம் முயற்ச்சித்தால் முடியாதது ஒன்றும் இல்லை. மரத்தமிழர்களான நாம் வெறுமனே களங்களாமா? தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா! அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பது இல்லையே! " என்று மேடை ஏறி "ஆய்... ஊய்" என்று உறத்த கூவி விட்டு, தன்னளவில் "நமக்கென்ன காசா, பணமா ஏதோ கேக்கிறவன் காதுக்கு குளுர்ச்சியா, ஆதரவா, நாலு வார்த்தைகளை கோர்வையாக சொல்லிவிட்டு போவோமே! எல்லாமே பூஜியமா தெரியுதுடான்னா பிறகு எவன் தான் நமக்கு ஓட்டு போடுவான்?" என்று எண்ணுவேன்.


ஆனால், இந்த தொடரை ஆரம்பிப்பதற்கு முன்பு நான் கூறியதைப் போல், நான் சமுதாய உணர்வு கொண்ட ஒரு சாதாரண மனிதன். எனக்கு யாரிடமும் பாலிஸாக பேசி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்கிற தேவை எல்லாம் கிடையாது. என் மனதிற்கு சரி என்று படுவதை, என் பாணியில் 'ஆணி அடித்தாற்ப் போல்' எழுதுகிறேன். படிக்க விருப்பம் இருப்போர் படியுங்கள்.

இப்படி ஏட்டிக்கு போட்டியாகவே நினைப்பவன் பிறகு எதற்காக சமுதாய மேம்பாட்டை பற்றி எழுதி கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா!? காரணமாகத் தான். நான் இந்த தொடரில் எத்தனையோ தடவை கூறி உள்ளதைப் போல், தமிழர்களில் பத்து பேர்களில் இருவரால் மட்டும்தான் ஏதோ முண்டி அடித்து பிற இனங்களுக்கு ஈடுகொடுத்து முன்னேற முடியும் என்பது என்னுடைய ஆழமான கருத்து.


நான் இங்கு எழுதுவதெல்லாம், மிஞ்சிப் போனால் அந்த பத்தில் இரண்டு அல்லது மூன்று பேர்களின் விழிப்புணர்ச்சிக்கு மட்டும்தான் பயன் படும். அதை தாண்டி அடுத்த 20 - 30 ஆண்டு இடைவேலையில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயம் என்கிற அளவில் என்ன காரணத்திற்காகவும், எந்த உருப்படியான சமுதாய மாற்றமும் நம்மிடையே நிகழப் போவதாக என் சுய புத்திக்கு படவில்லை.


சரி, வேறு என்ன புத்திசாலித்தனமான அரசியல் அனுகுமுறைகளை நாம் கடைப் பிடிக்கலாம் என்பதை பார்ப்போம்:-


தன் நிலை அறிதல்

சமுதாய நிலையில் நமது பிரச்சனைகள் தான் என்ன என்பதை, பிற யாருக்கும் நாம் புரிய வைப்பதற்கு முன்பு, நம் அளவில் நாம் அவற்றை புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு அரசியல் சார்பற்ற ஸ்தாபனம் இந்த நாட்டு பல்கலைக் கழகங்களில் படிக்கும் இந்திய மாணாக்கர்களின் துணை கொண்டு நாடு தழுவிய நிலையில் நுனுக்கமான, பரவலான நேர்முக ஆய்வுகளை மேற் கொண்டு சமுதாய அளவில் நமது இனத்தின் உண்மை நிலை என்ன என்பதை கண்டறிய வேண்டும்.

இந்த மாதிரி நாடு தழுவிய சமுதாய அளவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு நிறைய பணம் செலவாகும். ஆனால் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கிறதே என்கிற பயத்தில் இந்த வேலையை தேசிய முன்னணியிடமோ, அதன் இந்திய உருப்புக் கட்சிகளிடமோ விட்டோமேயானால் நம் இனத்தை பற்றிய அப்பட்ட உண்மைகள் நமக்கு என்றுமே தெரியாமலேயே போய்விடும்.

இன்றைய நிலையில், இந்த வேலையை முறையாக செய்ய கூடிய சமுதாய அங்கீகாரமும், அதற்கு தேவையான பணத்தையும் ஆள் பலத்தையும் ஒன்று திரட்டக் கூடிய ஒரே சமூக அமைப்பு ஹிந்திராவ் மட்டும் தான். ஆனால், இந்த இயக்கத்தின் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்தார்கள். பிறகு பிரிட்டீஸ் தூதரிடம் மகஜர் கொடுப்பதறகாக ஒரு பேரணியை ஏற்பாடு செய்தார்கள். இவர்கள் எதிர்பார்த்ததை மிஞ்சி கூட்டமும் கூடியது, குழப்பமும் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகள் இசா சட்டத்தின் கீழ் சிறை சென்றார்கள். பிறகு விடுவிக்கப் பட்டார்கள்.

அதில் ஒருவர் அகில உலக அளவில் இங்குள்ள இந்தியர்களின் அவல நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டினார். இந்திய அரசாங்கம் வரை நமது பிரச்சனைகளின் தீவிரம் தெரியப் படுத்தப் பட்டது. இதற்கிடையில் இந்த நாட்டு ஜனத்தொகையில் 66.0 விழுக்காடு இருக்கும் மலாய்காரர்களுக்கு ஹிந்திராவ்வின் செய்கை பேரளவுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. இதனால், பக்கத்தான் ராக்யாட்டில் உள்ள மலாய் தலைவர்கள் இந்திய பிரச்சனைகளை முன்னெடுத்து பேசுவதற்கு தயங்கி, தயங்கி மென்று முழுங்கி கொண்டிருக்கிறார்கள். சிலர் மலாய்காரர் ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும் என்றும், மலேசிய இஸ்லாமிய கட்சியும், அம்னோவும் கூட்டு புரிந்துணர்வு பேச்சு வாதங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரைகூவல் விடுத்து கொண்டுள்ளார்கள்.

இதற்கெல்லாம் நடுவில், தேசிய முன்னணி அரசாங்கம் ஹிந்திராவ் இயக்கத்தை ஒரு பொருட்டாக மதிப்பதாகவே தெரியவில்லை. இதுவரை ஹிந்திராவ் குறித்த தேசிய முன்னணியின் போக்கு "ஒனக்கும் பெப்...பே ஒங்க அப்பனுக்கும் பெப்...பே" என்கிற அளவில்தான் உள்ளது. இந்த நிலையில் ஹிந்திராவ் தலைவர்கள அடுத்து என்ன செய்ய விருக்கிறார்கள்?

நான் அடிக்கடி கூறி வருவது போல் "பத்து படிகளுக்கு முன்னரே பத்தாவது படியில் என்ன நடக்கும் என்பதை துல்லிதமாக கணக்கு போட்டு, எதிர்வரும் சூழ்நிலைக்கு உகந்தாற்போல் தன்னை தயார் படுத்தி கொள்ளத் தெரிந்தவன் வாழ்க்கையை வெழ்பவன். அது தெரியாதவன் தோற்பவன்". இந்த நாட்டில் உள்ள தமிழ் இனம், இந்த கணக்கை சிறிதளவு கூட போடத் தெரியாதவர்கள்.

சமுதாய தலைவர்களாக உருவெடுத்திருக்கும் உங்களுக்கு இந்த கணக்குகள் எல்லாம் மிக நன்றாக போடத் தெரியும். அடுத்தடுத்து எடுக்க வேண்டிய முடிவுகளை முறையாக எடுத்து இந்த நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் அவல நிலையை துடைப்பதற்கு வழிவகைகள் கண்டு பிடித்து விடுவீர்கள் என்கிற எண்ணத்தில்தான், ஹிந்திராவ் தலைவர்களான நீங்கள் இட்ட அறைகூவல்களுக்கு மதிப்பளித்து 2007 நவம்பர் 25 ல் கோலாலம்பூரில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சாலை பேரணியில் ஈடுபட்டனர்.

ஆனால் இன்றைய நிலையை பார்த்தால், ஹிந்திராவ் தலைவர்களான உங்களுக்கும் இந்த 'பத்து படிகளுக்கு முன்னரே பத்தாவது படியில் என்ன நடக்கும்" என்கிற தூர நோக்கு கணக்கு போடத் தெரியாது போல தோன்றுகிறது. அப்படியானால், தலைவர்கள் என்று மலேசிய தமிழர்கள் நினைத்தவர்களும் வெறும் தொண்டர்கள்தானா?

பார்ப்போம். சுருக்கென்று ஒரு கேள்வியை கேட்டுள்ளோம். ஹிந்திராவ் சம்மந்தபட்ட சிலர் இந்த தொடரை படித்து வருகிறார்கள். பதில் ஏதாவது வருகிறதா என்று பார்ப்போம் !!

- தொடரும் -

Friday, June 12, 2009

உன்னையே நீ அறிவாய் ! (கடைக்கொள்ள படவேண்டிய சமூக / அரசியல் அனுகுமுறை) - பாகம் 12

மற்றவர்களின் பார்வைக்கு மலேசிய தமிழர்களான நாம் படிப்பறிவு அற்றவர்களாக, கூலிக் கூட்டமாக, கருப்பர்களாக .... எப்படி வேண்டுமானாலும் தென்படலாம், ஆனால் அரசியல் கண்ணோட்டத்தில் தீபகற்ப மலேசியாவில் உள்ள 165 நாடாளுமன்ற தொகுதிகளில் 50 தொகுதிகளிலும், 445 சட்ட மன்ற தொகுதிகளில் 133 தொகுதிகளிலும் இந்தியர்கள் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 10.0 விழுக்காட்டிற்கும் மேலான வாக்குறிமையை பெற்றுள்ளோம். இதில் 80 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் தமிழர்களான நாம் தான்.




1).
நமக்கான அரசியல் 'துருப்புச் சீட்டு'

மலேசிய அரசியலில், இந்த வாக்குறிமை நிலைப் பாடு ஒன்றுதான் நம் இனத்திற்கான 'துருப்பு சீட்டு'. ஓட்டுறிமையில் இந்த அளவு நிலைப் பாடு இருப்பதனால் தான் நம்மையும் ஒரு சிறு பொருட்டாக இந்த நாட்டு அரசாங்கம் நினைத்து ஓரளவுக்காவது மதித்து நடத்துகின்றது, நம் இனத்திற்கென்று அமைச்சரவையில் ஏதோ ஒரு மந்திரி பதவியாவது நிலைத்து நிற்கின்றது.


7.7 விழுக்காட்டு மக்கள் தொகையை கொண்ட இந்தியர்கள் 2008 க்கு முன்பு நமது ஓட்டுக்களை தேசிய முன்னணிக்கு தான் போட்டு வந்தோம். ஆனால் 2008 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு பிறகு நமது ஓட்டு குவியல் மொத்தமுமாக எதிர்கட்சியினருக்கு செல்ல ஆரம்பித்து விட்டது.


நடைமுறையில் இதன் தாக்கம் என்னவென்றால், இந்தியர்களின் இந்த எதிர்பாராத அரசியல் திருப்பம் மேற் குறிப்பிட்ட அந்த 50 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 133 சட்ட மன்ற தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணீக்கையில் தேசிய முன்னணிக்கு 20 விழுக்காட்டிற்கும் அதிகமான சரிவை ஏற்படுத்தி விட்டது ( தேசிய முன்னணிக்கு நம்மிடம் இருந்து வரும் என்று எதிர்பார்க்க பட்ட, ஆனால் கடைசியில் வராமல் போன வாக்கு எண்ணிக்கை 10 விழுக்காடு, எதிர்கட்சிகளுக்கு நம்மிடம் இருந்து புதிதாக வழங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மற்றுமொரு 10 விழுக்காடு).




2). இனி வேண்டாம் இனவாரி சாலை மறியல் / பேரணி


ஆனால் இந்த துருப்புச் சீட்டை (வாக்குறிமையை) நாம் புத்திசாலித் தனமாக பயன் படுத்த வேண்டும். அதற்கு முதலில் சமயத்தின் பெயரை சொல்லிக் கொண்டு, மகாத்மா காந்தியின் படத்தையும், பிரிட்டீஸ் அரசியாரின் படத்தையும் தாங்கி கொண்டு "ஆ...ஊ" என்று சாலை மறியலில் ஈடுபடும் தப்பான அனுகுமுறையை நாம் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.


நான் இந்த தொடரின் முதல் பாகத்தில் கூறியது போல "மலேசிய மக்கள்தொகையில் 93 விழுக்காடு உள்ள மற்ற இனத்தாரின் புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் இல்லாது நமது இனப் பிரச்சனைகளுக்கு மலேசியாவில் எந்த தீர்வும் ஏற்பட போவது இல்லை".


2008 ஆம் ஆண்டு பொது தேர்தலில் மலேசிய சீனர்களும் நம்மோடு சேர்ந்து எதிர்கட்சியினருக்கு வாக்களித்தார்கள் என்றாலும், நெடுங்கால அரசியல் ஓட்டத்தில் இஸ்லாம் அல்லாத வேறொரு மதத்தின் பெயரை உயர்த்தி பிடித்து, அரசாங்கத்திற்கு எதிராக நாம் கொடி பிடிக்க விளைந்தால், "சீனர்கள் நம்மோடு தொடர்ந்து எதிர் அணியில் நிற்பார்களா?" என்றால், அதற்கு "நிச்சயமாக இல்லை" என்பதுதான் பதில்.


தலைவர்களாக இருந்தாலும், தொண்டர்களாக இருந்தாலும் தமிழர்களான நாம் எல்லா காலங்களிலுமே நம் நுனிமூக்கு தூரத்தை தாண்டி சிந்திக்க தெரியாத முட்டாள்களாகத் தான் இருந்து வந்திருக்கிறோம்.


ஆனால், சீனர்கள் அப்படி அல்ல. பாரிசான் நேஷனல் அரசாங்கத்தை பெரும்பாலான சீனர்களுக்கு பிடிக்காவிட்டாலும், 1999 ஆம் ஆண்டு தேர்தலில் அன்வார் இப்ராஹிம் சர்ச்சையின் பொருட்டு மலாய் இனத்தவருக்குள் ஆழமான பிளவுகள் ஏற்பட்டு மலாய் ஓட்டுக்கள் பேரளவில் பாஸ் கட்சிக்கு போய்விடும் என்கிற நிலை ஏற்பட்ட போது, சீன சமூகம் ஒட்டுமொத்தமாக ஒன்று திரண்டு தேசிய முன்னணிக்கு ஒட்டு போட்டு தேசிய முன்னணியை ஜெயிக்க வைத்தார்கள்.


அந்த தேர்தலில் டீ.ஏ.பி யின் லின் கிட் சியாங், கர்ப்பால் சிங் உள்ளிட்ட பல எதிர்கட்சி தலைவர்கள் தோற்கடிக்கப் பட்டனர். ஆனால், அதே தேர்தலில் தான் அதுவரை கிளந்தான் மாகாணத்தை மட்டுமே ஆட்சி புரிந்து வந்த பாஸ் கட்சி திரங்கானு மாகாணத்தையும் கைப்பற்றிய்து.


பிறகு 2008 ஆம் ஆண்டு இந்திய சமூகத்தின் ஹிந்திராவ் பேரணி ஏற்படுத்திய அரசியல் தாக்கத்தின் தன்மையை புரிந்து கொண்டு, "தேசிய முன்னணிக்கு பாடம் புகட்ட இது தான் சரியான தருணம்" என்கிற முனைப்போடும், பெரும்பாலான சீனர்கள் பக்கத்தான் ராக்யாட்டிற்கு தங்கள் ஒட்டுக்களை போட்டனர். அதன் விளைவு, அன்வார் இப்ராஹிம் தலைமையில் களம் இறங்கிய எதிர்கட்சி அணிக்கு 2008 ஆம் ஆண்டு தேர்தலில் 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 82 தொகுதிகளில் வெற்றி கிட்டியதோடு, பேராக், பினாங்கு, கெடா, சிலாங்கூர் ஆகிய மாகாணங்களின் ஆட்சி உறிமையும் எதிர்கட்சி கூட்டணியின் வசம் கை மாறியது.


ஆனால், நாம் ஏற்படுத்திய அரசியல் தாக்கம்தானே மலேசிய அரசியலில் இவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. நாம் உள்ளபடியே 'பெரிய பருப்புக்கள் தான்' என்கிற தப்பு கணக்கை போட்டு கொண்டு மற்றொரு முறை சாலை மறியல் போராட்டத்தில் இந்தியர்கள் குதித்தால், நாம் விடும் அம்பு எப்படி திரும்பி, யார் மேல பாயும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மலாய் இனத்தவரும், சீன இனத்தவரும் நம்மை விட அரசியல் ஞாணத்திலும், அரசியல் அனுபவத்திலும் பல மடங்கு கைதேர்ந்தவர்கள்..


ஏதோ 2007 லில் இந்தியர்கள் ஏற்படுத்திய அரசியல் தாக்கம் தங்களுக்கு சாதகமாக அமைந்ததால், எல்லா எதிர்கட்சி தலைவர்களும் "மக்கள் சக்தி, மக்கள் சக்தி" என்று இரண்டு தமிழ் வார்த்தைகளைக் கூவி கொண்டும் இந்தியர்களின் உதவியோடு 2008 நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்றனர்.


ஆனால் நீண்ட கால அரசியல் கணிப்பில் இந்து சமயத்தின் பெயரை உபயோகித்து இந்தியர்கள் தாவிக் கொண்டும், கூவிக் கொண்டும் இயங்குவதை இந்த நாட்டில் எந்த மலாய்காரராவது பொருத்து கொள்வாரா என்றால், அதற்கான பதிலும் "நிச்சயமாக இல்லை" என்றுதான் வரும்.


இனவாரியாக பிற்படுத்தப் பட்டதால், பல காலமாக நம் இனத்தாரின் மனங்களில் கொதி நிலையிலேயே இருந்த வந்த வெறுப்பையும், ஆத்திரத்தையும் எந்த வகையிலாவது அரசாங்கத்திற்கு உணர்த்த வேண்டும் என்று பலரும் நினைத்திருந்த வேலையில், ஹிந்திராவ் இயக்கத்தினர் இன அளவில் அதற்கான பெரிய தொரு தளத்தை நமக்கு ஏற்படுத்தி கொடுத்தனர். அதை பயன் படுத்திக் கொண்டு நாமும் நம்மை பிரதிநிதிப்பதாக கூறிக் கொள்ளும் இந்திய கட்சி தலைவர்களுக்கும், தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் 2007 ஆம் ஆண்டு பேரணியின் மூலம் நம் நிலைப் பாட்டை அப்பட்டமாக தெரிவித்தோம். சரி, பிரமாதம்! அட்டகாசம்! அசத்தி விட்டோம்!


ஆனால், இத்தோடு இந்த இன அடிப்படையிலான சாலை மறியல் போராட்டத்தை நிறுத்தி கொள்வோம். காரணம், இந்த இன வாரி சாலை மறியல் போராட்டம் என்பது மகாபாரத்தில் வருகிற கர்ணனின் நாகாஸ்திரம் போன்றது. அதை ஒரே ஒரு முறைதான் பயன் படுத்தப் பட முடியும். அதைத் தாண்டி 2007 சாலை பேரணி மறியலைப் போல் மற்றொரு மறியலில் ஈடுபட நம் இன சமூக / அரசியல் தலைவர்கள் யாராவ்து நினைத்தால் அதைவிட வடிகட்டிய முட்டாள்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.


"10 படிகளுக்கு முன்பே பத்தாவது படியில் என்ன நடக்கும் என்பதை துல்லிதமாக கணக்கு போடத் தெரிந்தவன் வாழ்க்கையை வெல்பவன். அந்த கணக்கை போடத் தெரியாதவன் தோற்பவன். இது தான் வாழ்க்கையின் ரகசியம் என்பது என் கருத்து" என்று இந்த தொடரின் முதல் பாகத்தில் பின்னுட்டம் வழி நான் கூறியிருந்த கருத்து தான் இன்னமும், ( எப்போதும்) என் தனி மனித நிலைப்பாடு.


சரீ ...... சாலை மறியல் பேரணியை நடத்தினோமே, அதிலிருந்து நமக்கான நண்மைகள் எவற்றையாவது இதுவரை பெற்றுள்ளோமா? இல்லை ! இவ்வளவு பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட மூல காரணமாக இருந்த இந்தியர்களுக்கு அவர்கள் நடத்திய பேரணியின் மூலம் இதுவரை எந்த ஒரு பிரத்தியேகமான நண்மையையும் கிட்ட வில்லையே. ஏன்? ஏன் என்றால், பத்து படிகளுக்கு முன்னரே பத்தாவது படியில் என்ன நடக்கும் என்பதை யாரும் யோசித்து அதற்கு தகுந்த வழியில் தங்களை தயார் படித்திக் கொள்ள வில்லை !


"ஆ...ஊ" என்று உணர்ச்சி வசப் பட்டு கூவுவது, தாவுவது வேறு, புத்திசாலித்தனமான அனுகுமுறை கொண்டு நம்மைச் சுற்றி உள்ள சுழ்நிலைகளை நமக்கு சாதமாக மாற்றி அமைத்து கொண்டு வாழ்க்கையை வெழ்வது என்பது வேறு (உணர்ச்சி வசப் படுவதைத் தான் நம் கொள்ளுப் பாட்டனுக்கு, கொள்ளுப் பாட்டனுக்கு, கொள்ளுப் பாட்டன் காலத்தில் இருந்து பட்டு கொண்டிருக்கோமே! ).




3). சமூக / அரசியல் அனுகுமுறை


இந்த வாதத்தை இத்தோடு நிறுத்திக் கொண்டு, சமூக அரசியல் அளவில் நாம் எடுக்க வேண்டிய சில அடிப்படை முயற்ச்சிகளை பார்ப்போம்.



3a). வாக்காளர் பதிவு


ஒவ்வொரு வீட்டிலும் 21 வயதுக்கு மேல் உள்ள அத்தனை இந்தியரும் வாக்காளராக பதிந்து கொண்டிருக்க வேண்டும். 'சமூக சேவை.. சமூக சேவை' என்று குரல் கொடுக்கும் இயக்கங்களும், இந்திய சமுதாயத்தை தூக்கி நிமிர்த்தப் போவதாக கூறிக் கொள்ளும் அரசியல் கட்சிகளும், சமுதாய உணர்வு கொண்ட ஒவ்வொரு மலேசிய இந்தியரும் வேறு எதையும் பெரிதாக நம் இனத்திற்காக செய்யா விட்டாலும், இந்த ஒரு அடிப்படை செயலை ஒரு இனச் 'சேவை' யாக நினைத்து, அவர்களுக்கு தெரிந்த 21 வயதுக்கு மேல் உள்ள அத்தனை இந்திய இளைஞர்களையும் வாக்காளர்களாக பதிவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.



3b). இந்தியர் முன்னேற்ற கொள்கையைப் பொருத்து தான் எங்கள் ஓட்டு


மலேசியாவின் பல இன அரசியல் சூழ்நிலையில், ஜனத்தொகையில் நாம் வெறும் 7.7 விழுக்காடு மட்டும் இருந்தாலும், இந்தியர்கள் தீபகற்ப மலேசியாவின் மேற்கு திசை மாகாணங்களில் பரவலாக குடிபுகுந்திருப்பதால், தேர்தல் என்று வரும்போது இந்த நாட்டு அரசியல் நிலைப் பாட்டில் நாம் நம் ஜனத்தொகையை மீறிய ஒரு அரசியல் பலத்தை பெற்றுள்ளோம் என்பது ஆணித்தரமான உண்மை.


பெரும்பாலும் மேற்குறிப்பிட்ட அந்த 50 நாடாளுமன்ற தொகுதிகளில் நாம் போடும் வாக்குகளைப் பொருத்து தான் வெற்றி, தோல்வியே நிரணயமாகும். அதே போல பேராக், பினாங்கு, சிலாங்கூர், கெடா, நெகிரி செம்பிலான் ஆகிய மாகாணங்களில் நாம் ஒட்டு போடாமல் எந்த கட்சியும் எழிதில் ஆட்சி அமைக்க முடியாது.


ஆக உண்மை என்னவென்றால், இந்த நாட்டு அரசியலில் இந்தியர்களுக்கு (குறிப்பாக தமிழர்களுக்கு) உண்மையிலேயே அவர்களின் சிறு எண்ணிக்கையை மீறிய அசாத்திய பலம் ஒன்று உள்ளது. ஆனால், ஒற்றுமை இன்மையினாலும், நம் இன அரசியல் தலைவர்களின் சுயநலப் போக்காலும், நம் இனத்தின் ஒட்டுமொத்த அடி முட்டாள்தனத்தாலும் அந்த பலத்தை நாம் இதுவரை பயன்படுதாமலேயே இருந்து விட்டோம்.


இனிவரும் காலங்களிலாவது நாம் நம் அரசியல் பலத்தை உணர்ந்து நடந்து கொள்வோமா, மாட்டோமா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் இந்த தொடரை வைத்து நான் நம் இன மேம்பாட்டிற்காக எவ்வளவோ சொல்லி விட்டேன், இந்த அரசியல் ஆராய்ச்சியையும் என் சுய புத்திக்கு எட்டிய அளவு முடித்து கொண்டு, நான் சொல்ல வேண்டியவற்றை சொல்லிவிட்டி செல்கிறேன்.


எல்லா கட்சி தலைவர்களும் மலேசியாவில் உள்ள இந்தியர்களின் ஆதரவின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியர்கள் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் என்பதையும், இந்தியர்களின் பால் சிறப்பு கவனம் செலுத்தப் பட வேண்டியது அவசியம் என்பதையும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அறிந்தே உள்ளார்கள். ஆனால் மற்ற இனங்கள் சிறிதும் பதட்டப் பட்டுவிடாத வழியில், இந்தியர்களின் பிரச்சனைகள் என்ன என்று கண்டறிந்து, அவற்றை எப்படி கலைவது என்கிற அமுல் திட்ட அளவில்தான் முட்டு கட்டையே உள்ளது என்பது என்னுடைய கருத்து.


ஆக எது எப்படி இருந்தாலும் இனிமேல் இன அளவில் நமது நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்றால், " இந்தியர்களின் பிரச்சனைகளை களைவதில் பக்கத்தான் ராக்யாட், பாரிசான் நேஷனல் ஆகிய கூட்டணிகளில் எந்த கூட்டணி அதிக முனைப்பு காட்டுகிறதோ, அந்த கூட்டணிக்கு தான் இந்தியர்களின் ஓட்டு என்று நாம் இப்பொழுதிலிருந்தே பரை சாற்றிக் கொண்டு வர வேண்டும். இன்றைய அளவில் இதை இன அங்கீகாரத்தோடு செய்யக் கூடிய ஒரே அரசியல் / சமூக அமைப்பு 'ஹிந்திராவ்' மட்டும்தான்.


அவர்கள் அதை முறையாக செய்வார்களா? பாரிசான் நேஷனலின் பலமும் அதிகம், பணமும் அதிகம், அரசியல் அனுபவமும் அதிகம். 'ஹிந்திராவ்' இயக்கத்தில் சம்மந்தப் பட்டவர்களுக்கு சமுதாய உணர்வு என்பது அதிகம் தான். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் கிடையாது. "உணர்ச்சி என்பது வேண்டும்" என்று பாரதி பாடிச் சென்றது போல் ஹிந்திராவ் தலைவர்களுக்கு 'உணர்ச்சி' எனப்து நிறம்பவே உள்ளது. ஆனால் உணர்ச்சி ஒன்றை மட்டுமே வைத்து இங்கு எந்த சமுதாய மாற்றத்தை யாரும் ஏற்படுத்திவிட முடியாது. சம்மந்த பட்டவர்கள் சிந்தித்து செயல் படுவார்கள் என்று நம்புவோம்.



- தொடரும் -

Saturday, June 6, 2009

உன்னையே நீ அறிவாய் ! (தனி மனித மாற்றங்கள்) - பாகம் 11


மற்ற இனங்களுக்கும் இந்திய தமிழர்களான நமக்கும் தனி மனித அளவில் அனுகு முறையிலும், குண நலன்களிலும் அடிப்படையிலேயே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதில் நாம் எழிதில் மாற்றிக் கொள்ள முடியாத, உலக நடைமுறைக்கு முறன்பாடான, பல இன சூழ்நிலைக்கு ஒவ்வாத சில குணாதிசயங்களும் உள்ளன.



1).
மாற்றிக் கொள்ள முடியாத குணநலன்கள்


உதாரணத்திற்கு சீன கலாச்சாரத்தில் 'FACE' (முகம் கொடுப்பது) என்பது மிக மிக முக்கியமானதொரு சமூகவியல் அம்சம். பொதுவாகச் சொன்னால் FACE என்பது 'நடைமுறை வாழ்க்கையில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் மரியாதை / கௌரவம்'.


இது ஒரு தனி மனிதனுடைய கௌரவமாகவும் இருக்கலாம், அல்லது ஒரு குடும்பத்தினுடைய, ஸ்தாபனத்தினுடைய, இனத்தினுடைய, நாட்டினுடைய கௌரவமாகவும் இருக்கலாம். LOSING FACE (நடைமுறை கௌரவத்தை இழப்பது) என்பது சீன கலாச்சாரத்தில் சகித்துக் கொள்ள முடியாத, சகித்துக் கொள்ளக் கூடாத உன்று.


இந்த 'நடைமுறை கௌரவத்தை' காப்பாற்றிக் கொள்வதற்காக, அல்லது பெறுவதற்காக, அல்லது பெருக்கிக் கொள்வதற்காக சீனர்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள். எதையும் செய்வார்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவிடுவார்கள்.


இந்த FACE என்பது அன்றாட வாழ்க்கையில் தனி மனித அளவில் பல ரூபங்களில் வெளிப்படும். உதாரணத்திற்கு பலர் பார்க்க ஒருவரை திட்டுவது, பிறர் பார்க்க ஒருவரின் கருத்துக்கு அப்பட்டமாக எதிர் கருத்து தெரிவிப்பது, விருந்திற்கு அழைக்கப் பட்டால் 'வர இயலாது' என்று சுருக்கமாக ஒற்றை வரியில் பதில் உறைப்பது, ஊர் பார்க்க தடுமாறும் அளவுக்கு மது அருந்தி விடுவது யாவும் 'நடைமுறை கொளரவத்தை இலப்பதாக' (LOSING FACE) ஆக கிரகிக்கபடும்.

இதனால் சீனர்கள் தொழில், வியாபாரம் போன்றவற்றில் 'அப்படி, இப்படி' என்று சிறிது முறைகேடாக நடந்து கொண்டார்களே ஆனாலும், தனி மனித 'மனிதனுக்கு மனிதன்' என்கிற அன்றாட அனுகு முறையில் ஒவ்வொரு சீனரும் இந்த முகம் (FACE) என்பதற்கு முன்னுறிமை கொடுத்துதான் நடப்பார். அதே போல் பிறரும் தனக்கு முகம் கொடுத்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். சீன சமூகத்தில் இந்த 'முகம் கொடுக்கும்' விஷயத்தில் ஒருவர் எவ்வளவு முறையாக நடந்து கொள்கிறார் என்பதை பொருத்து தான் ஒரு மனிதனின் தராதரமே நிர்ணயமாகிறது..


அதே போல் மலாய்காரர்களும் தங்கள் அரசியல், சமூக தலைவர்களை, ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்களை, சமுதாயத்தில் உள்ள மூத்தவர்களை, வயதால் பெரியவர்களை சாதாரண காரணுங்களுக்காக புறக்கணித்தோ, அவமதித்தோ நடக்கவே மாட்டார்கள். அவர்கள் கலாச்சாரத்தில் அப்படி நடப்பது காட்டுமிராண்டித் தனத்திற்கு ஒப்பான ஒரு அனுகு முறை.


அந்த வகையில் இந்திய தமிழர்களான நாம் இந்த இரு இனத்தவருக்கும் நேர் மாறானவர்கள். நமது கலாச்சாரத்தில் "நியாயத்தை தட்டி கேட்பது" என்பது எல்லாவற்றையும் மிஞ்சிய ஒரு அடிப்படை சமூக இயல்பு. காரணம் நமது பாரம்பரிய கூறு அப்படி. "நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிட்ட பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் நாம். அதனால் எல்லோரோடும் வம்பு. எல்லாவற்றிகும் சண்டை.


"நீ எப்படி அப்படி பேசலாம் ! நீ பேசியது தப்பு ! நீ யாராக இருந்தாலும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தப்பு, தப்புத்தான்! மன்னிப்பு கேள்! " - இப்படி சீனர்களோ, மலாய்காரர்களோ எப்போதாவது பேசி பார்த்திருக்கிறீர்களா ? இந்த நாட்டில் இப்படி பேசுபவர்கள் தமிழர்கள் மட்டும்தான்.


மற்ற இனத்தவர் நம்மை 'காட்டான்கள்' என்று நினைப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம். ஆக இந்த மாதிரியான நடைமுறைக்கு ஒவ்வாத பல குணநலன்கள் நம் இனத்திடம் ஆழப் பதிந்து கிடக்கின்றன. என்ன செய்வது? இவை ஆண்டாண்டு காலமாக நம் இனத்தின் நாடி நரம்புகளோடு ஐக்கியமான இயல்புகள் என்பதால், இவற்றை எல்லாம் நாம் எளிதில் மாற்றிக் கொண்டுவிட முடியாது.




2). மாற்றிக் கொள்ளக் கூடிய குணநலன்கள்

ஆனால் தனி மனித அளவில் நாம் இளகுவில் மாற்றிக் கொள்ள கூடிய இதர சிறு சிறு பிளைகளை நாம் திருத்தி கொள்ளலாம். திருத்தி கொள்ளத் தான் வேண்டும. அவற்றில் சிலவற்றை இங்கு பார்போம்:-



2a). குரலை உயர்த்தி உறையாடுதல்

நம் இளைஞர்களில் பலர் பொது இடத்தில் பிறரிடம் உறையாடும்போதும் சரி, தங்களுக்குள்ளாக பேசிக் கொள்ளும்போதும் சரி, குரலை உயர்த்தியே பேசுவர். அது ஏன்? பல இன சூழலில் அடுத்தவர் சங்கோஜப் படாத அளவில் நமது நடவடிக்கைகளை வைத்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது ?! பொது இடங்களில் நாம் பேசும் போதும், பலகும் போதும் நாசுக்காக, சாந்தமாக பேசிப் பலகிக் கொள்ளலாமே!



2b). எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப் படுதல்


எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படும் இயல்பை நாம் நிச்சயமாக மாற்றி கொள்ள வேண்டும். பொதுவாக வாழ்க்கையில் தோற்றபவர்கள் தான் எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப் படுவார்கள். ஜெயிப்பவர்களின் பல குணாதசங்களில், உணர்ச்சியை கட்டுப் பாட்டுக்குள் வைத்து கொள்ளும் திறமையும் ஒன்று.


அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் பிர்ச்சனை இல்லாத இடத்தில் கூட பிரச்சனை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு சண்டை, வம்பு என்று கிழம்புவார்கள். இது குறித்து இங்கு ஒரு உதாரணத்தை கூறி செல்லலாம் என்று நினைக்கிறேன்.


என் இள வயதில் நான் வேலை செய்த காரியாலயத்தில் என்னோடு வேலை செய்து வந்த என் வயதை ஒத்த சீன நண்பர் ஒருவர் என்னை அவ்வப்போது "ஏய் கிலிங்" என்று கூப்பிடுவார். அதை நான் என்றுமே தவறாக பார்த்ததில்லை. காரணம் அவர் என் நண்பர். "நீ என் நண்பன்" என்கிற நினைப்பில் அவர் என்னிடம் சற்று அதிகமாகவே உறிமை எடுத்து கொண்டார். அவ்வளவுதான். மூடு வந்தால் "ஓய் ச்சினா குய்" என்று நானும் உறத்தகூவி அவரை அழைத்துள்ளேன். அதனாலோ என்னவோ 25 வருடங்கள் கடந்தும், இன்றும் நாங்கள் நண்பர்களாகவே இருந்து வருகிறோம்.



2c). உடை உடுத்தல்


நாம் போதுவாக உடை உடுத்தலில் பிற இனத்தவரை விட மிகவும் பின் தங்கியவர்கள் தான்.


முதலாவதாக, மற்ற இனத்தவரை விட குறைவாகத் தான் நாம் துணிமணிக்கென்று செலவு செய்வோம். அதனால் பொதுவாக மற்றவர்களை விட நம்மிடம் உடுத்தி கொள்வதற்கு எப்பவும் குறைவான துணிமணிகள் தான் இருக்கும்.


இரண்டாவதாக, நாம் நமது உடைகளை அடிக்கடை மாற்றி உடுத்த வேண்டும் என்பதை உணராதவர்கள் . இந்த நாட்டு சீதோஷன நிலையில் நாம் ஒரு சட்டையை தொடர்ந்து இரணடு நாட்கள் உடுத்தினோமானால் இரண்டாம் நாள் மதியமே நம்மிடம் இருந்து வியர்வை நாற்றம் வீச ஆரம்பித்து விடும். பிற இனத்தவர் யாரும் இதை நம்மிடம் திறந்து சொல்லாவிட்டாலும், இது ஒரு அப்பட்டமான, நடைமுறை உண்மை. ஆண் பெண் என்கிற வித்தியாசம் இல்லாமல் நம் இனத்தவரில் ஐந்தில் ஒரு இரண்டு பேரிடம் இருந்தாவது வியர்வை நாற்றம் வீசத் தான் செய்கிறது.


மூன்றாவதாக, நம் நிறத்திற்க்கு பொருத்தமான வர்ணத்தில் நம் உடை இருக்க வேண்டும். நம் இளைஞர்களில் பெரும்பாலோர் அவர்களின் கருமை நிறத்திற்க்கு சற்றும் பொருந்தாத கருப்பு, கனத்த நீலம், கனத்த சாக்லெட் ஆகிய நிறங்களில் உடை உடுத்தி கொள்வது சகிக்க முடியாதபடி, பார்ப்பதற்கு சற்றும் பொருத்தமில்லாமல் தோன்றுகிறது.


மற்றவர்கள் நம்மை மதித்து நடக்க வேண்டும் என்றால், முதலில் நமது தோற்றம் அவர்களை அச்சுருத்தாத வகையிலும், அருவருக்க வைக்காத வகையிலும் இருக்க வேண்டும். பல இன சூழ்நிலையில் நமது தோற்றத்திற்கு அப்புறம் தான் மற்ற விஷயங்கள் எல்லாம் என்கிற அப்பட்டமான உண்மையை நாம் ஆணி அடித்தாற்போல் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.



2d). சுய தோற்ற மெருகேற்றல்


சீனர்களையும் மலாய்காரர்களையும் விட இந்தியர்களுக்கு முகத்தில் முடி முலைப்பது மிக அதிகம் என்பது யாவரும் அறிந்த உணமை. அதனால் நம்மோடு சக வேலை செய்யும் ஒரு சீனரோ, மலாய்காரரோ ஒரு வாரத்திற்கு முகத்தை சவரம் செய்யாது இருந்தால் கூட அவர்களைப் பார்க்கும் போது ஒருவருக்கு எந்த வித்தியாசமும் தெரியாது.


ஆனால் ஒரு இந்திய ஆண் மூன்று நாட்களுக்கு முகத்தை சவரம் செய்யாதிருந்தால் அவர் முகத்தில் முடியின் அடர்த்தி அப்பட்டமாக தெரிய ஆரம்பித்து விடும். அத்தோடு அவர் மீசை வைத்தவராக இருந்தால், பொதுவாக ஒரு காரியாலய சூழ்நிலையில் அவரை பார்ப்பதற்கே ஒரு சிறு அருவருப்பு தட்டும்.


இதை எல்லாம் நம்மோடு வேலை செய்யும் மற்ற இனத்தவர் யாரும் நம்மிடம் வந்து அப்பட்டமாக எடுத்துச் சொல்ல மாட்டார்கள். ஆனால் அவர்கள் மனத்தில் "இவர்கள் எல்லாம் இப்படித் தான். தன்னளவில் தன் தோற்றத்தையும், சுய சுகாதாரத்தையும் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கூட தெரியாதவர்கள், வேறு என்னத்தை பெரிதாக வெட்டி முறிக்க போகிறார்கள்?" என்று நம்மைப் பற்றி ஒரு முறன்பாடான கருத்து அவர்கள் மனங்களில் ஏற்பட்டு விடும்.


நமக்கு காதால் கேட்க பிடிக்கிறதோ இல்லையோ, நம்மை பற்றிய சில உண்மைகளை நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். நம் இனத்தவரை பிற இனத்தவர் முழு மனதோடு ஏற்றுக் கொள்ளாமல் ஒதுங்கி போவதற்கான பல காரணங்களில் ஒன்று, நம் இனத்தின் கருமை நிறம் தான் என்பது என் கருத்து.


ஏன் நாமே நம அளவிலேயே கருமை நிறம் கொண்டவர்களை சற்று தாழ்வாகத் தானே பார்க்கிறோம். இதே நிலைதான் வெளிநாடுகளில் இருந்து இங்கு படிக்க வரும் ஆப்பிரிக்க நாட்டவருக்கும். இங்குள்ள எந்த இனத்தவரும் மலேசியாவிற்கு படிக்க வரும் ஆப்பிரிக்க மாணவர்களை வரவேற்ப்பு உணர்வோடு அனுகுவதே கிடையாது. அவர்கள் வலது பக்கம் நடந்து வ்ந்தால், இங்குள்ளவர்கள் இடது பக்கமாக ஒதுங்கிப் போய்விடுவார்கள். ஆக, உலகம் முலுவதிலும் கருமை நிறம் கொண்டவர்களுக்கு வரவேற்ப்பு குறைவுதான். இதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் வேண்டாம்.


உலக நிலை இப்படி இருக்க, நம் உருவத்தை, தோற்றத்தை மெருகேற்றிக் கொள்ளும் பொருட்டு 'சவரம்' போன்ற அடிப்படை சிறத்தையை கூட நாம் எடுக்காமல் இருந்தால், பிறகு "எங்களை பிற இனத்தவர் மதிக்கவில்லை", "சீனர்கள் எங்களுக்கு வேலை கொடுப்பதில்லை" என்று முட்டாள்தனமாக சவுண்டு விடுவதில் என்ன அர்த்தம் உள்ளது?.


(நம் இனத்திடம் உள்ள குறைபாடுகளும், பிரச்சனைகளும் எவ்வளவு ஆழமானவை எனபதை இப்போதாவது உணர்கிறீர்களா ? இன மேம்பாட்டு பாடத்தை நாம் 'செரைப்பதில்' இதில் ஆரம்பித்து சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதுதான் அய்யா நமது சமூகத்தின் நிலை. புரிகிறதா ?).


சீனர்களோடு நான் ஆழப் பழகியவன். சீனர்கள் நம் இன இளைஞர்களுக்கு ஏன் வேலை கொடுப்பதில்லை என்பதை தலையங்கமாக வைத்து நான் எழுத ஆரம்பித்தால், இந்த பதிவைப் போன்று மூன்று பதிவுகளையாவது என்னால் எழுத முடியும். சீனர்கள் பார்வையில், நம் இன இளைஞர்களிடம் அவ்வளவு குறைபாடுகள் உள்ளன.



2e). மலாய் மொழியை முறையாக கற்றல்


இந்த நாட்டில் நாம் மார்க்கெட்டிற்கு சென்று காய்கறி வாங்குவதில் இருந்து, கோர்ட்டுக்கு போய் கேஸ் போடுவது வறைக்கும் எல்லாவற்றிக்கும் மலாய் மொழி தெரிந்திருக்க வேண்டும். மலாய் தெரியாமல் இங்கு நாம் எந்த விஷயத்திலும் ஈடுபட முடியாது. அதனால், ஓரளவுக்காவது வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்று நினைக்கும் தமிழர்கள் அதற்கான முதற் படியாக மலாய் மொழியை முறையாக கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் மட்டுமள்ள, அத்தியாவசியமும் கூட.



2f). குறிக்கோளுடனான வாழ்க்கை வாழ்தல்


சில தினங்களுக்கு முன்பு நான் பெட்டாலிங் ஜெயாவில் என் காருக்கான உபரி பாகங்கள் வாங்க வேண்டி நான் வாடிக்கையாக செல்லும் கார் ஸ்ப்பேர் பார்ட்ஸ்' கடைக்கு சென்றேன். அங்கு எப்போதும் கல்லாவில் உற்காந்திருக்கும் கடை முதலாளியை காணவில்லை. அவர் இடத்தில் எனக்கு நன்கு பரிச்சயமான என் இள நண்பன் 'ஆ செங்' இருந்தான்.


நான் முதன் முதலில் இந்த கடைக்கு 1990 ல் கார் உபரிப் பாகங்கள் வாங்க வேண்டி போன போதுதான், 15 வயது நிறம்பிய இந்த 'ஆ செங்' எடுபிடி பையனாக வேலைக்கு வந்து சேர்ந்திருந்தான். அதன் பிறகு கால ஓட்டத்தில், ஆயிரக்கணக்கான கார் உபரி பாகங்களின் பெயர்களையும், நுனுக்கங்களையும், விலைகளையும் ஒவ்வொன்றாக அனுபவத்தில் படித்து தெரிந்து கொண்டு அக் கடையிலேயே 'சேல்ஸ் மேன்' ஆக வேலை செய்தான்,


அதன் பிறகு சிறிது வருட உழைப்பிற்கு அப்புறம் அதே கடைக்கு 'ஆ செங்' மானேஜர் ஆனான், அதற்கு அப்புறம் இரண்டு வருட்ங்களுக்கு முன்பு, 'ஆ செங்' சொந்தமாக வியாபாரம் ஆரம்பிக்க நினைப்பதை அறிந்த கடை முதலாளி, தன் கடையிலேயே 'ஆ செங்கை' ஒரு பங்குதாரர் ஆக்கி கொண்டார்.


இப்போது கடை முதலாளி நோய் வாய் பட்டு விட்டதால், அவர் தன் கடையை 'ஆ செங்' இடமே விற்று விற்றார். இப்போது, 20 வருட கடின உழைப்பிற்கு பிறகு, தன் 35 ஆவது வயதில் ' செங்' ஒரு கடைக்கு முதலாளி.


இதே நிலைப் பாடுதான் என்னுடையதும். 17 வயதில் ஆரம்பித்து 21 வருடங்கள் பல்வேறு ஏற்றுமதி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஏற்றுமதி ஆர்டர்களை என் கைகளாலேயே முன்னின்று நடத்தி முடித்து ஆழமான அனுபவத்தை பெற்று கொண்டு, என் 38 வது வயதில் தான் நான் எனக்கென்று ஒரு சிறு ஏற்றுமதி நிறுவனத்தை ஆரம்பித்தேன்.


சினிமாவில் மட்டும்தான் 6 நிமிடங்கள் கூட வராத ஒரே பாட்டில், கதாநாயகன் மாட்டு வண்டி நிலையில் இருந்து, கார், பங்களா, தோட்டம், துறவு என்கிற உயர்ந்த நிலைக்கு போய் விடுவார்.


நிஜ வாழ்க்கையில் எல்லாமே மெது, மெது வாகத் தான் நடந்தேறி வரும். அந்த மெதுவான வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் நீங்கள் அடித்து பிடித்து முன்னேற வேண்டுமானால், எல்லாவற்றிக்கும் மேலாக முதலில் உங்களுக்கு ஒரு 'தூர நோக்கு குறிக்கோள் / லட்ச்சியம்' இருக்க வேண்டும். அது இல்லாமல் உங்களால் பெரிதாக ஒரு மண்ணையும் சாதிக்க முடியாது.


ஆதலால், நீங்கள் உங்களின் இளவட்ட நாட்களை முறையாக சிந்தியாது கோட்டை விட்டிருந்தீர்கள் ஆனாலும், உங்களின் பிள்ளைகளையாவது ஒரு 'தூர நோக்கு லட்ச்சியத்தின்' பால் திருப்பிவிட முயற்ச்சி செய்யுங்கள்.



- தொடரும் -

Sunday, May 17, 2009

உன்னையே நீ அறிவாய் ! (சமுதாய மாற்றம் என்பதன் இயல்பு) - பாகம் 10



மெல்ல, மெல்ல தான் சமுதாய மாற்றங்கள் வரும்

30, 40, 50 வருடங்கள் என்பது எல்லாம் தனி மனித அளவில் மிகப் பெரிய காலக் கட்டங்கள் தான். ஆனால் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் இன வளர்ச்சி, மொழி வளர்ச்சி, சமுதாய மேம்பாடு என்கிற கணக்கீட்டை முன் வைத்து பார்த்தால் இந்த கால நிலவரைகள் யாவும் கண் சிமிட்டும் நேரப் பொழுதுகளே.

ஒரு சமுதாயத்தை மாற்றி அமைக்கும் எந்த நிகழ்வும் 'உடனே, இப்போது, இன்றே' என்கிற நிலையில் என்றுமே நடந்தேறுவது கிடையாது. சமுதாய மாற்றம் எல்லாமே சிறிது சிறிதாக,மெது மெதுவாக, அதற்கான காலம் கனிந்து வரும்போது தான் (வந்தால் மட்டுமே) நடந்தேறும்.

இந்த நாட்டில் மலாய்காரர்கள் இன்று இவ்வளவு கம்பீரமாகவும், செழிப்பாகவும் இருக்கிறார்களே, மலாயாவை இவர்கள் முழுமையாக, ஆழும் உறிமையை பெற எவ்வளவு காலம் காத்திருந்தார்கள் என்று வாசகர்களான உங்களின் யாருக்காவது தெரியுமா?

அன்றைய மலாயாவில் மகானத்திற்கு, மாகானம் சுல்தான்கள் இருந்தார்கள் என்றாலும், 1511 ஆம் ஆண்டு மலாக்கா சுல்தானிய சமஸ்தானத்தை போச்சுகீஸ்தியர்கள் வீழ்த்தியதிலிருந்து, 1957 ஆம் ஆண்டுஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் பெற்றது வரை மலாயா தீபகற்பம் போர்த்துகீசியர்கள், டச்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் என்று வெவ்வேறு கால கட்டத்தில், வெவ்வேறு மேல் நாட்டவரின் ஆழுமையில் தான் இருந்து வந்துள்ள்து.

நாம் தற்போது பார்க்கும் மலேசிய நாட்டின் வளர்ச்சி, மலாய்காரர்களின் கம்பீரம், சொகுசு வாழ்க்கை எல்லாம் இப்போது .... ஒரு 52 வருடங்கள் இடைவேளியில் நடந்தவை தான். அதற்கு முன்பு பாவம் மலாய் இனத்தவரும் ஒரு அடிமைப் பட்ட வாழ்க்கை முறையை வாழ்ந்தவர்கள் தான்.

அவர்கள் சொந்த நாட்டையே தங்களுடையது என்று பெறுமையோடு சொல்லிக் கொள்ள மலாய் இனத்தவர் 446 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்திருந்தால், கடல் கடந்து கூலி வேலைக் கென்று வந்த நாம், நமது உறிமை என்று நாம் நினைப்பதை நிலை நாட்டி கொள்வது அவ்வளவு எழிதாக நடக்க கூடிய விஷயமா?

இதன் உண்மையை நாம் சரியாக புரிந்து கொளவதற்கு நமது சரித்திர பின்னனியில் இருந்தே வேறு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

திராவிடரின் சிந்து நதிக் கலாச்சாரம் 5,000 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது என்று வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. திருக்குறளும், கம்பராமாயணமும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதப் பட்டிருக்கின்றன. அதுபோக மகா பாரதம், இதிகாசங்கள் என்று எத்தனையோ பிரம்மிக்கத் தக்க, சமுதாயத்தை நல்வழிப் படுத்தும் அறிவுக் கலஞ்சியங்கள் தமிழில் எழுதப் பட்டு நம்மிடையே ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வந்திருக்கின்றன.

அப்படி இருந்தும் சுத்த திராவிடர்களான நம் பாட்டன், பூட்டன்கள் எல்லாம் எப்போது 'அ, ஆ, இ, ஈ .....' யை தெரிந்து, எழுத படிக்க ஆரம்பித்தார்கள்? மிஞ்சி, மிஞ்சிப் போனால் ஒரு 150 வருட இடைவேலைக்குள் தானே! ஏன்? அது அப்படித்தான் அய்யா!

சமூக வியல் நிகழ்வுகள் அப்படித் தான் நடந்தேறும். அன்றைய சமூக அமைப்பில், நாம் பிற்பட்ட வகுப்பினர், நமக்கு படிப்பு சொல்லி கொடுக்க வேண்டும் என்று பிற யாருக்கும் தோன்றவில்லை, நாம் அடிமைப் பட்டு இருப்பதுதான் பிறருக்கு நல்லதாக இருந்தது.

ஏறக்குறைய அன்றைய இந்தியாவில் இருந்த நமது பாட்டன், பூட்டன் நிலைதான் இன்றைக்கு நம் இனத்திற்கு மலேசியாவில் இருக்கும் நிலை. மலேசிய சமூக வியலில் நாம் ஒரு கீழ்மட்ட வகுப்பினர். நம்மை உயர்த்தி விட வேண்டும் என்று முக்கிய பொருப்பில் இருக்கும் யாருக்கும் எண்ணம் இல்லை.

"தமிழர்கள் நழிந்து போய், கீழ்மட்டத்தில் இருக்கிறார்களா? இருக்கட்டுமே, ஒரு சமுதாயத்தில் எல்லோரும் மேல் மட்டத்தில் இருக்க முடியாது தானே, யாராவது கீழ் மட்டத்தில் இருக்கத் தானே வேண்டும்" என்பது பிற இனத்தவரின் நிலைப் பாடு.

"நாங்கள் எல்லாம் எப்படி முன்னேறினோம்? கடின உழைப்பும், முயற்ச்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம். இங்கு எல்லா வசதியும் வாய்ப்பும் எல்லோருக்கும் கொடுக்கப் பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு அதை முறையாக பயன் படுத்த தெரியாவிட்டால், அதற்கு யார் பொருப்பு?" என்று ஏதோ ஒரு வகையில் முன்னுக்கு வந்துவிட்ட பிற இந்தியர்கள், அவர்கள் நம்மோடு சம்பந்தப் படாதவர்கள் என்பதை பிற இனத்தினர் உணர வேண்டும் என்பதற்காக சொல்வர்.

ஆக உண்மை என்னவென்றால், இன்றைய சூழ்நிலையில் நாம் வேண்டாத, தேவையில்லாத, அதனால் கண்டுகொள்ளப் படாத ஒரு இனம். இது தான் அய்யா நடைமுறை உண்மை.

கடைசியில் எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்தீர்களென்றால், "நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது". வழியில் போகும் வேறு யாரும் நம்மை தூக்கிவிடப் போவது இல்லை. நாம் தான் நமது கையை ஊன்றி கரணம் பாய வேண்டும். இன்றைய உலக நடைமுறையில், இதை தவிர நமக்கு வேறு எந்த வழியும் கிடையாது. சொல்வது புரிகிறதா ?

அதற்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு - மலேசிய சீனர்கள். அவர்களும் நம்மை போல் கூலிகளாக வந்தவர்கள் தான், இப்போது அவர்கள் என்ன கம்பீரத்துடன் இருக்கிறார்கள், பார்த்தீர்களா? யாருடைய தயவையும் எதிர்பார்த்தா சீனர்கள் இருக்கிறார்கள்?



அரசாங்க பிரதிநித்துவம்

இருந்தாலும் இது ஜனநாயக நாடு என்பதனால், நமது நலன்களை பாது காப்பதற்கு நம்மிலேயே ஒரு சிலரை தேர்ந்தெடுத்து, நமது பிரதிநிதிகளாக நியமிக்கும் தேர்தல் எனும் ஒரு சாதனம் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. அதன்படி நாமும், 52 வருடங்களாக செய்து வருவது போல நம்மில் யாராவது சில பருப்புக்களை தேர்ந்தெடுத்து நமது பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவோம்.

அவர்களும் YB என்ற போர்வையை போர்த்தி கொண்டு, நம்மை பிரதிநிதிப்பதாக கூறிக் கொண்டு, அரசாங்கத்தில் அங்கம் பெறுவர். அதில் ஒருவர் மந்திரி சபையில் இடம் பெருவார்.

அவரும் ஆரம்பத்தில் தன் இனத்திற்கு உதவ வேண்டும் என்கிற முனைப்போடு தான் கடமையை ஆற்றுவார். ஆனால், பாருங்கள் கால ஓட்டத்தில் அவரும் "போகப் போகப் மாமியார் கழுதைபோல ஆனாள்" என்கிற பழமொழியை ஒததவராக ஆகி விடுவார்.

காரணம் நமது இனத்தின் சூழ்நிலை அப்படி. அரசாங்கத்திடம் இருந்து அடித்து, பிடித்து அவர் 10 லட்ச்ச ரிங்கிட் பெற்று வந்தால், இங்கு 50 லட்ச்சத்திற்கு தேவைகள் இருக்கும்.

நம் இனத்தின் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என்கிற முனைப்போடு மனுஷன் நாயாப் பேயா அழைந்து திரிந்து, மந்திரி சபையில் இருக்கும் பிற மந்திரிமார்களுடம் கெஞ்சி, கூத்தாடி அனுமதிகளைப் பெற்று, மலாய்கார அரசாங்க அதிகாரிகளிடம் அடித்து பிடித்து, சண்டை போட்டு அன்றைய பிரச்சனைகளை ஒவ்வொன்றாக தீர்த்து இரவு 11.00 மணிக்கு சோர்ந்து போய வீடு வந்து சேர்வார், அப்போது தான் ஒரு 20 பேர் வீட்டு கேட் முன்னால் நின்று கொண்டு காரை மறித்து "அய்யா, எங்கள் வீடுகள் எல்லாம் நெருப்பில் எறிந்து போச்சு, நீங்க தான் காப்பத்தனும் !!" என்று காலில் விழுவார்கள்.

இது என்றைக்காவது ஒரு நாள் நடைபெறும் நிகழ்வு என்றால் பாதகம் இல்லை. ஆனால், விடிந்தால் எந்திரித்தால் ஒரு மனுஷன் இந்த மாதிரி சூழ்நிலைகளையே பார்க்க நேரிட்டால், அவனும் என்ன ஆவான்.

நாளடைவில் அவர் மன நிலையும் "ச்சீ" என்று போய், ஏதோ அவரால் முடிந்த சில இனப் பிரச்சனைகளை கலைவதோடு நிருத்தி கொண்டு, தன் கட்சி / அரசாங்க பதவிகளை நிலை நிருத்தித் கொள்ளும் வேலைகளில் மும்முரம் காண்பிக்க ஆரம்பித்து விடுவார.

கடைசியில் இன அளவில் இங்கொன்றும், அங்கொன்றுமாய் சில பிரச்சனைகள் தீர்க்கப் பட்டாலும், நம்முடைய பெரும்பாலான பிரச்சனைகள தீர்க்கப் படாமலேயே இருக்கும். இதற்கிடையில் மனுஷனுக்கு மந்திரி பதவியின் சொகுசு ஒரு சிறு மயக்கத்தை கொடுத்திருக்கும், அத்தோடு சிறிது பணம் பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் அவர் வழியில் வந்திருக்கும். அவரும் பணம் பார்த்திருப்பார்.

இதற்கிடையில் "தலைவர் வாழ்க" என்று கரகோஷம் எழுப்பும் ஒரு ஜாலரா கூட்டம் நம்ம ஆளைச் சுற்றி எப்பவும் கூடி நிற்க்கும். கால ஓட்டத்தில், அரசியல் நடைமுறைப் படி இந்த ஜாலராக் கூட்டத்திற்கு 'ஏதாவது செய்து கொடுக்க வேண்டும்' என்கிற நிலைப் பாட்டிற்கு நம்ம ஆளும் தள்ளப் பட்டிருப்பார். (அப்படி அவர் செய்ய தவறினால், இரவோடு இரவாக ஜாலராக்கள் எல்லாம் எதிர் அனிக்கு தாவி நம்ம ஆளின் கட்சி பதவியே பறி போகும் நிலை ஏற்பட்டாலும் ஏற்பட்டு விடும் ).

பிறகு என்ன, "பெர்லீஸ் மாகான கட்சி தலைவர் குப்புசாமியா! சரீ ...... அரசாங்கத்தின் குறைந்த விலை வீட்டுடமை திட்டத்தின் கீழ் உங்கள் மாகானத்தில் இந்தியர்களுக்கு 150 வீடுகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அதை உங்கள் மூலம், உங்கள் பரிந்துரையின் பேரில், நீங்கள் சொல்பவருக்கு வழங்கும்படி ஏற்பாடு செய்துள்ளேன்" என்று முதுகைத் தட்டி கொடுத்த வாறு, சிரித்த வண்ணம் தலைவர் சொல்லி விட்டு போவார்.

பிறகென்ன, ஆரே மாதங்களில் சாதாரண குப்புசாமி லட்ச்சாதிபதி குப்புசாமி ஆகிவிடுவார். ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து ஓட்டு போட்ட நமக்கு ஒரு "ஆப்பு" !

கேட்கிறது, கேட்கிறது "முன்பைப் போல் அல்ல. நாங்கள் இனிமேல் தேர்ந்தெடுக்கும் அரசியல் தலைவர்கள் வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். மக்கள் தொண்டை தலைமேல் கொண்டு நடப்பவர்களை மட்டும்தான் நாங்கள் சமுதாய தலைவர்களாக ஏற்றுக் கொள்வோம்" என்று வாசகர்கள் கூறுவது எனக்கு நன்றாக கேட்கிறது.

இருந்தாலும் என்ன செய்வது - பத்துமலையில் இருக்கும் காக்காய் மட்டும் "முருகா, முருகா" என்றா கூவுகிறது. அதுவும் 'கா...கா, கா ...கா" என்றுதானே கூவுகிறது. ஏன் ? அதன் இயல்பு அப்படி அய்யா !

அதே மாதிரி தவறுகள் செய்வது, தப்புக்கள் பண்ணுவது மனிதனின் அடிப்படை இயல்பு ! நாம் யாரை தலைவராக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினாலும், முதலில் முறையாக சமூகப் பணி புரியும் அவர் கால ஓட்டத்தில் "அதே குட்டையில் ஊறிய மட்டை" என்று தான் ஆவார். அந்த நிலைப் பாட்டில் இருந்து யாரும் தப்ப முடியாது. இது தான் அய்யா வாழ்க்கையின் தன்மை.

ஆதலால், நாம் நம்மை பிரதிநிதிக்கும் சமுதாய தலைவர்களை என்றைக்கும் சாதாரண மனிதர்களாக மட்டுமே பார்க்க பலகி கொள்ள வேண்டும். அப்படி பார்க்க ஆரம்பித்தால் மட்டுமே சூல்நிலை நம்மை மிஞ்சிப் போகிற நேரத்தில், தலைவர்களின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் தைரியம் நமக்கு வரும். அவர்களும் பொது ஜனம் சட்டையை பிடிப்பார்கள் என்கிற பயத்தோடு நடந்து கொள்வார்கள்.


இந்த தொடரை முடிப்பதற்கு இன்னும் ஒரு ஆயிரத்து ஐந்நூறு வார்த்தைகளின் இருந்து இரண்டாயிரம் வார்த்தைகளை கொண்ட பதிவை நான் எழுத வேண்டியுள்ளது. இந்த பாகத்தோடு அதை சேர்த்து எழுதினால், இது மிக நீண்ட பதிவாக ஆகி விடும். ஆதலால், இந்த 10 வது பாகத்தை இத்தோடு நிறுத்தி கொள்கிறேன். என் அடுத்த பதிவு கீழ்கண்டவையை மையமாக கொண்டிருக்கும்:

- தனி மனித அளவில் நம் நிலையை மாற்றிக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்.

- தமிழ் இனத்தின் ஒரு உறுப்பினனாக, நம் பங்குக்கு மற்றவர்களோடு சேர்ந்து இன அடிப்படையில் நாம் என்ன செய்ய முடியும்.

- தனி மனித அளவில் நமது அரசியல் பங்கு என்னவாக இருக்க வேண்டும்

- அரசியல்வாதிகள் ந்ம் இன பிர்ச்சனைகளை எங்கனம்அனுகலாம்

- அரசாங்கத்திடம் இருந்து என்னென்ன சலுகைகளை நாம்கேட்க வேண்டும்

- அவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்கிட்டை எங்கனம்பெறலாம்

- சாமானியனான நான் கடந்து வந்த சில வாழ்க்கை பாதைகள்

- செட்டியாரிடம் படித்த பாடம் எனும் ஒரு அறிவுறை துனுக்கு


அத்தோடு இந்த தொடரை முடித்து கொள்வேன்.

Wednesday, May 13, 2009

உன்னையே நீ அறிவாய் ! (மாறிய உலகில், மாறத் தெரியாத நாம்) - பாகம் 9

சென்ற பதிவில் "வேறு எல்லா அரசாங்க திட்டங்களையும் மீறி மலாய்க்கார மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஒன்றே மலேசிய அரசாங்கத்தில் சகல நிலைகளிலும் ஒலிக்கும் தாரக மந்திரமாக மாறியுள்ள நிலைப்பாடு, வேறு யாரையும் விட இந்த நாட்டில் உள்ள இந்தியர்களை (குறிப்பாக மலேசிய தமிழர்களை) வெகுவாக பாதித்திருக்கிறது" என்று குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அதை இந்த பதிவில் முடிந்த அளவு விளக்கியுள்ளேன்:-


1970 க்கு முந்தைய கால கட்டத்தில் மலேசிய இந்தியர்களின் நிலை

நான் பார்க்க 1950 - 1960 களில் இந்த நாட்டில் இந்தியர்களின் நிலை ஓரளவிற்கு கம்பீரமானதாகத் தான் இருந்தது. படிப்பறிவு இல்லாதவர்கள் ரப்பர் எஸ்டேட்டுகளிலும், ரயில்வேயிலும், சாலை நிர்மாணிப்பு துறையிலும் கூலி ஆட்களாக வேலை செய்து வந்தனர்.

சிறிது படித்தவர்கள் டெலிகாம்ஸ், மின்சார வாரியம், ரயில்வேஸ், தபால் அலுவலகம், பொதுப்பணி, கல்வி அமைச்சு போன்ற அரசாங்க துறைகளிலும், தோட்டங்களிலும், சில தனியார் நிறுவனங்களிலும் ஆசிரியர்களாகவும், குமாஸ்தாக்களாகவும், டெக்னிஷியர்களாகவும் பணி புரிந்தனர்.

பல்கலைக்கழக படிப்பு முடித்தவர்கள டாக்டர்களாகவும், வழக்குரைஞர்களாகவும், இஞ்சினியர்களாகவும் செயல் பட்டு வந்தனர். வர்த்தகர்களாக வந்தவர்கள் வாணிபம், வர்த்தகம் என்று இருந்தனர்.

ஆக அந்த காலக் கட்டத்தில் எல்லா நிலைகளிலும் இந்தியர்களுக்கு இந்த நாட்டின் வளர்ச்சியில் ஒரு சிறந்த பங்கு இருக்கத்தான் செய்தது.

அதன் பிறகு 1970 ஆம் ஆண்டு தான் மேற்குறிப்பிட்ட புதிய பொருளாதாரக் கொள்கையும் அதை ஒட்டிய "எல்லா நிலைகளிலும் மலாய்காரர்களுக்குத் தான் முன்னுறிமை" என்ற கொள்கையும் அமுலாக்கப் பட்டன.

அத்தோடு இந்தியர்களுக்கு பல காலமாக அரசாங்கத்திலும், அரசாங்க சார்புள்ள ஸ்தாபணங்களிலும், சில தோட்டத்துறை நிறுவனங்களிலும் இருந்து வந்த சாதகமான அனுசரனையும் ஒரு முடிவுக்கு வந்தது.


1970 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியர்களுக்கு (குறிப்பாக தமிழர்களுக்கு) ஏற்பட்ட பின்னடைவிற்கான காரணங்கள்

இந்தியர்கள் பின்னடைவிற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் என் மனதிற்கு இந்த நாட்டில் நடந்த கீழ்கண்ட மூன்று நடவுகள் / நிலைப் பாடுகள் மிக முக்கிய காரணங்களாக தெரிகின்றன:-


1). மலாய் மொழி ஆட்சி மொழியாக உருவெடுத்தது

மலாயா சுதந்திரம் அடைவதற்கு நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை, இந்த நாட்டின் ஆட்சி மொழி ஆங்கிலமாகத் தான் இருந்து வந்ததுள்ளது. இதன் காரணமாக அன்றைய மலாய்காரர்களுக்கு நாட்டு ஆழுமையிலும், வர்த்தகத்திலும், பிற நடப்புகளிலும் பரவலாக அதிக உடன்பாடும், ஈடுபாடும் இல்லாத நிலையே இருந்து வந்திருந்தது.

அந்த கால கட்டம் (மலாய்காரர்களுக்கும் சீனர்களுக்கும் ஆங்கில அறிவு அதிகம் இல்லாது இருந்த நேரம்) ஆங்கிலத்தை நன்கு பேச, படிக்க, எழுத தெரிந்த யாழ்பான தமிழர்களுக்கும் மலையாளிகளுக்கும் வரப் பிரசாதமான ஒரு நேரம். சுருங்கச் சொன்னால், அது அவர்கள் கொடி கட்டி பறந்த ஒரு கனாக் காலம்.

ஆனால் சுந்திரத்திற்கு பிறகு, என்றைக்கு மலாய் தலைவர்கள் ஆங்கிலத்தை ஒதுக்கி விட்டு, மெல்ல, மெல்ல மலாய் மொழியை நாட்டின் ஆட்சி மொழியாகவும், பள்ளிகளில் போதனை மொழியாகவும் மாற்ற ஆரம்பித்தார்களோ, அன்றிலிருந்து இந்த இந்திய இனங்களுக்கு பல காலமாக அரசாங்கத்திலும், தனியார் துறையிலும் இருந்து வந்த அனுகூலமான சூழ்நிலை அடியோடு மாறியது. அதற்கு முன்பு அவர்கள் பிரத்தியேகமாக செய்து வந்த எல்லா வேலைகளும் மலாய்க்காரர்களுக்கு செல்ல ஆரம்பித்தன.


2). இந்தோனிசிய கள்ளக் குடியேறிகளின் வருகை

1970 ஆம் ஆண்டு தொடங்கி, 1990 ஆம் ஆண்டுக்குள் மலேசிய பொருளாதாரத்தில் மலாய்காரர்களின் பங்கீட்டை 30 விழுக்காடாக உயர்த்துவது என்பது தேசிய குறிக்கோளாக உருப்பெற்ற பட்ச்சத்தில், இந்த திட்டத்தை எப்படியாவது முழுமையாக செயல் படுத்திவிட வேண்டும் என்கிற முனைப்போடு மலாய் தலைவர்கள் அரசாங்கத்தின் எல்லா கிளைகளையும் முடக்கி விட்டு, அமுல்திட்டங்களை துரிதப் படுத்தினர்.

அப்படி அபரிமிதமான வேகத்தில் திட்டங்கள் துரிதப் படுத்தப் பட்ட காலக் கட்டத்தில், சீனர்கள் வியாபாரம் தொழில் கல்வி என்று எல்லா நிலைகளிலும் திறமைசாலிகளாக இருந்த படியால், நாடு அசுர வேகத்தில் வளம்பெற்ற போது அவர்களும் அந்த வளர்ச்சியோடு சேர்ந்து மிக அதிக வளம் பெற்றனர்.

((1970 ஆம் ஆண்டு மலேசிய பங்குச் சந்தையில் 22.5 விழுக்காடு பங்குறிமையை மட்டுமே வைத்திருந்த சீனர்கள், 1990 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டவர்களிடம் இருந்த பங்குகளையும் வாங்கி, மலேசிய பங்கு சந்தையில் தங்களுக்கு இருந்த பங்குறிமையை 45.0 விழுக்காடாக உயர்த்தி கொண்டுள்ளனர். அதே காலக் கட்டத்தில் மலாய்காரர்கள் தங்கள் பங்குறிமையை 2.4 விழுக்காட்டிலிருந்து, 19.0 விழுக்காடாக உயர்த்தி கொண்டுள்ளனர். இந்தியர்களின் பங்குறிமை 1970 லும் சரி, 1990 லும் அதே 1.0 விழுக்காடாகத் தான் இருந்திருக்கிறது)).

ஆனால், தமிழர்கள் தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த பாஷையும் தெரியாத நிலையில், அதுவரை எஸ்ட்டேட் சுழ்நிலையைத் தவிர வேறு எதையும் பார்த்தறியாத நிலையில், பிற இனத்தவர்களோடு பழகிய அனுபவம் இல்லாத நிலையில், தாழ்வு மனப்பான்மையால் நெஞ்சை நிமிர்த்தி பேசக்கூட திராணியற்ற நிலையில், தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதைக் சறியாக புரிந்து கொள்ள தெரியாத, முடியாத ஏமாளிக் கூட்டமாகத் தான் இருந்திருக்கிறோம்.

அதற்கு தகுந்தாற்ப் போல் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் கடின உழைப்பாளிகளான இந்தோனிசிய கள்ளக் குடியேறிகளுக்கு தோட்டதுறை வேலைகளும், கட்டுமானம் உள்ளிட்ட மேலும் பற்பல பணிகளும் சென்றடைந்தன..

இது கால ஓட்டத்தில் தமிழர்களை பல வகைகளில் பாதித்தாலும், நாட்டின் துரித வளர்ச்சிக்கு (அதன் மூலம் ஏற்பட்ட மலாய் இனத்தின் மிகத் துரித வளர்ச்சிக்கு) இந்தோனிசியர்களின் பங்கு முக்கியமாக அமைந்ததால், அரசாங்கமும் அதை சுத்தமாக கண்டுகொள்ளாமல் விட்டது.

மேலும் மலாய் மொழியை சரளமாக பேசக் கூடியவர்களாகவும், இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்களாகவும் இந்தோனிசியர்களும், வங்காள தேசத்தவர்களாகவும் இருந்தது இந்த இனத்தவர்களுக்கு மேலும் அனுகூலமாக அமைந்தது.

கால ஓட்டத்தில் பிற நாட்டு தொழிலாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, இன்று மலேசியாவில் உள்ள வெளி நாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை மலேசிய இந்தியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ள நிலைக்கு இட்டுச் சென்று விட்டது.

இப்படி நமக்கு முறையாக வந்து சேர்ந்திருக்க வேண்டிய பல கீழ்மட்ட வேலை வாய்ப்புகளும், சிறு அங்காடி வியாபார வாய்ப்புக்களும் கூட இந்த நாட்டிற்கு சற்றும் சம்மந்தமில்லாத இனங்களுக்கு போய் சேர்ந்ததும், நாம் இந்த நாட்டில் இதுவரை தேராமல் போனதற்கு மற்றுமொரு காரணம்.

சரி, மலேசிய அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து அதிக அளவு தொழிலாளர்களை இங்கு கொண்டு வந்து சேர்த்ததர்க்கான காரணம் என்ன என்று நினனக்கிறீர்கள்?

மலாய்காரர்களின் பங்குறிமையை இருபது வருடங்களுக்குள் 30 விழுக்காடு ஆக்க வேண்டும் என்றால், அரசாங்கம் எல்லா பொருளாதார திட்டங்களையும் துரிதப் படுத்தி ஆக வேண்டும். அத்தோடு புதிய பொருளாதார கொள்கையை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமெனில் நாட்டில் வேலை வாய்ப்புக்கள் அதிக அளவு மேம்படுத்த பட வேண்டும்.

இதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மலேசியாவில் மூலதனம் செய்வதற்கு தோதாக தொழிலாளர் சட்ட திட்டம் இருக்க வேண்டும். பாலிசை அகற்றி விட்டு பச்சையாக சொன்னால் - இந்நாட்டில் தொழிலாளிகளுக்கு கொடுக்கப் படும் சம்பளம் குறைவானதாக இருக்க வேண்டும், தொழிற்சங்க நடவடிக்கைகள் குறைக்கப் பட வேண்டும்.

இதையெல்லாம் அமுல் படுத்த வேண்டுமானால், வெளிநாட்டில் இருந்து சட்ட பூர்வமாகவோ (அல்லது கள்ளக் குடியேறிகளாகவோ) தொழிலாளர்களை இங்கு அனுமதிக்க வேண்டும்.

இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்து குடியுறிமை பெற்றவர்கள் தங்களுக்கு அதிக சம்பளம் வேண்டும், வீட்டு வசதி வேண்டும், போனஸ் அலவன்ஸ் எல்லாம் வேண்டும், கூடுதல் மருத்துவ வசதி வேண்டும் என்று கொடி பிடிப்பார்கள்.

ஆனால் ஜனத்தொகை அதிகமாக கொண்ட இந்தோனீசியா, வங்காள தேசம் போன்ற நாடுகளில் இருந்து வரும் கள்ளத் தொழிலாளர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு 'கப் சிப்' என்று வாயை மூடிக் கொண்டு வேலையை உருப்படியாக செய்வார்கள்.

நடைமுறையில் அரசாங்கத்தின் இந்த தொழிலாளர் கொள்கை நம் இனத்தை எப்படி பாதித்து இருக்கிறது என்றால்:-

1980 களில் நாடு துரித பொருளாதார வளர்ச்சி கண்ட போது, எல்லா இனங்களுக்கும் வேலை வாய்ப்புக்கள் அதிகரித்த போதிலும், மலேசியாவில் கணிசமான வெளிநாட்டு தொழிலாளர் எண்ணிக்கை இருந்ததால், நம்மை ஒற்றிய மற்ற நாடுகளை விட இங்கு தொழிலாளர் சம்பளம் குறைவாகவே தான் இருந்து வந்துள்ளது.

இதில் கவனிக்க படவேண்டியது என்னவென்றால், சம்பளம் குறைவாக இருந்தது மற்ற இரண்டு இனங்களையும் விட தமிழர்களைத் தான் வெகுவாக பாதித்தது. நம் இனத்தவர் தான் தோட்டங்களில் தங்களுக்கு இருந்த வேலையையும், அத்தோடு வந்த வீட்டு வசதியையும், கூட்டு இன வாழ்க்கை சூழ்நிலையையும் விட்டு விட்டு பட்டன விழும்புகளுக்கு கையில் எதுவுமே இல்லாமல் வந்தவர்கள்.

சீனர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் எந்த சூழ்நிலையையும் சவாளாக ஏற்றுக் கொண்டு முண்டி, அடித்து வாழ்க்கையை அட்டகாசமாக வெள்பவர்கள். சம்பளம் போதவில்லை என்றால், அதற்காக ஏதாவது உபாயம் கண்டுபிடித்து ஊதியத்தை மேம்படுத்தி கொள்ள தெரிந்தவர்கள்.

மலாய் இனத்தவர் இந்த நிலைப்பாட்டால் பாதிக்க பட்டார்களா என்று பார்த்தால். நிச்சயமாக இல்லை. இந்த குறைவான சம்பள நிலை மலாய்காரர்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதை திட்டவட்டமாக கூறலாம்.

காரணம், ஒரு மலாய் குடும்பத்தில் 5 உறுப்பினர்கள் இருந்தால், அவரவர் படிப்பை பொருத்து, அவர்கள் ஐவருக்கும் அரசாங்கத்திலோ, தனியார் நிறுவனங்களிலோ, தொழிற்சாலைகளிலோ வேலை கிட்டியது.
அது போக மற்ற இனங்களுக்கு இருந்த பல செலவுகளை மலாய்காரர்களுக்கு வைக்காமல், அரசாங்கமே அவர்களின் பெரும்பாலான் தேவைகளை பூர்த்தி செய்தது.

கிம்மாஸ் என்ற மலாய்காரர்களுக்கான பாலர் பள்ளியில் இருந்து, குறைந்த விலை வீட்டுடமை திட்டங்களில் இருந்து, மலாய் பிள்ளைகளின் பிரத்தியேக படிப்பிற்கென்று அரசாங்கத்தால் முழுமையாக முதலிடு செய்யப்பட்ட சிறப்பு பள்ளிக்கூடங்களில் இருந்து, பங்கு பரிவர்த்தனையில் மலாய்காரர்கள் பங்கு பெருவதற்கென்று அமைக்க பட்ட 'அமானா சாஹாம் நேஷனல்' போன்ற பங்கு நிதி திட்டங்களில் இருந்து, அவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக வழங்கப் பட்ட சிறப்பு சலுகைகளில் இருந்து, மலாய் பிள்ளைகளுக்கு பொது பல்கலைகழகங்களில் வழங்கப் பட்ட முன்னுறிமையில் இருந்து, அவர்களுக்கு வழங்கப் பட்ட உபகாரச் சம்பளங்களில் இருந்து எத்தனை எத்தனையோ நூற்றுக் கணக்கான வழி வகைகளில் மற்ற இனஙகளை காட்டிலும் மலாய் இனத்தவர் பயன் அடைந்த காரணத்தால், மலாய்காரர்களுக்கு இந்நாட்டில் அவர்கள் வாங்கும் சம்மளம் குறைவாக இருந்தாலும், போதுமானதாகவே இருந்தது.


3). சீனர்கள் அரசாங்கத்திடம் இருந்து எதையும் பெரிதாக
எதிர்பார்க்காத நிலைப்பாடு

மலேசிய இந்தியர்களின் துரதிஸ்டங்களிலேயே பெரிய துரதிஸ்டம் என்னவென்றால், மற்ற எந்த இனமும் அல்லாமல், சீனர்கள் நம்மோடு சேர்ந்து மலேசியாவில் ஒரு சிறு பாண்மை இனமாக அமைந்தது தான்.

எந்த நாட்டிலும் சரி, சீனர்கள் யார் உதவியையும் எதிர் பார்த்து வாழ்வது கிடையாது. '"எங்களை சுயமாக விட்டு விடுங்கள். எங்கள் வாழ்க்கையை உயர்த்தி கொள்வது எப்படி என்பது எங்களுக்கு தெரியும்", என்கிற ஒரு கம்பீர குணாதிசியம் கொண்டவர்கள் சீனர்கள்.

ஆக, 24.0 விழுக்காடு ஜனத்தொகையை கொண்ட சீனர்கள் தங்களுக்கு என்று எந்த பிரத்தியேக சலுகைகளையும் கேட்டு பெறாத நிலையில், வெறும் 7.5 விழுக்காடு ஜனத்தொகையை உடைய நமக்கு அரசாங்கம் எப்படி பிரத்தியேகமான சலுகைகளை செய்து கொடுப்பார்கள்?

அரசாங்கத்திடமிருந்து சீனர்கள் எதாவ்து பிரத்தியேகமாக கேட்டு பெற்றிருந்தார்கள் என்றால், அவர்களோடு சேர்ந்து இந்தியர்களும் ஏதாவது விஷேசமாக பெற்று கொண்டிருக்கலாம். ஆனால், சீனர்கள் அரசாங்கத்திடம் இருந்து மிகுதியாக எதையுமே கேட்பது கிடையாது.

அவர்கள் கேட்பதெல்லாம் கூடுதலான சீனப் பள்ளிகள். அப் பள்ளிகளுக்கு சிறிது நிதி ஒதுக்கீடு. சீனப் பிள்ளைகளின் திறமைக்கு ஏற்ற பல்கலைக்கழக வாய்ப்பு, மிகத் திறமையான மாணாக்கர்களுக்கு சில உபகாரச் சம்பளங்கள். அரசாங்க நிலையில் தொழிதுறை வாய்ப்புக்கள். அவ்வளவுதான்.

அவர்கள் இனத் திறமையையும், சீனர்கள் இந்த நாட்டிற்கு செய்து வரும் மிகப் பெரிய பொருளாதார சேவையையும், மிகக் கூடுதலாக அவர்கள் இனம் கட்டும் வருமான வரியையும் வைத்து அவர்கள் கேட்பதை ஒப்பிட்டு பார்க்கும் போது, சீனர்கள் தங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் சலுகைகள மிக, மிக, மிகச் சாதாரணமானவையாகவே எனக்கு படுகின்றன.

இதற்கு நடுவில் நாம் நமது இனத்தின் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளையும், விண்ணப்பங்களையும் அரசாங்கத்தின் முன் வைப்பது சிரமமான வேலையாகவே இன்று வரை இருந்து வந்துள்ளது.

அதற்கு தகுந்தாற்ப் போல் நமது தானைத் தலைவர் - "என்னைத் தவிர வேறு எந்த லப்பனாலும் இந்தியர்களின் நலங்களை பாதுகாக்க முடியாது", என்று கூடாரம் அடித்து 30 வருடங்களாக டேரா போட்டு உட்கார்ந்து உள்ளார்.

உலகம் நம்மை பார்த்து நகைக்கின்றது. காலம் நம்மை தாண்டி ஒடுகின்றது. நாம் நின்ற இடத்திலேயே நிற்கின்றோம் - திக்கும் தெரியாது, திசையும் தெரியாது. பேந்த, பேந்த முழித்த வண்ணம்.

Sunday, April 26, 2009

உன்னையே நீ அறிவாய் ! (1969 மே 13க்கு பின்) - பாகம் 8



1969 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி

1969 வருடம் மே மாதம் 13 ஆம் தேதி மலேசியர்கள் யாரும் மறக்க முடியாத ஒரு நாள். இங்குள்ள இந்தியர், மலாய்க்காரர், சீனர் அனைவரது தலை எழுத்தும் என்றென்றும் நிரந்தரமாக மாறும் வகையில் ஒரு சோக வரலாற்று நிகழ்வு நடந்த நாள்.

பெரும்பான்மை மலாய் இனத்தவருக்கும், அடுத்த பெரும்பான்மை சீன இனத்தவருக்கும் இடையில் ஒரு பயங்கர இனக் கலவரம் நடந்தது அன்றுதான். கலவரத்தை தொடர்ந்து அரசாங்கம் நாடாளுமன்றத்தை கலைத்து அவசரகால ஆட்சிமுறையை அமல் படுத்தியது.


புதிய பொருளாதாரக் கொள்கை

அதை தொடர்ந்து தான் இன்றுள்ள பூமிபுத்ரா பாலிசி அமுல் படுத்தப் பட்டது. அதாவது "மலாயா மண்ணுக்கு உரிமையாளர்களான மலாய் இனத்தவர்கள், அவர்கள் நாட்டிலேயே பொருளாதார பலத்தை மற்ற இனத்தவருக்கு தாரைவார்த்து கொடுத்து விட்டு, ஒன்றும் இல்லாத ஒரு ஏழ்மையான அவல நிலையில் இருக்கின்றனர். இந்த நிலை நீடிக்கும் வரை மலாயாவில் நிரந்தர அமைதியை எதிர் பார்க்க முடியாது" என்ற கூற்றை மலாய் இனத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட அன்றைய அரசாங்கம் முன் வைத்ததோடு அல்லாமல், "NEW ECONOMIC POLICY" என்ற ஒரு புதிய மலேசிய பொருளாதாரத் கொள்கையை நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பித்தது.

இத்திட்டத்தின் கீழ் 1970 ல் தொடங்கி 20 வருடங்களுக்கு மலாய் இனத்தவருக்கு பலவிதமான பிரதான சலுகைகள் வழங்கப் படவேண்டும் என்பதும், இந்த காலக் கட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் மலாய்காரர்களின் பங்குரிமை 30% எட்ட எல்லா முயற்சிகளும் மேற்க் கொள்ளப் படவேண்டும் என்பதும் அரசாங்க கொள்கையாக்கப் பட்டது.

இக் கொள்கை / திட்டம் வேலை வாய்ப்பு, பல்கலைக் கழகப் படிப்பு, தொழில்துறை உரிமங்கள், பூமிபுத்ராக்களை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீடு யாவற்றையும் உள்ளடிக்கிய ஒரு காம்ப்ரிஹன்சிவ் மாடலாக உருவெடுத்தது. அதே நேரத்தில் இத்திட்டத்தோடு வேறு ஒரு துணைத் திட்டமும் பார்லிமெண்டின் முன் சமர்ப்பிக்கப்பட்டு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

அதாவது, மலாய்காரர்களின் நிலையை மேம்படுத்த முனையும் அதே வேலை, இனப்பாகுபாடு அன்றி மலாயாவில் உள்ள எல்லா எழை மக்களின் நிலைகளையும் மேம்படுத்துவது அரசாங்கத்தின் தலயாய குறிக்கோள் என்பதுதான் அந்த துணைத் திட்டம்.

ஆனால், இருபது வருடங்களுக்கு மட்டும் என்று ஆரம்பிக்கப் பட்ட புதிய பொருளாதார கொள்கை சொன்ன காலத்தில் முடிவடையாமல், வெவ்வேறு காரணங்களை சொல்லிக்கொண்டு, அவ்வப்போது பெயர் மாறறம் கண்டு, இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இனப் பாகுபாடின்றி வறுமையை ஒழிப்பதாகச் சொன்ன கூற்றில் மலேசிய அரசாங்கம் ஒர் அளவுக்கு முனைப்பு காட்டி இருந்தாலும், வேறு எல்லா அரசாங்க திட்டங்களையும் மீறி, மலாய்க்கார மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஒன்றே அரசாங்கத்தில் சகல நிலைகளிலும் ஒலிக்கும் தாரக மந்திரமாக மாறியுள்ள நிலைப்பாடு, வேறு யாரையும் விட இந்த நாட்டில் உள்ள இந்தியர்களை (குறிப்பாக மலேசிய தமிழர்களை) வெகுவாக பாதித்திருக்கிறது. "எப்படி?" என்று கேட்கிறீர்களா?

இந்த "எப்படி?" என்கிற கேள்விக்கான பதில் தனி ஒரு பதிவாகவே அமையும் என்று நினைக்கிறேன். ஆதலால் அதை நாம் இப்போது தொட வேண்டாம். இந்த தொடரின் அடுத்த பதிவை இந்த கேள்விக்கு பதிலாக எழுதுகிறேன்.


தமிழர்களின் தோட்டப்புற வாழ்க்கை முறை

1957 ஆம் ஆண்டு மலாயாவிற்கு சுதந்திரம் கிடைத்த போது மலேசிய இந்தியர்களில் 20 விழுக்காட்டினர் தான் பட்டனங்களில் வாழ்ந்தனர், பிற யாவரும் தோட்டங்களில் வாழ்ந்து வந்தனர். ஆனால் 1990 க்குள் 80 விழுக்காட்டு இந்தியர்கள் பட்டனங்களிலும், வெறும் 20 விழுக்காட்டினர் மட்டுமே தோட்டங்களிலும் வாழ்க்கிறார்கள் என்ற நிலை உருவானது. இந்த நிலையில் "தோட்டத்திலிருந்து பட்டனத்திற்கு" என்ற மாறுதலுக்கு மலேசிய இந்தியர்கள் தங்களை தயார் படித்திக் கொண்டு வந்தார்களா என்றால், "இல்லை".

மலேசிய இந்தியர்களில் 80 விழுக்காட்டினர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தோட்டப்புற சூழ்நிலையிலேயே வாழ்ந்தவர்கள். சீனர்களைப் போன்று தம் வாழ்க்கையை தொழில்துறை, வியாபாரம் போன்றவற்றின் மூலம் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்ற வேட்கையால் ஊந்தப் பட்டு அவர்கள் பட்டனங்களுக்கு வரவில்லை. பட்டன வாழ்விற்கு புலம்பெயர்ந்த பெரும்பாலோர், தோட்டபுறங்களை விட்டு வேறு வழியில்லாமல் வெளியேறியவர்கள் தான்.

உண்மையை அப்பட்டமாக சொல்ல வேண்டும் என்றால், பட்டன வாழ்க்கை தோட்டங்களில் இருந்து வந்த அன்றைய தமிழர்களை வெகுவாக பயமுறுத்தி இருக்க வேண்டும். "ஏன்?" என்று கேட்கிறீர்களா?

இந்த தொடரின் முதல் பாகத்தில் நான் கூறியிருப்பது போல, இந்த நாட்டிற்கு வந்த இந்திய தமிழர்களில் 90 விழுக்காட்டிற்கும் மேல் பட்டவர்கள் இங்கு கூலி வேலைக்காக வந்தவர்கள்தான். இவர்களிடம் படிப்பறிவு இல்லாததோடல்லாமல், சாதியம் என்ற அந்த நாளைய சமூக இயல்பின் அடி மட்டத்தில் இருந்தவர்கள் தான் மலாயாவிற்கு வந்தவர்களில் பெரும்பாலோர்.

சுருங்க சொன்னால், சொந்த நாட்டில் வாழ வழி தெரியாது தோற்றவர்கள் தான் இங்கு வந்து சேர்ந்த தமிழர்கள். மலாயாவில் கால் பதிப்பவதற்கு முன்பே, நம் இனத்தவர் அவர்களின் சொந்த நாடான இந்தியாவிலேயே ஆயிரக்கணக்கான வருடங்களாக பிற்பட்டவர்களாகவும், அடிமைப் படுத்த பட்டவர்களாகவும் தான் இருந்திருக்கிறார்கள்.

அப்படி பட்டவர்களுக்கு மலேசிய தோட்டத்துறை வாழ்க்கை முறை ஓரளவுக்கு பொருத்தமானதாகவும், ஏற்புடையதாகவும் தான் இருந்திருக்கின்றது. மலேசிய தோட்டங்களில், அன்றைய வாழ்க்கைத் தரம் எவ்வளவு மோசமாக இருந்திருந்தாலும், கூட்டமாக ஒரே இடத்தில் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என்று உறவினர்களோடு வாழும் வாழ்க்கை படிப்பறிவிலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய நிலையில் இருந்த தமிழ் இனத்திற்கு வெகுவாக பொருந்தி தான் இருந்திருக்கின்றது.

கூலிவேலையானாலும், அவர்களுக்கு என்று ஒரு நிரந்தர வேலை, தோட்ட நிர்வாகம் கட்டிக் கொடுத்திருந்த வீடு, பிள்ளைகள் படிப்பதற்கென்று எஸ்டேட்டிலேயே ஒரு தமிழ் பள்ளிக்கூடம், அவர்களாகவோ எஸ்டேட் நிர்வாகத்தின் துணையுடனோ கட்டிக்கொணட ஒரு சிறு கோவில், அருகாமையிலேயே ஒரு கள்ளுக்கடை, ஒரிரு பலசரக்குக் கடைகள், வாரம் ஒரிரு முறை செயல் பட்ட ஒரு மருத்துவ நிலையம், ஒரு 10-20 கிலோமீட்டர் தொலைவில் ஒரு பட்டினம், அதற்கு மாதம் ஒர்இரு முறை போய்வர பேரூந்து வசதி, போழுது போக்கிற்கு எஸ்டேட் நிர்வாகம் திரையில் போட்டுக் காட்டிய தமிழ் படங்கள், வருடத்திற்கு ஓரிரு முறை நடந்த கோவில் திருவிழாக்கள், பிறகு அவர்களுக்கிடையே நடந்த கல்யாணம், காது குத்து, இறப்பு, பிறப்பு என்று ஏதோ ஒரு மாதிரியாக, சிறிது சுவாரஸ்யமாகத் தான் எஸ்ட்டேடுகளில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கைச் சக்கரம் ஒடிக்கொண்டு இருந்திருக்கிறது.

மேலும் சீனர்களைப் போலோ, மலாய்காரர்களை போலோ நம் இனத்தார் "இன்றைய, இப்போதைய" என்கிற நிலையை தாண்டி யோசிக்காத ஒரு கூட்டம். கண்ணதாசன் பாடிச் சென்றதை போல "நாளைப் பொழுதை இறைவனுக்கு அழித்து நடக்கும் வாழ்வில் நிம்மதி நாடு" என்ற கொள்கையுடன் செயல படுபவர்கள் நாம். இத்தகைய மக்களுக்கு தோட்டத்துறை வாழ்க்கை பொருத்தமானதாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், என்று சூழ்நிலையால் உந்தப்பட்டு தமிழர்கள் தோட்டப்புற வாழ்க்கையை விட்டு மாநகரங்களுக்கு வரத்தொடங்கினார்களோ அன்றே அவர்களின் பாதுகாக்கப்பட்ட வாழ்க்கை நிலை மாறி, மாநகரங்களின் கீழ் மட்ட வாழ்க்கையின் இயல்பான தாக்கம் அவர்களையும் பாதிக்க தொடங்கி விட்டது.


தமிழர்களின் பட்டனப் பிரவேசம்

தோட்டப்புறங்களில் இருந்த வரை தமிழர்களுக்கு நிலையான ஒரு வேலை இருந்